மு. தளையசிங்கம்
மு. தளையசிங்கம் (1935 - ஏப்ரல் 2, 1973) ஈழத்துத் தமிழ் எழுத்தாளர், இலக்கியச் சிந்தனையாளர், விமர்சகர், தத்துவவாதி, செயற்பாட்டாளர். தன் சிந்தனைகளை ‘பிரபஞ்ச யதார்த்தம்’ என்று அழைத்தார். புதுயுகத்துக்கான இலக்கியத்தை தளையசிங்கம் ‘மெய்யுள்’ என அழைத்தார். மார்க்ஸியராக இருந்தவர் காந்தியாலும், கடைசியாக அரவிந்தராலும் ஈர்க்கப்பட்டார். உடல், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இனிப் பேர்மனமாக வளரும் என்ற பேர்ஞான உண்மையின் அடிப்படையில் தனது தத்துவத்தை நிறுவி, அந்த உண்மையை நோக்கிச் சமூக இயக்கங்கள் அனைத்தையும் வளர்த்துக் காட்டும் பூரண சர்வோதயக் கோட்பாட்டை முன்வைத்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
மு. தளையசிங்கம் இலங்கை வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தின் புங்குடு தீவு பகுதியில் 1935-ல் பிறந்தார். ரத்தினபுரியில் தான் படித்த கல்லூரியிலேயே ஆசிரியரானார்.
அரசியல் வாழ்க்கை
மார்க்சிய ஈடுபாடுள்ளவராக இருந்த தளையசிங்கம் சர்வோதய இயக்கத்தில் ஆர்வம் கொண்டார். 1968-ல் இலங்கையில் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்தார். சர்வோதய இயக்கத்தைச் சார்ந்து கிராமிய மேம்பாட்டுக்காகவும் தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் போராடினார். தேர்தலில் சர்வோதய அரசியல் முன்னணியை உருவாக்கினார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். 1971-ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவில் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்னீர் பெற போராடினார். இப்போராட்டத்தின்போது காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
பூரண சர்வோதயக் கோட்பாடு
உடல், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இனிப் பேர்மனமாக வளரும் என்ற பேர்ஞான உண்மையின் அடிப்படையில் தனது தத்துவத்தை நிறுவி, அந்த உண்மையை நோக்கிச் சமூக இயக்கங்கள் அனைத்தையும் வளர்த்துக் காட்டும் பூரண சர்வோதயக் கோட்பாட்டை முன்வைத்தார். அனைத்தையும் மெய்யின் எழுச்சிக்குரிய பூரண சர்வோதய மாற்றத்துக்கு ஆற்றுப்படுத்துவதே மெய் முதல்வாதம் என்றார்.
ஆன்மிகம்
மு.தளையசிங்கம் 1966-ல் தனது ஆன்மீக குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை ரத்தினபுரியில் சந்தித்தார். அவர் வழியாக அரவிந்தரை நோக்கிச் சென்றார். புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாற்றலானார். புங்குடுதீவில் பல ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டு ஆன்மிக வகுப்புகள் நடத்தினார்.
தத்துவம்
மு.தளையசிங்கம் தமிழின் முக்கியமான மீபொருண்மைச் சிந்தனையாளர். மானுடகுலத்தின் அறிவார்ந்த பரிணாமத்தைப் பற்றிய கருத்தாக்கங்களை உருவாக்கினார். மார்க்ஸியத்தின் மீது விமர்சனங்களை எழுப்பியபடியே தன் சிந்தனைகளை ஆரம்பித்தார். காந்தியையும் அரவிந்தரையும் உள்வாங்கி மேலேசென்றார். தளையசிங்கம் இந்தியசிந்தனை மரபு அளித்த ஆய்வுக்கருவிகளை நவீன மேலைநாட்டுச் சொல்லாடலில் பொருத்த முயன்றார்.
ஆழ்மனம்/உள்ளுணர்வு
தளையசிங்கம் மானுடகுலம் சிந்தனைத்தளத்தில் ஒரு தொடர்பரிணாமத்தில் இருப்பதாக நினைத்தார். இக்கருத்து அவரால் அரவிந்தரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. அன்றைய சூழலில் ஐரோப்பாவிலும் பரிணாமக்கோட்பாடுகள் பிரபலமாக இருந்தன. மானுடப்பரிணாமத்தின் தொடக்கத்தில் மனிதர்கள் உடல்சார்ந்தவர்களாக இருந்தார்கள் என்றும் பின்னர் மூளைசார்ந்தவர்களாக ஆனார்கள் என்றும் இனி ஆழ்மனம் சார்ந்தவர்களாக ஆவார்கள் என்று கருதினார். சடம், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இன்று மனத்தையும் தாண்டிச் செல்ல முயல்கிறது. மனத்தைத் தாண்டிய நிலையில்தான் சத்தியத்தின் பூரணப் பிரவாகம் உட்புக முடியும் என்று நம்பினார்.
வரும்காலத்தில் மனித மூளையின் தகவல் கையாளல், சிந்தனை எல்லாம் முக்கியமற்றுப்போகும் என்றும் உள்ளுணர்வுக்கே முக்கியத்துவம் உருவாகும் என்றும் சொன்னார். ஆழ்மனத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகநிலை உருவாகி வரும். மார்க்சியம் உடல்சார்ந்த சமூகநிலையையிலிருந்து விடுதலை பெற்று மூளைசார்ந்த சமூகநிலை நோக்கிச் செல்ல முயல்கிறது என நம்பிய தளையசிங்கம் ஆழ்மனம் சார்ந்த சமூகநிலைகளுக்குச் செல்லும் கோட்பாடாக அது விரிவாக்கம் பெறவேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் அதை 'சுத்தமனோமயநிலை' அல்லது 'பேர்மனம்' என்றும் சொன்னார். இந்தகலைச்சொற்களை அவர் இந்திய சிந்தனை மரபுகளிலிருந்து பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கான சான்றுகளாக அவர் தத்துவத்துறையில் உருவாகி வரும் உறைநிலையை சுட்டிக்காட்டினார்.
கலைஞர்
மனத்தைத் தாண்டிய நிலையிலான சத்தியத்தின் பூரணப் பிரவாகத்தை ஞானிகளே அடைந்திருக்கின்றனர். கடுமையான பயிற்சிகள் மூலம் இந்நிலையை இவர்கள் அடைந்தனர். ஞானிகளிடம் தோன்றிய சத்திய எழுச்சியை எங்கும் நீக்கமற நிலையச் செய்ய வேண்டும். ஆகவே இன்றைய பிரச்சினைகளை ஆராயும்போது அவற்றை அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதாரத் தளத்தில் மட்டும் வைத்து ஆராயாமல் பூரண பரிணாமத் தேவையான சத்திய எழுச்சிக்குரிய ஆழம் வரையிலும் விரித்துப் பார்க்கவேண்டும் என்றார்.
கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்குரிய சமிக்ஞையின் அலைகள், ஞானிகளுக்கு அடுத்தபடி கலைஞர்களிடமே அதிக அளவில் தட்டுப்படவாய்ப்பிருக்கிறது. இந்த அலைகளுக்கு உருவம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இன்றைய கலைஞன் இருக்கிறான். ஞானிகளின் மேலான நிலைக்கு முழு மனித குலத்தையும் உயர்த்த வேண்டும். இந்தத் தாண்டல் நிலைவேறுவதற்கு முன் சிறு சிறு கூட்டங்கள் இணைந்து பெருங்கூட்டமாக மலர வேண்டியுள்ளது. இது கலைஞர்களின் கூட்டமாகவும் சிந்தனையாளர்களின் கூட்டமாகவும் இருக்கும் என்றார்.
மார்க்சியம்
தளையசிங்கம் மார்க்சியம் செயல்பட்டு வந்த கருத்துமுதல்வாதம்-பொருள்முதல்வாதம் போன்ற இருமைகள் மெல்லமெல்லப் பொருளிழந்து மோதிச் செயலிழந்து வருவதாகக் குறிப்பிட்டார். வரும் காலத்தில் அவற்றுக்கு தத்துவ மதிப்பேதும் இருக்காது என்றார். ஆகவே சமூகக் கட்டமைப்பை மாற்றுவதுடன் நில்லாது தனிமனித விடுதலை அல்லது பூரணநிலைக்காகவும் பேசும் ஒரு புதியசிந்தனையை மார்க்சியத்தில் இருந்து உருவாக்கியாகவேண்டும் என மு.தளையசிங்கம் சொன்னார்.
முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடைமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களுக்கு வழி வகுக்கவேண்டும். முதலாளித்துவ அமைப்பு பொது உடமை அமைப்பு வழியாகத் தான் சத்திய எழுச்சிக்குரிய தளத்துக்கு செல்ல வேண்டும் என்பதில்லை. முதலாளித்துவ அமைப்புத் தோன்றுவதற்கு முன்னரே நிலவுடமை அமைப்பிலிருந்தே ரஷ்யா நேராக பொதுவுடமை அமைப்புக்குப் போக முடியுமென்றால், முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பைத் தாண்டி சத்திய எழுச்சி நோக்கிச் செல்ல முடியும் என்றார்.
எளிய வர்க்கவேற்றுமை போன்ற இருமைகளின் அடிப்படையில் செயல்பட்டுவரும் சோவியத் ருஷ்யாபோன்ற நாடுகள் விரைவிலேயே தேக்கநிலையை அடைந்து அழியும் என முப்பதாண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டிருந்தார்.
இலக்கியம்
இலக்கியம் இன்று அறிவுத்தள வாசகர்களுக்காக அறிவுத்தளத்தில் எழுதப்படுகிறது, அதில் அபூர்வமான ஆழ்மன வெளிப்பாடு நிகழும்போது அது ஆழமான இலக்கியம் எனப்படுகிறது. எதிர்காலத்தில் எல்லாருமே ஆழ்மன நிலையில் வாழும் சமூகத்தில் இந்த இலக்கியம் போதாது. மொழி வெறும் ஆழ்மன வெளிப்பாடு மட்டுமாகவே தன்னை முன்வைக்கும் ஓர் இலக்கியவடிவம் உருவாகி வரும் என்றார் தளையசிங்கம்.
இதழியல்
மு. தளையசிங்கம் 1970-ல் ‘சத்தியம்’ பத்திரிகையை வெளியிட்டார்.
இலக்கிய வாழ்க்கை
மு. தளையசிங்கம் 1956 முதல் எழுத ஆரம்பித்தார். 1957-ல் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது ‘சுதந்திரம்’ என்ற பத்திரிகையில் இவருடைய முதல் சிறுகதையான ‘தியாகம்’ வெளிவந்தது. முதல் நாவல் ‘ஒரு தனி வீடு’ 1960-ல் எழுதப்பட்டது. ஆரம்பத்தில் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கியவிமர்சனங்கள் எழுதினார். பின்னர் மெய்யியல் ஆய்வுகளை நோக்கிச் சென்றார். தளையசிங்கம் படைப்புக்களில் ’ஒரு தனிவீடு’; ’புதுயுகம் பிறக்கிறது’; ’ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’; ’போர்ப்பறை’; ’மெய்யுள்’ ஆகியனதான் இன்று வாசிப்பிற்குக் கிடைக்கின்றன. ’விமர்சன விக்கிரங்கள்’; ’மூன்றாம் பக்கம்’; ’முற்போக்கு இலக்கியம்’ போன்ற அவருடைய விமர்சன ஆக்கங்களும் ’கல்கிபுராணம்’; ’யாத்திரை’; ’ஒளியை நோக்கி’ போன்ற அவருடைய நாவல்களும் அவரே தன் கட்டுரைகளில் சுட்டிச்செல்லும் ஆரம்பகாலச் சிறுகதைகளும் கிடைக்கவில்லை. தளையசிங்கத்தின் படைப்புக்களின் முழுமையை உள்ளடக்கிய பெருந்தொகுப்பு ஒன்றின் தேவையை எம். வேதசகாயகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
தளைய சிங்கத்தின் மூன்று புத்தகங்கள் அச்சேறியுள்ளன. பதினோறு சிறுகதைகளின் தொகுப்பான ‘புதுயுகம் பிறக்கிறது’ முதல் பதிப்பு 1965-ல் வெளியானது. கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றின் தொகுப்பான ‘போர்ப்பறை’ 1970-ல் வெளியானது. கட்டுரைகள், சம்பாஷணைகள், கவிதைகள், நாவல் ஆகியவற்றின் தொகுப்பு ‘மெய்யுள்’ தளையசிங்கத்தின் மறைவுக்குப் பின் 1974-ல் வெளிவந்தது. இவை தவிர அச்சில் வந்தவையாகவும், கையெழுத்துப் பிரதிகளாகவும் வேறு எழுத்துக்களும் உள்ளன. ‘ஒரு தனி வீடு’, ‘யாத்திரை’, ‘கல்கி புராணம்’ ஆகிய நாவல்கள் முழுமை பெற்றவை. ‘ஒளியை நோக்கி’ என்ற நாவல் முழுமை பெறவில்லை. ‘குருக்ஷத்திரம்’, ‘எதிரிகள்’, ‘ஓமாக்கினி’ ஆகிய முயற்சிகளும் உள்ளன. ’ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி – சில அவசரக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் ஈழத்து நவீன இலக்கியத்தை விமர்சிக்கும் கட்டுரைகள் செய்திப் பத்திரிகையில் அவர் வாழ்நாளிலேயே தொடர் கட்டுரைகளாக வந்தன. ஆனால் புத்தக வடிவம் பெறவில்லை. ‘மல்லிகை’, ‘பூரணி’, ‘சத்தியம்’ ஆகிய இதழ்களில் வெளிவந்து தொகுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் புத்தக வடிவம் பெறவில்லை.
இலக்கிய விமர்சனம்
மு. தளையசிங்கத்தின் ‘விமர்சன விக்கிரகங்கள்’ கட்டுரைத்தொடர் தினகரனில் வந்தபோது சர்ச்சைக்கு உள்ளானது. இக்காலத்தில் ஈழ இலக்கியத்தின் முற்போக்கு, நற்போக்கு இரண்டினது குறைகளையும் எடுத்துக் காட்டும் கட்டுரைகளை எழுதினார். 1963-ல் இவர் எழுதிய ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி: சில அவசரக் குறிப்புகள்’ தமிழ் இலக்கிய விமர்சனத் துறையில் ஒரு மைல் கல் என்று கருதப்பட்டது.
மெய்யுள்
புதுயுகத்துக்கான இலக்கியத்தை தளையசிங்கம் ‘மெய்யுள்’ என அழைத்தார். அதைத் தானே எழுதியும் பார்த்தார். "தற்காலம் ஒரு புது யுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது மற்றது பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது" என்றார். அதற்கேற்ப உருவாக்கிய தனது கலைப்பார்வையைப் "பிரபஞ்ச யதார்த்தம்" என்று சொன்னார். 1972-ல் "மெய்யுள்" என்ற புதிய இலக்கிய உருவம் போடப்பட்டது.
"பிறக்கப் போகும் இலக்கியத்தில் உருவமும் உள்ளடக்கமும் புதிய தளத்துக்குரிய உருவ உள்ளடக்கத்தைப் பெறும். இதுதான் மெய்யுள்" என்றார். ”கலையை அழிக்கும் கலை. இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம்” என மெய்யுளை விளக்கினார். ”இது ஒரு புதிய இலக்கிய உருவம். இது ஒரு பூரண உருவாகவும் இருப்பதினால் சிறுகதை, நாவல், கட்டுரை என்ற பாகுகாடுகளை உடைத்தும், கடந்தும் செல்லும் ஒரு உருவமாகவும் இருக்கும். செய்யுள், உரைநடை என்ற வித்தியாசங்களை இது ஏற்காது. இதுவரையிலுமுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. ‘மெய்யுள்’ கற்பனைக் கோலங்களைத் துறந்து அவற்றின் தளங்களையும் தகர்த்துக்கொண்டு நித்திய சந்தியத்தை நோக்கிய நேரடி அனுபவ ரீதியான ஊடுருவல்களுக்குரிய இலக்கிய உருவம். அதன் உள்ளும் புறமும் உள்ளடக்கமும் மெய்யாகவே இருக்கும். அதனால் இது இதுவரையுள்ள கலை இலக்கியங்களை அழிக்கும் கலை இலக்கியமாகவும் இருக்கும். அதேபோல் தத்துவ, சரித்திர, விஞ்ஞான உருவங்களாகவும் இருக்கும். சமூக, பொருளாதார, அரசியல், ஆத்மீக மெய் வாழ்க்கை அனுபவங்களாகவும் அமையும்.” என்றார்.
”பிறந்து கொண்டிருக்கும் புது யுகத்திற்குரிய இலக்கிய வார்ப்புகள் அடிப்படையான உருவ உள்ளடக்க மாற்றங்களைக் காட்டும். ஐரோப்பிய அறிவுவாதத்திற்கு முந்திய இலக்கியப் படைப்புகள் உள்ளுணர்வு செறிந்த கற்பனைக் காவியங்களாக இருப்பதுபோல் அறிவு வாதத்திற்குப் பிந்திய படைப்புகள் ஐம்புலன்கள் சார்ந்த அறிவும் யதார்த்த இலக்கியங்களாக இருக்கின்றன. முந்தியவற்றில் பிரபஞ்ச உணர்வு இருந்தது. பிந்தியவற்றில் இந்த உலகத்து உணர்வும் குறிப்பாக, பிரதேச, சமூக, பொருளாதார நிலைகளுக்குரிய உணர்வுகளும் அதிகமாக இருக்கின்றன. இனிவரும் படைப்புகளில் மீண்டும் பிரபஞ்ச உணர்வு தலைதூக்கும். ஆனால் அறிவுவாதத்தாலும் அதற்குரிய விஞ்ஞானத்தாலும் பெறப்பட்ட யதார்த்த உணர்வுகளும் கூடவே நிற்கும். இதனை ”பிரபஞ்ச யதார்த்தம்” என்று கூறலாம். விஞ்ஞானமும் ஆத்ம ஞானமும் கலந்த பேரறிவு இது.” என்றார்.
இலக்கிய இடம்
மு. தளையசிங்கத்தின் பங்களிப்பை இலக்கியவிமர்சகரான எம். வேதசகாயகுமார் ”தமிழிலக்கிய மரபில் மு. தளைய சிங்கத்திற்கான இடம் தனித்துவமானது. இந்தியத் தமிழிலக்கிய மரபோ/ ஈழத்தமிழிலக்கிய மரபோ அவருக்கு முன்பும் பின்பும் அவரளவிற்குச் சிந்தனை கனம் கொண்ட படைப்பாளியை எதிர்கொண்டதில்லை. ஒரு சிந்தனாவாதியாக முன்செல்லவே அவர் விரும்பியுள்ளார். தன் பாதையைத் திட்டமிட்டு அமைத்துக்கொள்ளவும் அவரால் முடிந்துள்ளது. இதனால் தான் ஒரு படைப்பாளியாக அவர் சாதனையை அவருடைய துவக்ககால படைப்புகள் தான் உணர்த்தி நிற்கின்றன. ‘ஒரு தனி வீடு’; ‘புதுயுகம் பிறக்கிறது’; ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ போன்றவையே அவரைக் கலைஞனாக இனங்காட்டுகின்றன. ஆனால் அவர் சிந்தனையின் தீவிரத்தை ‘போர்ப்பறை’; ‘மெய்யுள்’ ஆகியவற்றில் தான் இனங்காண முடிகிறது.
அவர் பூரண இலக்கியம் என்னும் கோட்பாட்டை விளக்க முயல்கிறார். பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் இவை இரண்டிற்கும் அப்பாலான மெய்முதல்வாதத்தை முன்வைக்கிறார். மெய்யுள் என்னும் புதிய இலக்கிய வடிவையும் சமகாலத்திற்கான வடிவமாகக் காண்கிறார். ஈழத் தமிழ் இலக்கிய விமர்சகர்களுள் தளையசிங்கத்தையே பெரும் சிந்தனையாளராக இனம் காணவேண்டும்” என்று மதிப்பிட்டார்.
“நவீனத்துவச்சிந்தனைகள் அனைத்துக்குமே அடிப்படையாக அமைந்த மு.தளையசிங்கம் இருமைச் சிந்தனைகளின் எல்லையைச் சுட்டிக்காட்டினார். அறிவுத்தளத்துக்கு அப்பாற்பட்ட உன்னத பிரக்ஞை நிலை சார்ந்த சிந்தனைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். இலக்கியத்தில் தர்க்கத்தின் இடத்தை நிராகரித்து மொழியின் தடையற்றவெளிப்பாட்டை முன்வைத்தார். இந்தச் சிந்தனைகள் அனைத்தும் கால்நூற்றாண்டு கழித்துப் பின்நவீனத்துவச் சிந்தனைகளாக மேலை நாடுகளில் இருந்து இங்கே வந்து சேர்ந்து பரவலாகப் பேசப்பட்டன. அப்போது கூட இங்கே பின்நவீனத்துவம் பேசியவர்களால் நாகராஜனையும் தளையசிங்கத்தையும் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர்கள் எவருமே அவரைப்பற்றி எதுவுமே சொன்னதில்லை. அவர்கள் புதியதாகப் பேச ஆரம்பித்த நிரூபணவாத எதிர்ப்பு, இருமைநிராகரிப்பு, மையம்அழிப்பு, அதிபிரக்ஞைநிலை போன்றவற்றை முழுக்கமுழுக்க இந்திய, தமிழ்ச்சூழலில் வைத்து அசலாக இம்முன்னோடிகள் விரிவாகவே பேசிவிட்டிருந்தனர்” என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிட்டார்.
மறைவு
மு. தளையசிங்கம் 1973-ல் காலமானார்.
நூல் பட்டியல்
நாவல்
- ஒரு தனி வீடு
- யாத்திரை
- கல்கி புராணம்
- ஒளியை நோக்கி (முழுமை பெறவில்லை)
- குருக்ஷத்திரம் (முழுமை பெறவில்லை)
- எதிரிகள் (முழுமை பெறவில்லை)
- ஓமாக்கினி (முழுமை பெறவில்லை)
சிறுகதைத் தொகுப்பு
- புதுயுகம் பிறக்கிறது (1965)
விமர்சனம்
- ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி – சில அவசரக் குறிப்புகள்
- முற்போக்கு இலக்கியம்
- விமர்சன விக்கிரங்கள்
- மூன்றாம் பக்கம்
பிற
- போர்ப்பறை (1970) (கதை, கட்டுரை, கவிதை)
- கலைஞனின் தாகம்
- மெய்யுள் (கட்டுரைகள், சம்பாஷணைகள், கவிதைகள், நாவல்)
இவரைப் பற்றிய நூல்கள்
- மு. தளையசிங்கம் - ஒரு அறிமுகம் - சுந்தர ராமசாமி, பொன்னம்பலம்
- மு. தளையசிங்கம் படைப்புகள் - மு. பொன்னம்பலம்
இணைப்புகள்
- மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 1,2,3 மற்றும் விமரிசனக் கூட்டம் - தொகுப்பு - ஜெயமோகன்
- மு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை - முனைவர்.எம்.வேதசகாயகுமார்
- தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் - சுந்தர ராமசாமி
- மெய்யுள்(உலக விடுதலை இலக்கியம்) - மு.தளையசிங்கம் - நூலகம்
- அறவழியா? ஆயுதவழியா? அமரர் மு.தளையசிங்கம் நினைவுகள் - முருகபூபதி
- மு.தளையசிங்கம் என்னும் முதற் சிந்தனையாளன் - சுயாந்தன்
- மு. தளையசிங்கத்தின் எழுத்துக்களை விளங்குதலென்பது அவரது காலத்தை விளங்குதலே ஆகும்: தேவகாந்தன்
- மு. தளையசிங்கம்- ஒரு மீள் வாசிப்பின் விவாதங்கள்: சப்னாஸ் ஹாசிம்
- மெய்யுள் (உலக விடுதலை இலக்கியம்) மு.தளையசிங்கம் - புங்குடுதீவு டுடே
- மு. தளையசிங்கம் – ஒரு அறிமுகம் - புங்குடுதீவு டுடே
- எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி - வ.ந.கிரிதரன்
- மதுரை அயோத்திதாசர் ஆய்வு நடுவத்தில் ஆற்றிய உரையின் முன்வடிவம் - 30-07-2011 - ஜெயமோகன்
- மு. தளையசிங்கம் சிறுகதைகள் - sirukathaigal
உசாத்துணை
- பகுப்பு:மு. தளையசிங்கம் - நூலகம்
- மு.தளையசிங்கம் பற்றி - ஜெயமோகன்
- மு. தளையசிங்கம் - ஒரு அறிமுகம் - நூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Jul-2024, 18:43:16 IST