under review

ஈட்டி எழுபது

From Tamil Wiki

ஈட்டி எழுபது (ஈட்டியெழுபது) (12-ம் நூற்றாண்டு) ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல்களுள் ஒன்று. கலைமகள் அருளால் வெட்டப்பட்ட தலைகள் ஒட்டி உயிர் பெறுமாறு பாடிய நூலே ஈட்டி எழுபது. செங்குந்தர் குல மக்களின் பெருமையைக் கூறுவது இந்நூல்.

நூல் அமைப்பு

ஈட்டி எழுபது நூலில் எழுபது பாடல்கள் இடம்பெற்றன.

ஆசிரியர் குறிப்பு

சோழ நாட்டில் 'மலரி' என்ற ஊரில் செங்குந்த மரபில் தோன்றியவர் ஒட்டக்கூத்தர். இவர் விக்கிரம சோழ மன்னனின் அவைக்களப் புலவர். விக்கிரம சோழனுக்குப் பின் அவன் மைந்தன் குலோத்துங்கனுக்குத் தமிழ்க் கல்வி பயிற்றுவித்த குருவாகவும் அவைக்களப் புலவராகவும் இருந்தார். பின்னர் குலோத்துங்கனின் மகன் இரண்டாம் இராசராசனுக்கும் அவைக்களப் புலவராக இருந்தார். அவர்கள் மூவர் மீதும் ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா ஆகிய உலா நூல்கள் 'மூவருலா' என்று அழைக்கப்படுகின்றன. சோழன் அவைக்களப் புலவர்களுள் சிறப்பு வாய்ந்த தலைமைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தர், கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி, காளக்கவி, கௌடப் புலவர் போன்ற பட்டங்களைப் பெற்றார். தக்கயாகப் பரணி, ஈட்டி எழுபது, குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட பல நூல்களை இயற்றினார். தனது புலமைக்காக சோழ மன்னனிடமிருந்து ஒட்டக்கூத்தர் பரிசாகப் பெற்ற ஊர் அவர் பெயரில் 'கூத்தனூர்' என்று அழைக்கப்பட்டது.

தொன்மம்

ஒட்டக்கூத்தர் செங்குந்தர் மரபில் பிறந்தவர். அந்த மரபைச் சேர்ந்த சிலர், ஒட்டக்கூத்தரிடம், தாங்கள் கலைமகளின் அருளை முழுமையாகப் பெற்றவர். அப்படிப்பட்ட நீங்கள், நம் மரபின் அடையாளமாகிய ஈட்டி எனும் கருவியைப்பற்றியும், நம் மரபின் புகழ் மற்றும் பெருமை பற்றியும் நூல் ஒன்று இயற்ற வேண்டும்! என வேண்டினர். அதற்கு ஒட்டக்கூத்தர், "நம் மரபை நாமே புகழ்ந்து பாடுவது தகாது. அது குல அபிமானத்தால் பாடப்பட்டுவதாகக் கொள்ளப்படும்" என்று கூறி மறுத்தார். பின் புவனை என்ற ஊரில் உள்ள தன் நண்பர் சோமன் இல்லத்திற்குச் சென்றார்.

ஒட்டக்கூத்தர் குலாபிமானம் அற்றவர் என்று கருதிய செங்குந்தர்கள் பலரும் திரண்டு அவரைக் கொல்ல முடிவு செய்து சோமன் இல்லத்திற்கு வந்தனர். நண்பரைக் காக்க வேண்டியது தன் தர்மம் என்று கருதிய சோமன், தன் பிள்ளைகளுள் ஒருவனை ஒரு பல்லக்கில் வைத்து மூடி, "உங்கள் இடத்திற்குச் சென்றதும் உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்" என்று கூறி அனுப்பி வைத்தார். அவ்வாறே தங்கள் இருப்பிடம் சேர்ந்த செங்குந்தர்கள், பல்லக்கைத் திறந்து பார்த்தனர். கூத்தருக்குப் பதிலாக சோமனின் மகன் இருப்பது கண்டு திகைத்தனர். நட்பின் உயர்வை அறிந்த அவர்கள் ஒட்டக்கூத்தரைக் கொல்லும் முடிவைக் கைவிட்டனர். பின் சோமன் இல்லம் சென்று மீண்டும் ஒட்டக்கூத்தரிடம் தங்களது வேண்டுகோளை முன் வைத்தனர்.

ஒட்டக்கூத்தர் அவர்களிடம், "நாம் வீர மரபைச் சேர்ந்தவர்கள். அதனை உலகுக்கு மெய்ப்பிக்கும் வகையில் நீங்கள் செங்குந்தர் தலைப் பிள்ளைகள் 1008 தலைகளைக் கொண்டு வாருங்கள்! அவற்றின் மீது அமர்ந்து, நீங்கள் விரும்பும்படியான நூல் ஒன்றைப் பாடுகிறேன் என்றார். அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டு அவ்வாறே தலைப்பிள்ளைகளின் 1008 தலைகளை அரிந்து குலோத்துங்க சோழனின் சபா மண்டல வாயிலில் உள்ள வீரலட்சுமி சன்னதி முன் சிங்காதனமாகப் பரப்பினர். ஒட்டக்கூத்தர் அதன் மீதேறி ஈட்டி எழுபது' நூலை அரங்கேற்றினார். - என்று தொன்மக் கதை கூறுகிறது. '1008 தலைகள் அல்ல எழுபது தலைகள்' என்றும், 'இம்மாதிரி சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை' என்றும் இரு வேறு கருத்துக்கள் தமிழறிஞர்களிடம், ஆய்வாளர்களிடம் நிலவுகின்றன.

உள்ளடக்கம்

ஈட்டி எழுபது நூலில், செங்குந்தர்களின் பிறப்புச் சிறப்பு, முருகப் பெருமானுக்கும், செங்குந்தர்களுக்கும் இருந்த தொடர்பு, அவர்கள் வங்கம், வடநாடு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல நாடுகளை வெற்றிகொண்டு ஆண்ட வரலாறு, சோழ அரசர்களுக்கும், செங்குந்தர்களுக்கும் புலிக்கொடி சின்னமாக விளங்கியது எனப் பல செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒட்டக்கூத்தர் பாடல்களைப் பாட, சிம்மாசனத்தில் இருந்த தலைகள் அவற்றைக் கேட்டு ரசித்தன என்றும், பாடலின் இறுதியில் 1008 தலைகளும் தங்கள் உடலோடு சேர்ந்து உயிர்பெற்றன என்றும் தொன்மக் கதை கூறுகிறது. அறுந்த தலைகளை மீண்டும் உடலோடு ஒட்டுமாறு பாடியதால் ஒட்டக்கூத்தர் என்ற பெயர் வந்ததாகத் தொன்மம்.

பாடல்

பாயிரம்

பூவார் புவனையிற் சோமன் றரும்பழி போனபின்பு
நாவாணர் போற்றிய நாடகங்கேட்ப நலமுடனே
யாவாணர் செங்குந்தராயிரத் தெண்டலை கொய்திரத்தப்
பாவாடை யிட்ட துலகமெல் லாம்புகழ் பாலித்ததே

செங்குந்தம் பூசிக்கப்படும் தலங்கள்

பருப்பத மேரகம் பரங்குன்றம் பழம்
பொருப்பத மாவினன் குடிசெந்திற் பொது
விருப்பெனக் குன்று தோறாட லாமெனுந்
திருப்பதி தமிலமர் செய்ய குந்தமே

செங்குந்தத்தினது வல்லமை

ஓதிய வேள்வியினு வப்ப நாரதன்
போத வேதகர் தனைப் பொங்குதீத்தர
வேதனைப் படுப்பதை விரைந்து கட்டியே
சேதனக்கு தவினதிருச் செங்குந்தமே

செங்குந்தத் தலைவர்கள் வங்க தேசத்தை வென்றமை

மச்சநாடுடைய கோமேல் வங்கநாடாளு மன்னன்
குச்சரவர சற்காக சமரமேற் கொண்டு கொற்றக்
கைச்சலியாமற் கொல்லுங் காலையிற் கௌதனென்பான்
உச்சினி தொடங்கிப்போர் செய்குந்தம் போலுலகிலுண்டோ

தலைகள் உயிர் பெற்றது

வட்டமார வையுழை வந்த மேலவ
ரிட்ட பாவாடை கண்டிசை பெறாதுமண்
முட்டவந்துயிர் பெறீஇ மொய்த்து ளேமெனக்
கட்டுள குந்தர்சீர் கழறி யேத்தினார்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Sep-2024, 19:27:27 IST