being created

பரிமேலழகர்

From Tamil Wiki
Revision as of 11:02, 4 November 2023 by Jayashree (talk | contribs)
1648181211545.jpg

பரிமேலழகர், திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் முதன்மையானவர். இவர் பரிபாடலுக்கு உரை எழுதியுள்ளார். திருமுருகாற்றுப்படைக்கும் உரை எழுதியதாகக் கூறப்படுகிறது.

பிறந்த ஊர்

படிக்காசுப் புலவர் இயற்றிய தொண்டைமண்டல சதகத்தின் 16-ஆவது பாடல் இது:

"வள்ளற்சிலைப்பெரு மாணச்சர்சாத்தர் வழுதிமுதற்
றள்ளுவனார்க்குந்த் தலையான பேரையுந் தன்னுரையை
விள்ளுவனார்க்குத் திருக்காஞ்சி வாழ்பரி மேலழகன்
வள்ளுவனார்க்கு வழிகாட்டினான் றொண்டை மண்டலமே"

இந்தப் பாடல் மூலம் பரிமேலழகர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என அறியவருகிறது.

காலம்

தொல்காப்பியத்தில் இல்லாத, நன்னூல் குறிப்பிடும் "ஒரு பொருட் பன்மொழி" என்பதை பரிமேலழகர் தனது உரையில் பயன்படுத்துவதால் 12-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் எனக் கருதலாம்.

1648181211558.jpg

பரிமேலழகரது திருக்குறள் உரையில் இவருக்கு முன்னவர்களான காளிங்கர் மற்றும் இளம்பரிதியாரின் உரைகள் தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன. இவர்களது காலம் 13- ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுவதால், பரிமேலழகரது காலம் 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என கருதப்படுகிறது. காஞ்சி அருளாளப் பெருமான் கோயில் கல்வெட்டு குறிப்பிடும் பரிமேலழகிய பெருமான் தாதரே திருக்குறளுக்கு உரைசெய்த பரிமேலழகர் என்பது அறிஞர் கருத்து. இதனால் பரிமேலழகர் காலம் 1271-ஆம் ஆண்டை ஒட்டியதாக இருக்கலாம்.

அற்றது பற்றெனில் உற்றது வீடு’, ‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே' என்ற நம்மாழ்வாரின் வரிகளை மேற்கோள் காட்டுவதால் இவர் வைணவ சமயத்தவர் எனக் கருதப்படுகிறது.

பதிப்பு வரலாறு

திருக்குறள்

1648181211533.jpg

திருக்குறளுக்கு உரையாக முதலில் அச்சில் ஏறியது திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதி 1838- ஆம் ஆண்டு வெளியிட்ட பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் என்னும் நூல் ஆகும். 1840-ஆம் ஆண்டு முதன்முதலில் பரிமேலழகர் உரையின் முதல் 24 அதிகாரங்கள் மட்டும் அச்சேறி வெளிவந்துள்ளது. அந்த உரையோடு இராமாநுசக் கவிராயர் எழுதிய வெள்ளுரையும், புத்துரையும், ட்ரூ (W.H. Drew) எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளது, பரிமேலழகரின் முழு உரையும் 1849-ஆம் ஆண்டு எம். வீராசாமி பிள்ளையால் சென்னையில் பதிப்பிக்கப்பட்டது. அறிஞர்களுக்கான இதன் ஆராய்ச்சித் தொகுப்பு ஒன்று 1965-ம் ஆண்டு வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியாரால் பதிப்பிக்கப்பட்டது

பரிபாடல்

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்து போகும் நிலை எய்தியபோது பல சுவடிகளை சோதித்து உ.வே.சாமிநாதையர் பரிமேலழகர் உரையுடன் 1918-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்

திருமுருகாற்றுப்படை

'திருமுருகாற்றுப்படை பரிமேலழகர் உரை' என்னும் நூலை திருப்பனந்தாள் காசி மடம் வெளியிட்டுள்ளது.

"அரிமேல் அழகுறூஉம் அன்பு அமை நெஞ்சப் பரிமேலழகன் பகர்ந்தான்
விரிவுரை மூதக்கீரிஞ் ஞான்று தனி
முருகாற்றுப்படையாம் நக்கீரன் நல்ல கவிக்கு"

இது பரிமேலழகரது உரையில் காணப்படும் சிறப்புப் பாயிரம் .

உரை

திருக்குறள்

பரிமேலழகருக்கு முன் திருக்குறளுக்கு ஒன்பது உரைகள் எழுதப்பட்டன. பத்தாவது உரையாகப் பரிமேலழகர் உரை எழுதப்பட்டது. திருவள்ளுவர் திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்றாகப் பிரித்து அதிகாரங்களுக்குப் பெயரிட்டிருந்தார். உரையாசிரியர்கள் அறம், பொருள், இன்பம் மூன்றையும் இயல்களாகப் பகுத்து அதிகாரங்களை இயல்களுக்குள் வரிசைப்படுத்தியிருந்தனர். ஒரு அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களும் எந்தப் பாலில் (அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்), எந்த இயலில், எந்த அதிகாரத்தில், எந்த வரிசையில் வரும் என வரிசைப்படுத்துவது வைப்பு முறை. இன்று நாம் பின்பற்றும் வரிசை முறை பரிமேலழகர் ஏற்படுத்தியது.

இயல் அதிகாரங்கள்
அறத்துப்பால் பாயிரம் 1-4
இல்லறவியல் 5–24
துறவறவியல் 25–38
பொருட்பால் அரசியல் 39–63
அங்கவியல் 64–95
ஒழிபியல் 96–108
காமத்துப்பால் களவியல் 109–115
கற்பியல் 116–133

ஒரு குறிப்பிட்ட குறளின் இடத்தைத் துல்லியமாகக் கணிக்க பரிமேலழகரின் வரிசை முறையே பயன்படுத்தப்படுகிறது.

பரிமேலழகர் தன் உரையில் இயலின் தொடக்கத்தில் இயலின் அடைவையும் (பொருண்மை) , அதிகாரங்களின் தொடக்கத்தில் அதிகாரத்தை சுருக்கமாக விளக்கி அவ்வதிகாரத்துக்கும் அதற்கு முந்தைய அதிகாரத்துக்கும் உள்ள தொடர்பையும் விளக்கியுள்ளார். பரிமேலழகர் அதிகாரங்களை வரிசைப்படுத்திய முறை மற்ற உரையாசிரியர்களிலிருந்து வேறுபட்டது. அதிகாரங்களை வரிசைப்படுத்திய முறைக்கான விளக்கமும் தரப்பட்டுள்ளது.( உதாரணமாக நமக்கு நன்றி(உதவி) செய்தவரிடம் நாம் நன்றி மறவாமையால் நடுவு நிலைமை தவற வாய்ப்புண்டு. அத்தகைய இடத்தில்கூட நடுவுநிலை தவறுதல்‌ கூடாது என்பதை அறிவுறுத்தும்பொருட்டே “செய்ந்கன்றி யறித'லின்பின்‌, “நடுவு நிலைமை” அதிகாரம்‌ வைக்கப்பட்டது என்று பரிமேலழகர் குறிப்பிடுகிறார்). ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள குறட்பாக்களின் காரண காரியத்‌ தொடர்பு படுத்தித்‌ தொகுப்புரை தரப்பட்டுள்ளது. பரிமேலழகர்‌ தரும்‌ அதிகாரப்‌ பொருள்‌ அடைவும்‌ பாடல்களைச்‌ சுட்டிக்காட்டி, இன்னின்ன பாடல்களில்‌ இன்னின்ன பொருள்கள்‌ பொதிந்துள்ளன என. வாக்கியமாகக்‌ காணப்படுகிறது.

அறத்துப்பாலை 'இல்லறம்‌', 'துறவறம்‌' என இரண்டு இயல்‌களாகப்‌ பரிமேலழகர்‌ பகுத்துள்ளார்‌. தம்முடைய உரைப்‌ பாயிரத்தில்‌, “ எல்லார்க்கும்‌ ஒத்தலின்‌ பெரும்பான்மையாகிய பொது இயல்பு பற்றி இல்லறம்‌ துறவறம்‌ என இருவகை நிலையால்‌ கூறப்‌ பட்டது" என்று குறிப்பிடுகிறார்.

உவமை, பழமொழி மற்றும் புராணக்கதைகள் உரையில் இடம்பெறுகின்றன.

திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படை பரிமேலழகர் உரையை திருப்பனந்தாள் காசி மடம் வெளியிட்டுள்ளது. சைவ சித்தாந்த மகாசமாஜம், பரிமேலழகர் உரை என்ற பெயரோடு திருமுருகாற்றுப்படைக்குப் பழைய உரை ஒன்றினை வெளியிட்டது. இதனை இயற்றியவர் பரிமேலழகர் அல்ல என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். டாக்டர் உ.வே. சாமிநாதையர், பத்துப்பாட்டு மூன்றாம் பதிப்பில், அடிக்குறிப்பாக இவ்வுரையைச் சேர்த்து 'வேறுரை’ என்று குறிப்பிட்டுள்ளார். பரிமேலுழகர் பெயரால் வழங்கிவரும் இந்தப் பழையவுரை அடிதோறும் பதவுரை கூறிக் கீழே அருஞ் சொல்விளக்கம், வினைமுடிபு, இலக்கணக் குறி்ப்பு ஆகியவற்றைத் தருகிறது. இவரது உரையில் உபநிடதம், கல்லாடம் என்னும் சைவ நூல், முதலானவை குறிப்பிடப்படுகின்றன. முருகனைக் குறிக்க சுப்பிரமணியன் என்னும் சொல்லைக் கையாளுகிறார். 'நால் வேறு இயற்கை' எனத் திருமுருகாற்றுப்படையில் வரும் தொடருக்கு சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சயம் என்பனவற்றைக் காட்டி விளக்குகிறார்.

சிறப்பு

பரிமேலழகர் தனது திருக்குறள் உரையில் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் முன்னதாக, அவ்வதிகாரத்தைப் பற்றி விளக்கியும், அவ்வதிகாரம் எவ்வாறு அதற்கு முன்னுள்ள அதிகாரத்துடன் தொடர்பு பெற்றுள்ளது என்பது பற்றியும் கூறியுள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் பல நூல்களில் இருந்து மேற்கோள்களும் காட்டியுள்ளார்.

தொண்டைமண்டல சதகத்தில்

"பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ - நூலிற் பரித்த
உரையெல்லாம் பரிமே லழகன் தெரித்தவுரை யாமோ தெளி"

என்ற பாடல் பரிமேலழகரின் பெருமையைக் கூறுகின்றது.

"குறளுக்கு நிகரான பொருட்செறிவு உடையது பரிமேலழகரின் உரை. பகவத் கீதையைப் போல், திருக்குறளும் எல்லாத் தலைகளுக்கும் பொருந்துகின்ற குல்லாய். அதனால்தான், அவரவர்கள் தங்கள் அரசியல் கொள்கைகளுக்கேற்ப, குறளுக்கு உரை கண்டு, இன்று, பரிமேலழகரைத் தூற்றுகிறார்கள். பரிமேலழகர் ஒருவர்தான் வள்ளுவரின் இதயத்தை நன்கு உணர்ந்தவர். அதனால்தான், வள்ளுவரின் சொற்சிக்கனத்தைக் கையாண்டு, ஆழமான உரையை அவரால் எழுத முடிந்திருக்கிறது. வாழ்க்கை நிலையாமையை உணர்ந்து, நம் நடைமுறைச் சிந்தனை எவ்வாறு வேண்டுமென்று, வள்ளுவக் கோட்பாட்டுக்கேற்ப உரை எழுதுகிறார் பரிமேலழகர். பரிமேலழகர் உரையில்லை என்றேல், வள்ளுவம் புரியாது" என சில திருக்குறள்களுக்கான பரிமேலழகரின் உரையை மேற்கோளிட்டு, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி கூறியுள்ளார்.

“வேண்டாத அடைமொழிகளுக்கு இடம் தராமல் நேரிய முறையில் உரிய பொருளை விளக்கும் அளவிற்கே சொற்களை அளந்து பயன்படுத்துவார். செறிவு, நேர்மை ஆகிய பண்புகள் அமையத் தமிழ் உரைநடையைக் கையாண்டவர் இவர்.” என்று மு. வரதராசனார் பாராட்டியுள்ளார்

உரை எழுதிய நூல்கள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.