under review

சார்வாகன்

From Tamil Wiki
Revision as of 20:12, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சார்வாகன் (நன்றி - தென்றல் இதழ்)
எழுத்தாளர் சார்வாகன்
சார்வாகன்
சார்வாகன், சாருநிவேதிதா

சார்வாகன் (ஹரி ஸ்ரீநிவாசன்: 1929 - 2015) தொழுநோய் அறுவைச் சிகிச்சை மருத்துவர். இலக்கிய ஆர்வத்தால் எழுத்தாளராக செயல்பட்டார். கவிதைகளும் எழுதியிருக்கிறார். தனது மருத்துவப் பணிக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

ஹரி ஸ்ரீநிவாசன் என்னும் இயற்பெயர் கொண்ட சார்வாகன், வேலூரில் செப்டம்பர் 07, 1929-ல் பிறந்தார். தந்தை ஹரிஹரன் தாய் ஜானகி. இவரது தந்தை சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர், ஆரணியில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். ஹரி ஸ்ரீநிவாசன் தொடக்கக் கல்வியை வேலூரில் பயின்றார்,. உயர்நிலைக் கல்வியை ஆரணியில் முடித்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பை முடித்தபின் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

மருத்துவப் படிப்பை முடித்ததும் சில ஆண்டுகள் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் அனாடமி துறையில் ட்யூட்டராகப் பணியாற்றினார். மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்குப் பயணப்பட்டார். FRCS எனும் மருத்துவப் பட்ட உயர்படிப்பை எடின்பர்கிலும், இங்கிலாந்திலும் படித்து இரண்டு FRCS பட்டங்கள் பெற்றார். பர்மிங்காம் மற்றும் லண்டனில் உள்ள மருத்துவமனைகளில் தலைமை மருத்துவர், பதிவாளர் எனப் பல பொறுப்புகளில் பணியாற்றினார். தன்னுடன் பணியாற்றிய சக மருத்துவரான பத்மாவைத் திருமணம் செய்துகொண்டார். பின் இந்தியா திரும்பினார்.

இந்திய இராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்த கர்னல் ஹரிஹரன், திரைப்படக்கலைஞர் டில்லி விசுவநாதன் ஆகியோர் இவரது உடன் பிறந்த சகோதரர்கள்.

மருத்துவ வாழ்க்கை

ஹரி ஸ்ரீநிவாசன், இந்தியா திரும்பியதும் மங்களூர் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியின் தொழுநோய் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் சிலகாலம் பணியாற்றினார். தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முடநீக்கியல் பிரிவு மருத்துவராகப் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. இயல்பிலேயே காந்தியத் தாக்கமும் சேவை மனப்பான்மையும் கொண்டிருந்த ஹரி ஸ்ரீநிவாசன், அப்பணியை ஏற்றுக் கொண்டார். தொழுநோயின் பாதிப்பால் வாழ்விழந்தவர்களை மீட்பதையே தனது லட்சியமாய்க் கொண்டு செயல்பட்டார். அதன் பொருட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1984-ல் பணி ஓய்வுபெற்றார்.

ஸ்ரீநிவாசன் மாடல் (Srinivasan Concept)

தொழுநோயால் மிகவும் பாதிப்படைந்து முடமாகிப் போன, செயல்பட முடியாத கை விரல்களை ஒரு சிறு அறுவைச் சிகிச்சையின் மூலம், முன்பு போல் இயக்க முடியும் என்பதை நிரூபித்தார் ஹரி ஸ்ரீநிவாசன். அவை உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஹரி ஸ்ரீநிவாசனின் இந்த முறை, அவர் பெயராலேயே 'Srinivasan Concept' என்று அழைக்கப்பட்டது. அதற்கு ’SRINIVASAN TECHNIQUE' என்று உலகளாவிய அங்கீகாரம் கிடைத்தது. தமிழக அரசும் அங்கீகரித்தது.

மருத்துவப் பங்களிப்புகள்

ஹரி ஸ்ரீநிவாசன், உள்நாடு, வெளிநாடு என பல மருத்துவக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருக்கிறார். சில பல்கலைக்கழகங்களில் வருகை தரு பேராசிரியராகப் பணி புரிந்திருக்கிறார். எண்ணற்ற தொழுநோய்ச் சிகிச்சை முகாம்களின் நெறியாளராக, மருத்துவ ஆலோசகராகச் செயல்பட்டிருக்கிறார். உலக சுகாதார மையத்தின் சார்பாக உலகெங்கும் தொழுநோய் அறுவைச் சிகிச்சை முகாம்கள் நடத்தி ஆயிரக்கணக்கான தொழுநோயாளர்களின் பிரச்சனைகளைச் சீர் செய்திருக்கிறார்.

ஹரி ஸ்ரீநிவாசன், முடநீக்கியல் துறை தொடர்பாக, ஆங்கிலத்தில் பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். “Prevention of Disabilities in patients with Leprosy - A Practical Guide” என்ற நூல் அதில் முக்கியமானது. நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை உலக அளவிலான ஆங்கில இதழ்களில் எழுதியிருக்கிறார். Indian Journal of Leprosy இதழில் ஆசிரியராக பனிரெண்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். உலக சுகாதாரக் கழகத்தின் (WHO) உறுப்பினராகப் இருபது ஆண்டுகள் வரை பணிபுரிந்திருக்கிறார்.

ஹரி ஸ்ரீநிவாஸன் கவிதை - எழுத்து இதழ்
சார்வாகன் கதைகள்

இலக்கிய வாழ்க்கை

ஹரி ஸ்ரீநிவாசனின் தந்தை இலக்கிய ஆர்வம் உடையவர். ஹரி ஸ்ரீநிவாசனின் தாத்தா கிருஷ்ணய்யரும் இலக்கிய ஆர்வம் உடையவர். அவர் வீட்டிலேயே ஒரு நூலகத்தை வைத்திருந்தார். தன் சிறுவயதில் அதில் உள்ள நூல்களை வாசித்துத் தன் இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் ஹரி ஸ்ரீநிவாசன்.

பனாரஸ் ஹிந்துப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவரும், சைவ சித்தாந்த அறிஞரும், சைவ சித்தாந்தம் பற்றி ஆங்கிலத்தில் பல நூல்கள் எழுதியவருமான டாக்டர் கே. சிவராமன், ஸ்ரீநிவாசனின் மாமா. அவர் ஸ்ரீநிவாசனின் இலக்கிய ஆர்வமும், பன்முகப் பார்வையும் அதிகரிக்கக் காரணமானார்.

மருத்துவப் பணியில் தனக்குக் கிடைக்கும் ஓய்வுநேரங்களை கதை, கவிதை, கட்டுரை என இலக்கியத்திற்காகச் செலவிட்டார் ஹரி ஸ்ரீநிவாசன். மகாபாரதத்தில் ‘சார்வாகன்’ கதாபாத்திரம் இவரை மிகவும் ஈர்த்ததால், அதையே தனது புனை பெயராக வைத்துக் கொண்டு எழுதத் தொடங்கினார். ஹரி ஸ்ரீநிவாசன் என்ற தனது சொந்தப் பெயரிலும், ‘சர்ஜன்’, ‘பொற்கொல்லன்’ போன்ற புனைபெயர்களிலும் எழுதியிருக்கிறார்.

ஹரி ஸ்ரீநிவாசn, முதலில் கவிதைகள் எழுதினார். அவை, ‘எழுத்து’, ‘புதுக்குரல்’, ‘தாமரை’, ‘வானம்பாடி’ போன்ற இதழ்களில் வெளியாகின. சிறுகதைகள் சிலவற்றையும் எழுத்து, தாமரை போன்ற இதழ்களுக்கு எழுதி அனுப்பினார். முதல் சிறுகதை, ‘விஸ்வரூபம்’, ‘தாமரை’ இதழில், 1964-ல் வெளியானது. இவரது கவிதைகளை தனது எழுத்து இதழில் வெளியிட்ட சி.சு. செல்லப்பா, “கதைகளை விட, கவிதைகளை நீங்கள் அதிகம் எழுதுங்கள்” என்று சொல்லி ஊக்குவித்தார் . சார்வாகன் எழுதிய சிறுகதைகள் ‘தீபம்’, ’ஞானரதம்’,‘ கணையாழி’, ’பிரக்ஞை’ போன்ற இதழ்களில் வெளியாகின. குறுநாவல்கள் சிலவற்றையும் எழுதியிருக்கிறார். வாசகர் வட்டம் வெளியிட்ட ‘அறுசுவை’ குறுநாவல் தொகுப்பில் சார்வாகனின் ‘அமரபண்டிதர்’ கதை இடம்பெற்றது. ‘வளை’, ‘வெறிநாய் புகுந்த பள்ளிக்கூடம்’, ‘தர்ப்பணம்’, ‘சின்னூரில் கொடி ஏற்றம்’, ‘கனவுக்கதை’, ‘உத்தரீயம்’, ‘யானையின் சாவு’ போன்ற இவரது படைப்புகள் வாசக வரவேற்பைப் பெற்றன. எழுத்தாளரும், கவிஞருமான நகுலன் தொகுத்த ‘குருக்ஷேத்திரம்’ நூலில் சார்வாகனின் படைப்புகள் சில இடம் பெற்றன. வெங்கட் சாமிநாதன் சார்வாகனின் சிறுகதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஹிந்தியிலும் சில கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

எதுக்குச் சொல்றேன்னா.. - சார்வாகனின் சிறுகதைத் தொகுப்பு

1993-ல் க்ரியா பதிப்பகம், இவரது சிறுகதைகளைத் தொகுத்து ‘எதுக்குச் சொல்றேன்னா..’ என்ற தலைப்பில் வெளியிட்டது. 2013-ல், இவர் எழுதிய அனைத்துச் சிறுகதைகளும் மூன்று குறுநாவல்களும் தொகுக்கப்பட்டு முழுத்தொகுப்பாக நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

விருதுகள்/பரிசுகள்

  • மருத்துவ சேவைக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது
  • மருத்துவ சேவைக்காக சர்வதேச காந்தி விருது
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஜல்மா டிரஸ்ட் ஃபண்ட் ஓரேஷன் விருது
  • கை அறுவை சிகிச்சைக்கான சர்வதேசச் சங்கங்களின் கூட்டமைப்பு வழங்கிய ’கை அறுவை சிகிச்சை முன்னோடி’ விருது
  • எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம்
  • சார்வாகன் எழுதிய கனவுக்கதை’ என்னும் சிறுகதை, 1971-ம் ஆண்டின் சிறந்த சிறுகதைக்கான ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றது.

மறைவு

தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல், தனது மருத்துவச் சாதனைகளை, இலக்கிய முயற்சிகளைப் பிரகடனப்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக வாழ்ந்த சார்வாகன், டிசம்பர் 21, 2015-ல், தனது 86-ம் வயதில் காலமானார். இவருக்கு லதா, பாரதி என்று இரு மகள்கள். இருவரும் மருத்துவர்களே!

சார்வாகன் பற்றி பிற எழுத்தாளர்கள்

“மருத்துவர்கள் மகத்தான எழுத்தாளர்களாக விளங்குவதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. ஆண்டன் செகாவ், ஏ.ஜே.கிரானின், சாமர்செட் மாம் எனத் தொடங்கி சார்வாகன் வரை கூறலாம்” என்று சார்வாகனை மகத்தான எழுத்தாளர்களுள் ஒருவராக மதிப்பிடுகிறார் அசோகமித்திரன்.

சார்வாகன் அதிகம் எழுதியதில்லை. சார்வாகன் கதைகள் என ஒரு தொகுதியை நற்றிணை வெளியிட்டுள்ளது. இன்றைய வாசகருக்கு செக்காவ் காலத்தையவை என தோன்றக்கூடியவை அவை. செக்காவின் சாயல்தான் அவற்றின் சிறப்பு." என்பது ஜெயமோகனின் கருத்து.

”உலகச் சிறுகதை இலக்கியத்தில் நாம் யாரையெல்லாம் சாதனையாளர்கள் என்று கொண்டாடுகிறோமோ அதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் இருந்தன சார்வாகன் கதைகள்” என்கிறார் சாரு நிவேதிதா.

“வாழ்க்கையை, அதன் சமதளத்தில் விசாரியாமல், நுண்தளத்தில் பார்த்து எழுதியவர்.” என்று சார்வாகனின் எழுத்தை மதிப்பிடுகிறார் பிரபஞ்சன்.

“சார்வாகனின் படைப்புகள் வித்தியாசமானவை. மறைபொருளாக அவற்றின் உள்ளடக்கம் சித்திரிக்கப்படும்.” என்பது முருகபூபதியின் கருத்து.

இலக்கிய இடம்

அங்கதச் சுவையோடு கூடிய சமூக அக்கறை வெளிப்படும் பல படைப்புகளைத் தந்தவராக சார்வாகன் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • எதுக்குச் சொல்றேன்னா - சிறுகதைத் தொகுப்பு, க்ரியா வெளியீடு
  • சார்வாகன் கதைகள் - முழுத் தொகுப்பு, நற்றிணை வெளியீடு

உசாத்துணை


✅Finalised Page