second review completed

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected typo errors;)
Line 101: Line 101:
*[https://www.flipkart.com/r-k-shanmugam-chettiar/p/itmfehftzzzqyhnr ஆர். கே. சண்முகம் செட்டியார்: இந்தியாவின் முதல் நிதியமைச்சர்; ஆங்கில மூலம்: ஆர். சுந்தர்ராஜ், தமிழில்: இரா. கா. மாணிக்கம், கிழக்கு பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2009.]
*[https://www.flipkart.com/r-k-shanmugam-chettiar/p/itmfehftzzzqyhnr ஆர். கே. சண்முகம் செட்டியார்: இந்தியாவின் முதல் நிதியமைச்சர்; ஆங்கில மூலம்: ஆர். சுந்தர்ராஜ், தமிழில்: இரா. கா. மாணிக்கம், கிழக்கு பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2009.]


==அடிக்குறிப்புகள்==
== அடிக்குறிப்புகள் ==
<references />{{Second review completed}}
<references />{{Second review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:24, 14 February 2026

சண்முகம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சண்முகம் (பெயர் பட்டியல்)
செட்டியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: செட்டியார் (பெயர் பட்டியல்)
ஆர்.கே. ஷண்முகம் செட்டியார்

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் (ஆர்.கே. சண்முகம் செட்டியார்; ரா.க. சண்முகம் செட்டியார்; ஆர்.கே. ஷண்முகம் செட்டி; ஆர்.கே. சண்முகம் செட்டி; ஆர்.கே.எஸ்.) (அக்டோபர் 17, 1892 - மே 5, 1953) வழக்குரைஞர்; பொருளாதார நிபுணர்; சுதந்திரப் போராட்ட வீரர். தமிழிசை இயக்கத்தைத் தோற்றுவித்த முன்னோடிகளுள் ஒருவர். இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்.

பிறப்பு, கல்வி

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், அக்டோபர் 17, 1892 அன்று, கோயம்புத்தூரில், ஆர். கந்தசாமி செட்டியார் - ஸ்ரீ ரங்கம்மாள் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். செல்வச் செழிப்புள்ள குடும்பம். பல்வேறு ஆலைகளை இவர்கள் குடும்பத்தினர் நடத்தி வந்தனர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், சில ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றினார். பின்னர் பொது வாழ்வில் ஈடுபட்டார். மணமானவர்.

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார்

இலக்கிய வாழ்க்கை

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் இலக்கிய ஆர்வலர். சிலப்பதிகாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்திற்கு எளிய தமிழில் உரை எழுதினார். அதனை 'புதுமலர் பதிப்பகம்' வெளியிட்டது. குற்றாலக் குறவஞ்சிக்கு உரை எழுதினார். 'வசந்தம்' உள்ளிட்ட பல்வேறு இதழ்களிலும், ஆண்டு மலர் மற்றும் பொங்கல் மலர்களிலும் பல்வேறு இலக்கியக் கட்டுரைகளை எழுதினார். கம்பராமாயணப் பாடல்களை எளிய முறையில் படிக்கும் வகையில் கட்டுரைகளாக வெளியிட்டார். ஆங்கிலத்திலும் பல கட்டுரைகளை எழுதினார்.

1936-ல், கேடி.கே. தங்கமணியுடன் இணைந்து லண்டன் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தார்.

ஆர்.கே. ஷண்முகம் இந்திய நிதி அமைச்சராக இருந்தபோது தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டு, பதிப்பிப்பதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக மத்திய அரசிடமிருந்து ஷண்முகம் செட்டியார் நிதி ஒதுக்கி, அப்பணியை விரைவுபடுத்தினார்.

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய வீட்டு நூலகங்களில் ஷண்முகம் செட்டியாருடையதும் ஒன்றாக இருந்தது. எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம், அந்நூலகத்தில்தான் ஆங்கில, தமிழ் இலக்கியங்களை வாசித்து தேர்ந்த எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராக ஆனார்.

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் வாழ்க்கை வரலாறு (கிழக்கு பதிப்பக வெளியீடு)

இதழியல்

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், 'வசந்தம்' என்னும் இலக்கிய மாத இதழைத் தொடங்கி, அதன் கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். அவ்விதழில் பல கட்டுரைகளை, கதைகளை எழுதினார். ஆர். திருஞானசம்பந்தம், 'வசந்தம்' இதழின் முதன்மை ஆசிரியராக இருந்தார்.

இசை

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், தமிழிசை மீதும், தமிழ்க் கீர்த்தனைகள் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். ராஜா சர் அண்ணாமலை செட்டியாருடன் இணைந்து தமிழிசை இயக்கத்தை உருவாக்கியவர்களுள் ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரும் ஒருவர். சென்னையில் தமிழ் இசைச் சங்கம் உருவாவதற்கும் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் முக்கியக் காரணமாக அமைந்தார்.

தேவாரப் பண்ணிசை ராகங்களை முறைப்படுத்தினார். தேவாரப் பண் ஆராய்ச்சிக் கருத்தரங்கங்கள் பலவற்றை நடத்தினார்.

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் உருவச் சிலை

அரசியல்

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், சமூக சேவைகளிலும், பொது நலப் பணிகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இந்தியாவுக்குச் சுதந்திரம் வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் பல போராட்டங்களில் கலந்துகொண்டார். 1917-ல், கோயம்புத்தூர் நகராட்சியின் உறுப்பினரானார். நகராட்சித் துணைத் தலைவராகப் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரஸில் ஆர்வம் கொண்டு தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார். பின்னர் நீதிக் கட்சியில் இணைந்து செயல்பட்டார். பிரிட்டிஷ் அரசுடன் நட்பில் இருந்தாலும், இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்று தன்னாட்சி அதிகாரத்துடன் விளங்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு இயங்கினார்.

1920-ல் சென்னை ராஜதானியின் சட்டமேலவை உறுப்பினரானார். சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். ஈ.வெ. ராமசாமியின் கடவுள் மறுப்புக் கொள்கையில் ஏற்பு இல்லாததால் அதிலிருந்து விலகினார். சுயராஜ்யக் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். 1923-ல், இந்திய சட்டசபைக்குத் (இன்றைய பாராளுமன்றம்) தேர்ந்தெடுக்கப்பட்டார். 1923 முதல் 1929 வரை மத்திய சட்டமன்றத்தின் கீழவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1931 முதல் 1934 வரை மத்திய சட்டமன்ற அவையின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் பணிபுரிந்தார். 1931-ல், தீண்டத்தகாத சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான மசோதாவை மத்திய சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், 1935 முதல் 1941 வரை கொச்சி சமஸ்தானத்தின் திவானாகப் பணியாற்றினார். தனது பதவிக் காலத்தில், பல நிர்வாக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். மாநிலத்தின் பொருளாதார செழிப்புக்கு முக்கியமானதாக இருந்த கொச்சித் துறைமுகத்தின் வளர்ச்சிக்கு உழைத்தார்.

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், இந்திய தேசிய சட்டசபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் அவர்தான்.

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், சிறிது காலம் போபால் நவாபிற்கு ஆலோசகராகச் செயல்பட்டார்.

நிதி அமைச்சர்

1947-க்கு பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக, காந்தியின் பரிந்துரையின் பேரில், ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் நியமிக்கப்பட்டார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பல திட்டங்களைக் கொண்டுவந்தார். சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்தப் பெரும்பங்காற்றினார். முதல் இந்திய பட்ஜெட்டை 1947-ம் ஆண்டு தாக்கல் செய்தார்.

பிரிட்டன் இந்தியாவுக்குத் தரவேண்டிய சுமார் 1,500 கோடி ரூபாய் அன்னியச் செலாவணியையும் தங்க இருப்பையும் தன் வாதத் திறமையால் மீட்டெடுத்தார். அதிகாரி ஒருவர் செய்த தவறின் பொருட்டு நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார். தமிழ்நாட்டுக்கு வந்து அரசியல், சமூகப் பணிகளில் ஈடுபட்டார். 1952-ம் ஆண்டு, சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார்.

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் நினைவு சாலை (கொச்சி)

அமைப்புச் செயல்பாடுகள்

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், 1928, 1929 மற்றும் 1930-ம் ஆண்டுகளில் ஜெனீவாவில் நடந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பு மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். 1938-ல், 'லீக் ஆஃப் நேஷன்ஸ்' சபை உள்ளிட்ட பல சர்வதேசத் தளங்களில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். 1944-ம் ஆண்டில், பிரெட்டன் வுட்ஸில் நடந்த உலக நாணய மாநாட்டில் பங்குபெற்றார். 1945-ம் ஆண்டில் இளவரசர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராகப் பணியாற்றினார்.

கோவையில், தனது தாயார் ஸ்ரீரங்கம்மாள் நினைவாக ஆர்.கே. ஸ்ரீரங்கம்மாள் கல்வி நிலையம் என்ற மேல்நிலைப் பள்ளியைத் தொடங்கினார். தமிழ்க் கல்விக்காக பேரூரில் ஒரு கல்லூரியை உருவாக்கினார். காந்தி, தாகூர், அன்னிபெசன்ட், சித்தரஞ்சன் தாஸ், அவ்வை டி.கே. ஷண்முகம், சி.என். அண்ணாதுரை உள்ளிட்ட அரசியல், இலக்கியம் சார்ந்த பல துறைகளைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய நட்புக் கொண்டு செயல்பட்டார். தென்னிந்திய ஆலைகள் சங்கம் (SIMA), தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கம் (SITRA) மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (ICCI) உள்ளிட்ட பல வர்த்தக அமைப்புகளை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். கோயம்புத்தூரில் பல பஞ்சாலைகள் உருவாகவும் கோவை மாபெரும் தொழில் நகரமாக ஆகவும் முக்கியப் பங்களித்தார். இந்தியா முழுவதும் தேசிய ஆய்வகங்கள் அமையக் காரணமானார்.

பொறுப்பு

  • இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார்.
  • 1951-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.
  • தேசிய செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் செயல் தலைவராகப் பணிபுரிந்தார்.
  • 1943-ல் இந்திய தொழில் ஆய்வு நிலைக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.
  • 1950-ல் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
  • இந்திய வணிக மற்றும் தொழில் சங்கத்தின் கோவை கிளையின் நிறுவனராகவும், தலைவராகவும் பணியாற்றினார்.

விருதுகள்

  • பிரிட்டிஷ் அரசு வழங்கிய 'ஸர்' பட்டம்.
  • தென்னாட்டுத் தாகூர் பட்டம்
  • திராவிட மணி பட்டம்
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அளித்த டாக்டர் பட்டம்

மறைவு

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், மே 05, 1953 அன்று, தனது 61-ம் வயதில் காலமானார்.

நினைவு

  • ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் மறைவுக்குப் பின், சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரின் நினைவாக அவரது மார்பளவு உருவச் சிலை அமைக்கப்பட்டது.
  • ஜூலை 2014-ல், ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரின் நினைவாக, கோவையில் உள்ள ஆர்.கே. ஸ்ரீரங்கம்மாள் கல்வி நிலையத்தில் அவரது உருவச் சிலை திறக்கப்பட்டது.
  • கொச்சியில் உள்ள சாலை ஒன்றுக்கு ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் நினைவாக 'ஷண்முகம் சாலை' என்று பெயரிடப்பட்டது.
  • பி.எஸ். செட்டியார் (பக்கிரிசாமி செட்டியார்), ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை, 'அறிஞர் ஆர். கே. எஸ்' என்ற தலைப்பில் நூலாக எழுதினார். சென்னை, காமன்வெல்த் பப்ளிஷிங் கம்பெனி, 1958-ல் அந்நூலை வெளியிட்டது.
  • ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை, 'டாக்டர் ஆர். கே. சண்முகம் செட்டியார் வாழ்வும் வழியும்' என்ற தலைப்பில் ப. புகழேந்தி எழுதினார். பாரி நிலையம், 1992-ல் அந்நூலை வெளியிட்டது.
  • ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை, ஆர். சுந்தர்ராஜ் ஆங்கிலத்தில் எழுதினார். அந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது.

மதிப்பீடு

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், பற்றி பத்ரி சேஷாத்ரி, "தமிழகத்தின் மிகப்பெரும் சாதனையாளர்களுள் இவர் ஒருவர். ஆனால் பெரியாருக்கோ, ராஜாஜிக்கோ கிடைத்த அளவு புகழும் பெருமையும் இவருக்குக் கிடைக்கவில்லை. கோயமுத்தூர் பகுதியை தொழிற்சாலைகள் நிறைந்த இடமாக்கியதில் மிக முக்கியமான பங்கு இவருக்கு இருந்திருக்கிறது. கோவையில் SIMA, SITRA போன்ற அமைப்புகளை உருவாக்கியதில் இவருக்குத்தான் முக்கியப் பங்குள்ளது. கொச்சி சமஸ்தான திவானாக 7 ஆண்டுகள் இருந்து, அந்த இடத்தில் பெரும் வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளார்[1]." என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், இந்தியப் பொருளாதாரத்தின் சிறந்த நிபுணர்களுள் ஒருவர். அரசியல்வாதி. மக்கள் நலப் பணிகள் பலவற்றை முன்னெடுத்தவர். பொருளாதார அறிஞர், சமூக ஆர்வலர், இதழியலாளர், இலக்கியவாதி ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.