second review completed

குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்

From Tamil Wiki
Revision as of 08:54, 17 September 2024 by Jayashree (talk | contribs)
குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்

குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் (12-ம் நூற்றாண்டு), சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது. இந்நூலில் 103 பாடல்கள் உள்ளன. இதுவே தமிழில் இயற்றப்பட்ட முதல் பிள்ளைத்தமிழ் நூலாக அறியப்படுகிறது.

நூல் அமைப்பு

இரண்டாம் குலோத்துங்க சோழன் மீது உலா பாடிய ஒட்டக்கூத்தர், அச்சோழன் மீது பாடிய பிள்ளைத் தமிழ் நூல், குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ். இந்நூலில் காப்பு முதல் சிறுதேர்ப்பருவம் வரை 103 பாடல்கள் இடம் பெற்றன.

அவை,

  • காப்புப் பருவம் -11 பாடல்கள்
  • செங்கீரைப் பருவம் - 11 பாடல்கள்
  • தாலப் பருவம் - 11 பாடல்கள்
  • சப்பாணிப் பருவம் - 11 பாடல்கள்
  • முத்தப் பருவம் - 11 பாடல்கள்
  • வாரானைப் பருவம் - 11 பாடல்கள்
  • அம்புலிப் பருவம் - 12 பாடல்கள்
  • சிறுபறைப் பருவம் - 7 பாடல்கள்
  • சிற்றிற் பருவம் - 11 பாடல்கள்
  • சிறுதேர்ப் பருவம் - 7 பாடல்கள்

பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆசிரிய விருத்தத்தால் பாடப்பட்ட நிலையில், இந்நூலில் சிறுபறைப் பருவம் மட்டும் நாற்சீர் கொண்ட சந்தக் கலிவிருத்தமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் குறிப்பு

சோழ நாட்டில் ‘மலரி’ என்ற ஊரில் செங்குந்த மரபில் தோன்றியவர் ஒட்டக்கூத்தர். இவர் விக்கிரம சோழ மன்னனின் அவைக்களப் புலவர். விக்கிரம சோழனுக்குப் பின் அவன் மைந்தன் குலோத்துங்கனுக்குத் தமிழ்க் கல்வி பயிற்றுவித்த குருவாகவும் அவைக்களப் புலவராகவும் இருந்தார். பின்னர் குலோத்துங்கனின் மகன் இரண்டாம் இராசராசனுக்கும் அவைக்களப் புலவராக இருந்தார். அவர்கள் மூவர் மீதும் ஒட்டக்கூத்தர் பாடிய உலா நூல்கள் மூவருலா என்று அழைக்கப்பட்டன.

சோழன் அவைக்களப் புலவர்களுள் சிறப்பு வாய்ந்த தலைமைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தர், கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி, காளக்கவி, கௌடப் புலவர் போன்ற பட்டங்களைப் பெற்றார். தக்கயாகப் பரணி, ஈட்டியெழுபது உள்ளிட்ட பல நூல்களை இயற்றினார். தனது புலமைக்காக சோழ மன்னனிடமிருந்து ஒட்டக்கூத்தர் பரிசாகப் பெற்ற ஊர் அவர் பெயரில் ‘கூத்தனூர்’ என்று அழைக்கப்பட்டது.

உள்ளடக்கம்

குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் நூலில், குலோத்துங்கசோழ மன்னனின் வீரம், கொடைத்திறன், சிறப்பு, பெருமை, புகழ் ஆகியன கூறப்பட்டுள்ளன.

நூலின் காப்புப் பருவத்தில் கணபதி, சிவபெருமான், பிரம்மா, சூரியன், முருகன், காளி, சப்த மாதர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், ஐயனார், திரிபுரசுந்தரி பற்றிய பாடல்கள் இடம்பெற்றன. குலோத்துங்க சோழனை திருமாலாகவும், சிவனாகவும், இராமனாகவும், கிருஷ்ணனாகவும் ஒட்டக்கூத்தர் சிறப்பித்துப் பாடியுள்ளார். சோழனின் முன்னோர்கள் செய்த அரும்செயல்களை குலோத்துங்கனே செய்ததாக உயர்வு நவிற்சியாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது. சோழ மன்னர்களின் பெருமை இந்நூலில் சிறப்பிகப்பட்டுள்ளது.

பாடல்

செங்கீரைப்பருவம்

கல்விக்கு மதுரைக்கும் மரந்தைக்கும் நாயகன்
    உறந்தைப் பிரான்அ கிலமும்
கண்ஆர மேருவில் எடுக்கும் புலிக்கொடி
    கலிக்கள்வ னைப்பொரு துபோர்
வெல்விக்கும் மானதன் மகோதைக்கு மன்னன்முடி
    கொண்டான் மகற்கு மகன்என்
வெற்றிக் கவித்தநில மண்ணைக் கடக்கஇகல்
    விண்ணைக் கடக்க இகலிக்

கொல்விக்கும் யானைகொடு சாளுக்கிய வர்க்கம்அற
    வேளுக் கிராமம் இடறிக்
கொல்லா புரம்பொருது கல்யாண மூதெயில்
    பறித்துஏழு கொங்கணம் முன்னாள்
செல்விக்கும் ராசாதி ராசன் திருப்பெயர
    செங்கீரை ஆடி யருளே
சேரா பெருங்கவிகை வீரோதை யா வாழி
    செங்கீரை ஆடி யருளே

தாலப் பருவம்

குருகு லோத்தமர் தூதா மாபூத ஆதாரா
    கோல வேய்க்குழ லாலே மால்சூழ் கோபாலா
அருகு பார்த்திப ரானார் கோல்ஊ டாடாமே
    அவனி காக்கும் அமோகா தாலோ தாலேலோ
சுருதி நூல்தொடை மாலா காரா மேனாள்கார்
    தொடரின் வீக்கிய வீரா சேரா சோழா ஏழ்
எருது கோள்பட மூள்போர் மார்பா தாலேலோ
    எதிரி லாப்பெரு மாளே தாலோ தாலேலோ

சிறுபறைப் பருவம்

நின்றவன் நிகர்வடகா லிங்கர் நெருக்கியபோர்
வென்றவன் அரசர்பிரான் விக்ரம சோழ வலம்
சென்றவன் இரவி பசும் புரவிசி வந்துஎழுபோர்
கொன்றவன் மனுசரிதா கொட்டுக சிறுபறையே

சிறுதேர்ப்பருவம்

மாறிய கலிக்கு வழிவிலக் காக
    படியினுள் மனுவரம் பாக
கூறிய கடவுள் குலக்களிறு எட்டும்
    எண்திசை யினும் குறிக் கொள்ள
ஏறிய கலிங்கமும் ஏழுமா ராட்டமும்
    ஏழரை இலக்கமும் இரியச்
சீறிய அபயன் குலோத்துங்க சோழன்
    உருட்டுக சிறுதேரே

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.