வெளிச்சம்
வெளிச்சம் (1991-2008) தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை, இலக்கிய இதழ். விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் இதனை வெளியிட்டது. ஈழப்போராட்டத்தின் இடப்பெயர்வுகளோடு யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கிளிநொச்சி, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி எனப் பல இடங்களிலிருந்து வெளிவந்த இருமாத வெளியீடு.
வெளியீடு
தமிழீழ விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் நடுவப் பணியகம், கோண்டாவில், யாழ்ப்பாணம், பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி, 3-ம் வட்டாரம், முள்ளியவளை, 4-ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு என்னும் முகவரிகளில் இருந்து வெவ்வேறு காலகட்டத்தில் வெளியிடப்பட்டது.
1991- ல் வெளிவரத்தொடங்கிய இவ்விதழ் 2008 இல் ஈழப்போரின் இறுதியோடு நின்றது. இவ்விதழின் ஆசிரியராக கருணாகரன் செயற்பட்டார். பொறுப்பாசிரியர் கவிஞர் புதுவை இரத்தினதுரை. ஆசிரியர் குழுவில் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன், பொன். பூலோகசிங்கம், இயல்வாணன், சத்துருக்கன், சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) நா. யோகேந்திரநாதன், வளநாடன், இத்தாவில் சிவராசா ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் பங்காற்றியிருக்கின்றனர்.
உள்ளடக்கம்
வெளிச்சம், தமிழீழ விடுதலைப்புலிகள் முன்வைத்த மொழிவழித்தேசியம் என்னும் கொள்கையை முன்வைத்த இதழ். புலிகள் இயக்கத்தின் வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றிய போராளிகள் உட்பட ஈழத்தின் எழுத்தாளர்கள் பலரும் இந்த இதழில் எழுதினார்கள். இந்த இதழில் எழுதிய ஏராளமான படைப்பாளிகள் பின்னர் அறியவரவில்லை. பலர் புனைபெயர்களில் எழுதி, பின்னர் எழுத்தை நிறுத்திக்கொண்டார்கள்.பலர் கொல்லப்பட்டனர்.
இவ்விதழில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, பேராசிரியர் அ.சண்முகதாஸ், புதுவை இரத்தினதுரை, அன்ரன் பாலசிங்கம் (பிரம்மஞானி), க.வே. பாலகுமாரன், பேராசிரியர் சோ. கிருஸ்ணராஜா, குழந்தை ம. சண்முகலிங்கம், சொக்கன், இ. முருகையன், சு. வில்வரத்தினம், கி.பி. அரவிந்தன், கோகிலா மகேந்திரன், சோ. பத்மநாதன் (நம்பியாரூரன்), இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன், செங்கை ஆழியான், சாந்தன், செம்பியன் செல்வன், க.சட்டநாதன், க. தணிகாசலம், நிலாந்தன், பா. அகிலன், எஸ்போஸ் - சந்திரபோஸ் சுதாகர், சித்தாந்தன், ஞாபகன், வ.ஐ.ச. ஜெயபாலன், கலாநிதி க. சிதம்பரநாதன், நாக. சிவசிதம்பரம், கருணை ரவி, தானா விஷ்ணு, இயல்வாணன், த. அகிலன், ந. சத்தியபாலன், திசேரா, த. மலர்ச்செல்வன், செ.பொ. சிவனேஷ், அம்புலி, ஜெயமோகன், ஞானரதன், பிரதீபகுமரன், மு. திருநாவுக்கரசு, தாமரைச்செல்வி, முல்லை யேசுதாசன், வேலணையூர் சுரேஷ், பேராசிரியர் சிவஞானம் ஜெயசங்கர், தராகி டி. சிவராம், தூயவள், சு. மகேந்திரன் (மயன்/2), த. கலாமணி, ஆதிலட்சுமி சிவகுமார், குணா கவியழகன், மலைமகள், பெருமாள் கணேசன், தா. இராமலிங்கம், பேராசிரியர் என். சண்முகலிங்கன், சு. குணேஸ்வரன், கல்வயல் வே. குமாரசாமி, இன்குலாப், அடேல் ஆன், இளையவன், பேராசிரியர் ப. புஸ்பரட்ணம், கலாநிதி செ. கிருஸ்ணராஜா, யோ. கர்ணன், யதீந்திரா, முல்லைமணி, நாமகள், கருணை ரவி, முத்து இராதாகிருஸ்ணன், கே. ஆர். டேவிட், தாட்சாயினி, தமிழ்க்கவி, முல்லைக்கோணேஸ், பரந்தனூரான் ப. தயாளன், அமரதாஸ், உடுவில் அரவிந்தன், அ. இரவி என பலரும் எழுதியிருக்கிறார்கள். கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள் வெளியாயின.
இடம்
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உணர்வுநிலைகள் எண்ணப்போக்குகள், போரின்போது மக்கள் சந்தித்த இடர் வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றின் ஆவணமாக இந்த இதழ் திகழ்கிறது. தமிழ்த்தேசியக்கொள்கைகளின் விளக்கமாகவும் உள்ளது. புனைவிலக்கியத்தில் பின்னர் செயல்பட்ட பலர் இவ்விதழில் தங்கள் தொடக்கங்களை நிகழ்த்தியுள்ளனர்.
வெளியீடுகள்
- வெளிச்சம் சிறுகதைகள் 9(வெளிச்சம் இதழில் வெளியாகிய சிறுகதைகளின் தொகுதி 01)
- வாசல் ஒவ்வொன்றும் (வெளிச்சம் இதழில் வெளியாகிய சிறுகதைகளின் தொகுதி 02)
- வெளிச்சம் கவிதைகள் (வெளிச்சம் இதழில் வெளியாகிய கவிதைகளின் தொகுதி)
- செம்மணி (யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அரச படைகளால் காணாமலாக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர்களைப் பற்றிய 24 கவிஞர்களின் கவிதைகள்)
- ஆனையிறவு (ஆனையிறவு படைத்தளத்தை விடுதலைப் புலிகள் வெற்றி கொண்டதை மையப்படுத்தி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுதி)
உசாத்துணை
- வெளிச்சம் முழு இதழ்களும், ஆவணக்காப்பகம்
- வெளிச்சம் பவள இதழ் 2001, விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:48 IST
