second review completed

நெடும்பல்லியத்தனார்

From Tamil Wiki
Revision as of 07:21, 1 September 2025 by Jayashree (talk | contribs)

நெடும்பல்லியத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாக புறநானூறில் ஒன்றும் குறுந்தொகையில் ஒன்றுமாக இரு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

நெடும்பல்லியத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். நெடிய பல வாக்கியங்களை கொண்டு பாடல் பாடியதனால் நெடும்பல்லியத்தனார் என பெயர் பெற்றுள்ளார் என்று உ.வே.சாமிநாதையரும் யாழ், ஆகுளி, பதலை முதலிய பல இசைக்கருவிகள் இவர் பாடிய புறநானூற்று பாடலில் இடம்பெற்றுள்ளதால் நெடும்பல்லியத்தனார் என பெயர் பெற்றிருக்கிறார் என்று மொ.அ.துரையரங்கசாமியும் இருவேறு வகையில் பெயருக்கு காரண விளக்கம் கொடுக்கிறார்கள்.

இலக்கிய வாழ்க்கை

நெடும்பல்லியத்தனார் பாடிய பாடல்கள் புறநானூறில் 64-ம் பாடலாகவும் குறுந்தொகையில் 203-ம் பாடலாகவும் இடம்பெற்றுள்ளன. ஆனால் குறுந்தொகை 203-ம் பாடல் நெடும்பல்லியத்தை பாடியதாக எஸ். வையாபுரிப் பிள்ளை மற்றும் தாயம்மாள் அறவாணன் ஆகிய ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. புறநானூறு 64-ம் பாடல் பாணன் ஒருவன் தனது விறலியிடம் நமது வறுமையை நீக்கும் செல்வத்தையுடைய பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதியை பார்த்து வருவோமா என்று கேட்பதாக பாடாண் திணையில் அமைந்துள்ளது. குறுந்தொகை 203 ஆம் பாடல் பரத்தை ஒழுக்கத்தால் தன்னிடமிருந்து விலகியுள்ள தலைவனின் நிலையை தோழிக்கு தலைவி உரைப்பதாக மருதத் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பாணனும் விறலியரும் யாழ், ஆகுளி, பதலை ஆகிய இசைக்கருவிகளை வைத்திருப்பர். அக்கருவிகளை தோல்பையில் ஈட்டு தாம் செல்லுமிடமெல்லாம் எடுத்து செல்வர். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போர்களத்தில் இருக்கும் போதும் கொடை வழங்கும் சிறப்பினன் போற்றப்படுகிறான். அவனது படைவலிமைக்கு உதாரணமாக யானைப்படையால் கொல்லப்பட்ட எதிரிநாட்டு வீரர்களின் பிணங்களை கழுகுகள் உண்ணும் என்று கூறப்பட்டிருக்கிறது.(புறம் 64)
  • முனிவரைக் காண்பவர் தம் தூய்மையின்மை காரணமாக அஞ்சி விலகி ஒழுகுவதைப் போலத் தலைவன் தன்னிடத்திலிருந்து விலகி வாழ்கிறான் என்று தலைவி கூறுவதாகத் தோன்றுகிறது. இவ்வுவமையால், தனது தூய்மையையும் தலைவனது பரத்தை ஒழுக்கத்தால் தலைவனுடைய தூய்மையின்மையையும் தலைவி குறிப்பால் உணர்த்துகிறாள்.(குறு 203)

பாடல் நடை

புறநானூறு - 64

நல் யாழ், ஆகுளி, பதலையொடு சுருக்கி,
செல்லாமோதில் சில் வளை விறலி!
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை,
விசும்பு ஆடு எருவை பசுந் தடி தடுப்ப,
பகைப் புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு,
நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?

குறுந்தொகை - 203

  • திணை: மருதம்
  • கூற்று:வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்
மரந்தலை தோன்றா ஊரரு மல்லர்
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇ ஒழுகும் என்னைக்குப்
பரியலென் மன்யான் பண்டொரு காலே.

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.