தொண்டை மண்டல சதகம்
- சதகம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சதகம் (பெயர் பட்டியல்)
- மண்டலம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மண்டலம் (பெயர் பட்டியல்)
தொண்டை மண்டல சதகம் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) படிக்காசுப் புலவர் இயற்றிய சதகம் என்னும் சிற்றிலக்கிய வகை. தொண்டை மண்டலத்தில் நாட்டுப்புறப் பகுதியில் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைத் தொகுத்து எழுதிய நூல்.
ஆசிரியர்
தொண்டை மண்டல சதகத்தை இயற்றியவர் படிக்காசுப் புலவர். துறவறம் மேற்கொண்டதால் படிக்காசுத் தம்பிரான் என்றும் அழைக்கப்பட்டார். மாமண்டூர் கறுப்பு முதலியாரின் வேண்டுகோளுக்கிணங்க 'தொண்டை மண்டல சதகம்' இயற்றினார். மாமண்டூரில் கற்றோர் மத்தியில் தொண்டை மண்டல சதகம் அரங்கேற்றப்பட்டபோது படிக்காசுப்புலவரை பல்லக்கில் ஏற்றி அப்பல்லக்கை கறுப்பு முதலியார் தானும் சுமந்தார் என்று படிக்காசுப் புலவர் சரிதத்தின் பின்வரும் பாடலிலிருந்து அறிய வருகிறது
கன்மாரி காத்த முகிற் கத்தூரி அருண்மாவைக் கருப்பனென்று
மின்மாரி தனது கிளையத்தனையுஞ் சபை கூட்டி வியந்து கேட்டு
சொன்மாரி பொழிந்திடவே சிரகரம்பிதஞ்செய்து சுருளுந்தந்து
பொன்மாரி பொழிந்து தந்த பல்லக்குஞ் சுமந்து மிகுபுகழ் பெற்றானே
நூல் அமைப்பு
தொண்டை மண்டலத்தில் நாட்டுப்புறப் பகுதியில் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைத் தொகுத்து எழுதிய நூல் இது. தொண்டை மண்டலத்தின் எல்லைகள் கூறப்படுகின்றன.
மேற்குப் பவளமலை வேங்கடம் நேர் வடக்கால்
ஆர்க்க முவரியனி கிழக்குப் - பார்க்குளுயர்
தெற்குப் பினாகி திகழிருப தன் காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு
தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த மக்கள் செய்த தொழில்கள், கடைப்பிடிக்கப்பட நியதிகள், மக்களின் பழக்க வழக்கங்கள், அங்கு வாழ்ந்த சான்றோர்கள், அவர்களின் நற்பண்புகள், திருத்தலங்கள், வழிபாடுகள் எனப் பல குறிப்புகள் காணப்படுகின்றன்றன.
நூலின் மூலம் அறியவரும் செய்திகள்
திருக்குறளின் உரையாசிரியர்களில் ஒருவரான பரிமேலழகர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார் என்பது இந்நூலிலிருந்து அறியப்படுகிறது. இச்சதகத்தின் 41-வது செய்யுள்
திருக்காஞ்சி வாழ் பரிமேலழகன் வள்ளுவர் நூற்கு வழிகாட்டினான்
என்று கூறுவதிலிருந்து இதனை அறியலாம்.
நூலில் குறிப்பிடப்பட்ட தொண்டை மண்டல சான்றோர்கள்
- திருவள்ளுவர்
- கச்சியப்ப சிவாசாரியார்
- கம்பர்
- பரிமேலழகர்
- ஒட்டக் கூத்தர்
- இராமாநுசர்
- சேக்கிழார்
- இரட்டையர்
- அருணகிரிநாதர்
- பவணந்தி
- அப்பைய தீட்சதர்
நூலில் குறிப்பிடப்பட்ட தொண்டை மண்டல மன்னர்கள்
- அதியமான்
- கறுப்பன்
- சடையப்பன்
- குமண வள்ளல்
- மாரி கண்டன் மற்றும் பலர்
இலக்கிய இடம்/சிறப்புகள்
தொண்டை மண்டல சதகம் தொண்டை நாட்டைப்பற்றிய சமூக, வரலாற்று செய்திகளை அறியத் தருகிறது. பரிமேலழகர் தொண்டை மண்டலத்தில் வாழ்ந்தவர் போன்ற செய்திகள் அறிய வருகின்றன.
பாடல் நடை
மாடுகள் வாங்க சிறந்த தினம்
உத்திரமுன்றினோடு மோணமாதிசையிலேடுஞ்
சித்தினாமகத்தினோடுஞ் சிதர்ததோர்கிட்டச்தோடும்
கொத்துடனகன்றுகாலி குறைவறச்கொள்வீசாகில்
அத்திரஞ்செல்லச்செல்ல ஆண்டினில்மாண்டுபோமே,
திருவாலங்காடு
இன்னும்புகழ்கிற்க வூர்பழிக்காம லெழுபதின்மர்
துன்னுந்தழல்புக் கொளித்ததெல்லாஞ்சுரு திப்பொருளா
யுன்னும்ம்புரிசைத் திருவாலங்காட்டி. னுரைபஇக
மன்னுக்தமிழில் வகுத்ததன்றோதொண்டை மண்டலமே
தொண்டை மண்டலத்தின் சான்றோரின் அருள்
தாயினும் நலல தயையுடையோர்கள் தமதுடலம்
வீயினும் செய்கை விடுவார்கொலோ? தங்கள் மெய்ம்முழுதும்
தீயினும் வீழ்வர் முதுகினும் சோறிட்டு சிறரவர்
வாயினும் கையிடுவாரவர்காண் தொண்டை மண்டலமே
(தொண்டை மண்டலத்தின் சான்றோர்கள் தாயை விட அன்பு உடையவர்கள். உயிர் போனாலும் கொள்கை மாற மாட்டார்கள். தங்கள் உடல் முழுமையுமாகத் தீயில் மூழ்குவர் புலவரின் வறுமையைத் தீர்க்கச் செல்வம் வழங்கி உதவ முடியாத நிலைக்கு அஞ்சிச் சீறுகின்ற நல்ல பாம்பின் வாயிலும் கைவிட்டு உயிர்விடத் துணிவர். இத்தகைய அரிய செயலைச் செய்தவர்கள் வாழ்ந்ததும் தொண்டை மண்டலத்தில்)
உசாத்துணை
தொண்டை மண்டல சதகம்,மதுரைத் திட்டம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
18-Sep-2023, 15:31:45 IST