under review

செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை

From Tamil Wiki
செம்பொன்னார்கோவில் சகோதரர்கள்
செம்பொன்னார்கோவில் சகோதரர்கள்
செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்
செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்

செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை (செப்டம்பர் 9, 1904 - டிசம்பர் 12, 1976) ஒரு நாதஸ்வரக் கலைஞர். ’செம்பொன்னார்கோவில் சகோதரர்கள்’ என்ற பெயரில் அறியப்பட்ட சகோதரர்களில் இளையவர்.

இளமை, கல்வி

தக்ஷிணாமூர்த்தி பிள்ளை செப்டம்பர் 9, 1904 அன்று செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை - குட்டியம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

தன் அண்ணன் செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளையுடன் சேர்ந்து முதலில் மாயூரம் காசிபண்டாரத் தெரு சாம்பமூர்த்தி ஐயரிடம் வாய்ப்பாட்டு கற்றார். பின்னர் மாயூரம் வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றார்.

தனிவாழ்க்கை

செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை குடும்பம்
செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை குடும்பம் நன்றி: www.sembanarkovilbrothers.com

தக்ஷிணாமூர்த்தி பிள்ளைக்கு உடன் பிறந்த சகோதரர்கள் மூவர் - செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளை, விஸ்வநாத பிள்ளை, கிருஷ்ணமூர்த்தி பிள்ளை; சகோதரிகள் இருவர்- தனபாக்கியம் (கணவர்: தவில்காரர் பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை), சேதுஅம்மாள் (கணவர்: திருவீழிமிழலை சகோதரர்களில் மூத்தவரான சுப்பிரமணிய பிள்ளை)

தக்ஷிணாமூர்த்தி பிள்ளை, காட்டூரைச் சேர்ந்த சட்டத்தம்மாளை மணந்தார். இவர்களுக்கு கோபாலஸ்வாமி, முத்துக்குமாரஸ்வாமி, வைத்தியநாதன், செல்வரத்தினம் என நான்கு மகன்கள், ராஜலக்ஷ்மி என்ற ஒரு மகள்.

இசைப்பணி

தக்ஷிணாமூர்த்தி பிள்ளை கோவிந்தஸ்வாமி பிள்ளையுடன் சேர்ந்து 'செம்பொன்னார்கோவில் சகோதரர்கள்’ என்ற பெயரில் வாசித்தார்ர். தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆகிய ஆதீனங்களில் இச்சகோதரர்கள் கௌரவ நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள்.

1937-ம் ஆண்டு, நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தவிலுடன் இச்சகோதரர்கள் ஒன்பது இசைத்தட்டுக்கள் ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

அடிக்கடி சகோதரர் கோவிந்தஸ்வாமி பிள்ளையுடன் கருத்து வேறுபாடு காரணமாக தக்ஷிணாமூர்த்தி பிள்ளை விலகி, ரெட்டியூர் சுப்பிரமணிய பிள்ளை என்பவருடன் வாசித்திருக்கிறார். கோவிந்தஸ்வாமி பிள்ளை காலமான பிறகு தன் மகன்களோடு சேர்ந்தும் வாசித்திருக்கிறார்.

தக்ஷிணாமூர்த்தி பிள்ளையின் ராகம், கீர்த்தனை வாசிப்புகள் பாராட்டுப் பெற்றன. ரக்தியும் பல்லவியும் வாசிப்பதில் வல்லவர். இவரது இசை மரபை இவரது மகன்கள் முத்துக்குமாரஸ்வாமியும், வைத்தியநாதனும் தொடர்ந்து வருகின்றனர். கைகளிலும் கால்களிலும் வெவ்வேறு தாளங்களை அமர்த்திக்கொண்டு பல்லவிகள் பாடும் அவதானக் கலையில் வைத்தியநாதன் தேர்ச்சி பெற்றிருந்தார். வைத்தியநாதன் அண்ணாமலைப் பல்கலைக் கழக இசைக் கல்லூரியில் நாதஸ்வர விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை தனித்து விலகி கச்சேரிகள் செய்த போது உடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மரணம்

செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை டிசம்பர் 12, 1976 அன்று மயிலாடுதுறையில் தனது இல்லத்தில் மறைந்தார்.

இதர இணைப்புகள்

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page