தக்கை இராமாயணம்: Difference between revisions
(changed template text) |
(Corrected section header text) |
||
Line 70: | Line 70: | ||
==பதிப்பு== | ==பதிப்பு== | ||
*தக்கை இராமாயணம் (தொகுதி 1,2) (பால, அயோத்தியா, ஆரணிய, கிட்கிந்தா, சௌந்தரிய காண்டங்கள்), பதிப்பாசிரியர்: கு. அருணாசலக் கவுண்டர், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை (1983). | *தக்கை இராமாயணம் (தொகுதி 1,2) (பால, அயோத்தியா, ஆரணிய, கிட்கிந்தா, சௌந்தரிய காண்டங்கள்), பதிப்பாசிரியர்: கு. அருணாசலக் கவுண்டர், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை (1983). | ||
==உசாத்துணை== | == உசாத்துணை == | ||
*இராமன் எத்தனை இராமனடி! அ.கா. பெருமாள், காலச்சுவடு வெளியீடு | *இராமன் எத்தனை இராமனடி! அ.கா. பெருமாள், காலச்சுவடு வெளியீடு | ||
*இராம காதையும் இராமாயணங்களும், அ.அ. மணவாளன், தென்னக ஆய்வு மையம், சென்னை. | *இராம காதையும் இராமாயணங்களும், அ.அ. மணவாளன், தென்னக ஆய்வு மையம், சென்னை. |
Revision as of 09:07, 19 December 2022
தக்கை இராமாயணம், தக்கை என்னும் இசைக்கருவியின் தாளத்துக்கு ஏற்ப அமைந்த பாடல்களைக் கொண்ட இராமாயணம். தக்கை உடுக்கை போன்ற அமைப்பைக் கொண்ட இசைக்கருவி. கொங்கு நாட்டில் இந்த இசைக்கருவி பிரபலமானது. வைணவக் கோயில்களில் கைசிக ஏகாதசி அன்றும், அரையர் சேவையிலும் தக்கை வாசிக்கப்படுகிறது. கம்பனின் இராமாயணத்தை பின்பற்றி அப்படியே இயற்றப்பட்டது தக்கை இராமாயணம்.
ஆசிரியர்
தக்கை இராமாயணத்தை இயற்றியவர் எம்பெருமான் கவிராயர். இவரை ஆதரித்தவன் மோரூர் கண்ணன், அத்தப்பனின் மகன் நல்லதம்பி காங்கேயன் என்பவன். எம்பெருமான் சங்ககிரி (பத்தார்பாடி) ஊரைச் சேர்ந்தவர். கொங்கு நாட்டில் வருவாய்த் துறையில் அதிகாரியாக இருந்தார். மதுரை முத்து வீரப்ப நாயக்கர் (1609 - 1623) காலத்தில் மதுரையில் சில காலம் இவர் இருந்திருக்கிறார். எம்பெருமான் வடமொழியில் புலமையும், வேதாந்த அறிதலும் கொண்டவர்.
எம்பெருமானின் மனைவி பூங்கோதை. பூங்கோதை திருச்செங்கோட்டுக் குறவஞ்சி என்னும் சிற்றிலக்கியத்தைப் பாடியுள்ளார். எம்பெருமான் கவிராயர் நாயக்க மன்னர்களின் அரச காரியங்களில் பங்குபற்றிய அலுவலகராகச் சங்ககிரியிலும், மதுரையிலும் பணியாற்றினார். எம்பெருமான் கவிராயரை ’பத்தர்பாடி’ என்றும் அழைத்தனர்.
எம்பெருமானை ஆதரித்த நல்லதம்பி காங்கேயன், நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவரை ஆதரித்த ஹொய்சாளப் படைத்தலைவனான சீயகங்கனின் மரபில் வந்தவன். காங்கேயன் மேரூர் சிவன் கோவிலில் திருப்பணி செய்திருக்கிறான்.
பதிப்பாசிரியர்
கி.பி. 1600-ல் இயற்றப்பட்ட தக்கை இராமாயணத்தை கு.அருணாசலக் கவுண்டர் பதிப்பித்தார். பேரூர் ஆதீனகர்த்தா சாந்தலிங்க இராமசாமி அடிகளார் பாதுகாத்து வைத்திருந்த இந்நூலின் ஒரே ஒரு ஏடு மட்டும் கிடைத்தது.
இந்நூலைப் பதிப்பிப்பதற்கு காரைக்குடி கம்பன் விழா நிகழ்ச்சி ஒரு காரணமாக அமைந்தது. கம்பன் விழாவில் அருணாசலக் கவுண்டர் தக்கை இராமாயணத்தை அறிமுகம் செய்து பேசினார். அப்போது விழாவைத் தலைமை தாங்கிய தெ.பொ. மீனாட்சிசுந்தரம், "பட்டியும் தொட்டியுமான கொங்கு நாட்டில் தக்கை தவிர வேறு என்ன கிடைக்கும்" எனக் கிண்டலாகக் கேட்டிருக்கிறார். பின் அவரே, "இது கம்பனின் மாற்று வடிவம் போல் உள்ளது. இதைத் தேடி எடுத்துப் பதிப்பிக்க வேண்டும்" என்றிருக்கிறார். அதன் பின் அருணாசலக் கவுண்டர் முழு மூச்சாக தக்கை ராமாயணப் பதிப்பில் ஈடுபட்டார்.
தக்கை ராமாயணத்தை தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை இரண்டு பகுதிகளாக வெளியிட்டது. தக்கை இராமாயணப் பதிப்பில் தி. அ. முத்துச்சாமிக் கோனார், வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் ஆகியோரின் பணியும் குறிப்பிடத்தக்கது.
அரங்கேற்றம்
எம்பெருமான் கவிராயர் இயற்றிய தக்கை இராமாயணம் சங்ககிரி வரதராசப் பெருமாள் கோவிலில் அரங்கேற்றப்பட்டது.
தக்கை இராமாயணம்
தக்கை உடுக்கை போன்ற அமைப்பு கொண்ட தோல்கருவி. அகப்புற முழவுகளில் ஒன்றாக அடியார்க்கு நல்லாரால் குறிப்பிடப்பெறும் தக்கை வாத்தியம் இன்றும் வழக்கில் உள்ளது. ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் நிகழும் விழாவான அரையர் சேவையில் தக்கை வாசிக்கப்படும். தக்கை என்னும் இசைக்கருவி கொண்டு பாடுவதற்காக இயற்றப்பட்ட இராமாயணம் என்பதால் தக்கை இராமாயணம் எனப் பெயர்பெற்றது. இதனை 'இசை இராமாயணம்’, 'இசைத் தமிழ் காப்பியம்’ என்றும் அழைக்கின்றனர்.
கம்ப இராமாயணமும் தக்கை இராமாயணமும்
கம்பனின் இராமாயணத்தைப் பின்பற்றி எழுதப்பட்டது தக்கை இராமாயணம். இது 3250 பாடல்களைக் கொண்டது. முனைவர் அ.கா. பெருமாள் இதைக், "கம்பனின் காவியச் சுருக்கம்" என சொல்கிறார். கம்பனின் காவியத்தைப் போல் இதிலும் ஆறு காண்டங்கள் உண்டு. ஆனால் கம்பனின் சுந்தர காண்டம் தக்கை இராமாயணத்தில் சௌந்தர்ய காண்டம் என மாற்றப்பட்டுள்ளது. தக்கை இராமாயணத்திலும் படலம் என்னும் உட்பிரிவு வருகிறது. பெரும்பாலான படலங்களில் கம்பனின் படலப் பெயர் மாற்றப்படவில்லை.
இராமனைத் திருப்பி அழைத்துச் செல்ல பரதன் கங்கை நதிக் கரையில் நிற்கிறான். எதிர்க்கரையில் குகன் பரதனின் படை ராமனை அழிக்க வந்தது என நினைத்து கோபம் கொண்டு. கச்சையை இறுக்கக் கட்டி கத்தியை இடையில் கட்டி, பற்களைக் கடித்து நிற்கும் கோலத்தைக் கம்பன்
கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்
வெட்டிய பொழியினன் விழிக்கும் தீயினன்
கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன்
கிட்டியது அமர் எனக் கிளரும் தோளினன்
என்கிறான். இதனைத் தக்கை இராமாயணம்,
கச்சை கட்டி விற்பிடித்து
கச்சையின் மேல் கெட்டை கட்டி
செச்சை கொட்டி, இப்படை ஓர்
சிற்றொலியாம் நான் அரவம்
விச்சை கெட்டு இவரை விண்மேல்
விடுவன் என்றான் மேதினிமேல்
இச்சை கெட்டு வந்த தென்றான்
எழுக என்றான் தன் படையை
என்கிறது.
எம்பெருமான் கவிராயர் கம்பனில் இருந்து வேறுபடும் இடமும் உண்டு. தக்கை ராமாயணத்தில் சீதையை தேடிச் செல்லும் அனுமன் குழுவினர் ஒரு இலக்கில் புகுந்து அங்கு வழிதெரியாமல் மாட்டிக் கொள்கின்றனர். இராமனைத் தொழுது இலக்கு மீளலாம் என அனுமன் கூறுகிறான்.
கையால் விழி மூடி இராகவன் பேர்
கருதித் துதிசெய்மின் கவிகாள் என்றான
கம்பராமாயணத்தில் அனுமன் கொள்ளும் விஸ்வரூபம் காட்டப்படுகிறது.
மின் உருக் கொண்ட வில்லோர் வியப்புற, வேத நன்நூல்
பின் உருக் கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ,
பொன் உருக் கொண்ட மேரு, புயத்திற்கும் உவமை போதாத்
தன் உருக் கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்..
மொழி ஒப்பீடு
கம்ப இராமாயணத்தை அடியொற்றி எழுதப்பட்ட தக்கை இராமாயணத்தில் கம்பனின் 10000 விருத்தங்களைச் சுருக்கி 3250 இசைப் பாடல்களாக எம்பெருமான் வடிவமைத்தார். ஆனால் கம்பராமாயணத்தின் கட்டுக்கோப்பு, கதைப் போக்கு, கற்பனை நயம், கவிதைப் பண்பு, நாடக உணர்வு போன்றவை சிதையாதவாறு தக்கை இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது.
ஐந்தாவது காண்டத்தை கம்பர் வால்மீகியைப் பின்பற்றிச் 'சுந்தர காண்டம்’ என்றழைக்கிறார். எம்பெருமான் கவிராயர் இக்காண்டத்தை 'சௌந்தரிய காண்டம்’ என அழைக்கிறார் இந்தப் பெயர் மாற்றத்தால் பொருள் வேறுபாடு என எதுவும் இல்லை என்றாலும் சமஸ்கிருத மொழியைப் பின்பற்றுவதில் எம்பெருமான் ஒரு குறிப்பிட்ட நெறியைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது என ஆய்வாளர் அ.அ. மணவாளன் கருதுகிறார்.
"'சுந்தரம்’ என்பது இயல்பு வழக்கு. 'சௌந்தரியம்’ என்பது 'சுந்தரத்தின்’ தத்திதாந்த நாம[1] வழக்கு. 'அரணியம்’ என்பது இயல்பு வழக்கு. ஆரணியம் என்பது அதனுடைய தத்திதாந்த நாம வழக்கு. தென்னகத்தே வழங்கும் வால்மீகி ராமாயண ஏடுகளிலும், சம்புராமாயணம், அத்யாத்ம ராமாயணம் மற்றும் தமிழ், தெலுகு, மலையாளம், கன்னட மொழி ராமாயணங்களும் ஆரணிய காண்டம் என்று பெயரிட்டுள்ளன. ஆனால் வடபுல வழக்கில் உள்ள வால்மீகி ராமாயணம், துளசி ராமாயணம் மற்றும் வட இந்தியப் பகுதிகளில் உள்ள இராமாயணங்கள் எல்லாம் அரணிய காண்டம் என்றே வழங்குகின்றன. எனவே வடபுல ஏடுகள் பெரும்பான்மையும் இயற்பெயரைப் பயன்படுத்துகின்றன எனவும், தென்புல ஏடுகள் தத்திதாந்த நாமங்களைப் பயன்படுத்துகின்றன என அறியமுடிகிறது. சமஸ்கிருத மொழி மரபின் படி இரண்டும் சரியே. தமிழிலக்கண மரபு கருதும் உறழ்ச்சி வழக்குகளோடு இதனை ஒரோவழி ஒப்பிடலாம்." என்கிறார் அ.அ. மணவாளன்.
ஆய்வாளர்கள் கூற்று
வழக்கில் உள்ள இராமாயணக் கதைகளை ஆய்வு செய்த முனைவர் அ.அ. மணவாளன் தக்கை இராமாயணத்தை பின்வருமாறு குறிப்பிடுகிறார், "தக்கை இராமாயணம், கம்ப இராமாயணத்தை மிக நுட்பமாகப் பின்பற்றிச் செல்கிறது. எனவே சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர்க் கம்பராமாயணப் பாடல்கள் எவ்வாறு இருந்தன என்று அறிந்து கொள்ளவும், பாடபேதங்கள், இடைச் செருகல்கள், மிகைப் பாடல்கள் போன்றன இடைமடுத்து மருட்டுமிடத்துக் கம்பனின் உண்மையான பாடல்களைத் தேர்ந்து கொள்ளவும் தக்கை இராமாயணம் பெரிதும் பயன்படுகிறது என்பதில் ஐயமில்லை" என்கிறார்.
தக்கை இராமாயணத்தைப் பதிப்பித்த கு. அருணாசலக் கவுண்டர், "தக்கை இராமாயணம் ஓசையுடன் படிப்பதற்கு உரியது. இது காலட்சேப மரபைப் பின்பற்றியது" என்கிறார்.
"டி.கே.சி கம்பனைச் சுண்டிப் பார்த்து சுருக்கியது போலவே தக்கை இராமாயண ஆசிரியனும் கம்ப இராமாயணத்தின் சாரமாக ஆனால் தன் பார்வையில் தம் காலத்து நடையில் தக்கை இராமாயணத்தை உருவாக்கியிருக்கிறார்" எனத் தன் 'இராமன் எத்தனை இராமனடி!' நூலில் ஆய்வாளர் அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார். அருணாசலக் கவுண்டர் இதே கூற்றைச் சொல்ல, "எம்பெருமான் கவிராயர் கொங்கு நாட்டு டி.கே.சி" என்கிறார்.
இணைப் புனைவு
எம்பெருமான் கவிராயர் கம்பனைப் படித்துத் தன் காலமொழியில் பாடல்களை உருவாக்கினார். ஒரு படைப்பாளியின் தேர்ந்தெடுத்த படைப்பை மட்டுமே தரும் வழக்கம் 16-ஆம் நூற்றாண்டிற்குப் பின் நடந்திருக்கிறது. இதே போல் நிகழ்ந்த மற்றொரு படைப்பு கந்த புராணச் சுருக்கம்.
பதிப்பு
- தக்கை இராமாயணம் (தொகுதி 1,2) (பால, அயோத்தியா, ஆரணிய, கிட்கிந்தா, சௌந்தரிய காண்டங்கள்), பதிப்பாசிரியர்: கு. அருணாசலக் கவுண்டர், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை (1983).
உசாத்துணை
- இராமன் எத்தனை இராமனடி! அ.கா. பெருமாள், காலச்சுவடு வெளியீடு
- இராம காதையும் இராமாயணங்களும், அ.அ. மணவாளன், தென்னக ஆய்வு மையம், சென்னை.
அடிக்குறிப்புகள்
- ↑ தத்திதாந்த நாமம் என்பது, பெயரினின்று தோன்றிய பெயர். வடமொழியிலுள்ள தத்திதாந்த நாமம் தமிழ் மொழியில் வந்து வழங்குகின்றது(தத்+ஹித+அந்த+நாமம்).தசரதன் என்ற பெயரிலிருந்து தோன்றிய பெயர் தாசரதி(தசரதனின் மகன்).பகீரதனால் கொண்டு வரப்பட்டவள் பாகீரதி.மிதிலை நகரின் இளவரசி மைதிலி. குந்தியின் மகன் கௌந்தேயன்.
வெளி இணைப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.