under review

நாஞ்சில் நாரண. தொல்காப்பியன்

From Tamil Wiki
Revision as of 03:44, 8 October 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நாஞ்சில் நாரண. தொல்காப்பியன் (புலவர் நாஞ்சில் நாரண. தொல்காப்பியன்; நா. அரிராம கிருட்டினன்; நா. அரிராம கிருஷ்ணன்) (பிறப்பு: ஜூலை 9, 1943) கவிஞர், கட்டுரையாளர். சிற்றிலக்கிய, காப்பிய நூல்களை எழுதினார். புது டெல்லி பாரதீய தலித் சாகித்ய அகடாமியின் 'டாக்டர் அம்பேத்கர் விருது' பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

நா. அரிராம கிருட்டினன் என்னும் இயற்பெயரை உடைய நாஞ்சில் நாரண. தொல்காப்பியன், ஜூலை 9, 1943 அன்று, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நரிக்குளம் என்ற சிற்றூரில், நாராயணன் - அன்ன வடிவு அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்விக்குப் பின் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றார். ஆசிரியர் பயிற்சி பெற்றார். தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆதித் திராவிடர் நலத்துறையின் பல்வேறு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றினார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, ஜூலை 31, 2001 அன்று பணி ஓய்வு பெற்றார். மண வாழ்க்கை விவரங்களை அறிய இயலவில்லை.

இலக்கிய வாழ்க்கை

நாஞ்சில் நாரண. தொல்காப்பியன், கவிதை நூல்களை, இலக்கிய நூல்களையும் வாசித்து இலக்கிய ஆர்வம் பெற்றார். மரபுக் கவிதைகளை எழுதுவதில் தேர்ந்தவரானார். இதழ்களில் கட்டுரைகளை எழுதினார். சிற்றிலக்கியம் மற்றும் காப்பிய நூல்கள் சிலவற்றை எழுதினார். கட்டுரை நூல்களை எழுதினார். கவிதை, செய்யுள், கட்டுரை என 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

பதிப்பு

நாஞ்சில் நாரண. தொல்காப்பியன், தனது தாயாரின் நினைவாக 'அன்னம் பதிப்பகம்' என்ற பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார். அதன் மூலம் தனது நூல்கள் சிலவற்றைப் பதிப்பித்து வெளியிட்டார்.

விருதுகள்

  • புது டெல்லி பாரதீய தலித் சாகித்ய அகாடமியின் 'டாக்டர் அம்பேத்கர் விருதும், பட்டயமும் - 2001
  • 'முப்பால் முதல்வன்' நூலுக்கு 2004-ம் ஆண்டின் சிறந்த மரபுக் கவிதை நூலுக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு
  • சென்னை தமிழ்நாடு தலித் ஆசிரியர் அகடாமியின் 'டாக்டர் அம்பேத்கர் விருது' - 2005
  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அளித்த சிறந்த நூலிற்கான முதல் பரிசு ரூபாய் 10,000, பட்டயம் - 2006
  • சென்னை டிலைட் கல்வி அறக்கட்டளை வழங்கிய 'தந்தை பெரியார் விருது' - 2009
  • சென்னை அமிர்தம் அறக்கட்டளை அளித்த 'செந்தமிழ் மாமணி' விருது - 2009
  • குமரி மாவட்ட செந்தமிழ் அருள்நெறிப் பேரவையின் 'கவிப்பேரரசு விருது' - 2010
  • தமிழறிஞர் வித்துவான் செ. சதாசிவம் விருது - 2010
  • சென்னை அமிர்தம் அறக்கட்டளை வழங்கிய 'காவியக் கவிஞர்' விருது - 2010
  • விழுப்புரம் மாவட்டம் தியாகதுருவம் பாரதி தமிழ் சங்க இலக்கியப் போட்டியில் 'முரசுக்கட்டில் மோசிகீரன்' காவிய நூலுக்கு முதல் பரிசு மற்றும் பட்டயம்

மதிப்பீடு

நாஞ்சில் நாரண. தொல்காப்பியன், சங்கக் கால சான்றோர்களான புலவர்கள், புரவலர்கள் மீது சிற்றிலக்கிய நூல்களையும், காப்பிய நூல்களையும் எழுதினார். சங்கக் கால வாழ்க்கை முறைகளையும், பண்டையத் தமிழரின் பெருமைகளையும் மரபுக்கவிதை வடிவில் எழுதினார். கல்வியாளராக நீண்ட காலம் மாணவர்களுக்கு இலக்கியம் பயிற்றுவித்தார். மரபு மாறாமல் கவிதைகளை எழுதுவதில் தேர்ந்தவராக அறியப்பட்டார்.

நூல்கள்

  • தமிழுக்குத்தலை (குமணன் காவியம்)
  • முப்பால் முதல்வன் (திருவள்ளுவர் காவியம்)
  • முத்தமிழ் நித்திலம் (ஔவையார் காவியம்)
  • திருமாவளவன் (கரிகால் சோழன் காவியம்)
  • அழியா அதிகன் (தகடூர் அதியமான் காவியம்)
  • குறிஞ்சிக் கபிலன் (சங்கப்புலவர் கபிலர் காவியம்)
  • முரசுக்கட்டில் மோசிகீரன் (சங்கப்புலவர் மோசிகீரனார் காவியம்)
  • பொறையனும் பொய்கையாரும் (சங்கப்புலவர் பொய்கையார் காவியம்)
  • திருமாவளவன் (கரிகால்சோழன் காவியம்)
  • முத்தமிழ்ப் பெருங்குன்று (சங்கப்புலவர் பெருங்குன்றூர் கிழார் காவியம்)
  • பிறழா நட்பின் பிசிராந்தை (சங்கப்புலவர் பிசிராந்தையார் காவியம்)
  • நறவிருக்கை நன்னன் (சங்ககால மன்னன் நன்னன் காவியம்)
  • திருமுடிக்காரி (கடை வள்ளல் காரி காவியம்)
  • ஒல்காப் புகழ் தொல்காப்பியர் காவியம்
  • பாண்டியன் உக்கிரப் பெருவழுதி (திருக்குறளை அரங்கேற்றியவன்)
  • அம்பேத்கர் பிள்ளைத்தமிழ்
  • ஆசிய ஜோதி புத்தர் பிள்ளைத்தமிழ்
  • நாளைய புரட்சி (சமூக காவியம்)
  • யாருக்கு சுதந்திரம் (சமூக காவியம்)
  • கண்ணகியின் கையில் தீப்பந்தம் (சமூக காவியம்)
  • யார் தலைவர் (சமூக காவியம்)
  • விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம்
  • நாஞ்சில் வள்ளுவன்
  • அந்தணர் யார்? ஐயர் யார்? பார்ப்பனர் யார்?

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Oct-2026, 03:02:20 IST