under review

சு. வில்வரத்தினம்

From Tamil Wiki
சு. வில்வரத்தினம்
சு. வில்வரத்தினம்
சு. வில்வரத்தினம்
சு. வில்வரத்தினம்

சு. வில்வரத்தினம் (சு.வி) (ஆகஸ்ட் 7, 1950 - டிசம்பர் 9, 2006) ஈழத்து தமிழ்க் கவிஞர், எழுத்தாளர். மரபின் செழுமையையும், சந்தத்தையும் உண்மையான உணர்ச்சியுடன் கவிதையில் பயன்படுத்தினார். சைவ பக்தி மரபு சார்ந்த கவிதைகளைத் தன் படைப்புகளில் மறுஆக்கம் செய்தார். பாரதிக்குப் பின் எழுதிய நவீனத் தமிழ்க் கவிஞர்களில் மரபு, சந்தம், உணர்ச்சிவேகம் சார்ந்து முதன்மையானவராக மதிப்பிடப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

சு. வில்வரத்தினம் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்பகுதியில், ஏழு தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் பெருங்காடு என்றழைக்கப்படும் மூன்றாம் வட்டாரத்தின் ஒருகுறிச்சியில் வேலாயுதர் சுப்பிரமணியம், மாணிக்கம் இணையருக்கு ஆகஸ்ட் 7, 1950-ல் பிறந்தார். தந்தை சைவ மரபைச் சேர்ந்த விவசாயி, வியாபாரி. வில்வரத்தினம் புங்குடு மேற்கு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை என்ற அரசினர் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக்கல்வி கற்றார். பின்னர் மகாவித்தியாலயா என்ற அரசினர் பள்ளியில் மூன்று முதல் ஏழாண்டு வரை பயின்றார்.

சுன்னாகம் ஸ்கந்த வரோதையாக் கல்லூரியில் பொதுத்தராதரம் பயின்றார். அரசியல் ஈடுபாட்டால் கல்லூரிப்படிப்பு இடை நின்றது. பின்னர் புங்குடுதீவு அரசினர் மகாவித்யாலயத்தில் கல்லூரியில் கனிஷ்ட பொதுத்தராதரத்தின் கலைப்பிரிவில் சேர்ந்து பட்டம் பெற்றார். இக்கல்லூரியில் மு.தளையசிங்கம் இவருக்கு குடிமையியல் பாடம் கற்பித்தார்.

தனிவாழ்க்கை

சு. வில்வரத்தினம் 1979-ல் மணிமேகலை சாம்பசிவத்தை மணந்தார். மணிமேகலை மு. தளையசிங்கம், மு. பொன்னம்பலம் ஆகியோரின் ஒரே சகோதரியின் இரண்டாவது மகள். வில்வரத்தினம்-மணிமேகலை இணையரின் மகள் ரக்ஷகி, மகன் சசிபவன்.

சு. வில்வரத்தினம் புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவு விவசாயச் சங்கத்தில் எழுத்தராகவும், விவசாய சேவைத்திணைக்களத்தின் பொறுப்பாளராகவும் பதிப்பகத்திணைக்களத்தின் ஒப்பு நோக்காளராகவும் பணியாற்றினார்.

இராணுவக் கெடுபிடியால் 1989-ல் வீட்டை எரியக் கொடுத்தார். 1991-ல் தீவுப்பகுதியை இலங்கை ராணுவத்தினர் சிறைபிடித்தபின்னர் இடம்பெயர்ந்து திருகோணமலையில் குடும்பத்துடன் வாழ்ந்தார். அங்குள்ள கல்வித் திணைக்களத்தில் பணியாற்றினார்.

ஆன்மிக வாழ்க்கை

சு. வில்வரத்தினம் பள்ளிப்பருவத்திலேயே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டார். பின்னர் மு. தளையசிங்கத்தின் ஆன்மிக குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியைச் சந்தித்து தனகுருவாக ஏற்றுக் கொண்டார்.

அரசியல் வாழ்க்கை

சு. வில்வரத்தினம் இளவயதிலேயே தமிழியக்கத்தில் ஈடுபாடு கொண்டார். கல்லூரிக் காலத்தில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டார். மு. தளையசிங்கத்துடன் இணைந்து புங்குடு தீவிலுள்ள கிராமங்களில் பல சமூகப் பணிகளில் ஈடுபட்டார். சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம், மக்கள் நன்னீர்க்கிணறுகளில் தண்ணீர் அள்ளுவதற்கான சத்தியாகிரகப் போராட்டம், கல்வி முன்னேற்றத்திற்கான போராட்டம், ஆலயப் பிரவேச நடவடிக்கைகளைப் புங்குடு தீவில் ஒருங்கிணைத்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தரப்பினர் மீதான விமர்சனங்களை முன்வைத்து அகதிகளுக்கான பணிகளை முன்னெடுக்க வெகுஜன விழிப்பு ஒன்றியத்தைத் துவக்கி நடத்தினார்.

அமைப்புப் பணிகள்

  • தன் ஊரான புங்குடுதீவில் திருவள்ளுவர் மன்றம் நிறுவி அதன் செயலாளராய் இருந்து திருக்குறளைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.
  • மீனவர் கூட்டுறவு இயக்கம், சக்தி கூட்டுறவு இயக்கம், தும்புத் தொழிலாளர் சங்கம் எனப் பலவற்றில் மு. தளையசிங்கம், மு. பொன்னம்பலம் ஆகியவரோடு இணைந்து செயல்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

சு. வில்வரத்தினம் (படம்: ஆர்.ஆர்.ஸ்ரீநிவாசன்)
ஆரம்ப காலம்

சு. வில்வரத்தினத்தின் வீட்டுச்சூழலில் திராவிட இயக்கம், தமிழரசுக்கட்சி ஆகிய அரசியலியக்கங்களில் அவரின் சகோதரர் ஈடுபாடு காட்டியதால் அது தொடர்பான வாசிப்புகள் சிறுவயதிலேயே தொடங்கின. 'சுதந்திரன்' பத்திரிக்கையில் வெளிவந்த பரமஹம்சதாசன் போன்ற கவிஞர்களின் தமிழியக்க இசைப்பாக்களை மெட்டமைத்துப் பாடினார். அ. தாமோதரம்பிள்ளையின் தூண்டுதலால் பழந்தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டார். புங்குடுதீவு அரசினர் மகாவித்யாலயத்தில் மு. தளையசிங்கத்தின் அறிமுகத்தைப் பெற்றார். மு. தளையசிங்கத்தின் வேதாந்த ஈடுபாடும், வில்வரத்தினத்தின் சைவ இலக்கியங்களின் மீதான ஈடுபாடும் ஆரம்பத்தில் முரண்பட்டன. ஆனால் மு.தளையசிங்கத்தின் நவீன இலக்கிய ஈடுபாடு வில்வரத்தினத்தை அவர்மேல் ஈடுபாடும் கொள்ள வைத்தது. மு. தளையசிங்கம் சைவ இலக்கியத்தில் ஈடுபாடு காட்டவும், ஆறுமுக நாவலர் மேல் ஆய்வுக்கண்ணோட்டம் செலுத்தவும் வில்வரத்தினத்துடனான தொடர்பு உதவியது. பின்னர் மு. தளையசிங்கத்தின் வேதாந்தம், ஆன்மீக நாட்டத்தின் மேல் வில்வரத்னமும் ஈடுபாடு கொண்டார்.

சு. வில்வரத்தினத்தின் முதல் படைப்பு (உள்ளொளி இதழ்)
கவிதைகள்

சு. வில்வரத்தினம் 1970-களில் எழுத ஆரம்பித்தார். இவரின் முதல் கவிதைப் படைப்பு மல்லிகை இதழில் 1970-ல் வெளியானது. முதல் கட்டுரை உள்ளொளி இதழில் 1968-ல் வெளியானது. பூரணி, அலை, திசை, புதுசு, இதயம், வெளிச்சம், வானம்பாடி, மூன்றாவது மனிதன், களம் ஆகிய இதழ்களில் இவருடைய படைப்புகள் வெளியாகின. இவரது முதல் தொகுப்பு 1985-ல் 'அகங்களும் முகங்களும்', 'அலை' வெளியீடாக வந்தது. 1995-ல் 'ஆகவே' வெளியீடாக 'காற்றுவழிக்கிராமம்'; வி.ஜெ. பதிப்பக வெளியீடாக 'காலத்துயர்' ஆகிய நூல்கள் வெளிவந்தன. 2000-ல் கூடல்'வெளியீடாக 'நெற்றிமண்' என்ற தொகுப்பு வெளியானது. 2025-ல் வில்வரத்தினத்தின் தொகுக்கப்பட்ட படைப்புகள் விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது.

2001-ல் இவர் அதுவரை எழுதிய மொத்த தொகுப்பு 'உயிர்த்தெழும் காலத்திற்காக' என்ற பெயரில் விடியல் பதிப்பகம் வெளியீடாக தமிழ்நாட்டில் வெளியானது. 'மரணத்துள் வாழ்வோம்' என்ற தொகுதியில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 'Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka' தொகுதியில் இவரது கவிதை ஒன்று ஆங்கில வடிவில் வெளியானது.

விருதுகள்

  • சு. வில்வரத்தினத்தின் 'காற்றுவழிக் கிராமம்' என்னும் கவிதைத் தொகுதி விபபி சுதந்திர இலக்கிய அமைப்பின் 1995-ம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினைப் பெற்றது.
  • தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய பங்களிப்புகளுக்காக சு.வில்வரத்தினம் தமிழீழ விடுதலைப் புலிகளால் 'நாட்டுப்பற்றாளர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மறைவு

சு. வில்வரத்தினம் நீண்ட நாட்களாக கவனிக்கப்படாமல் இருந்த ஈரல் தொற்றினால் காமாலையால் பாதிக்கப்பட்டார். வில்வரத்தினம் கொழும்பில் டிசம்பர் 9, 2006 அன்று தனது 56-வது வயதில் காலமானார்.

மதிப்பீடு

"சு. வில்வரத்தினம் கவிதைகளின் முதன்மையான சிறப்பியல்பு அவை தங்கள் சந்தத்தை உண்மையான உணர்ச்சியிலிருந்து பெற்று அதை வாசகனில் நிலைநாட்டும்பொருட்டு கவிதையில் ஒலிக்கவிட்டுள்ளன என்பதே. அவரது மொத்தக் கவிதைகளிலும் செயற்கையான சந்தம் ஒலிக்கும் தருணத்தைப் பார்க்க இயலவில்லை என்பதையே அவரது முதன்மைத்தகுதியாக நான் காண்கிறேன். சு.வில்வரத்தினம் கவிதைகளின் சிறப்புக் கூறுகளில் ஒன்று அவரது சிறந்தவரிகளில் மரபின் செழுமையான வரிகளின் ஒளியைக் காண்கிறோம் என்பது. சைவ பக்திக் கவிதைகளிலிருந்து எடுத்தாண்டும் மறு ஆக்கம்செய்தும் அவர் வளர்த்தெடுத்துள்ள செழுமையான கவிமொழி குறிப்பிடத்தக்கது. அவரின் கவிதைகளை வாசிக்கவைப்பவது நாவுக்கும் காதுக்கும் இனிமையாக மாறும் சொல்லழகுதான். இந்த வகையில் பாரதிக்குப் பின் எழுதிய நவீனத் தமிழ்க் கவிஞர்களில் சு.வில்வரத்தினத்திற்கு இணையாக எவரும் இல்லை என்றே சொல்லத்துணிவேன்" என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுதி
  • அகங்களும் முகங்களும் (அலை வெளியீடு, 1985)
  • காற்றுவழிக்கிராமம் (ஆகவே பதிப்பகம், 1995)
  • காலத்துயர் (1995, வி.ஜே. பதிப்பகம்)
  • நெற்றிமண் (2000)
  • உயிர்த்தெழும் காலத்துக்காக (2001, விடியல் பதிப்பகம்) (முழுத்தொகுப்பு)
  • புதுத்துளிர் நூறு (2004) (இணை ஆசிரியர்: செல்லையா யோகராசா)
  • வாசிகம் (வாசிப்பு கலாச்சாரம் பற்றிய வரி-வடிமங்கள்) (கூடல் வெளியீடு, 2005)
  • வில்வரத்தினம் தொகுக்கப்பட்ட படைப்புகள் (விடியல் பதிப்பகம், 2025)

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jan-2026, 11:54:42 IST