under review

பி.எஸ். செட்டியார்

From Tamil Wiki
பி.எஸ். செட்டியார் (பா. பக்கிரிசுவாமி செட்டியார்)

பி.எஸ். செட்டியார் (பா. பக்கிரிசுவாமி செட்டியார்; பி. பக்கிரிசுவாமி செட்டியார்) (1905-1967) எழுத்தாளர், இதழாளர், திரைக்கதை-வசன ஆசிரியர், உதவி இயக்குநர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். மாணவர்களுக்காகப் பல நூல்களை எழுதினார். தமிழ்த் திரைப்படத்துறை சார்ந்து வெளிவந்த, தமிழின் முதல் இதழான ‘சினிமா உலகம்’ இதழின் ஆசிரியர்.

பிறப்பு, கல்வி

பி.எஸ். செட்டியார் என்னும் பக்கிரிசுவாமி செட்டியார், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், 1905-ல், பாவாடைசாமி செட்டியார்-கமலத்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். நன்னிலத்தில் பள்ளிக் கல்வியை முடித்த இவர், வித்வான் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

பி.எஸ். செட்டியார், மணமானவர். சென்னை, தொண்டை மண்டலம், துளுவ வேளாளர் உயர் கலாசாலையில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

அறிவுச் சுடர் - பா. பக்கிரிசுவாமி செட்டியார் (பி.எஸ். செட்டியார்)
அன்னை வாசகம் - பி.எஸ். செட்டியார் (பா. பக்கிரிசுவாமி செட்டியார்)

இலக்கிய வாழ்க்கை

பி.எஸ். செட்டியார் பள்ளி மாணவர்களுக்காகப் பல நூல்களை எழுதி வெளியிட்டார். பி.எஸ். செட்டியார் எழுதிய ‘அன்னை வாசகம்’ நூல், பள்ளி மாணவர்களுக்குத் துணைப்பாடமாக வைக்கப்பட்டது. இலக்கிய இதழ்கள் பலவற்றில் தமிழ் இலக்கியம் குறித்துப் பல கட்டுரைகளை எழுதினார்.

இதழியல்

பி.எஸ். செட்டியார், 1935-ல், சினிமா உலகம் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். திரைத்துறை சார்ந்த பல செய்திகளை, நேர்காணல்களை வெளியிட்டார். திரைத்துறை சார்ந்து வெளிவந்த தமிழின் முன்னோடி இதழாக சினிமா உலகம் இதழ் மதிப்பிடப்படுகிறது.

திரையுலகம்

பி.எஸ். செட்டியார், 'ராஜா தேசிங்கு', 'திருமழிசை ஆழ்வார்' போன்ற படங்களுக்குக் கதை-வசனம் எழுதினார். திருமழிசை ஆழ்வார் படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றினார். ‘காளமேகம்' திரைப்படத்திற்குக் கதை, வசனம், இயக்கம் எனப் பல வகைகளில் பங்களித்தார்.

அரசியல்

பி. எஸ். செட்டியார், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த மாநகராட்சி தேர்தல்களில் இரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். சென்னை மாநகராட்சி உறுப்பினராகப் பணிபுரிந்தார். பல்வேறு சமூக நற்பணிகளை மேற்கொண்டார்.

மறைவு

பக்கிரிசுவாமி செட்டியார், உடல் நலக் குறைவால், 1967-ல் காலமானார்.

இலக்கிய இடம்

பி.எஸ். செட்டியார், திரைத்துறை சார்ந்து வெளிவந்த தமிழின் முதல் இதழான ‘சினிமா உலகம்’ இதழின் ஆசிரியர். சிறார்களுக்காகப் பல பாட நூல்களை எழுதினார். சிறந்த இதழாளராகச் செயல்பட்டார். தமிழின் முன்னோடி திரைத்துறை இதழாளராக பக்கிரிசுவாமி செட்டியார் என்னும் பி.எஸ். செட்டியார் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • அறிவுச்சுடர்
  • அன்னை வாசகம்
  • காப்பியக் காட்சிகள்
  • சிறுவர் விருந்து
  • செந்தமிழ்ச் செல்வி
  • பெஞ்சமின் பிராங்க்ளின் வாழ்க்கை வரலாறு
  • இந்தியப் பெரியார்
  • அறிவுலக வீரர்
  • அறிஞர் ஆர்.கே.எஸ்.

உசாத்துணை


✅Finalised Page