பூங்கோதை அம்மாள்
பூங்கோதை அம்மாள் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) கவிஞர். கொங்கு வடகரை நாட்டின் கணக்கு அலுவலராகப் பணியாற்றினார் என தூக்க நாயக்கன் பாளையம் செப்பேடு குறிப்பிடுகிறது. பூங்கோதை அம்மாள் பல தனிப்பாடல்களும், திருச்செங்கோட்டுக் குறவஞ்சி என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
தனி வாழ்க்கை
பூங்கோதை அம்மாள் தக்கை ராமாயணம் இயற்றிய எம்பெருமான் கவிராயரின் மனைவி. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
கொங்கு மண்டல சதகம் பூங்கோதையைப் பற்றிக் குறிப்பிடும் போது, "சிறிய இடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர் மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே" என்கிறது. திருச்செங்கோட்டுக் குறவஞ்சியை இயற்றியவர் பூங்கோதை என ஏ.இ. ஸ்ரீரங்க முதலியாரின் தலவரலாற்றுச் சுருக்கம் மூலம் அறிய முடிகிறது. பூங்கோதை மதுரை நகரைச் சேர்ந்தவர், எம்பெருமான் கவிராயரை மணந்து சங்ககிரி வந்தார் என்றும், இருவரும் இடையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கொங்கு மண்டல சதகத்தின் மூலம் தெரியவருகிறது.
காலம்
பூங்கோதை அம்மாளின் கணவர் எம்பெருமான் கொங்கு நாட்டில் வருவாய்த் துறையில் அதிகாரியாக இருந்தார். மதுரை முத்து வீரப்ப நாயக்கர் (1609 - 1623) காலத்தில் மதுரையில் சில காலம் இருவரும் வாழ்ந்தனர் என்ற குறிப்புகள் மூலம் இவர்கள் வாழ்ந்த காலம் பதினாறாம் நூற்றாண்டு இறுதி அல்லது பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
பூங்கோதை அம்மாள் பல தனிப்பாடல்கள் பாடியுள்ளார். இவர் பாடிய திருச்செங்கோட்டுக் குறவஞ்சி ஈரோடு மாவட்டம் திருச்செங்கோட்டில் கோவில் கொண்டுள்ள அர்த்தநாரீசுவரர் மேல் காதல் கொண்ட மோகனாங்கி பாடியதாக அமைந்த குறவஞ்சி. பெண்பால் புலவர் இயற்றிய ஒரே குறவஞ்சி திருச்செங்கோட்டுக் குறவஞ்சி தான். (பார்க்க: திருச்செங்கோட்டுக் குறவஞ்சி)
திருச்செங்கோட்டுக் குறவஞ்சி பாடல்
நீர்கொண்ட கங்கைநிலவு ஆர்க்கொண்ட செஞ்சடிலர்
நித்தியகல் யாணபர மித்திர மகேசர்
கார்கொண்ட குழலும்நறை வார்கொண்ட கொங்கை மலர்
காவி விழியும் கொண்ட தேவிஉமை பாகர்
ஏர்கொண்ட திருநாகம் மேல்கொண்ட அர்த்தநா
ரீசர்தமிழ்க் குறவஞ்சி நேசமகிழ்ந்து ஓத
தார்கொண்ட துளபமொடு சீர்கொண்ட மணி மார்பில்
தரிசோலை மலையழகர் திருவடிகள் துணையே
வாய்மொழிக் கதை
எம்பெருமான் கவிராயரைப் பார்த்து தக்கை ராமாயணத்தைப் பாராட்ட வந்தவர்கள் கவிராயர் வீட்டின் திண்ணையில் அமர்ந்து, "பெண்கள் தனியே வாழ முடியாது" எனப் பெண்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது உள்ளறையில் இருந்து, "அறிவில் இளைஞரே ஆண்மக்கள்" என முதலடி எடுத்து வெண்பா இயற்றி அவர்களிடம் கொடுத்ததாக வாய் மொழிக் கதை சொல்கிறது.
உசாத்துணை
- கொங்குநாட்டு மகளிர் செ.இராசு
வெளி இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
02-Nov-2023, 08:31:22 IST