under review

ஜெயந்தன்

From Tamil Wiki

ஜெயந்தன் (பெ. கிருஷ்ணன்) (ஜூன் 15,1937-பிப்ரவரி 7,2010) சிறுகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர், இதழாளர். இடதுசாரி சிந்தனை கொண்ட அவரது படைப்புகள் சமூக விமரிசனத்தன்மை கொண்டவை.

பிறப்பு, கல்வி

ஜெயந்தனின் இயற்பெயர் பெ. கிருஷ்ணன். கிருஷ்ணன் மணப்பாறையில் பெருமாள்-ராஜம்மாள் இணையருக்கு ஜூன் 15,1937 அன்று பிறந்தார். மூன்றாவது வயதில் தந்தையை இழந்தார். தாய் ராஜம்மாள் சிற்றுண்டிக் கடை நடத்தி, அந்த வருமானத்தில் பிள்ளைகளை வளர்த்தார். ஜெயந்தன் மணப்பாறை நகராட்சிப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். இடைநிலைப் (Intermediate) படிப்பை முடித்தபின் ஆசிரியராகப் பணி புரிந்தார். கால்நடை ஆய்வாளர் பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

ஜெயந்தன் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின் வருவாய்த் துறையில் பணியாற்றினார். கால்நடை ஆய்வாளர் பயிற்சிக்குப்பின் கால்நடை மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.

ஜெயந்தன் நாகலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார். மகன்கள் சீராளன், அன்பு. மகள் வளர்மதி. மகன் சீராளன் 'கோடு’ என்ற பெயரில் ஓவியப் பள்ளி நடத்தி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

யுனெஸ்கோ கூரியர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த மணவை முஸ்தஃபா ஜெயந்தனின் பள்ளித்தோழர். அவருடன் இணைந்து மணவை தமிழ் மன்றத்தை 1956-ல் துவங்கினார். நாடகங்களை எழுதி, இயக்கினார். சில நாடகங்களில் நடித்தார். தன் அனுபவங்களில் கண்டவற்றை சிறுகதைகளாக எழுதினார். அவை சுபமங்களா, குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தன. 'மொட்டை', 'பிடிமானம்', 'உபகாரிகள்', 'பைத்தியம்' ,'துக்கம்' போன்ற கதைகள் பரவலான கவனத்தைப் பெற்றன. 'அவள்' சிறுகதை 1981-க்கான இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது.

தனது வாழ்வின் பிற்பகுதியில், யதார்த்த பாணியிலான கதைகளைத் தவித்து தத்துவார்த்த பின்புலத்தில், வாழ்வை ஆராயும் கதைகளை எழுதினார். அவை ‘ஞானக் கிறுக்கன் கதைகள்’ என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்தன.

நாடகங்கள்

ஜெயந்தன் முற்போக்கு இலக்கிய சங்கத்தில் செயல்பட்டபோது பேராசிரிரியர் சே. ராமானுஜம் நடத்திய நாடகப்பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டார். அவர் கணையாழியில் எழுதிய ‘நினைக்கப்படும்’ என்ற வரிசை நாடகங்கள் கசப்பான விமரிசனங்களோடு இந்தியசமூகத்தின் தார்மீக வீழ்ச்சியைச் சித்தரித்தவை. உரையாடல் தன்மை மேலோங்கிய அந்நாடகங்கள் வெளியான காலத்தில் பரவலான கவனத்தைப் பெற்று இலக்கியச் சிந்தனை பரிசை வென்றன.

‘சிறகை விரி, வானம் உனது’ என்னும் நாடகம், அகில இந்திய வானொலியின் பரிசினைப் பெற்றது. ஜெயந்தனின் அனைத்து நாடகங்களின் தொகுப்பு, ‘ஜெயந்தன் நாடகங்கள்’ என்ற பெயரில் வெளிவந்தது.

இதழியல்

ஜெயந்தன் 'கோடு' என்ற சிற்றிதழை நடத்தி வந்தார்.

அமைப்புப் பணிகள்

ஜெயந்தன் சில காலம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். மீண்டும் அதிலிருந்து விலகினார். அரசுப் பணியில் இருந்த காலத்தில், ஊழியர்களுக்கான சங்கச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், ‘கம்ப்யூட்டர் பார்க்’ என்னும் கணினிப் பயிற்சி மையத்தைத் தொடங்கி, சில காலம் நடத்தினார்.

இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்காக சிந்தனைக் கூடல்’ என்னும் அமைப்பைத் தொடங்கி நடத்தினார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். அவர்களுக்கான சிறுகதை மற்றும் மேடைப்பேச்சு வகுப்புகளை நடத்தினார்.

விருதுகள், பரிசுகள்

  • இலக்கியச் சிந்தனை பரிசு(1981)
  • அகில இந்திய வானொலி பரிசு

இலக்கிய இடம்

ஜெயந்தன் சமூக மாற்றத்திற்கான வடிவமாக தனது படைப்புகளை முன் நிறுத்தியவர். சமூகம் குறித்த அவரது கோபமும் பிரச்சார உத்தியும் கலைவடிவமாக வெளிப்பட்டன. அசோகமித்திரன் 'நிராயுதபாணியின் ஆயுதங்கள்' கதைத் தொகுப்பின் முன்னுரையில் "பல ஆயிரம் ஆண்டுகள் பூர்த்தி பெற்ற நமது கலாச்சாரத்தினுள் புதைந்திருக்கும் குரூரங்களை தோண்டியெடுத்து நம் கவனத்திற்க்குக் கொண்டு வருகிறது. இவரது கதைகள் அதில் எழுதப்பட்டிருப்பதோடு முடிந்துவிடாது. அவற்றில் உள்ள அந்தரங்கமான கோபமும், அந்தக் கோபத்தின் அடிப்படை நியாய உணர்வும் மனதை உறுத்திக்கொண்டே இருக்கும்" என்று 'நிராயுதபாணியின் ஆயுதங்கள்' கதை தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். "ஜெயந்தனின் ஒரு ஆசை தலைமுறை தாண்டுகிறது[1] அற்புதமான சிறுகதை" என்று கி. ராஜநாராயணன் குறிப்பிடுகிறார்.

"வணிக எழுத்தின் இலக்கணங்களை மீறிய வீரியமான சமூக விமரிசனத்தன்மை கொண்டவை அவரது சிறுகதைகள். ஜெயந்தனின் சாதனை என்பது ‘நினைக்கப்படும்’ என்ற வரிசையில் அவர் எழுதிய நாடகங்கள். விஜய் டெண்டுல்கர் பணியிலான அதிர்ச்சியூட்டும் சமூக சித்திரங்கள், கசப்பான விமரிசனங்கள் அவை. இந்தியசமூகத்தின் தார்மீர்க வீழ்ச்சியை சித்தரிக்கும் அந்நாடகங்கள் இன்றும் முக்கியமானவை" என்று ஜெயமோகன் குறிபிடுகிறார்.

கதை அரங்கம் -மணிக் கதைகள்(மீனாட்சி புத்தக நிலையம்) தொகுப்பில் ‘குணாலட்சுமி’என்ற ஜெயந்தனின் சிறுகதை இடம் பெற்றுள்ளது. விட்டல் ராவ் தொகுத்திருக்கும்’இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்’(3) தொகுப்பில் ஜெயந்தனின் ‘மொட்டை’ சிறுகதை இடம் பெறுகிறது.

மறைவு

ஜெயந்தன் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட 'நித்யா' என்னும் அறிவியல் புதினத்தை எழுதிக்கொண்டிருக்கையில், அது முடியும் முன்னே பிப்ரவரி 7, 2010 அன்று காலமானார்.

நினைவு

மணப்பாறையில் ஜெயந்தனின் மகன் சீராளன் நடத்தும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’, அவர் நினைவாக சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்வு செய்து 2011 முதல் விருதுகள் வழங்கி வருகிறது

படைப்புகள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • நிராயுதபாணியின் ஆயுதங்கள்
  • பகல் உறவு
  • சம்மதங்கள் (நர்மதா பதிப்பகம்)
  • நாலாவது பிரயாணம்
  • இந்தச் சக்கரங்கள்
  • ஞானக் கிறுக்கன்
குறுநாவல்கள்
  • இந்தச் சக்கரங்கள்
  • பாவப்பட்ட ஜீவன்கள் முறிவு
கவிதைத் தொகுப்பு

காட்டுபூக்கள்

நாடகங்கள்
  • நினக்கப்படும்
  • சிறகை விரி, வானம் உனது
திரை வடிவம்

ஜெயந்தனின் 'பாஷா' சிறுகதை பாலு மகேந்திராவால் குறும்படமாக எடுக்கப்பட்டது

உசாத்துணை

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Aug-2023, 10:01:05 IST