under review

தனவைசிய ஊழியன்

From Tamil Wiki
தனவைசிய ஊழியன்
சொ. முருகப்பா
ராய. சொக்கலிங்கன்

தனவைசிய இளைஞர்களை ஒருங்கிணைக்கவும், அவர்கள் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும், ‘தனவைசிய ஊழியர் சங்கம்’ என்ற அமைப்பை, 1919-ல், சொ. முருகப்பா தோற்றுவித்தார். தனவைசிய ஊழியர் சங்கத்தின் சார்பாக, 1920-ல் ’தனவைசிய ஊழியன்’ என்ற வார இதழ் தொடங்கப்பட்டது.

பதிப்பு, வெளியீடு

தனவைசிய இளைஞர்கள் முன்னேற்றத்திற்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும் செப்டம்பர் 11, 1919-ல், ‘தனவைசிய ஊழியர் சங்கம்’ என்ற அமைப்பை, சொ. முருகப்பா ஏற்படுத்தினார். அச்சங்கத்தின் சார்பாக, செப்டம்பர் 8, 1920-ல் ’தனவைசிய ஊழியன்’ என்ற வார இதழைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார் முருகப்பா. அவருக்குப் பின் ராய. சொக்கலிங்கன் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

தனவைசிய ஊழியன் இதழ் காரைக்குடியிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியானது. இதில் 12 பக்கங்கள் இடம் பெற்றன. சில ஆண்டுகளுக்குப் பின் இதழ், ஒவ்வொரு செவ்வாயன்றும் வெளிவந்தது. இதழின் விலை ஒன்றரை அணா. 1921-ல், சில காரணங்களால் இதழின் விலை 2 அணாவாக உயர்த்தப்பட்டது. பின்னர் சொ. முருகப்பாவின் முயற்சியால் மீண்டும் ஒன்றரை அணாவிற்கே விற்கப்பட்டது. உள்நாட்டுச் சந்தா வருடம் ஒன்றுக்கு நான்கு ரூபாய். சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளுக்கு ஐந்து ரூபாய். 1924-ல் இது சற்றே உயர்த்தப்பட்டு, உள்நாட்டுச் சந்தா வருடம் ஒன்றுக்கு ஐந்து ரூபாய். வெளிநாடுகளுக்கு ஆறு ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. 1924-ல், இதழின் தனிப்பிரதி விலை இரண்டணா.

இதழ்களின் எண்களைக் குறிக்க தமிழ் எண்களையே பயன்படுத்தியுள்ளனர்.

இதழின் நோக்கம்

இதழின் நோக்கமாக முருகப்பா, “நமது பத்திரிகை சிறப்பாக நமது சமூக முன்னேற்றத்திற்கும் பொதுவாக இந்தியர்களின் முன்னற்றத்திற்கும் உழைத்து வரும்” என்றும், “வலியாரென்றும் மெலியாரென்றும், செல்வரென்றும், ஏழையென்றும், உயர்ந்தோரென்றும், தாழ்ந்தோரென்றும் பேதம் பாராட்டாது, மறநெறி போக்கி அறநெறி நிற்போரின் அடிச்சுவடு தலைமேற்கொண்டு, பொய்மை கயமை, அழுக்காறுடைமை வஞ்சம், பயம், சுயநலம் முதலிய இழிகுணங்களை வெறுத்து உண்மை, தைரியம், வீரம், பெருமை, பொறுமை, கருணை, பரோபகாரம் முதலிய உத்தம குணங்களைப் போற்றி, ஒவ்வொரு வாரமும் வெளிவந்து விளங்கி நிற்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஊழியன் பெயர் மாற்றம் - குடியரசு இதழ் கட்டுரை

உள்ளடக்கம்

உள்ளூர் வர்த்தமானம், பொதுவர்த்தமானம், சமாசாரக் குறிப்புகள், கட்டுரைகள், தன வைசியர் குறித்த செய்திகள், நிகழ்வுகள் பற்றிய விவரங்கள், செய்திக் குறிப்புகள் இவ்விதழில் இடம் பெற்றன. தன வைசிய ஊழியர் சங்கத்தைப் பற்றியும், அதன் கிளைகளின் நடந்த நிகழ்வுகளைப் பற்றிய குறிப்புகளும் வெளியாகின.

இதழின் முகப்பில், இதழின் தலைப்பிற்குக் கீழே,

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

என்ற இரண்டு குறள்களும் இடம் பெற்றிருந்தன.

கந்தரலங்காரத்தில் இருந்து, “நாளென் செயும்வினை தானென் செயும்” என்ற பாடல், முருகனின் படத்துடன் இதழ்தோறும் வெளியாகியுள்ளது.

சமயப்பகுதி, சுகாதாரப் பகுதி, மாதர் பகுதி, இளைஞர் பகுதி, போன்றவை இவ்விதழில் வெளியாகியிருக்கின்றன. கப்பல் புறப்படும் செய்தி, மலேயா, பர்மா, மதுரை போன்ற இடங்களில் கொடுக்கப்படும் கடன்களுக்கு அப்போதைய வட்டி விகிதங்கள் பற்றிய குறிப்புகள் வெளியாகியுள்ளன.

‘கடைத்தெரு’ என்ற தலைப்பில் அக்காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட சந்தைப் பொருட்கள் சிலவற்றின் விலை பட்டியலிடப்பட்டுள்ளது. ‘தந்திச் செய்தி’ என்ற பகுதியில் ரங்கூன், மலாயா, சென்னை போன்ற பகுதிகளில் பொருட்களின் விலை பட்டியலிப்பட்டுள்ளது. விளம்பரங்களும் அதிகம் வெளியாகியுள்ளன. ராய. சொக்கலிங்கன் பொறுப்பேற்றபின் அதிகச் செய்திகள், விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. பாரதியார் வாழ்ந்த காலத்திலேயே அவரது கவிதைகளையும் கட்டுரைகளையும் தனவைசிய ஊழியன் வெளியிட்டது. புத்தக விமர்சனங்களுக்கும் ‘தனவைசிய ஊழியன்’ இடமளித்துள்ளது. , ‘மதிப்புரை’ என்ற பகுதியில், பிற இதழ்கள் பற்றிய மதிப்பீடு, விமர்சனம் வெளியாகியுள்ளது. 1925-ல் , தன வைசிய ஊழியன், ’ஊழியன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. குடியரசு இதழில் இந்த மாற்றம் பற்றி வரவேற்று ஈ.வெ. ராமசாமிப் பெரியார் எழுதியிருந்தார்.

உசாத்துணை


✅Finalised Page