under review

பத்துப்பாட்டு

From Tamil Wiki

பத்துப்பாட்டு பத்து நூல்களின் தொகுப்பு. கடைச்சங்க காலத்து தொகை நூல்களில் ஒன்று. எட்டுத்தொகையாகவும், பத்துப்பாட்டாகவும் பிரிக்கப்பட்ட பதினெண்மேற்கணக்கு நூல்களுள் தொகுக்கப்பட்டது. நச்சினார்க்கினியர் உரை எழுதினார்.

நூல் பற்றி

பதினெண் மேற்கணக்கு நூல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று பிரிக்கப்பட்டது. பத்துப்பாட்டு என்பது பத்து நூல்களின் தொகுப்பு. இது பல புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவற்றின் தொகுப்பு. பல பாடல்களில் எழுதியவர் பெயர் காணப்படவில்லை. அகத்தையும் புறத்தையும் பற்றிய பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர். தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால், தொகை எனப் பெயர் பெற்றது. இத்தொகையுள், இரண்டாயிரத்து முந்நூறுக்கும் மேற்பட்ட பாடல்ளை, எழுநூறுக்கும் மேற்பட்ட புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் இருபத்தி ஐந்து அரசர்களும், முப்பதுக்கும் மேற்பட்ட பெண்பாற்புலவர்களும் உள்ளனர். ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் நூற்றியிரண்டு. இவற்றில் நூற்றுமூன்று அடி முதல் எழுநூற்று எண்பத்தியிரண்டு அடிவரை அமைந்த பத்து நீண்ட பாடல்கள் பத்துப்பாட்டு என்று ஒரே தொகுதியாக அமைந்தது. பத்து நூல்களும் நீண்ட அகவலோசையால் ஆனவை.

முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, நெடுநல்வாடை என்ற நான்கும் அகப்பொருள் நூல்களாகும்.

திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, பொருநராற்றுப் படை, மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை, மதுரைக் காஞ்சி ஆகிய ஆறும் புறப்பொருள் பற்றிய நூல்கள். இவற்றுள் முதல் ஐந்தும் ஆற்றுப்படை என்ற பிரிவில் அடங்கும். மதுரைக் காஞ்சி நிலையாமையைப் பற்றிக் கூறும் காஞ்சி என்ற திணையச் சேர்ந்தது.

இலக்கணம்

பத்துப்பாட்டின் இலக்கணத்தை பன்னிருபாட்டியல் கூறுகிறது.

  • பன்னிருபாட்டியல் 266-267

நூறடிச் சிறுமை நூற்றுப் பத்தளவே
ஏறிய அடியின் ஈரைம் பாட்டு
தொடுப்பது பத்து பாட்டெனப் படுமே
அதுவே, அகவலின் வருமென அறைகுவர் புலவர்

பதிப்பு

டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1889-ம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்தார். இதன் பின்னர் பலரும் முழு தொகுதியாகவும், தனித் தனி தொகுதி நூலகளாகவும் புதிய உரைகளுடன் வெளியிட்டனர்.

பத்துப்பாட்டு நூல்கள்

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடுநல் வாடைகோல் குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Oct-2023, 09:49:23 IST