உடுக்கை
To read the article in English: Udukkai.
உடுக்கை தொன்மையான தோலிசைக் கருவி. இதனை "உடுக்கைப்பாட்டு", "வில்லுப்பாட்டு" போன்ற நாட்டார் நிகழ்த்து கலைகளில் பயன்படுத்துவர். பேயோட்டுதல், குறி சொல்லுதல் போன்ற நம்பிக்கை சார்ந்த நிகழ்வுகளிலும் உடுக்கை பயன்படுத்தப்படுகிறது. இதனை "உடுக்கு" அல்லது "துடி" என்றழைக்கின்றனர்.
வடிவமைப்பு
இக்கருவி இருபுறமும் விரிந்த வாய்ப்பகுதிகளையும் சுருங்கிய நடுப்பகுதியையும் கொண்டது. வில்லுப்பாட்டில் பயன்படுத்தப்படும் உடுக்கையைச் "சித்துடுக்கை" (சிற்றுடுக்கை) என்றழைக்கின்றனர். இதன் உடற்பகுதி பெரும்பாலும் வெண்கலம் அல்லது பித்தளையால் செய்யப்பட்டிருக்கும். மரத்தினைக் கடைந்து செய்யப்படும் உடுக்கையும் தமிழகத்தில் கிடைக்கின்றன. தமிழகத்தில் கிடைக்கும் அத்தகைய மர உடுக்கைகள் பலா மரத்தால் செய்யப்பட்டிருக்கும். மண்ணால் செய்யப்படும் உடுக்கைகளும் தமிழகத்தில் இருந்திருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர்.
மெல்லிய பிரம்பினை வளைத்து வட்ட வடிவில் கட்டப்பட்ட வளையங்களில், மாட்டுச் சவ்வைப் பொருந்துமாறு ஒட்டி உருவாக்கப்பட்ட இரு தட்டுகள் உடுக்கையின் இரு வாய் பகுதியிலும் அமையப் பெற்றிருக்கும். இதனை "உடுக்கை தட்டுகள்" என்றழைக்கின்றனர். இதிலுள்ள வளையங்கள் ஒவ்வொன்றிலும் ஆறு துளைகள் இடப்பட்டிருக்கும். இத்துளைகள் வழியாக நூல் கயிற்றைக் கோத்து இரு தட்டுகளும் உடுக்கின் வாயில் பொருந்தியிருக்குமாறு இழுத்துக் கட்டுவர். உடுக்கின் இடைப்பகுதியில் நூல் கயிற்றுப் பின்னலின் மேலாகத் துணிப் பட்டையைச் சுற்றிக் கொள்வர்.
வாசிக்கும் முறை
உடுக்கின் நடுப்பகுதியில் நூலின் மேல் அமையப் பெற்ற துணிப் பட்டையின் இரு முனைகளையும் இணைத்து இடக்கையால் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு வலக்கை விரல்களால் ஒரு புறத்தில் அடித்து ஓசை எழுப்புவர். துணிப்பட்டையை இறுக்குவதன் மூலம் உச்ச ஓசையும் தளர்த்துவதன் மூலம் மந்த ஓசையும் எழும்பும். உடுக்கின் தாள முறையினைச் "சொல் கட்டு" என்பர்.
மூலப்பொருள்கள்
உடுக்கின் உடற்பகுதியை வெண்கலம் அல்லது பித்தளையால் செய்வர். தமிழகத்தில் பலா மரத்தால் செய்வதும் உண்டு. மண்ணால் செய்யப்பட்டிருக்கிறது என்றும் சிலர் கூறுகின்றனர்.
உடுக்கு தட்டுகள் மெல்லிய பிரம்பினையும், மாட்டுச் சவ்வையும் சேர்த்து செய்கின்றனர்.
வாசிக்கும் குழுக்கள்
உடுக்கு "உடுக்கைப்பாட்டு," "வில்லுப் பாட்டு" போன்ற நிகழ்த்து கலைகளில் இசைக்கருவியாக பயன்படுத்தப்படுகிறது. பிற நாட்டுப்புற கலைகளிலும் துணைக்கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. உடுக்கை பேயோட்டுதல், குறி சொல்லுதல் போன்ற நம்பிக்கை சார்ந்த நிகழ்வுகளுக்கும் இசைக்கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.
கேரளத்தில் சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை முன்னிறுத்தி நிகழ்த்தப்படும் ஐயப்பன் பாட்டு, உடுக்கையின் தாளத்துடன் இடம்பெறும். பொ.யு. 9-ம் நூற்றாண்டிலேயே இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் உடுக்கை பிரபலமான இசைக்கருவியாக இருந்தது என்ற தகவல்கள் காணப்படுகிறது.
உசாத்துணை
- தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் - அ.கா.பெருமாள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:30:14 IST