under review

சாந்தா தத்

From Tamil Wiki
Revision as of 20:04, 26 January 2024 by ASN (talk | contribs) (Para Added and Edited: Image Added; Link Created: Proof Checked.)
சாந்தா தத்

சாந்தா தத் (சாந்தா) (பிறப்பு: செப்டம்பர் 15) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர். தெலுங்கிலிருந்து பல படைப்புகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்தார். தமிழ்ச் சிற்றிதழ்களிலும், வெகு ஜன இதழ்களிலும், கதை, கவிதை, கட்டுரைகளை எழுதினார். தனது இலக்கிய முயற்சிகளுக்காக நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய இதழ் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

சாந்தா என்னும் இயற்பெயரை உடைய சாந்தா தத், செப்டம்பர் 15 அன்று தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பிறந்தார். எஸ்.எஸ்.கே.வி. எனப்படும் சோமசுந்தர கன்யா வித்யாலயாவில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். ஹிந்தி, தெலுங்கு மொழிகளைக் கற்றார்.

தனி வாழ்க்கை

சாந்தா, தத்தாத்ரேயாவை மணம் செய்துகொண்டார். கணவருடன் ஹைதராபாத்தில் வசித்தார்.

சாந்தா தத் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

சாந்தா, கணவரது ஊக்குவிப்பால் எழுதத் தொடங்கினார். கணவரது பெயரைத் தனது பெயருடன் இணைத்துக் கொண்டு சாந்தா தத் என்ற பெயரில் எழுதினார். முதல் படைப்பு ஆனந்த விகடனில் வெளியானது. தொடர்ந்து கல்கி, அமுதசுரபி, கலைமகள், சாவி, குங்குமம், ராணி, இதயம் பேசுகிறது, மங்கையர் மலர், தினமணி கதிர், தினத்தந்தி, உரத்த சிந்தனை போன்ற இதழ்களில் எழுதினார். எழுத்தாளரும் ‘கனவு’ இலக்கிய இதழின் ஆசிரியருமான சுப்ரபாரதிமணியன் சாந்தா தத்தின் திறமையை அறிந்து ஊக்குவித்தார். சுப்ரபாரதிமணியனின் ஊக்குவிப்பால், சாந்தா தத் நண்பர் வட்டம், சுபமங்களா, முங்காரி, கவிதாசரண் போன்ற இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதினார்.

மொழிபெயர்ப்பு

சுப்ரபாரதிமணியன், மொழிபெயர்ப்புத் துறையிலும் சாந்தா தத் செயல்பட உறுதுணையாக இருந்தார். சுப்ரபாரதிமணியனின் தூண்டுதலால், சாந்தா தத் தெலுங்கிலிருந்து பல படைப்புகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்தார்.

சாந்தா தத்தின் முதல் மொழியாக்க நூல், தெலுங்கானாப் போராட்டத்தின் தொடக்கக் காலக்கட்டங்களைச் சித்திரிக்கும் ‘தெலுங்கானா சொல்லும் கதைகள்’ என்பது. தொடர்ந்து. சாகித்ய அகாதெமி விருது பெற்ற தெலுங்கு இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். அவற்றுள், சாகித்ய அகாதெமி விருது பெற்ற தெலுங்கு நாவலின் மொழிபெயர்ப்பான ’எரியும் பூந்தோட்டம்’ நல்ல வரவேற்பைப் பெற்றது. மாலதி செந்தூர் எழுதிய நாவலின் மொழிபெயர்ப்பான ’இதய விழிகள்’ பரவலான வாசக கவனத்தைப் பெற்றது.

சாந்தா தத்தின் மொழியாக்கச் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் திசை எட்டும், தமிழ் லெமூரியா, கணையாழி, காக்கைச் சிறகினிலே, நிழல், கனவு, மகாகவி, கதைசொல்லி, காணிநிலம், தளம், இலக்கியச் சாரல், நிறை எனப் பல இதழ்களில் வெளியாகின. சாந்தா தத், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என 400-க்கும் மேலான படைப்புகளைத் தந்தார். 18-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். சாந்தா தத்தின் ’கோடை மழை’ சிறுகதை, தமிழ்நாடு அரசின் பன்னிரெண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூலில் இடம் பெற்றது.

இதழியல்

  • சாந்தா தத், ஹைதராபாத்திலிருந்து வெளிவரும் ‘நிறை’ மாத இதழின் ஆசிரியர்.
  • ‘நல்லி திசை எட்டும்’ மொழிபெயர்ப்பு இதழின் தெலுங்கு மொழியாக்கப் பிரிவின் ஆசிரியர்.

விருதுகள்

  • இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான பரிசு - கோடை மழை சிறுகதைக்கு.
  • சென்னை ராஜாஜி அறக்கட்டளை விருது
  • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
  • கோவை லில்லி தேவசிகாமணி விருது
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பரிசு
  • சென்னை ‘லேடீஸ் ஸ்பெஷல்’ இதழ் விருது
  • நியூ செஞ்சுரி புத்தக நிலைய விருது
  • ஹைதராபாத் கோதராஜு இலக்கிய விருது
  • சென்னை உரத்த சிந்தனை அமைப்பின் சிறந்த எழுத்தாளர் விருது
  • தமிழ்நாடு சிற்றிதழ் சங்க விருது
  • எழுத்தரசி விருது
  • நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய இதழ் விருது
  • சென்னை மொழிபெயர்ப்பாளர் சங்க விருது
  • தமிழ் இலக்கியப் பெருமன்ற விருது
  • ஹைதராபாத் தெலுங்கு இலக்கிய அமைப்புகள் அளித்த பல்வேறு விருதுகள்

மதிப்பீடு

சாந்தா தத், தம் சிறுகதைகளில் ஆந்திரா தெலுங்கானா பிரிவினை பற்றியும் அதன் பின்னான வாழ்க்கையைப் பற்றியும் கவனப்படுத்தினார். தன்முனைக் கவிதை என்பதை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவராக அறியப்படுகிறார். தெலுங்கிலிருந்து தமிழுக்குப் பல படைப்புகளைத் தந்த பெண் எழுத்தாளர்களான ஜெயலக்ஷ்மி சீனிவாசன், சுசீலா கனகதுர்கா, கௌரி கிருபானந்தன் வரிசையில் சாந்தா தத்தும் இடம்பெறுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • தமிழ்த் தோட்டத்தில் தெலுங்கு குயில்கள்
  • மோகனா ஓ மோகனா மற்றும் சில கவிதைகள்
சிறுகதைத் தொகுப்புகள்
  • உயிர்ப்பு
  • எல்லைகள்
  • இவர்கள்
  • வாழ்க்கைக்காடு
கட்டுரை நூல்கள்
  • ஆண்களுக்கான இட ஒதுக்கீடு
  • ஹைதராபாத் டைரி
மொழியாக்க நூல்கள்
  • கையளவு கடல் (தெலுங்குச் சிறுகதைகள்)
  • இதய விழிகள்
  • இருபதாம் நூற்றாண்டின் தெலுங்குப் பெண் எழுத்தாளர்கள்
  • வீரத்தெலுங்கானா சொல்லும் கதைகள்

மற்றும் பல.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.