under review

குமரன் (இதழ்-இந்தியா)

From Tamil Wiki
குமரன் ஆண்டு மடல் 1927
குமரன் - சுயமரியாதை ஆதரவு இதழ்
குமரன் - விளம்பரம், சந்தா விவரங்கள்
குமரன் ஆசிரியர் சொ. முருகப்பா
சொ. முருகப்பா (அஞ்சா நெஞ்சன்) கட்டுரை
குமரன் தமிழ் இசை மலர்
குமரன் இதழ் சின்னம் (1925களில்)
குமரன் இதழ் - 1930

’குமரன்’, தமிழகத்தின் காரைக்குடியில் இருந்து வெளிவந்த இதழ் (இலங்கையிலிருந்தும் ‘குமரன்’ என்ற பெயரில் ஓர் இதழ் வெளிவந்தது). சீர்திருத்தச் செம்மல் என்று அழைக்கப்பட்ட சொ. முருகப்பா, 1922-ல், இவ்விதழைத் தொடங்கினார். சமயம் மற்றும் தமிழ் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் அளித்து வெளியான இவ்விதழில், தமிழறிஞர்கள் பலர் பங்களித்துள்ளனர். குமரன் ஒரே சமயத்தில் மாதப் பதிப்பு, வாரப் பதிப்பு என இரு விதங்களில் வெளிவந்தது.

பதிப்பு, வெளியீடு

காரைச் சிவனடியார் திருக்கூட்டத்தின் சார்பாக, சொ. முருகப்பாவால், மே 1922-ல், தொடங்கப்பட்ட இதழ் ‘குமரன்.’ இது மாத இதழாக சில ஆண்டுகள் வெளிவந்தது. முருகப்பா இதன் ஆசிரியராக இருந்தார். இந்த இதழ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்திலேயே, ஆகஸ்ட் 22, 1923-ல், ‘குமரன்’ வார இதழைத் தொடங்கினார் முருகப்பா. இந்த இதழ் 1944 வரை வெளிவந்தது.

குமரன் (மாதப் பதிப்பு)

குமரன் மாத இதழின் விலை நான்கணா. இவ்விதழ் ஆரம்பத்தில் சமயம் மற்றும் இலக்கியம் சார்ந்த இதழாக வெளிவந்தது. சிறந்த தமிழறிஞர்கள் பலரது கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றன. குமரன் எனும் பெயர் முருகளைக் குறிப்பதால், முருகன் அடியாரான திரு.வி.க.விடம் முருகனைப் பற்றிய ஒரு கட்டுரை தருமாறு சொ. முருகப்பா கேட்டுக் கொண்டார். அந்த வேண்டுகோளை ஏற்று திரு.வி.க. எழுதியது தான் பின்னர், ‘முருகன் அல்லது அழகு’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது.

ஆனால், 1930-களில் இவ்விதழ் முற்றிலும் சுயமாரியாதைச் செய்திகள் அது சார்ந்த கட்டுரைகளைக் கொண்ட இதழாகவே வெளிவந்தது. காரணம், சொ. முருகப்பா அக்காலகட்டங்களில் சுயமரியாதை இயக்கத்தினருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அதன் விளைவாகவே பகுத்தறிவுச் சிந்தனைகள் கொண்ட கட்டுரைகள் அதிகம் வெளியாகின.

குமரன் மாதப்பதிப்பின் உள்நாட்டுச் சந்தா ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்கு 12 அணா. வெளிநாட்டிற்கு 1 ரூபாய். சில ஆண்டுகளுக்குப் பின் உள்நாட்டு வருடச் சந்தா 1 ரூபாய் எட்டணா என்றும் வெளிநாட்டு வருடச் சந்தா இரண்டு ரூபாய் என்றும் மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

குமரன் (வாரப் பதிப்பு)

குமரன் வாரப் பதிப்பின் விலை ஒன்றரை அணா. 1926 முதல் இரண்டணாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்விதழின் நோக்கங்களாக, முருகப்பா, “சமூக வளர்ச்சி ஒரு கண்ணும் சமய வளர்ச்சி ஒரு கண்ணுமாகவே குமரன் கருதி ஊழியம் புரிந்து வருவான். தேசிய விஷயங்களுள் மிகச் சிறந்ததான கதரியக்கத்தில் முற்றும் கலந்துழைப்பதும், சமய வழியில் அஹிம்சா தருமத்தையே கண்மணியாகக கருதி உழைப்பதும் குமரனது நோக்கங்களாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

குமரன் வாரப்பதிப்பின் உள்நாட்டுச் சந்தா ஒரு வருடத்திற்கு ஐந்து ரூபாய்; வெளிநாட்டுக்கு ஆறு ரூபாய்.

உள்ளடக்கம்

வடிவமைப்பும் வாசகங்களும்

குமரன் இதழ், முகப்பில் வண்ணத்தாளில் வெளிவந்தது. அட்டையில் சில சமயம் விளம்பரங்களும் இடம் பெற்றன. இதழின் ஆரம்பக் காலக்கட்டங்களில் முதல் பக்கத்தில் கீழ்காணும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

"என் கடன் பணி செய்து கிடப்பதே”

“நாட்டுக்கோட்டை செட்டியாரின் நலங்கருதி உழைப்பது"

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு"

1926-ல் இவை மாற்றம் செய்யப்பட்டு, “ கதரே உயிர்”, “கருணையே தெய்வம்” என்பவை புதிதாக இடம் பெற்றன. 1930-ல் இருந்து இதழ் வெளிவந்த காலம் முழுவதும் கீழ்காணும் இரு குறட்பாக்கள் இதழின் முகப்பில் இடம் பெற்றன.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்

இதழின் கொள்கை மாற்றங்கள்

ஆரம்பத்தில் தம் சமூகத்தைச் சீர்திருத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார் முருகப்பா. பின் இந்திய சமூகத்தின் உயர்வு பற்றிச் சிந்தித்து, காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றினார். அதன் பின் சுயமரியாதை இயக்கத்துடன் தொடர்புகொண்டு பணிபுரிந்தார். அத்தகைய மாற்றங்கள் இதழிலும் எதிரொலித்தன. இவ்வாசகங்களின் மாற்றத்துக்கு அவையே காரணம்.

இலக்கியப் பணிகள்

சமூகச் சீர்திருத்தப் பணியோடு, தமிழ் வளர்க்கும் இலக்கியப் பணியையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டது குமரன். தேசிக வினாயகம் பிள்ளையின் கவிதைகள் முதன் முதலில் வெளியானது குமரன் இதழில் தான். கவிமணியின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்தது குமரன். ரா.பி.சேதுப் பிள்ளையின் இராமாயணம் பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து இவ்விதழில் வெளியாகின. ’Light of Asia’ என்ற ஆங்கில நூலை கவிமணிக்கு அனுப்பி, அது ’ஆசிய ஜோதி' என்னும் தலைப்பில் நூலாக வெளிவருவதற்குக் காரணமாக அமைந்தவர் குமரன் இதழின் சொ. முருகப்பா. “இதழியல் உலகில் முதன்முதலில் ஆண்டுமலர் வெளியிட்ட பெருமை குமரன் இதழையே சாரும்” என்று குறிப்பிடும் சோமலெ, “அவ்வாறு வெளி வந்த ஆண்டு மலர்களின் இலக்கியச் சிறப்பும் செழுமையும் போற்றத்தக்கவை” என்றும் குறிப்பிட்டுள்ளார். விளம்பரங்களுக்கும் குமரன் இதழ் அதிக முக்கியத்துவம் அளித்தது.

குமரன் இதழ் மாதப்பதிப்பு நின்று போனதால், வார இதழ் மட்டும் தொடர்ந்து பல ஆண்டுகள் வெளிவந்தது. குமரன் வார இதழில் பணியாற்றிய சிலர், பின்னாளில் இதழியல் துறையிலும் எழுத்துலகிலும் சிறப்புறச் செயல்பட்டனர். அவர்களுள் இயக்குநர் ப. நீலகண்டன், ‘பொன்னி’ இதழைச் சிறப்பாக நடத்திய முருகு சுப்பிரமணியன் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

எழுத்துச் சீர்த்திருத்தம்

முருகப்பா "அஞ்சா நெஞ்சன்’ என்ற புனை பெயரில் குமரனிலும் தனவைசிய ஊழியனிலும் கட்டுரைகள் எழுதினார். இவ்விதழில் தான் சொ. முருகப்பா, எழுத்துச் சீர்த்திருத்தம் குறித்து ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களைப் பயன்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டு, அதற்கான வாசகர்களின் கருத்தை வரவேற்றிருந்தார். முதன் முதலில் எழுத்துச் சீர்த்திருத்தத்தை முன் வைத்த தமிழ் இதழ் குமரன் எனலாம்.

ஆண்டு மலர்கள்

குமரனின் ஆண்டுமலர்களில் பல இலக்கியவாதிகள், சான்றோர்கள் பங்களித்திருந்தனர். அது போல இசை மலரிலும் பல சான்றோர்கள் பங்களித்திருந்தனர். தமிழை எப்படி வளர்ப்பது? என்ற கட்டுரையில் தமிழ் வளர்ச்சியின் தேவையும், நாடு முழுவதும் தமிழ்க் கலாசாலைகள் தோன்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் முன்வைத்தது குமரன்.

சேரன்மாதேவி குருகுலப் பிரச்சனை

சேரன்மாதேவி குருகுலப் பிரச்சனையில் குமரன் தனது கருத்துக்களை வெளிப்படையாக முன் வைத்தது. வ.வே. சு. ஐயரைத் தனிப்பட்ட முறையில் சாதி நோக்கற்றவர் என்று விமர்சித்த குமரன், அவர் குருகுலத்தை நடத்திய விதத்தில் சாதிப்பாகுபாடு பார்க்கப்பட்டது உண்மையே என்பதையும் வெளியிட்டது. குமரன் சார்பாக முருகப்பா, நேரில் ஆசிரமம் சென்று அங்கிருக்கும் நடைமுறைகளைப் பார்வையிட்டு, இப்பாரபட்ச முறையைக் கண்டித்துக் குமரனில் எழுதினார். அதே சமயம் வ.வே.சு. ஐயரின் குரலுக்கும் மதிப்பளித்த குமரன், அவரது கருத்துக்களுக்கும் இடமளித்து அதனை வெளியிட்டது. சைவ சமய ஆதரவு இதழாகக் குமரன் இருந்தது. கிறிஸ்தவ மத மாற்றத்தைக் கண்டித்துச் சில கட்டுரைகள் குமரனில் வெளியாகின.

பங்களிப்பாளர்கள்

கி.ஆ.பெ. விஸ்வநாதம் நீலாவதி ராமசுப்பிரமணியம் ராமசுப்பிரமணியம் சொ. முருகப்பா அரு. சோமசுந்தரம்

தியாகராஜன் பி.ஸ்ரீ. ஆச்சார்யா திரு.வி.கலியாணசுந்தர முதலியார் டி.கே. சிதம்பரநாத முதலியார் கா. சுப்பிரமணியப் பிள்ளை எஸ். சோமசுந்தர பாரதியார் ரா.பி. சேதுப்பிள்ளை சுவாமி விபுலானந்தர் கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை பாவேந்தர் பாரதிதாசன் நாமக்கல் கவிஞர் முருகு சுப்ரமணியன்

ஆவணம்

குமரன் இதழ்கள் சில தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

வரலாற்று இடம்/மதிப்பீடு

அரசியல் , மதம் , சமூகம் , இலக்கியம் ஆகிய துறைகளில் ஒழுங்கின்மைக்கு எதிராக , சமூக அநீதிக்கெதிராக ஒரு உறுதியான குரலாகத் தன்னை முன் வைத்தது குமரன் இதழ்.

உசாத்துணை


✅Finalised Page