under review

கி. கஸ்தூரிரங்கன்

From Tamil Wiki
Revision as of 21:49, 3 June 2024 by Logamadevi (talk | contribs)

கி. கஸ்தூரிரங்கன் (ஜனவரி 10, 1933 - மே 4, 2011) தமிழ் இதழாளர், எழுத்தாளர். கணையாழி இலக்கிய இதழை நிறுவி நடத்திவந்தார். தினமணி நாளிதழின் ஆசிரியராக இருந்தார். தமிழ்ப்புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

கி.கஸ்தூரிரங்கன் ஜனவரி 10,1933-ல் செங்கல்பட்டு மாவட்டம் களத்தூரில் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கஸ்தூரி ரங்கனின் மனைவி இந்து. மகன்கள் பாலாஜி, மோகன். மகள் ரங்கஶ்ரீ.

1961-ல் நியூயார்க் டைம்ஸ் இதழின் டெல்லி நிருபராகப் பணியாற்றினார். 1981 வரை அப்பணியில் இருந்தார். 1962-ம் வருடத்திய இந்திய-சீனப் போரைக் குறித்த இவருடைய செய்திக்குறிப்புகள் சிறப்பான கவனத்தைப் பெற்றன.

இதழியல்

கஸ்தூரிரங்கன் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் டெல்லி நிருபராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். 1962-ம் வருடத்திய இந்திய-சீனப் போரைக் குறித்த இவருடைய செய்திக்குறிப்புகள் சிறப்பான கவனத்தைப் பெற்றவை. நியூயார்க் டைம்ஸில் இருந்தபோதே, அப்பொழுது பிரசுரமாகிக் கொண்டிருந்த சுதேசமித்திரனில் அரசியல் பத்தி எழுதிக் கொண்டிருந்தார். காமராஜர் அவரது பத்திகளை விரும்பிப் படித்தார். வாரணாசியில் படகுகளில் வசித்த அமெரிக்க ஹிப்பிகளை நேர்காணல்கள் நிகழ்த்தி அவர் எழுதியவை அமெரிக்க வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. மகேஷ் யோகியைப் பற்றி நியூயார்க் டைம்ஸில் வந்த முதல் குறிப்பு கஸ்தூரிரங்கன் எழுதியதுதான்

கணையாழி

கஸ்தூரிரங்கன் டெல்லி வாழ் தமிழர்களுக்காக 1965-ல் கணையாழி இதழைத் தொடங்கினார். கணையாழியில் அரசியலை முதன்மைப்படுத்திய கட்டுரைகள் உலக நாட்டு நடப்புகள், இலக்கியத் தொடர் கட்டுரைகள். அரசியல் பேட்டிகள், பொருளியல் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் வெளியாகின. தீவிரமான இலக்கியத்தை தேடும் வாசகர்களுக்குரிய இதழாக கணையாழி இருந்தது. தொடர்ச்சியாக பல வருடங்கள் வெளிவந்த சிற்றிதழ் இதுவே. ஆதவனின் என் பெயர் ராமசேஷன், காகிதமலர்கள், ஜானகிராமனின் 'நளபாகம்' போன்ற குறிப்பிடத்தக்க பல ஆக்கங்கள் அதில் வெளியாகின. தமிழின் அனேகமாக எல்லா முக்கியமான எழுத்தாளர்களும் கணையாழி வழியாகவே அறியப்பட்டார்கள்.ஸ்ரீரங்கம் எஸ் ஆர் என்ற பேரில் சுஜாதா எழுத ஆரம்பித்தது கணையாழியில்தான். ஜெயமோகன் கணையாழியில் பல கதைகளை எழுதினார். கணையாழி நடத்திய தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டியில் வெளியானவை டார்த்தீனியம், கிளிக்காலம், அம்மன் மரம், பூமியின் முத்திரைகள் போன்ற கதைகள். எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி, பாவண்ணன், சுப்ரபாரதிமணியன் போன்ற பல முக்கியமான எழுத்தாளர்கள் கணையாழியில் எழுதி அறியப்பட்டவர்கள். முழு நாடகங்கள், தமிழ்ப் பத்திரிகைகளில் வராத காலத்தில், ஜெயந்தன் நாடகங்களை கணையாழி பிரசுரித்தது. முப்பது ஆண்டுகள் கணையாழி இதழ் தொடர்ச்சியாக வெளிவந்தது. உடல்நிலை மற்றும் நிதி நிலை காரணமாக கணையாழி தசரா அறக்கட்டளைக்கு மாறியது.

பிற இதழ்கள்

கஸ்தூரிரங்கன் 1992-ல் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தில் இணைந்து பணியாற்றினார். அதன்பின் இரண்டு ஆண்டுகள் தினமணியின் இணை ஆசிரியராகப் பணியாற்றி, ஐராவதம் மகாதேவனுக்குப்பின் ஆசிரியராக இருந்தார்.

தினமணி கதிர்' இதழின் ஆசிரியராக இருந்தபோது பல இளம் எழுத்தாளர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தார். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியை தன் போலந்துப் பயணங்களின் அடிப்படியில் 'ஏசுவின் தோழர்கள்' என்ற நாவல் தொடராக தினமணி கதிரில் எழுத உற்சாகப்படுத்தினார் கஸ்தூரிரங்கன்.

இலக்கிய வாழ்க்கை

கஸ்தூரிரங்கன் சி.சு. செல்லப்பாவின் எழுத்து இதழில் கவிதைகள், புதுக்கவிதைகள் எழுதியிருக்கிறார். 'ஞானவெட்டியான்' என்ற பேரில் கவிதைகள் எழுதினார். அவரது கவிதைகள் மென்மையான அங்கதம் கொண்டவை. செல்லப்பா தொகுத்து வெளிவந்த, தமிழ்ப்புதுக்கவிதையின் முதல் தொகுப்பு என்று கூறப்படும், 'புதுக்குரல்கள்' தொகுதியில் கஸ்தூரிரங்கனின் கவிதைகள் இடம்பெற்றன. கஸ்தூரிரங்கன் நான்கு நாவல்களும் எழுதியிருக்கிறார். கஸ்தூரிரங்கன் ஐந்து புதினத் தொடர்களை தினமணி கதிர் வார இதழில் எழுதியிருக்கிறார்.

'முஸ்தபா' என்னும் பெயரில் கஸ்தூரிரங்கன் கணையாழியில் தொடர்ச்சியாக பல கட்டுரைகள் எழுதிவந்தார்.

சமூகப் பணிகள்

கஸ்தூரிரங்கன் 'ஸ்வச்சித்' என்ற காந்திய அமைப்பை தொடங்கி சமூகசேவை ஆற்றினார். 1991 முதல் காந்தி மிஷனின் செயலாளராகப் பணியாற்றி வந்தார். 'ஸ்வச்சித்' அமைப்பின்மூலம் செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் களப்பணி ஆற்றினார்

மதிப்பீடு

தமிழிலக்கியத்தைச் செழிப்பாக்கிய பல எழுத்தாளர்கள் கணையாழியால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அல்லது ஊக்கப்பட்டுத்தப்பட்டவர்கள். கஸ்தூரிரங்கன் நடத்திய கணையாழி பல இளம் புதுக்கவிஞர்களை இனம் கண்டது. இன்று பிரபலமாக இருக்கும் பல கவிஞர்கள் கணையாழியில் எழுதத் தொடங்கியவர்கள்தாம். குறு நாவல் வளர்ச்சிக்காக கஸ்தூரி ரங்கன் ஆற்றியிருக்கும் பணி குறிப்பிடத்தக்கது. கணையாழியில் தி. ஜானகிராமன் பேரில் ஆண்டுதோறும் குறுநாவல் போட்டி நடந்து வந்தது.

"கஸ்தூரிரங்கன் ‘தினமணி கதிர்’ ஆசிரியராக இருந்தபோது பல இளம் எழுத்தாளர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தார். பல நல்ல எழுத்தாளர்கள் கதிரில் எழுதும்படியாகவும் செய்திருக்கிறார். சாகித்ய அகாதெமி விருதுபெற்ற “வானம் வசப்படும்’ நாவலைப் பிரபஞ்சன் கதிரில் எழுதுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் கஸ்தூரிரங்கன்.” என்று தினமணியில் எழுதிய இரங்கல் கட்டுரையில் குறிப்பிடுகிறார் இந்திரா பார்த்தசாரதி.

"கணையாழி ஒரு இலக்கிய இயக்கம் என்றால் மிகையல்ல. அடிப்படையில் காந்திய நோக்குள்ளவரான கஸ்தூரிரங்கனின் பொதுநல விருப்பும் தீவிரமும் அர்ப்பணிப்புமே கணையாழியை எதிர்மறைச்சூழல்களில் அத்தனை பொருளிழப்புகள் இருந்தும் பிடிவாதமாக இவ்வளவுநாள் நீடிக்கச்செய்தது. தமிழுக்கு கணையாழி மூலம் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page