மூவருலா
மூவருலா, (மூவர் உலா) (பொ.யு. 12-ம் நூற்றாண்டு) தமிழ்ச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. விக்கிரம சோழன், அவனது மகன் குலோத்துங்க சோழன், அவனது மகன் இராசராச சோழன் ஆகிய மூவரையும் புகழ்ந்து பாடப்பட்டது. இதனை இயற்றியவர் ஒட்டக்கூத்தர்.
நூல் அமைப்பு
ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட சோழ மன்னர்கள் மீதான உலா நூல்களில் முதலில் இயற்றப்பட்டது விக்கிரம சோழன் உலா. இரண்டாவதாக இயற்றப்பட்டது, குலோத்துங்க சோழன் உலா. மூன்றாவது உலா நூல். இராசராச சோழன் உலா. தந்தை, மகன், பேரன் எனச் சோழ மன்னர்கள் மூவர் மீதும் பாடப்பட்டதால் மூவருலா என்ற பெயர் பெற்றது. கலிவெண்பாவில் அமைந்துள்ள இப்பாடல்களில் சோழ மன்னர்களின் வீரம், கொடை, குலச்சிறப்பு, பெருமை ஆகியன விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் குறிப்பு
சோழ நாட்டில் 'மலரி' என்ற ஊரில் செங்குந்த மரபில் தோன்றியவர் ஒட்டக்கூத்தர். இவர் விக்கிரம சோழ மன்னனின் அவைக்களப் புலவர். விக்கிரம சோழனுக்குப் பின் அவன் மைந்தன் குலோத்துங்கனுக்குத் தமிழ்க் கல்வி பயிற்றுவித்த குருவாகவும் அவைக்களப் புலவராகவும் இருந்தார். பின்னர் குலோத்துங்கனின் மகன் இரண்டாம் இராசராசனுக்கும் அவைக்களப் புலவராக இருந்தார். அவர்கள் மூவர் மீதும் ஒட்டக்கூத்தர் பாடிய உலா நூல்களே 'மூவருலா'
சோழன் அவைக்களப் புலவர்களுள் சிறப்பு வாய்ந்த தலைமைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தர், கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி, காளக்கவி, கௌடப் புலவர் போன்ற பட்டங்களைப் பெற்றார். தக்கயாகப் பரணி, ஈட்டியெழுபது, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட பல நூல்களை இயற்றினார். தனது புலமைக்காக சோழ மன்னனிடமிருந்து ஒட்டக்கூத்தர் பரிசாகப் பெற்ற ஊர் அவர் பெயரில் 'கூத்தனூர்' என்று அழைக்கப்பட்டது.
உள்ளடக்கம்
விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன், இராசராச சோழன் எனச் சோழ மன்னர்கள் உலா வரும்போது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற ஏழுவகைப் பருவ மகளிரும் அவர்களைக் காண்பதும், காதல் கொள்வதும் பற்றிய செய்திகள் மூவருலாவில் இடம்பெற்றன.
- விக்கிரம சோழன் உலா, 342 கண்ணிகளைக் கொண்டது.
- குலோத்துங்க சோழன் உலா, 387 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
- இராசராச சோழன் உலா, 391 கண்ணிகளைக் கொண்டது.
மூவருலாவில் விக்கிரம சோழன் (1118-1136) குலோத்துங்க சோழன் (1133-1150), இராசராச சோழன்(1146-1163) மூவரின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நூலின் பகுதிகளான மூன்று உலாக்களும் தனி நூல்களாகவும் கருதப்படுகின்றன. சோழர்கள் மூவரின் சிறப்பைக் கூறும் நூலாகவும், மக்களின் வாழ்க்கை நிலை, மன்னர்கள் ஆலயங்களுக்குச் செய்ந்த நிவந்தங்கள், ஆட்சித் திறன் பற்றிய செய்திகளைக் கூறும் நூலாகவு மூவருலா நூல் அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Sep-2024, 19:55:16 IST