under review

சுஜாதா

From Tamil Wiki

To read the article in English: Sujatha. ‎

சுஜாதா
சுஜாதாவும் ராஜகோபாலனும்
சுஜாதா திருமணம்
சுஜாதா மனைவியுடன்
சுஜாதா மனைவியுடன்
சுஜாதாவின் முதல் கதை. சிவாஜி இதழ் 1953
சுஜாதா அப்துல்கலாம் இருவரும், 1954 திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி படம்

சுஜாதா (மே 3, 1935 - பிப்ரவரி 27, 2008) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய தொடர்கதைகளையும் சிறுகதைகளையும் புகழ்பெற்ற பத்திகளையும் எழுதியவர். தமிழ் உரைநடையில் புதுமைகளை புகுத்தி மாற்றத்தை உருவாக்கியவர். சுஜாதா தமிழில் அறிவியல்கதைகளை எழுதிய முன்னோடி. அறிவியலை அறிமுகம் செய்து கட்டுரைகளை எழுதியவர். பழந்தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மின்னணுவியல் பொறியாளர். இந்திய வாக்கு இயந்திரத்தை வடிவமைத்த குழுவில் பணியாற்றியவர்.

சுஜாதா தமிழில் பொதுவாசிப்புக்குரிய தளத்தில் செயல்பட்டவர்களில் கல்கிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஆளுமை. சுஜாதா கல்கியைப் போலவே எல்லா பக்கங்களையும் படிக்கச் செய்யும் நடையைக் கொண்டிருந்தார். எல்லா தளங்களிலும் தொடர்ச்சியாக எழுதினார். சுஜாதா மிகப்பெரிய வாசகர் வட்டத்தையும், அவரைப்போலவே எழுதும் வழித்தோன்றல்களின் வரிசையையும் கொண்டிருந்தார்.

பிறப்பு, கல்வி

சுஜாதாவின் இயற்பெயர் எஸ்.ரங்கராஜன். மே 3, 1935-ல் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள தெப்பக் குளத்தின் தெற்குத் தெரு வீதியில் உள்ள இல்லத்தில் பிறந்தார். சுஜாதாவின் தந்தை ஸ்ரீனிவாச ராகவன் மின்சாரவாரிய ஊழியர். தாய் கண்ணம்மா. சுஜாதாவின் அண்ணன் திரு. கிருஷ்ணமாச்சாரி மருத்துவரானார். சுஜாதாவின் தம்பி ராஜகோபாலன் தொலைபேசி இலாகாவில் தமிழகப் பகுதியின் தலைமை பொது நிர்வாகியாக பணியாற்றி ஓய்வுபெற்றார். ராஜகோபாலன் ஒரு வைணவ அறிஞர், பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுதியிருக்கிறார். சுஜாதாவின் தங்கை விஜி தனது மூன்றாம் வயதில், சுஜாதாவுக்கு பதினொன்று வயது இருக்கையில் மறைந்தார்.

சுஜாதாவின் தந்தைவழி தாத்தா குவளக்குடி சிங்கமையங்கார், பாட்டி ருக்மிணி அம்மாள். மின்துறையில் பணியாற்றிய சுஜாதாவின் தந்தை உள்காடுகளில் பணிபுரியச் சென்றமையால் சுஜாதா ஸ்ரீரங்கத்தில் தன் பாட்டியின் வீட்டில் தங்கிப் படித்தார். சுஜாதா ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தபின் 1952- 1954 வரை திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் படித்து பி.எஸ்.சி. (இயற்பியல்) பட்டம் பெற்றார். MITல் (Madras Institute of Technology), சேர்ந்து எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்தார். திருச்சியிலும், எம்.ஐ.டியிலும் சுஜாதாவுடன் படித்தவர் பின்னாளில் இந்திய ஜனாதிபதியான டாக்டர் அப்துல் கலாம். கல்வி கற்ற காலத்தில் சுஜாதா Infinite Mathematics பற்றியும், கலாம் ஆகாய விமானங்கள் கட்டுவது பற்றியும் தமிழில் விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதி பரிசு வாங்கினார்கள்.

தனிவாழ்க்கை

சுஜாதா பொறியியல் படிப்புக்குப்பின் பொறியாளர்களுக்கான மத்திய அரசின் தேர்வு எழுதி தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்றார். முதலில் இந்திய தேசிய வானொலியில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். பின்னர் சிவில் ஏவியேஷன்ஸ் பிரிவில், Air Traffic Controller-ஆக சென்னை மீனம்பாக்கத்தில் பணியாற்றினார். முதல்நிலை தொழில்நுட்ப அலுவலராக உயர்ந்து டெல்லியில் பணியாற்றினார். சுஜாதா பதினான்காண்டுகள் டெல்லியில் பணியாற்றினார்.

1970-ல் சுஜாதா பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் துணை மேலாளராக வேலைக்குச் சேர்ந்தார். ரிசர்ச் அண்டு டெவலப்மெண்டு பிரிவில் பொதுமேலாளர் பதவியேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வடிவமைப்பில் (Electronic Voting Machine) பங்குகொண்டார். ஏவுகணைத் தொழில்நுட்ப ஆய்விலும் பங்கெடுத்தார். சுஜாதா 1993-ல் ஓய்வுபெற்றார். சுஜாதா முன்னரே திரைப்படங்களில் ஈடுபட்டிருந்தாலும் ஓய்வுக்குப்பின் முழுநேர திரைஎழுத்தாளராக ஆனார்.

ரங்கராஜன் தன் 27-வது வயதில் ஜனவரி 28, 1963-ல் சுஜாதாவை மணந்தார். பின்னாளில் தன் மனைவியின் பெயரான சுஜாதாவை தன் புனைப்பெயராக ஆக்கிக் கொண்டார். ரங்கராஜன்- சுஜாதா தம்பதிகளுக்கு ஒரு வருடத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்தது. அதற்குப் பிறகு ரங்க பிரசாத், கேஷவ பிரசாத் என்று இரண்டு மகன்கள்.

சுஜாதா

இலக்கியவாழ்க்கை

சுஜாதா தன் தாத்தாவிடமிருந்து மரபிலக்கியத்தை அறிந்து கொண்டார். ஆழ்வார் பாசுரங்களை பாட்டியிடமிருந்து பயின்றார். இளமையில் ஸ்ரீரங்கத்தில் பின்னாளில் வாலி என்னும் பெயரில் திரைக்கவிஞராக மாறிய ரங்கராஜனுடன் இணைந்து கையெழுத்து இதழ்கள் நடத்தினார். சுஜாதா திருச்சி ஜோசப் கல்லூரியில் படிக்கும்போது ஜோசப் சின்னப்பா என்ற ஆங்கில விரிவுரையாளர் பிரிட்டிஷ் சிறுகதைகளையும் கவிதைகளையும் அறிமுகம் செய்தார். ஐயம்பெருமாள் கோனார் (புகழ்பெற்ற கோனார் உரைகளை எழுதியவர்) என்னும் தமிழாசிரியர் சுஜாதாவுக்கு மரபிலக்கிய அறிமுகம் செய்து வைத்தார்.

சுஜாதா எஸ்.ரங்கராஜன் என்ற பெயரில் எழுதிய முதல் கதை ’எழுத்தில் ஹிம்சை’ 1953-ல் திருச்சியில் இருந்து திரிலோக சீதாராம் நடத்திவந்த சிவாஜி என்ற சிற்றிதழில் வெளியாகியது. கு.ப. ராஜகோபாலன் போன்றவர்கள் எழுதிக் கொண்டிருந்த இதழ் அது.

சுஜாதா டெல்லிக்குச் சென்றபோது அங்கே கணையாழி ஆசிரியராக இருந்த கே.கஸ்தூரிரங்கன், என்.எஸ்.ஜெகன்னாதன், இந்திரா பார்த்தசாரதி ஆகியோருடன் நட்பு உருவானது. கஸ்தூரிரங்கனால் ஜூலை 1965-ல் ஆரம்பிக்கப்பட்ட கணையாழி இதழில் ஆகஸ்ட் இதழ் முதல் 'ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்’ என்ற பெயரில் கடைசிப் பக்கத்தில் எழுத ஆரம்பித்தார். நீர்க்குமிழிகள், பெட்டி, கடைசிப் பக்கம் என்று பல்வேறு தலைப்புகளில் எழுதி 'கடைசிப் பக்கம்’ என்ற பெயர் நிலைத்தது. இந்தக் கட்டுரைகள் விசா பதிப்பகத்தால் தொகுக்கப்பட்டுள்ளன.

சுஜாதா தன் நண்பர் ஸ்ரீனிவாசன் என்பவர் எழுதிய 'சுஷ்மா எங்கே?’ என்ற ஒரு கதையை திருத்திக் கொடுக்க அது குமுதம் இதழில் வெளியிடப்பட்டதைக் கண்டு தானும் எழுதலாம் என்னும் எண்ணத்தை அடைந்ததாக சொல்லியிருக்கிறார். சுஜாதா எழுதிய முதல் படைப்பான 'இடது ஓரத்தில்’ என்ற சிறுகதை 1962-ல் குமுதத்தில் எஸ்.ரங்கராஜன் என்ற பெயரில் வெளியாகியது.

சுஜாதா, கமல்ஹாசன்
சுஜாதா

சுஜாதா நகுலன் தொகுத்த குருக்ஷேத்திரம் என்னும் தொகைநூலில் தனிமைகொண்டு என்னும் சிறுகதையை எழுதினார். தமிழின் நல்ல சிறுகதைகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது. அதே கதையை விரிவாக்கி நைலான் கயிறு என்ற பெயரில் 1968 ஆகஸ்ட் மாதம் முதல் குமுதத்தில் தொடர்கதையாக எழுதினார். முதலில் சீட்டுமாளிகை என்று அதற்கு பெயரிடப்பட்டது. பின்னர் நைலான் கயிறு என மாற்றப்பட்டது. அந்நாவல் எழுதுவதற்கு சுஜாதா என புனைப்பெயர் சூட்டிக் கொண்டார். அப்போது ரா.கி.ரங்கராஜன் குமுதத்தில் எழுதிக் கொண்டிருந்தார். பெயர்குழப்பம் வரக்கூடாது என்பதனால் அப்பெயரைச் சூட்டிக்கொண்டதாக ஓரிடத்திலும், ரங்கராஜன் என்றபெயரில் உள்ள பழமைநெடி பிடிக்காமல் சுஜாதா என்ற நவீன பெயரை சூட்டிக்கொண்டதாக இன்னொரு இடத்திலும் சுஜாதா சொல்லியிருக்கிறார். ஆனால் மைய அரசின் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில்நுட்பப் பணியில் அப்போது இருந்தமையால் பணிநடத்தைச் சட்டப்படி வெளியே எழுதலாகாது என்பதனால்தான் சுஜாதா அந்தப் புனைப்பெயரைச் சூட்டிக் கொண்டார்.

கணேஷ்-வசந்த்

சுஜாதாவின் நடையும், துப்பறியும் கதைகளில் அவர் உருவாக்கிய யதார்த்தமும் பெரும்புகழ் பெற்றன. அவருடைய புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரங்கள் வழக்கறிஞர் கணேஷ், அவர் உதவியாளர் வசந்த். கணேஷ் அவருடைய முதல் தொடர்கதையான நைலான் கயிறு கதையில் 1968-ல்அறிமுகமானார். வசந்த் பின்னர் ப்ரியா என்னும் நாவலில் 1973-ல் அறிமுகமானார் (பார்க்க கணேஷ்,வசந்த்).

சிறுகதைகள்

சுஜாதா மத்யமர், ஸ்ரீரங்கத்து தேவதைகள், தூண்டில்கதைகள் என்னும் பொதுத்தலைப்புகளில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

அறிவியல்

சுஜாதா அறிவியல் சிறுகதைகளை தமிழுக்கு அறிமுகம் செய்த முன்னோடி எழுத்தாளர். அவை தனித்தொகுதியாக வெளியாகியிருக்கின்றன. அறிவியல் கூறுகளைக்கொண்டு திகைப்பூட்டும் மர்மக்கதைகளை எழுதுவதே சுஜாதாவின் பாணி. சுஜாதா எழுதிய அறிவியல் குறிப்புகளும், கேள்வி-பதில்களும் தமிழில் பொதுவாசகரிடையே அறிவியலைப் பரப்ப பெரும் பங்களிப்பாற்றியவை. சுஜாதாவின் "ஏன், எதற்கு, எப்படி" என்னும் தொடர் தமிழில் புகழ்பெற்ற அறிவியல் விளக்க பத்தி. சுஜாதா தொழில்நுட்பத்தின் ஆக்கசக்தி மேல் நம்பிக்கை கொண்ட, நிரூபணவாதப் பார்வை கொண்ட அறிவியலாளராக அவற்றில் வெளிப்படுகிறார்.

நாடகங்கள்

சுஜாதா ஆர்தர் மில்லர், டென்னஸி வில்லியம்ஸ் போன்ற அமெரிக்க யதார்த்தவாத நாடக ஆசிரியர்களால் பாதிக்கப்பட்டவர். சுஜாதா எழுதிய டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, சிங்கமையங்கார் பேரன் போன்ற நாடகங்கள் மிகையற்ற அன்றாடச் சித்தரிப்பு மற்றும் இயல்பான உரையாடல் வழியாக இலக்கியத்தன்மையை அடைந்தவை.

மரபிலக்கியம்

சுஜாதா திருக்குறள், சங்கப்பாடல்கள் ஆகியவற்றை சமகாலத் தமிழில் எளியமுறையில் விளக்கும் நூல்களை எழுதினார். ஆழ்வார் பாடல்களுக்கு அவர் எழுதிய விளக்கக் குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை.

நடை

சுஜாதாவின் நடை தமிழில் பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோருக்கு பின் மிகுந்த செல்வாக்கைச் செலுத்திய நடை என மதிப்பிடப்படுகிறது. சுஜாதா பொதுவாசகர்களுக்கான எழுத்தில் அந்நடையை கையாண்டாலும்கூட அது தீவிர இலக்கியத்தளத்தில் எழுதுபவர்களிலும் பலரிடம் செல்வாக்கைச் செலுத்தியது. சுஜாதாவின் நடையின் இயல்புகள் மூன்று.

  • புறவயத்தன்மை. சுஜாதா புறவுலகை நுணுக்கமாகச் சித்தரிப்பதிலும், கதைநிகழ்வுகளை முழுக்கமுழுக்க புறவயமாகச் சித்தரிப்பதிலும் கவனம் குவித்தவர்.
  • சொற்சிக்கனம். சுஜாதா மிகக்குறைவான சொற்களில் ஒரு காட்சியை அல்லது நிகழ்வைச் சொல்லமுயன்றபடி இருந்தவர்.
  • விளையாட்டுத்தனம். சுஜாதாவின் நடையில் எப்போதும் ஆசிரியர் விளையாட்டுத்தனத்துடன் வெளிப்பட்டபடியே இருந்தார். பகடி, எள்ளல் என அவருடைய மொழி அமைந்திருந்தது.

சுஜாதாவின் நடையில் செல்வாக்கு செலுத்திய தமிழ் முன்னோடிகள் புதுமைப்பித்தனும் அசோகமித்திரனும். ஆங்கில முன்னோடிகள் என எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜான் அப்டைக், ஆகிய இலக்கிய எழுத்தாளர்களையும் ஃப்ரெடெரிக் போர்ஸித் போன்ற ஆங்கில பரபரப்பு எழுத்தாளர்களையும் குறிப்பிடலாம். சுஜாதா ஜான் அப்டைக் எழுத்தில் பயன்படுத்திய எழுத்துக்களை கீழ்மேலாக அடுக்கும் உத்தி, அமைதியை குறிக்க ஏராளமான புள்ளிகளை போடும் உத்தி போன்றவற்றை தானும் பயன்படுத்தினார். பெயர்ச்சொற்களை வினைச்சொற்களாக திரித்துக்கொள்வது போன்றவையும் ஜான் அப்டைக் பயன்படுத்திய உத்திகளே. ஹெமிங்வேயின் நடையில் உள்ள சுருக்கமான புறவிவரிப்பு, அதற்கு வழக்கத்துக்கு மாறான உவமைகளை விமானவியல் போன்ற துறைகளில் இருந்து எடுத்துக் கொள்வது (கோபால்ட் நீல வானம்) ஆகியவற்றை தானும் கடைபிடித்தார். கர்ட் வேன்கார்ட் நடையில் மொழியை சற்று திரிப்பதன் வழியாக உருவாக்கப்படும் நுண்ணிய பகடியையும் சுஜாதா பின்பற்றினார். ஆங்கில பரபரப்பு நாவல்களிலுள்ள விரைவான நிகழ்வு விவரிப்புகளும் சுஜாதாவால் எடுத்தாளப்பட்டன.

சுஜாதாவின் நடை உத்தி என்பதற்கு அப்பால் சென்றது அவருடைய விரிவான வாசிப்பு மற்றும் கூரிய கவனிப்பினால் செறிவூட்டப்பட்டமையால்தான். சங்க இலக்கியம், ஆழ்வார் பாடல்கள், சட்டம், வணிகம் ஆகியவற்றில் புழங்கும் தனிமொழிகள், சென்னையிலும் திருச்சியிலும் உள்ள பேச்சுமொழிகள், நவீன இலக்கியத்தின் குறிச்சொற்கள் என எல்லாவகை மொழிவெளிப்பாடுகளையும் கூர்ந்து கவனித்து அவற்றிலிருந்து சொல்லாட்சிகளை எடுத்து தனக்காக மாற்றியமைத்துக் கொண்டே இருந்தார். பல்துறை குறிப்புகளால்தான் அவருடைய நடை கூர்ந்த வாசிப்புக்குரியதாகியது. அவர் அடுத்தகட்ட படைப்பாளிகளில் ஆழ்ந்த செல்வாக்கை உருவாக்கக் காரணம் அந்த விரிவான குறிப்புத்தன்மைதான்.

இதழியல்

  • சுஜாதா குமுதம் இதழின் ஆசிரியராக மூன்றாண்டுகள் பணியாற்றினார்.
  • மின்னம்பலம், அம்பலம் ஆகிய இணைய இதழ்களின் ஆசிரியராக சுஜாதா பணியாற்றினார்.

திரைப்படம்

திரைப்படமாக ஆன முதல் சுஜாதா நாவல் காயத்ரி (1977). பின்னர் திரைப்படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்தார். நினைத்தாலே இனிக்கும் (1979) அவர் வசனமெழுதிய முதல் படம். சுஜாதா 30 படங்களில் எழுத்தாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

சுஜாதா பெண்டஃபோர் சந்திரசேகரன் என்னும் தொழிலதிபருடன் இணைந்து மீடியா ட்ரீம்ஸ் என்னும் திரைத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்தினார். பாரதி (2000), லிட்டில் ஜான் (2001), நிலாக்காலம் (2001), பாண்டவர் பூமி (2001) ஆகிய படங்களை தயாரித்தார்.

விவாதங்கள்

  • சுஜாதா 1980-ல் குமுதத்தில் சிவப்பு கறுப்பு வெளுப்பு என்னும் நாவலை எழுதினார். அது நாடார் இனத்தவரை அவமதிக்கிறது என்று வன்முறை கலந்த எதிர்ப்பு உருவாகியது. சுஜாதா மன்னிப்பு கோரினார். குமுதம் நாவலை நிறுத்திக்கொண்டது. பின்னர் அதை ரத்தம் ஒரே நிறம் என்ற பேரில் குமுதத்தில் சாதிக்குறிப்புகள் இல்லாமல் எழுதினார்.
  • சுஜாதா சங்கப்பாடல்களுக்கும், திருக்குறளுக்கும் எழுதிய சுருக்கமான மொழியிலமைந்த உரைகள் தமிழறிஞர்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டன. பா.மதிவாணன் சுஜாதாவைக் கண்டித்து சங்க இலக்கிய உரைகளும் கறைகளும் (2006) என்னும் நூலை எழுதினார்.

விருதுகள்

  • அறிவியலை பரப்பியதற்காக 'தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்' வழங்கும் விருது 1993
  • மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க பணியாற்றியதற்காக வாஸ்விக் விருது
  • தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

சுஜாதாவுக்கு குறிப்பிடத்தக்க இலக்கியவிருதுகள் எவையும் வழங்கப்படவில்லை

மறைவு

சுஜாதா பிப்ரவரி 27, 2008-ல் சென்னையில் மறைந்தார். சில ஆண்டுகளாக சிறுநீரகம் செயலிழந்து மருத்துவச் சிகிச்சையில் இருந்தார்.

நினைவுகள்

  • உயிர்மை பதிப்பகம் ஆண்டுதோறும் சுஜாதா பெயரால் இலக்கியத்திற்கான சுஜாதா விருதுகளை வழங்கி வருகிறது.
  • இரா முருகன் சாகித்ய அக்காதமிக்காக சுஜாதாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்.
இந்திய இலக்கியச் சிற்பிகள்

இலக்கிய இடம்

சுஜாதாவின் இலக்கிய இடம் முதன்மையாக அவருடைய நடை ஏற்படுத்திய செல்வாக்கினால் உருவாவது. தமிழிலக்கியச் சூழலில் அவருக்கு முன்னால் இருந்த நடைகள் இரண்டு வகை. பொதுவாசிப்புக்கான தளத்தில் கல்கி எழுதியதுபோல எளிமையாக நேரடியாக வாசகர்களிடம் பேசுவது போன்ற நடை ஒரு பக்கமும், சாண்டில்யன் எழுதியதுபோல ஆடம்பரமான, அணிகள் நிறைந்த நடை இன்னொரு பக்கமும் இருந்தன. நவீன இலக்கியச் சூழலில் அசோகமித்திரன் எழுதுவது போன்று உள்ளது உள்ளபடி சொல்லும் தன்மை கொண்ட யதார்த்தவாத நடையும், கூரிய பகடியும் விமர்சனமும் கொண்ட சுந்தர ராமசாமி பாணி நடையும் இருந்தன. சுஜாதாவின் நடை ஏராளமான புறக்குறிப்புகளை உள்ளிழுத்துக்கொண்டு பகடியும் விளையாட்டுமாகச் செல்லும் தன்மை கொண்டிருந்தது. முற்றிலும் புறவய உலகைச் சார்ந்து செயல்படுவதாக இருந்தது. அது நவீன வாழ்க்கையைச் சொல்ல உகந்ததாக இருந்தது.

சுஜாதாவின் பார்வை எண்பதுகளில் வாசிக்க வந்தவர்களுக்கு உவப்பானதாக இருந்தது. எழுபதுகளில் உலகளாவிய சூழலில் இருந்த அரசியல்தீவிரம் எண்பதுகளில் இல்லாமலாகியது. புதிய தலைமுறை அரசியலற்றதாகவும், தொழில்நுட்ப அறிவியல்மேல் நம்பிக்கை கொண்டதாகவும் இருந்தது. அரசியல்பார்வைக்குப் பதிலாக அறிவியல்பார்வையை ஏற்றுக்கொண்ட தலைமுறைக்கு அணுக்கமானவராக சுஜாதா இருந்தார்.

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் தமிழில் முன்னோடியானவை. அவை தொழில்நுட்பத்தை மர்மக்கதைகளில் பயன்படுத்துவதனால் அறிவியல்தன்மை கொண்டவையே ஒழிய உலகின் சிறந்த அறிவியல்புனைவுகளைப்போல அறிவியல்கொள்கைகளை ஒட்டி புனைவுகளை உருவாக்குபவையோ, வாழ்க்கையின் வினாக்களுக்குள் செல்ல அறிவியலில் இருந்து படிமங்களைப் பெற்றுக்கொள்பவையோ அல்ல. ஆனால் அவை அறிவியல்புனைவை தமிழில் தொடங்கி வைத்தவை.

சுஜாதாவின் சிறுகதைகளில் நடுத்தரவர்க்க வாழ்க்கையை இயல்பாகச் சொல்லும் கதைகள் இலக்கியத்தன்மை கொண்டவை, அவருடைய நாடகங்களும் யதார்த்தவாத அழகியல் கொண்ட இலக்கியப்படைப்புகள் என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

நாவல்கள் (அகரவரிசையில்)
  1. அப்ஸரா
  2. அனிதா இளம் மனைவி, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  3. அனிதாவின் காதல்கள்
  4. ஆ..!
  5. ஆதலினால் காதல் செய்வீர்
  6. ஆயிரத்தில் இருவர்
  7. உன்னைக் கண்ட நேரமெல்லாம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  8. எதையும் ஒருமுறை
  9. எப்போதும் பெண்
  10. என்றாவது ஒரு நாள்
  11. ஏறக்குறைய சொர்க்கம்
  12. என் இனிய இயந்திரா
  13. ஒருத்தி நினைக்கையிலே
  14. ஒரு நடுப்பகல் மரணம்
  15. ஓடாதே!
  16. கணேஷ் x வஸந்த்
  17. கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  18. கம்ப்யூட்டர் கிராமம்
  19. கரையெல்லாம் செண்பகப்பூ
  20. கனவுத்தொழிற்சாலை
  21. காசளவில் ஓர் உலகம், வாசகர் வட்டம், சென்னை.
  22. காந்தளூர் வசந்தகுமாரன் கதை
  23. காயத்ரி, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  24. கொலையுதிர்காலம்
  25. கொலை அரங்கம்
  26. சில வித்தியாசங்கள், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  27. சில்வியா
  28. செப்டம்பர் பலி
  29. சொர்க்கத்தீவு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  30. திசைகண்டேன் வான்கண்டேன்
  31. தேவன் வருகை, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  32. நிலா நிழல்
  33. நிர்வாண நகரம்
  34. நில் கவனி தாக்கு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  35. நில்லுங்கள் ராஜாவே
  36. நைலான் கயிறு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  37. பதவிக்காக
  38. பதினாலு நாட்கள், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  39. பாதி ராஜ்யம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  40. பிரிவோம் சந்திப்போம் (நூல்)
  41. ப்ரியா, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  42. மறுபடியும் கணேஷ், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  43. பெண் இயந்திரம்
  44. பேசும் பொம்மைகள்
  45. மாயா, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  46. மீண்டும் ஜீனோ
  47. மூன்று நிமிஷம் கணேஷ்
  48. மேகத்தைத் துரத்தினவன், மாலைமதி, நவம்பர் 1979
  49. மேற்கே ஒரு குற்றம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  50. யவனிகா
  51. ரத்தம் ஒரே நிறம்
  52. வசந்தகாலக் குற்றங்கள்
  53. வண்ணத்துப்பூச்சி வேட்டை
  54. வஸந்த்! வஸந்த்!
  55. வாய்மையே - சிலசமயம் - வெல்லும்
  56. விபரீதக் கோட்பாடு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  57. வைரம் (புதினம்)
  58. ஹாஸ்டல் தினங்கள்
  59. ஜன்னல் மலர்
  60. ஜே.கே., குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  61. 24 ரூபாய் தீவு
  62. 6961, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
குறுநாவல்கள்
  • தீண்டும் இன்பம்
  • ஆஸ்டின் இல்லம்
  • குரு பிரசாத்தின் கடைசி தினம்
  • ஆகாயம்
  • காகித சங்கிலிகள்
  • மண்மகன்
  • மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
சிறுவர் இலக்கியம்
  • பூக்குட்டி
சிறுகதைத் தொகுப்புகள்
  • தூண்டில் கதைகள்
  • நகரம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  • நிஜத்தைத் தேடி
  • வானமென்னும் வீதியிலே, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்
  • ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
  • நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்
கவிதைத் தொகுப்பு
  • நைலான் ரதங்கள்
நாடகங்கள்
  • டாக்டர். நரேந்திரநாத்தின் வினோத வழக்கு
  • கடவுள் வந்திருந்தார்
  • பாரதி இருந்த வீடு
  • ஆகாயம்
கட்டுரைத் தொகுப்புகள்
  • கணையாழியின் கடைசி பக்கங்கள்
  • கற்றதும் பெற்றதும் [பாகம் 1,2,3,4]
  • கடவுள் இருக்கிறாரா
  • தலைமை செயலகம்
  • எழுத்தும் வாழ்க்கையும்
  • ஏன்? எதற்கு? எப்படி? [பாகம் 1,2]
  • சுஜாதாட்ஸ்
  • இன்னும் சில சிந்தனைகள்
  • தமிழ் அன்றும் இன்றும்
  • உயிரின் ரகசியம்
  • நானோ டெக்னாலஜி
  • கடவுள்களின் பள்ளத்தாக்கு
  • ஜீனோம்
  • திரைக்கதை எழுதுவது எப்படி?
  • தமிழ் அன்றும் இன்றும்; உயிர்மை பதிப்பகம், சென்னை
சுஜாதா கதையை தழுவி எடுக்கப்பட்ட படங்கள்
  • காயத்ரி (1977)
  • இது எப்படி இருக்கு 1978
  • கரையெல்லாம் செண்பகப்பூ (1981)
  • ப்ரியா (1978)
  • பொய்முகங்கள் (1986)
  • வானம் வசப்படும் (2004 )
  • ஆனந்த தாண்டவம் (2009)
  • சைத்தான் 2016

உசாத்துணை


✅Finalised Page