குலோத்துங்க சோழன் உலா
குலோத்துங்க சோழன் உலா (12-ம் நூற்றாண்டு) உலா நூல்களுள் ஒன்று. 387 கண்ணிகளைக் கொண்டது. இந்நூலை இயற்றியவர் ஒட்டக்கூத்தர்.
நூல் தோற்றம்
ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட சோழ மன்னர்கள் மீதான உலா நூல்களில் இரண்டாவதாக இயற்றப்பட்டது, குலோத்துங்க சோழன் உலா. இதன் காலம் 12-ம் நூற்றாண்டு. (முதல் நூல் விக்கிரம சோழன் உலா). குலோத்துங்க சோழன் உலா, சோழர்களின் வரலாற்றைக் கூறுவதுடன் குலோத்துங்க சோழ மன்னனின் வீரம், கொடைச் சிறப்பு, ஈகைத்திறன், பகைவரை வெற்றிகொண்ட தன்மை, மக்கள் நலத்திற்கான பணிகளை மெற்கொண்டது ஆகியவை குறித்த செய்திகளை எடுத்துரைக்கிறது. இந்த உலா நூலைத் தொடர்ந்து இராசராச சோழன் உலா என்ற நூலையும் ஒட்டக்கூத்தர் இயற்றினார்.
ஆசிரியர் குறிப்பு
சோழ நாட்டில் 'மலரி' என்ற ஊரில் செங்குந்த மரபில் தோன்றியவர் ஒட்டக்கூத்தர். இவர் விக்கிரம சோழ மன்னனின் அவைக்களப் புலவர். விக்கிரம சோழனுக்குப் பின் அவன் மைந்தன் குலோத்துங்கனுக்குத் தமிழ்க் கல்வி பயிற்றுவித்த குருவாகவும் அவைக்களப் புலவராகவும் இருந்தார். பின்னர் குலோத்துங்கனின் மகன் இரண்டாம் இராசராசனுக்கும் அவைக்களப் புலவராக இருந்தார். அவர்கள் மூவர் மீதும் ஒட்டக்கூத்தர் பாடிய உலா நூல்கள் 'மூவருலா' என்று அழைக்கப்படுகின்றன. சோழன் அவைக்களப் புலவர்களுள் சிறப்பு வாய்ந்த தலைமைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தர், 'கவிராட்சசன்', 'கவிச்சக்கரவர்த்தி', 'காளக்கவி', 'கௌடப் புலவர்' போன்ற பட்டங்களைப் பெற்றார். தக்கயாகப் பரணி, ஈட்டியெழுபது, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட பல நூல்களை இயற்றினார். தனது புலமைக்காக சோழ மன்னனிடமிருந்து ஒட்டக்கூத்தர் பரிசாகப் பெற்ற ஊர் அவர் பெயரில் 'கூத்தனூர்' என்று அழைக்கப்பட்டது.
நூல் அமைப்பு
குலோத்துங்க சோழன் உலா நூலில் 387 கண்ணிகள் இடம்பெற்றன. பாடல்கள், கலிவெண்பா யாப்பில், வெண்டளை பெற்று, இரண்டாமடியில் தனிச்சொல் பெற்று அமைந்துள்ளன. நூலின் இறுதியில் தனி வெண்பா ஒன்றும் இடம்பெற்றது. குலோத்துங்க சோழன் தில்லையில் செய்த திருப்பணிகள் பற்றி 21 கண்ணிகளில் கூறப்பட்டுள்ளது.
உள்ளடக்கம்
குலோத்துங்க சோழன் உலாவின் பாட்டுடைத்தலைவன் குலோத்துங்க சோழன். இவன் விக்கிரம சோழனின் மகன். பொ.யு. 1133-ல் இளவரசர் பட்டம் சூட்டப்பட்ட இவன், 1135 முதல் 1150 வரை ஆட்சி புரிந்தான். எதிரிலிப் பெருமாள், கலிகடிந்த சோழன், திருநூற்றுச் சோழன், பெரிய பெருமாள், அநபாய சோழன் போன்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டான். இவனுக்கு தியாகவல்லி, முக்கோக்கிழானடிகள் என இரு மனைவிகள். இருவரில் தியாகவல்லி பட்டத்தரசி. இவளுக்குரிய சிறப்புப் பெயர் புவனமுழுதுடையாள். இவர்களுடைய மகன், இராசராசன்.
குலோத்துங்க சோழன், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பல்வேறு திருப்பணிகளை மேற்கொண்டான். திருவாரூர், திருநாம நல்லூர், திருவதிகை, திருமுதுகுன்றம் போன்ற சிவத்தலங்களிலும் பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டான். சிதம்பரம் சிவன் கோவிலுக்குப் பொன் வேய்ந்தது, திருச்சுற்றுச் சுவர் அமைத்தது, ஏழுநிலைக் கோபுரங்கள் அடங்கிய சிவகாமிக் கோட்டம் அமைத்தது, திருக்குளம் அமைத்தது, தேர் செய்தது போன்ற செய்திகளை குலோத்துங்க சோழன் உலா விளக்குகிறது. இவனது ஆட்சிக்காலம் சிறப்புப் பொருந்தியதாக இருந்தது என்பதையும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர் என்பதையும் குலோத்துங்க சோழன் உலா நூல் குறிப்பிடுகிறது.
குலோத்துங்க சோழன் தமிழ்ப் புலமையும், பல்வகைச் செய்யுள் இயற்றும் ஆற்றலும் இலக்கிய, இலக்கண அறிவும் கொண்டிருந்தான். இவனுக்குத் தமிழ் பயிற்றுவித்தவர் ஒட்டக்கூத்தர். அவர், குலோத்துங்க சோழனை, இவ்வுலா நூலில் ஞான கெம்பீரன், நித்திய கீத பிரமோகன், தூரக வித்தியா விநோதன் என்று பலவாறாகப் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் காலத்தில் சைவ சமயம் மிகுந்த ஏற்றம் பெற்றிருந்தது. தில்லைத் தலத்தில் இருந்த விஷ்ணுவின் சிலையைக் கடலில் எறிந்தவன் இம்மன்னன் என்ற ஒரு கருத்துண்டு.
பாடல்
குலோத்துங்க சோழ மன்னன் முடிசூடுதல்
கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள்
முற்றப் புரக்கு முகில்வண்ணன் - பொற்றுவரை
இந்து மரபி லிருக்குந் திருக்குலத்தில்
வந்து மனுகுலத்தை வாழ்வித்த - பைந்தளிர்க்கை
மாதர்ப் பிடிபெற்ற வாரணமவ் வாரணத்தின்
காதற் பெயரன் கனகளபன் - யாதினும்
தீட்டக் கரிய திருவே திருமாலை
சூட்டத் திருமகுடஞ் சூடியபின் - நாட்டு
முறைவிட்ட வேற்று முடிமன்னர் தத்தம்
சிறைவிட் டரசருளிச் செய்து - கறைவிட்டு
மைஞ்ஞாசு மெட்டு மதநாக மோரொட்டும்
பைஞ்ஞாசு மெட்டும் பரந்தீர - இஞ்ஞாலம்
தாதைக்குப் பின்பு தபனற்குந் தோலாத
போதத் திமிரப் பொறைநீக்கி - மாதரில்
ஒக்க வபிடேகஞ் சூடு முரிமைக்கண்
தக்க தலைமைத் தனித்தேவி - மிக்க
புவனி முழுதுடைய பொற்றொடியுந் தானும்
அவனி சுரர்கருதி யார்ப்ப...
மங்கை கூற்று
உருவ வரிக்க ணொழுக வொழுகப்
புருவ முடன்போதப் போத - வெருவி
வனமுலை விம்மி வளர வளரப்
புனைதோள் புடைபோதப் போத - வினைவர்
அருங்கலை யல்கு லகல வகல
மருங்குபோ யுள்வாங்க வாங்க - நெருங்கு
பரவர ராச பயங்கரன்மேல் வேட்கை
வரவர வற்றாத மங்கை - பொரவரு
தேமிரைக்குங் காலையின் ஞாயிற் றிளஞ்செல்வி
தாமரைக்கே சாலுந் தரத்ததோ - காமர்
அமுத மதியத் தலர்நிலா முற்றும்
குமுத நறுமுகைக்கே கூறோ - நமதுகார்
கானின் மடமயிற்கே காணியோ தண்ணிள
வேனில் குயிற்கே விதித்ததோர் - தேனிமிர்
தண்டா மரையா டலைவனை யாமும்போய்
கண்டாலென் னென்னுங் கடைப்பிடியாள் - பண்டை
ஒளியா ரணங்காத றம்மைத்தா மொன்றும்
தௌியாத வாறே தௌிந்தும் - களியன்னம்
வாவிக் கரையில் வரநீ ரரமகளிர்
சேவிக்க நின்றாடுஞ் செவ்வியாள் - காவிற்
புகுதில் வனதெய்வப் பூங்குழை யாயத்
தொகுதி புடைபரந்து சூழ்வாள் - மிகுதே
னிரையர வந்தரு செய்குன்ற நீங்கா
வரையர மாதரின் வாய்ப்பாள் - பெருவிலைய
முத்தில் விளங்கின் முளரித் தவளப்பூங்
கொத்தி னணங்கனைய கோலத்தாள்....
உசாத்துணை
- குலோத்துங்க சோழன் உலா, சென்னை நூலகம் தளம்
- குலோத்துங்க சோழன் உலா, தமிழ் இணைய மின்னூலகம்
- சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி - 6, உலா இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஏப்ரல், 2023.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 18:45:12 IST