சிற்றிதழ்: Difference between revisions
No edit summary |
|||
(2 intermediate revisions by the same user not shown) | |||
Line 34: | Line 34: | ||
* [[கோகயம்]] | * [[கோகயம்]] | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை - ஜெயமோகன் தளம் | * [https://www.jeyamohan.in/79870/ சிற்றிதழ் என்பது - ஜெயமோகன் தளம்] | ||
* [https://www.jeyamohan.in/249/ சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை - ஜெயமோகன் தளம்] | |||
{{Finalised}} | {{Finalised}} |
Latest revision as of 13:16, 10 January 2025
சிற்றிதழ்: தன் வாசகர்களின் தரம் எண்ணிக்கை ஆகியவற்றை வரையறை செய்துகொண்டு, அவர்களுக்காக மட்டுமே வெளியிடப்படும் இதழ். பொதுவாசகர்களுக்கு உரியதல்ல என தன்னை கொள்கை அடிப்படையில் வரையறை செய்துகொண்டது. தன் வாசகர்வட்டத்திற்கு புரியும் மொழிநடை, கலைச்சொற்கள் ஆகியவற்றுடன் செயல்படுவது.
இலக்கியம், தத்துவம் ஆகிய தளங்களிலேயே பொதுவாகச் சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. இதே இயல்புகொண்ட இதழ்கள் குறிப்பிட்ட அறிவுத்துறை அல்லது தொழில்துறை சார்ந்து வருவதுண்டு. அவை துறைசார் இதழ்கள் எனப்படுகின்றன. கல்வித்துறை சார்ந்தும் இதே இயல்புகொண்ட இதழ்கள் வெளிவருவதுண்டு. அவற்றை கல்வியிதழ்கள் என வரையறை செய்கிறார்கள்.
தமிழில் சிற்றிதழ்கள் இலக்கியம் சார்ந்தே பெரும்பாலும் வெளிவருகின்றன. மரபிலக்கியம் சார்ந்தும் நவீன இலக்கியம் சார்ந்தும் சிற்றிதழ்கள் வெளிவருகின்றன.
பார்க்க தமிழ் இதழ்கள்
சிற்றிதழ் வரலாறு
1831 முதல் தமிழில் இதழ்கள் வெளிவரத் தொடங்கின. 1900 வரை வந்த இதழ்களை 19-ம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள் என்னும் பகுப்புக்குள் கொண்டுசெல்கிறார்கள். இவை அனைத்துமே குறைவான எண்ணிக்கையில், குறைவான பக்கங்களுடன் வெளிவந்தவை. அன்றிருந்த அச்சுத்தொழில்நுட்பம், அன்றிருந்த போக்குவரத்து ஆகியவையே அதற்குக் காரணம்.
இருபதாம் நூற்றாண்டிலும் தொடக்க கால இதழ்கள் குறைவான எண்ணிக்கையிலேயே வெளிவந்தன. இந்த இதழ்கள் 19-ம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள் என்னும் பொதுத்தொகுப்பில் உள்ளன. அச்சுத்தொழில்நுட்பமும் போக்குவரத்தும் வலுப்பெற்றது 1930-களுக்குப் பின்னர்தான். தேசியக் கல்வி இயக்கம் 1923-ல் உருவாகி பொதுக்கல்வி பரவலாகியது. விளைவாக அச்சுவடிவ இதழ்களை வாசிப்போர் எண்ணிக்கை பெருகியது. அதன் விளைவாக வணிகப் பல்சுவை இதழ்கள் வெளிவரத் தொடங்கின. 1915-ல் வெளிவரத்தொடங்கிய ஆனந்தபோதினி தமிழின் முதல் வெற்றிகரமான வணிகக்கேளிக்கை இதழ். இது ஒரு பல்சுவை இதழ். தொடர்ந்து வெளிவந்த ஜகன்மோகினி இன்னொரு வெற்றிகரமான வணிகக் கேளிக்கை இதழ். இதுவும் பல்சுவை இதழே. தொடர்ந்து ஆனந்த விகடன், கலைமகள், கல்கி, குமுதம் போன்ற வணிக இதழ்கள் வெளிவந்தன. அவையும் பல்சுவை இதழ்களே. தமிழில் வணிகக்கேளிக்கை நோக்கு கொண்ட பல்சுவை இதழ்கள் ஒரு பண்பாட்டியக்கமாகவே நிகழத் தொடங்கின
இவ்விதழ்களைப் போல வணிகரீதியாக வெற்றிபெறும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டு, குறைந்த பிரதிகளுடன் வெளிவந்து நின்றுவிட்ட மனோரஞ்சினி, ஆனந்த குணபோதினி, குமார விகடன், பிரசண்ட விகடன் போன்ற பல்சுவை கேளிக்கை இதழ்கள் ஏராளமாக உள்ளன. அவை சிற்றிதழ்கள் என கொள்ளப்படுவதில்லை.
அரசியல் நோக்கத்துடன் வெவ்வேறு தரப்புகளில் இருந்து வெளிவந்த இதழ்கள் பல தமிழில் உள்ளன. காந்தி, சுதந்திரச் சங்கு, குடியரசு, தமிழ்நாடு நவசக்தி போன்ற இதழ்கள். இவ்விதழ்கள் பொதுவாசகர்களுக்கு உரியவையாகவே இருந்தன. இவை பல்வேறு காரணங்களால் தொடர்ந்து வெளிவராமல் தேய்ந்து குறைவான பிரதிகள் அச்சிடுபவையாக மாறின. பல இதழ்கள் குறிப்பிட்ட அரசியல் வட்டத்திற்குள் மட்டுமே வாசிக்கப்பட்டன இவை செய்தியிதழ் என்னும் பகுப்புக்கு உட்பட்டவை.
இலக்கிய இதழ்களாக தொடக்க காலத்தில் வெளிவந்த வெளியீடுகள் பல பொதுவாசகர்களைச் சென்றடையவேண்டும் என்னும் நோக்கம் கொண்டவை. ஆகவே இலக்கியத்துடன் அரசியல்செய்திகளையும் சினிமா, இசை போன்ற கேளிக்கை சார்ந்த செய்திகளையும் வெளியிட்டன. வரவேற்பு இல்லாமல் அவை தேய்ந்து மறைந்தன. மணிக்கொடி, கலாமோகினி, சிவாஜி, கிராம ஊழியன், கணையாழி, தீபம் போன்ற இதழ்கள் அத்தகையவை. அவற்றை இடைநிலை இதழ் என்னும் பகுப்புக்குள் சேர்க்கலாம். எண்ணிக்கை குறைவாக அச்சிடப்பட்டமையால் அவற்றை சிற்றிதழ் என்னும் பகுப்புக்குள் முன்னோடி ஆய்வாளர்கள்கூட சேர்த்துள்ளனர். ஆனால் சிற்றிதழ் என்பது தன்னை சிற்றிதழ் என வரையறைசெய்துகொண்டதே ஒழிய குறைவாக விற்கப்பட்ட இதழ் அல்ல.
சிற்றிதழ் என்பதை பற்றிய புரிதலுடன், தன்னை முன்னரே சிற்றிதழ் என வரையறைசெய்து அறிவித்துக்கொண்டு, வெளியான முதல் தமிழ்ச் சிற்றிதழ் என சி.சு. செல்லப்பா நடத்திய எழுத்து சொல்லப்படுகிறது. இவ்விதழ் அமெரிக்கச் சிற்றிதழ்களான என்கவுண்டர் (Encounter magazine) போன்ற இதழ்களை முன்மாதிரியாகக் கொண்டது. முதல் இதழிலேயே சி.சு.செல்லப்பா அவ்விதழ் கடைகளில் கிடைக்காது, சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என அறிவித்தார். அதில் வாசகர்களை கவரும்பொருட்டு எதுவும் சேர்க்கப்படவில்லை. முழுக்க முழுக்க தீவிர இலக்கியத்திற்கான சிற்றிதழாகவே அது வெளிவந்தது.
எழுத்து இதழின் கொள்கைகளை உருவாக்கியதில் க.நா.சுப்ரமணியம் முதன்மைப் பங்கு வகித்தார். அவர் ஏற்கனவே சூறாவளி என்னும் பல்சுவை இதழையும், சந்திரோதயம் என்னும் இடைநிலை இதழையும் நடத்தியவர். எழுத்து இதழில் இருந்து பிரிந்துசென்ற க.நா.சுப்ரமணியம் இலக்கியவட்டம் என்னும் சிற்றிதழை தொடங்கினார். தொடர்ந்து ஏராளமான சிற்றிதழ்கள் தமிழில் உருவாயின.
சிற்றிதழ் பட்டியல்
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:33:51 IST