under review

பேரெயின் முறுவலார்

From Tamil Wiki
Revision as of 00:55, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பேரெயின் முறுவலார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் குறுந்தொகையில் ஒன்றும் புறநானூறில் ஒன்றும் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

பேரெயின் முறுவலார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பேரெயில்கள் என்றழைக்கப்படும் மூன்று வாயில்களை சிவன் தன் நெற்றிக்கண்ணால் எரித்ததை குறிப்பிட்டோ அல்லது பாண்டிய நாட்டில் காவிரி கரையில் அமைந்த பேரெயில் ஊரினர் என்பதாலோ பேரெயின் என்னும் பெயர் முன்னோட்டை கொண்டுள்ளார் என்று கருதப்படுகிறது. முறுவலார் என்பதும் காரண பெயராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

பேரெயின் முறுவலார் பாடிய பாடல்கள் குறுந்தொகையில் 17-வது பாடலாகவும் புறநானூறில் 239-வது பாடலாகவும் இடம்பெற்றுள்ளன. குறுந்தொகை 17-வது பாடலில் தலைவன் ஒருவன் தலைவியின் தோழியிடம் தான் மடலேறப்போவதாக உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைகிறது. புறநானூறு 239-வது பாடலில் நம்பி நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய நாட்டு குறுநில மன்னனின் இறப்பின் போது துயரத்துடன் அவனது புகழைப் பாடுவதாக பொதுவியல் திணையில் அமைந்த கையறு நிலை துறையில் அமைகிறது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

குறுந்தொகை - 17
  • காதலிக்கும் பெண் தன்னுடன் வரவில்லை என்றால் தங்களது அந்தரங்க உறவை ஊரார் முன் அறிவிக்கும் ஆடவரின் செயலே மடலேறுதல்.
  • மடலேறும் ஆண்கள் பனைமட்டையால் குதிரை ஒன்றை செய்வர். எருக்கம்பூ மாலை அணிந்து கொள்வர்.
  • பனைமட்டை குதிரையால் அமர்ந்தபடி தம் தோழருடன் பெண்ணின் ஊரில் வலம் வந்து தம்முடனான அப்பெண்ணின் உறவை ஊரார்க்கு தெரியப்படுத்துவர்.
புறநானூறு - 239
  • கைப்புயத் தோளில் வளையல் அணிந்த இளைய மகளிரைத் தழுவினான்.
  • பூங்காவில் பறித்த மலர்களை அணிந்துகொண்டான்.
  • குளுமையும் மணமும் மிக்க சந்தனத்தைப் பூசிக்கொண்டான்.
  • அவனோடு பகைமை கொண்டவர்களின் கால்வழியே இல்லாமல் செய்தான்.
  • அவனது நண்பர்கள் உயர்வு எய்தும்படிச் செய்தான்.
  • 'இவர் வலிமை மிக்கவர்' என்று அவர்களுக்குக் கீழ்ப்படியமாட்டான்.
  • 'இவர்கள் மெலியவர்கள்' என்று எண்ணித் தன்னை மேம்படுத்திக்கொள்ளமாட்டான்.
  • பிறரிடம் தனக்கு அது வேண்டும் என்று கையேந்தமாட்டான்.
  • தன்னிடம் இரப்பவர் எதைக் கேட்டாலும் மறுக்காமல் வழங்குவான்.
  • வேந்தர் அவையில் தன் புகழை நிலைநாட்டிக்கொண்டவன்.
  • எதிர்த்து வரும் படையை முன்னே நின்று தாங்கிக்கொள்வான்.
  • இவனை எதிர்த்து நிற்க மாட்டாமல் திரும்பிச் செல்லும் படைகள் பலவற்றைக் கண்டவன்.
  • விரைந்து செல்லும் குதிரைமீது செல்வான்.
  • தெருவில் தேரில் செல்வான்.
  • உயர்ந்த களிற்றின் மீதும் செல்வான்.
  • இனிக்கும் தேறலை உடைய மொந்தைகளைப் பலருக்கும் வழங்கினான்.
  • பாணர்களின் பசியைப் போக்கினான்.
  • மயக்கிப் பேசி ஏமாற்றும் பழக்கம் இல்லாதவன்

பாடல் நடை

குறுந்தொகை - 17
  • திணை: குறிஞ்சி
  • கூற்று:தோழியிற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன் தோழி குறைமறாமல் கூறியது

மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே.

புறநானூறு - 239
  • திணை: பொதுவியல்
  • துறை:கையறு நிலை

தொடியுடைய தோள்மணந்தனன்
கடிகாவிற் பூச்சூடினன்
தண்கமழுஞ் சாந்துநீவினன்
செற்றோரை வழிதபுத்தனன்
நட்டோரை உயர்புகூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
பிறரைத்தான் இரப்பறியலன்
இரந்தோர்க்கு மறுப்பறியலன்
வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்
.................................................

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Nov-2025, 09:52:08 IST