வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர்
- தெய்வசிகாமணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தெய்வசிகாமணி (பெயர் பட்டியல்)
வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் ( 1903- 1976) வெ.இரா.தெய்வசிகாமணி கவுண்டர். கொங்கு நாட்டின் வரலாற்றாசிரியர். நாட்டாரியல் ஆய்வாளர். பதிப்பாசிரியர். 'பஞ்சமரபு' என்னும் இசைநூலின் பதிப்பாசிரியர்.
பார்க்க தெய்வசிகாமணி
பிறப்பு, கல்வி
ஈரோட்டை அடுத்த வேலம்பாளையத்தில் 1903-ல் பிறந்த தெய்வசிகாமணிக் கவுண்டர், தமிழுடன் வட மொழியும் கற்றார்.
தனிவாழ்க்கை
வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் கொடுமுடி சங்கர வித்யாசாலை உயர்பள்ளி, கோபி வைரவிழா உயர்பள்ளி எனப் பல பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
பதிப்புப்பணி
வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் பெரும்பாலும் சிற்றிலக்கியங்களை பதிப்பித்தவர் . பிள்ளைப்பெருமாள் சிறைமீட்டான் கவிராயர் என்னும் பழம்புலவர் பாடிய கபிலமலைக் குழந்தைக் குமாரர் வருக்கக்கோவையை வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் 1973-ல் ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பித்தார். சிவகிரி வேலாயுதசாமி ஊஞ்சல், சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை போன்ற நூல்களை பதிப்பித்தார்.
வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் பதிப்பித்த நூல்களில் குறிப்பிடத்தக்கது தக்கை இராமாயணம். வெ.ரா.தெய்வசிகாமணி கவுண்டர் அழிந்துபோனதாகக் கருதப்பட்ட இசைநூலான அறிவனாரின் 'பஞ்சமரபு' ஏட்டுச் சுவடியை கண்டுபிடித்துக் இசையறிஞர் குடந்தை.ப. சுந்தரேசனார் துணையுடன் வெளியிட்டார்.
பதிப்புமுறைமை
வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் சிற்றிலக்கியங்கள், நாட்டார் இலக்கியங்களின் ஏட்டுச்சுவடிகளை தேடி எடுத்துப் பதிப்பித்தார். வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களைச் சுவடியிலிருந்து பெயர்த்தெழுதி , பலவற்றை நூலாக வெளியிட்டுள்ளார். ஓலைச் சுவடிகளிலிருந்து பெயர்த்தவற்றை, தனித்தனிக் காகித ஏடுகளில் எழுதிவைத்துள்ளார். ஒவ்வொரு ஏட்டிற்கும் தனித்தனி எண் கொடுத்தும் தொகுத்தார். அவ்வாறு தொகுத்த ஏடுகளின் முன் பக்கத்தில் சுவடி குறித்த விளக்கங்கள் அமைந்துள்ளன.
தன்னிடமுள்ள வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரின் 33-ம் ஏட்டின் முன்பகுதியில், "பொன்காளியம்மன் துணை. தலையநல்லூர்க் குறவஞ்சியென வழங்குகிற நாட்டிமைக் காளியண கவுண்டன் குறவஞ்சி. தலையநல்லூர்க் கவுண்டன்பாளையம் நஞ்சைய புலவர் பரம்பரையனராகிய பொங்கியண வாத்தியார் வீட்டு ஏட்டுப் பிரதியைக் கொண்டு காகிதப் பிரதி செய்யப்பட்டது. வித்துவான் வே.ரா. தெய்வசிகாமணி. கொடுமுடி, சங்கர வித்தியாசாலைத் தமிழ்ப் பண்டிதர் 5.6.1943" என எழுதப்பட்டுள்ளது என்று ஆய்வாளர் கு. மகுடீஸ்வரன் குறிப்பிடுகிறார். கு.அருணாசலக் கவுண்டர் தெய்வசிகாமணிக் கவுண்டரின் கைப்பிரதிகளை தொடர்ந்து ஆராய்ந்து பதிப்பித்தார்.
பல நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகளைத் தருவதோடு, பல இடங்களில் கல்வெட்டு, செப்பேடு, ஓலை ஆவணங்களைச் சான்றாகக் காட்டுவது வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரின் வழக்கம்.
இலக்கியப் பணி
வே.ரா.தெய்வசிகாமணி கவுண்டர் சிற்றிலக்கிய நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். பவானி கூடுதுறை வதரிநாதர் குறித்து எழுதிய வதரியாற்றுப்படை குறிப்பிடத்தக்க நூல்.
மறைவு
வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் 1976-ல் மறைந்தார்.
இலக்கிய இடம்
வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் தமிழ் பதிப்பியகத்தின் முன்னோடிகளில் ஒருவர். தொன்மையான ஏடுகளை பேணி பிரதி எடுத்து பிற ஆய்வாளர்களுக்கும் அளித்தவர். சிற்றிலக்கியங்களை பதிப்பித்தார். பஞ்சமரபு , தக்கை இராமாயணம் ஆகியவை அவர் பதிப்பித்த நூல்களில் முக்கியமானவை
நூல்கள்
பதிப்பித்த நூல்கள்
- சிவகிரி வேலாயுதசாமி ஊஞ்சல்
- சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை
- உதயணன் கதை
- சித்திர மடல்
- பரத சங்கிருகம்
- முனிமொழி முப்பது,
- சிவமலை பிள்ளைத்தமிழ்[1]
- மேழி விளக்கம்[2]
- தக்கை இராமாயணம்
- பஞ்சமரபு
எழுதிய நூல்
உசாத்துணை
- கு.மகுடீஸ்வரன் கட்டுரை
- புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்களின் ஏடு பெயர்ப்பும் நூல் படைப்பும்-சி.தீபா
- வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டரின் கைப்பிரதியிலிருந்து கிடைத்த பாடல்கள்-தமிழ் இணையக் கல்விக் கழகம்
- வெ.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர்- தமிழ் கொங்கு
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-Jun-2022, 03:58:41 IST