second review completed

ரஸவாதி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 69: Line 69:
* [https://www.amazon.in/s?i=digital-text&rh=p_27%3ARasavadhi&s=relevancerank&text=Rasavadhi&ref=dp_byline_sr_ebooks_1 ரஸவாதி நூல்கள்: அமேசான் தளம்]
* [https://www.amazon.in/s?i=digital-text&rh=p_27%3ARasavadhi&s=relevancerank&text=Rasavadhi&ref=dp_byline_sr_ebooks_1 ரஸவாதி நூல்கள்: அமேசான் தளம்]
* அமுதசுரபி இதழ் கட்டுரை; நவம்பர் 2018 இதழ்
* அமுதசுரபி இதழ் கட்டுரை; நவம்பர் 2018 இதழ்
{{First review completed}}
{{Second review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 08:07, 15 April 2024

எழுத்தாளர் ரஸவாதி

ரஸவாதி (ஆர். ஸ்ரீநிவாசன்; ஆர். சீனிவாசன்) (அக்டோபர் 5, 1928 - 1994) எழுத்தாளர்; இதழாளர்; நாடக ஆசிரியர்; திரைப்பட உதவி இயக்குநர். பொது வாசிப்புக்குரிய பல நாவல்களை, சிறுகதைகளை எழுதினார். அமுதசுரபி சிறந்த நாவல் பரிசு உள்பட பல்வேறு பரிசுகளைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

ஆர். ஸ்ரீநிவாசன் என்னும் இயற்பெயரை உடைய ரஸவாதி, அக்டோபர் 5, 1928 அன்று, திருச்சியை அடுத்துள்ள துறையூரில் பிறந்தார். சொந்த ஊர் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி. பள்ளிக்கல்வியை துறையூரில் நிறைவு செய்த ரஸவாதி, பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். புகைப்பட கலை கற்றார். இசை மேதை மாலியிடம் புல்லாங்குழல் கற்றார். ஜோடதித்தில் புலமை பெற்றார்.

ரஸவாதி

தனி வாழ்க்கை

ரஸவாதி, தபால் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றினார். 1949-ல், ராஜம் அம்மையாரை மணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள்; நான்கு மகன்கள். மகள்களில் ஒருவரான ரேவதி பாலு எழுத்தாளர்.

ரஸவாதி நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

ரஸவாதி கல்லூரிக் காலத்தில் இலக்கிய ஆர்வம் பெற்றார். ரஸமாக எந்த விஷயத்தைப் பற்றியும் விவாதிக்கக்கூடியவர் என்ற பொருளில் ‘ரஸவாதி’ என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்டார். தி.ஜானகிராமனையும், லா.ச. ராமாமிர்தத்தையும் தனது ஆதர்சமாகக் கொண்டார். ‘விடிந்தது’ எனும் தனது முதல் சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். விக்கிரமன், கி.வா. ஜகந்நாதன் போன்றோர் ரஸவாதியை எழுத ஊக்குவித்தனர். கல்கி, கலைமகள், அமுதசுரபி போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். ஆனந்த விகடனில் பல முத்திரைக் கதைகளை எழுதினார். ‘தோடி’, ‘அரங்கேற்றம்’, ‘ஆராதனை’, ‘வித்வானும் ரசிகையும்’, ‘சங்கராபரணம்’ போன்ற சிறுகதைகள் அவற்றுள் குறிப்பிடத்தகுந்தன.

ரஸவாதி இதழ்கள் நடத்திய பல்வேறு நாவல், சிறுகதைப் போட்டிகளில் கலந்துகொண்டார். கலைமகள் இதழில் ரஸவாதி எழுதிய ‘ஆதார ஸ்ருதி’ தொடர், மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் பேத்தி ரமாதேவி ராமானுஜத்தால் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் ஆசிரியராக இருந்த ‘ஜீவனா’ இதழில் தொடராக வெளியானது.

ரஸவாதி கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, தி.ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், மீ.ப.சோமு, பி.எஸ்.ராமையா, வல்லிக்கண்ணன், டி.என். சுகி சுப்பிரமணியன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் நெருங்கிய நட்பைப் பெற்றிருந்தார். 1957-ல், கல்கத்தாவில் நடந்த தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அதே வருடத்தில் சக எழுத்தாளர்களுடன் இலங்கை சென்று சிறப்புரையாற்றினார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பின் மீண்டு வந்து ’சேதுபந்தனம்’ என்ற நாவலை எழுதினார். ரஸவாதி நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார்.

ரஸவாதி, தி. ஜானகிராமனுடன் (படம் நன்றி: குவிகம் இணைய இதழ்)

இதழியல்

ரஸவாதி, கல்லூரிக் காலத்தில் நண்பர்கள் ஸ்ரீவேணுகோபாலன், டி.ஆர். சுப்ரமணியம் ஆகியோரின் உறுதுணையுடன் கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தினார்.

ரஸவாதி, ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ இதழில் சில காலம் நிருபராகப் பணியாற்றினார்.

ரஸவாதி, கி.வா. ஜகந்நாதனுடன் (படம் நன்றி: குவிகம் இணைய இதழ்)

நாடக வாழ்க்கை

ரஸவாதி, ’தி மெட்ராஸ் நாட்ய சங்’ என்ற நாடகப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, என்.வி. ராஜாமணி, எஸ்.வி. சகஸ்ரநாமம், பி.எஸ். ராமையா, ஏ.கே. வீராச்சாமி, ’கலாசாகரம்’ ராஜகோபால் ஆகியோரிடம் நேரடியாக நாடகப் பயிற்சி பெற்றார். நடிப்பின் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றார். ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’, ‘பாஞ்சாலி சபதம்’ போன்ற நாடகங்களில் நடித்தார்.

ரஸவாதி, தான் எழுதிப் பரிசுப் பெற்ற ‘அழகின் யாத்திரை’ நாவலை, நாடகமாக்கி அரங்கேற்றி நடித்தார். மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப்பிற்காக ரஸவாதி எழுதிய ‘தி பெட்’ நாடகம் பரவலான வரவேற்பைப் பெற்றது. வி.எஸ். ராகவனின் ஐ.என்.ஏ. தியேட்டருக்காக ’வழி நடுவில்’ என்ற நாடகத்தை எழுதினார். இந்நாடகம் இயல், இசை, நாடக மன்றப் பரிசு பெற்றது. ’வழி நடுவில்’ நாடகம் கன்னடத்தில், நடிகர் வாதிராஜால் திரைப்படமானது.

சென்னை வானொலியில் ரஸவாதியின் பல நாடகங்கள் ஒலிபரப்பாகின. ‘ஆயுள் தண்டனை’ என்னும் நாடகம், ரஸவாதி இறுதியாக மேடையேற்றிய நாடகம்.

திரைப்படம்

ரஸவாதியின் ஒரு சிறுகதை ‘உயிர்’ என்ற தலைப்பில் திரைப்படமாக வெளிவந்தது. ‘எங்கள் குல தெய்வம்’ என்ற திரைப்படத்தில் பி.ஆர். சோமுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

ரஸவாதி சிறுகதை

விருதுகள்/பரிசு

  • அமுதசுரபி நாவல் போட்டிப் பரிசு – அழகின் யாத்திரை
  • கலைமகள் நாராயணஸ்வாமி அய்யர் நாவல் போட்டிப் பரிசு – ஆதாரஸ்ருதி

மறைவு

ரஸவாதி, 1994-ல், தனது 66-ம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

ரஸவாதி, பொது வாசிப்புக்குரிய படைப்புகளை இலக்கியப் பிரக்ஞையுடன் எழுதினார். எளிமையான மொழியில் எழுதினார். இசை குறித்தும், ராகங்களைப் பின்னணியாகக் கொண்டும் எழுதினார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்தார்.

ரஸவாதியின் படைப்புகள் குறித்து வாலி, “ஆற்றொழுக்கான நடை; அப்பழுக்கற்ற பாத்திரப்படைப்புகள்; தன் தமிழ் ஆளுமையைக் காட்டவேண்டி, சொற்சாலங்களை நிகழ்த்தாமை, ’அடுத்து என்ன நேரும்’ என வாசகனை நாற்காலி நுனிக்கு வரவழைக்கும் அற்புதம் என்றெல்லாம் திரு. ரஸவாதி அவர்களின் படைப்புகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்” என்று குறிப்பிட்டார்.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்பு
  • சங்கராபரணம்
  • கடலூருக்கு ஒரு டிக்கெட்
  • ரஸவாதி சிறுகதைகள் (தொகுப்பு)
நாவல்கள்
  • ஆதார ஸ்ருதி
  • அழகின் யாத்திரை
  • சேதுபந்தனம்

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.