under review

சொ. முருகப்பா

From Tamil Wiki
சொ. முருகப்பா (இளம் வயதில்)

சொ. முருகப்பா (ஆகஸ்ட் 21,1893-ஜூன் 20,1956). இதழாளர். காந்திய இயக்கச் சமூக சீர்திருத்தவாதி. எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர் 'தன வைசிய ஊழியன்’, 'குமரன்’, சண்டமாருதம், மாதர் மறுமணம் போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தியவர். கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தவர். அவர்கள் நலனுக்காக, ’மாதர் மறுமண இயக்கம்'; மாதர் மறுமண சகாய சங்கம்’ போன்ற அமைப்புகளை ஏற்படுத்தியவர்.

பிறப்பு, கல்வி

சொ. முருகப்பா, ஆகஸ்ட் 21, 1893-ல், காரைக்குடியில், சொக்கலிங்கம் செட்டியார்- விசாலாட்சி ஆச்சி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியைத் திண்ணைப் பள்ளியில் பயின்ற இவர், காரைக்குடியில் உயர்நிலைக் கல்வி பயின்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பட்டம் பெற்ற சிதம்பரம் ஐயரிடம் கற்றுத் தேர்ந்தார்.

தனி வாழ்க்கை

1912-ல், மாமன் மகளான பொற்கொடியுடன் திருமணம் நடந்தது. குடும்ப வணிகத்தின் பொருட்டு மலாயா நாட்டுக்குச் சென்ற முருகப்பா, அங்கு1913 முதல் 1916 வரை பணியாற்றினார். பின் தமிழகம் திரும்பினார். வேற்று சாதியைச் சேர்ந்த விதவைப் பெண்ணான மரகதவல்லியை, ஜுன் 29, 1923-ல், ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் முன்னிலையில் சீர்திருத்த முறைத் திருமணம் செய்துகொண்டார். தன் மகனுக்கு வீர பாண்டியன் என்று பெயரிட்டார்.

ஹிந்து மதாபிமானி இதழ்

இந்து மதாபிமான சங்கம்

நாடு, சமயம், மொழி ஆகியவற்றின் மீதான பற்றினை இளைஞர்களிடம் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, ராய.சொக்கலிங்கன், வை.சு.சண்முகம் செட்டியார் மற்றும் பல நண்பர்களுடன் இணைந்து, செப்டம்பர் 10, 1917-ல், காரைக்குடியில், இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியார், 1919-ல், இச்சங்கத்திற்கு வருகை புரிந்ததுடன், சங்கப் பணிகளைப் பாராட்டி சில வாழ்த்துப்பாக்களை இயற்றியுள்ளார்.

இந்து மதாபிமான சங்கத்தின் சார்பாக ‘ஹிந்துமதாபிமானி’ என்ற இதழும் வெளியிடப்பட்டது. சொ. முருகப்பா அதன் ஆசிரியராக இருந்தார்.

தன வைசிய ஊழியர் சங்கம்

தன வைசிய இளைஞர்களை ஒருங்கிணைக்கவும், அவர்கள் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும், செப்டம்பர் 11, 1919-ல், ‘தன வைசிய ஊழியர் சங்கம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.

இதழியல் வாழ்க்கை

இளம் வயதிலிருந்தே இதழியல் துறை மீதும் பதிப்பகத் துறை மீதும் முருகப்பாவுக்கு ஆர்வம் இருந்தது.

தன வைசிய ஊழியன்
தன வைசிய ஊழியன்

தன வைசிய ஊழியர் சங்கத்தின் சார்பாக, ’தன வைசிய ஊழியன்’ என்ற வார இதழை, செப்டம்பர் 8, 1920-ல் தொடங்கினார். சொ. முருகப்பா ஆசிரியராகவும், ராய. சொக்கலிங்கன் துணையாசிரியராகவும் இருந்து செயல்பட்டனர். சில காரணங்களால், 1922-ல், சொ. முருகப்பா, ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார். ராய. சொக்கலிங்கன் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1925 முதல் ’ஊழியன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இவ்விதழ் வெளியானது.

குமரன் இதழ்
குமரன்

மார்ச் 17, 1922-ல் ‘காரைச் சிவனடியார் திருக்கூட்டம்' எனும் அமைப்பை உருவாக்கினார் சொ.முருகப்பா. அவ்வமைப்பின் சார்பாக ‘குமரன்’ என்ற இதழ் தொடங்கப்பட்டது. சொ. முருகப்பா அதன் ஆசிரியராக இருந்தார். தமிழ் இலக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட குமரன் ஒரே சமயத்தில் மாதப் பதிப்பு, வாரப் பதிப்பு என இரு விதங்களில் வெளிவந்தது.

'குமரன்', கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின் முதற் கவிதையை வெளியிட்டது. அவருடைய கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு ஆதரித்தது. முதன் முதலாக வெண்பாப் போட்டியை நடத்தியது ‘குமரன்’ இதழ் தான் என்றும், முதன் முதலில், தமிழில், எழுத்துச் சீர்த்திருத்தத்தை அறிமுகப்படுத்தியதும் ‘குமரன்’ இதழ் தான் என்றும் கூறப்படுகிறது.

மாதர் மறுமணம் இதழ்
மாதர் மறுமணம்

சொ. முருகப்பா, விதவை மறுமணத்தின்பொருட்டு காரைக்குடியில் 1934-ல் 'மாதர் மறுமண இயக்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். 'மாதர் மறுமணம்’ இதழை ஆகஸ்ட் 1936-ல் ஆரம்பித்தார். முருகப்பாவின் மனைவி மு. மரகதவல்லி அவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.

சண்டமாருதம்

ஆரம்பத்தில் காங்கிரஸ் இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டார் சொ. முருகப்பா. பின்னர் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அவ்வியக்கத்தை பரப்புரை செய்யும் பொருட்டு, திருச்சியிலிருந்து, 1932-ல், ’சண்டமாருதம்’ என்ற இதழ் தொடங்கப்பட்டது. சொ. முருகப்பா, அதன் நிர்வாக ஆசிரியராக இருந்து செயல்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

தன வைசிய ஊழியன், குமரன், மாதர் மறுமணம், சண்டமாருதம் போன்ற இதழ்களில் கட்டுரைகளை எழுதி வந்தார் சொ. முருகப்பா. அது தவிர்த்து கம்பராமாயணத்தின் மீதும் அவருக்கு அளவற்ற ஆர்வம் இருந்தது. ‘அஞ்சா நெஞ்சன்’ என்ற புனை பெயரிலும் பல கட்டுரைகளை எழுதினார்.

இராமகாதை

கம்ப ராமாயணத்தைச் செம்பதிப்பாகக் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினார் முருகப்பா. அதில் இடைசெருகலாக இருக்கும் பாடல்களை நீக்கி முழுமையான ஒரு நூலாக அதனைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் சில முயற்சிகளில் ஈடுபட்டார். இராமகாதைக்குரிய முன்னுரை போல, ‘கம்பர் காவியம் - அதன் நிலை விளக்கம்’ எனும் தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார்.

சொ. முருகப்பாவின் முயற்சியின் விளைவாக, பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரின் முன்னுரையுடனும், பேராசிரியா எஸ். வையாபுரிப் பிள்ளையின் அணிந்துரையுடனும் இராமகாதை - பாலகாண்டம் 1953-ல் வெளிவந்தது. இந்த நூலை தனது சொந்தப் பதிப்பக நிறுவனமான ‘கம்பர் பதிப்பகம் ‘ மூலம் முருகப்பாவே அச்சிட்டிருந்தார். தமிழக் கடல் ராய சொக்கலிங்கனின் அணிந்துரையுடன் இரண்டாம் பகுதியான, இராமகாதை - அயோத்தியா காண்டம் 1956-ல் வெளிவந்தது.

தனது இலக்கிய அனுபவத்தை சொ. முருகப்பா,

வள்ளுவனைக் கற்றேன் மணிவா சகமுணர்ந்தேன்

கள்ளூறு கம்பன் கடல்திளைத்தேன் - அள்ளுபுகழ்க்

காந்தி யடிகளையென் கண்ணாரக் கண்டிட்டேன்

வாழ்ந்தேன் இருந்தேன் மகிழ்ந்து - என்று குறிப்பிட்டுள்ளார்.

சொ. முருகப்பா

சமூகப் பணிகள்

காரைக்குடியில் ‘இராமகிருஷ்ண கலாசாலை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில் தனது ஆசான் சிதம்பரம் ஐயரையே ஆசிரியராக நியமித்து, பலரும் தமிழ் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார் சொ. முருகப்பா.

சொ. முருகப்பாவும் அவரது மனைவி மு. மரகதவல்லியும் இணைந்து, காரைக்குடியை அடுத்துள்ள அமாரவதிப் புதூரில், மகளிருக்கான இல்லம் ஒன்றை நிறுவினர். இளம் கைம்பெண்களுக்கு கல்வி கற்பித்து, கைத்தொழில்கள் பயிற்றுவித்து, மறுமணம் செய்து வைப்பது இந்த இல்லத்தின் நோக்கமாக இருந்தது. இந்த இல்லம், ஏப்ரல் 10, 1938-ல் திறந்து வைக்கப்பட்டது. அப்போதைய கல்வி அமைச்சர் டாக்டர் சுப்பராயன், இந்த இல்லத்தினைத் திறந்து வைத்தார். ஆகஸ்ட் 30, 1939-ல், சொ. முருகப்பாவின் பெயரில், அமராவதிப் புதூரில் மழலையர் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. இதனை சுவாமி விபுலானந்தர் அவர்கள் திறந்து வைத்தார்.

சொ. முருகப்பா - மு. மரகதவல்லி இருவரும் இணைந்து கைம்பெண் மணத்தை ஆதரித்து 'மாதர் மறுமண சகாய சங்கம்’ என்ற அமைப்பையும் தோற்றுவித்தனர். இச்சங்கம் கைம்பெண் மணம் செய்ய முன் வருவோருக்கு உதவிகள் செய்ததுடன், கைம்பெண் மணத்தை ஆதரித்துப் பல நூல்களையும், பிரசுரங்களையும் வெளியிட்டது. சேரன்மாதேவி குருகுலப் பிரச்சனையில் சில காலம் அமைதியாக இருந்த சொ. முருகப்பா, இறுதியில் வரதராஜுலு நாயுடுவின் கருத்தை ஏற்று அவருக்கு ஆதரவளித்தார். ‘குமரன்’ இதழிலும் குருகுலப் பிரச்சனைகள் குறித்துத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார்.

உயிர்க் கொலைகளைத் தடுப்பதற்கு ஊர் ஊராகச் சென்று, சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். ஆண்டுதோறும் தமிழிசை மூவருள் ஓருவரான முத்துத் தாண்டவர் விழாவைச் சிறப்புற நடத்திவந்தார். 1938-ல், காரைக்குடியில் கம்பனடிப்பொடி சா. கணேசன், கம்பன் கழகம் தொடங்குவதற்கு, முருகப்பா உற்ற துணையாக இருந்தார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையை "ஆசிய ஜோதி' என்னும் காப்பியத்தை எழுதச் செய்தார் முருகப்பா.

பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளையின் இராமாயணம் பற்றிய கட்டுரைகளை ‘குமரன்' இதழில் வெளியிட்டார். ’திரு.வி.க.’வின் "முருகன் அல்லது அழகு' என்னும் கொடர் கட்டுரையும் குமரனில்தான் வெளிவந்தது.

விருதுகள்/பட்டங்கள்

  • சீர்திருத்தச் செம்மல்
  • செட்டிநாட்டின் ராஜாராம் மோகன்ராய்

மறைவு

திடீர் உடலநலக் குறைவு காரணமாக ஜூன் 20, 1956-ல் சொ. முருகப்பா காலமானார்.

சொ. முருகப்பா உருவச் சிலை

நினைவுச் சிலை

சொ. முருகப்பாவின் நினைவாக, அமராவதிப் புதூரில் உள்ள ஸ்ரீ சாரதா நிகேதன் மகளில் கல்லூரி வளாகத்தில் அவரது உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று இடம்

பெண் கல்வி வளர்ச்சி, கைத் தொழில், கைம்பெண் மறுமணம் என சமூகம் சார்ந்த பல செயல்பாடுகளில், பல்வேறு எதிர்ப்புகள் வந்தபோதும் கூட உறுதியாக நின்று உழைத்தவர் சொ. முருகப்பா.

இவரைப் பற்றி, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, “சமூக சீர்திருத்த ஊழியத்தில் ஈடுபட்டு உழைத்து வருபவர்களில் ஸ்ரீமான் முருகப்பா அவர்கள் ஒருவர். இவர் மாதர் மறுமண சகாய சங்கத்தை ஏற்படுத்தி நான்கு வருஷமாக அதன் அபிவிருத்திக்காகப் பெரும் பாடுபட்டு வருகிறார். பிரசங்கம் மூலமாகவும் விதவா விவாகத்தைப் பரவச் செய்யப் பிரயத்தனப்படுவதில் அவருக்குச் சமானமாக யாரும் இல்லையென்று சொல்லலாம்.... தென்னிந்தியாவில், தமிழ் நாட்டில் ஸ்ரீமான் முருகப்பனைப் போல் புருஷர்கள் ஸ்திரீகளுடைய குறைகளை நிவர்த்தி செய்ய முன் வந்திருப்பது நாம் எல்லோரும் மெச்சத் தகுந்தது” என்று பாராட்டியுள்ளார்.

கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை,

பத்திமிகுந் தன்பர் பணிந்துநிதம் போற்றுகின்ற

அத்திமுகத் தண்ணல் அருளாலே - வித்தகன்

சிந்தைக் கினியதமிழ்ச் செல்வன் முருகப்பன்

சந்ததமும் வாழ்க தழைத்து - என்று வாழ்த்தியுள்ளார்

உசாத்துணை


✅Finalised Page