under review

சீனி. விஸ்வநாதன்

From Tamil Wiki
நன்றி: தென்றல் இதழ்

சீனி விஸ்வநாதன் (சீனி. விசுவநாதன்) (பிறப்பு : நவம்பர் 22, 1934) தமிழ் எழுத்தாளர், பாரதி ஆய்வாளர், அறுபது ஆண்டுகால உழைப்பில் பாரதியின் படைப்புகளை ஆய்ந்து பதிப்பித்தார். 'காலவரிசையில் பாரதியின் கவிதைகள்', குறிப்பிடத்தக்க தொகுப்பு.

பிறப்பு, கல்வி

சீனி. விஸ்வநாதன் மனைவியுடன்

சீனி. விஸ்வநாதன் இன்றைய நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் பி.வி. சீனிவாச ஐயர் - கமலாம்பாள் இணையருக்கு நவம்பர் 22, 1934 அன்று பிறந்தார். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், நான்கு சகோதரிகள். ஆரம்பக் கல்வியை ஓசூரில் கற்றார். 1944-ல் தந்தை இறந்தபின் சித்தியுடன் திருச்சிக்குச் சென்று உருமி தனலட்சுமி பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். பள்ளிக்காலத்திலிருந்தே பாரதியின் படைப்புகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

1953-ல் கருத்துமுத்து தியாகராஜ செட்டியார் நடத்திய 'தமிழ்நாடு' பத்திரிகையில் ஒளவையார் திரைப்படம் பற்றிய பாராட்டுரை ஒன்றை எழுதினார். ஆனந்தவிகடனிலும் 'ஒளவையார்' திரைப்படம் குறித்து எழுதினார்.

தனி வாழ்க்கை

சீனி. விஸ்வநாதன் பத்திரிகைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். ம.பொ. சிவஞானம் நடத்திய 'சங்கப் பலகை' என்ற இதழில் துணுக்குகளும், கடிதங்களும் எழுதினார். பத்திரிகையின் ஆசிரியர் விஸ்வநாதன் மூலம் சங்கப் பலகை இதழில் பணியாற்றும் வாய்ப்பு கிடத்தது. பத்திரிகை நின்றபின் வெவ்வேறு பதிப்பகங்களில் பணியாற்றினார்.

மே 1962-ல் தன் சகோதரியின் மகள் சுலோசனாவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் நான்கு மகள்கள்.

இலக்கிய வாழ்க்கை

Seeni viswanathan modi.jpeg

1961-ல் சீனி. விஸ்வநாதன் சிதம்பரம் செட்டியாரின் பாரதி பதிப்பகத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

1962-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் பாரதியின் 81-வது பிறந்த நாளை ஒட்டி பாரதியார் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டார். ராஜாஜி, பாரதிதாசன், வெ.சாமிநாத சர்மா, ப. ஜீவானந்தம், பாலதண்டாயுதம், சுத்தானந்த பாரதி ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்ற 'தமிழகம் தந்த மகாகவி' பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. பாரதியியலில் ஆர்வம் கொண்டார். பெரியசாமித் தூரன், ஏ.கே.செட்டியார், ரா. அ.பத்மநாபன் போன்றோர்களைத் தன் முன்னோடிகளாகக் கொண்டார்.

பாரதியின் ஒன்றுவிட்ட சகோதரரும், பாரதி பிரசுராலய நிறுவனருமான சி. விசுவநாத ஐயரின் அறிமுகம் கிடைத்ததும் அவருடைய வழிகாட்டுதலுடன் 12 ஆண்டுக்கால முயற்சியில் 'மகாகவி பாரதி வரலாறு' என்ற நூலை எழுதினார். இந்த நூலுக்காக தில்லி நேரு நினைவு நூலகம், கல்கத்தா தேசிய நூலகம், புதுச்சேரி போன்ற இடங்களிலும் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து ஆதாரங்களைப் பெற்றார்.

ஆரம்ப நாட்களில் பிரசுரமான பாரதி பற்றிய நூல்களில் காலப்பிழைகளும், கருத்துப் பிழைகளும் இருந்ததைக் கண்டு பாரதி நடத்திய பத்திரிகைகள், அவர் தொடர்பு கொண்டிருந்த பத்திரிகைகள், பாரதியே எழுதிய நூல்கள் இவற்றைத் தேடும் முயற்சியில் இறங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டார். புது தில்லி, கல்கத்தா ஆகிய நகரங்களுக்கும் சென்றுவந்தார்.

1977-79 காலகட்டத்தில் பாரதியின் சில கட்டுரைகளைத் தொகுத்து நூல்களாக வெளியிட்டார். 1979 முதல் பாரதியின் நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 1979-ல் 'மகாகவி பாரதியின் மும்மணிகள்' என்ற நூலை வெளியிட்டார். சக்ரவர்த்தினி பத்திரிகையில் பாரதி ஆசிரியராக இருந்தபோது எழுதிய கட்டுரைகளை பெரும் முயற்சிக்குப்பின் பெற்று 1979-ல் 'பாரதியின் சக்ரவர்த்தினி கட்டுரைகள்' என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.

நண்பரும், உறவினருமான டி.வி.எஸ். மணி ஐயரின் உதவியுடன் 1908 முதல் 1954 வரை வெளிவந்த பல நூல்களை ஆய்ந்து அவற்றில் இருந்த செய்திகள், முன்னுரைகள், வரலாற்றுக்குறிப்புகள், அகச்சான்றுகள் ஆகியவற்றை திருத்திய பதிப்புகளாகத் தந்தார். பாரதியின் கையெழுத்திலேயே இருந்த கவிதைகளை நகல் செய்து இணைத்தார். இந்தப் புதிய மறு அச்சுக்கான வாழ்த்துரை வழங்கியவர் கவிஞர் கண்ணதாசன்.

பாரதி நூல்களுக்கான விவரத் தொகுதிகளைப் 'பாரதி நூற்பெயர்க் கோவை', 'பாரதி நூல்கள் விவரக் கோவை', நவீன ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தும் விதமாக 'பாரதி நூல்கள் பதிப்பு வரலாறு', 'பாரதியும் சங்கீதமும்' ஆகிய நூல்களை வெளியிட்டார். பாரதி நூற்பெயர்க்கோவை பாரதியின் படைப்புகளுக்கான முதல் நூற்கோவை.

64 ஆண்டுக்காலப் பாரதி தேடலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிப், பதிப்பித்த சீனி. விஸ்வநாதனின் மிக முக்கியமான பணி 'கால வ ரி சையில் பாரதி படைப் புகள்' என்ற 12 தொகுதிகளை வெளியிட்டது.

பாரதியின் பாடல்களை மட்டும் கொண்ட 'காலவரிசையில் பாரதி பாடல்கள்' தொகுப்பு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆய்வுப்பதிப்பாக வெளியிடப்பட்டது.

64 ஆண்டு உழைப்பில் 10,000க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட பாரதியின் 23 தொகுதிகள் அடங்கிய முழுப் படைப்புகளின் தொகுப்பை உருவாக்கினார். பாரதியின் 143-வது பிறந்த நாளையொட்டி இத்தொகுப்பு பிரதமர் புதுதில்லியில் பிரதமர் மோடியால் வெளியிடப்பட்டது.

நினைவலைகள்

சீனி. விஸ்வநாதன் தன் பாரதி தேடலின் நினைவுகளை 'பாரதி தேடல்கள்: சில நினைவலைகள்' என்ற நூலாக எழுதினார். இந்நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.

விருதுகள்

  • தமிழக அரசின் பாரதி விருது(2004)
  • தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல்( வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு)(2004)
  • மனோன்மணியம் சுந்தரனார் விருது(2015)
  • இதழியல் பணிக்கான பரலி.சு.நெல்லையப்பர் விருது(2017)

மதிப்பீடு

முன்னோடி பாரதி ஆய்வாளராகவும், பாரதியின் படைப்புகளைப் பதிப்பித்தவராகவும் சீனி. விசுவநாதன் அறியப்படுகிறார். ஏறத்தாழ 64 ஆண்டுகளை இப்பணியில் கழித்தார். அவருக்கு முன் தலைமுறையைச் சேர்ந்த பாரதி ஆய்வாளர்களின் பதிப்புகளில் இருந்த காலப்பிழைகளையும், விடுபடல்களையும் ஆராய்ந்து திருத்திய பதிப்புகளை உருவாக்கினார். பாரதியின் படைப்புகளின் முழுத்தொகுப்பும் காலவரிசியில் பாரதியின் படைப்புகளை வெளியிட்டதும் அவரது மிகப்பெரிய கொடைகளாக மதிப்பிடப்படுகின்றன. "தமிழுக்கு உ.வே.சா எப்படியோ அப்படி பாரதிக்கு சீனி. விஸ்வநாதன்" என்று கண்ணதாசன் அவரது பணிகளை மதிப்பிடுகிறார்.

மற்ற பதிப்புகளில் இடம்பெறாத அரிய பாரதி பாடல்களைக் கண்டடைந்தார். 'கவிதாதேவி அருள் வேண்டல்' முழுக்கவிதையையும் 'குருகோவிந்த சிம்மம்' கவிதையின் பொருள் விளக்கத்தையும், 'திசை' என்ற பாடலையும், 'அல்லா' என்ற பாடலின் விட்டுப்போன ஒரு சரணத்தையும், 'ஶ்ரீ கபிலர் அகவல்' என்ற பாடலின் ஒருபகுதியையும் கண்டெடுத்து இணைத்தார்.

'மகாகவி பாரதி வாழ்க்கை வரலாறு' நூல், பாரதியின் அரசியல் பங்களிப்பை, பாரதியின் தகப்பனார் சின்னச்சாமி ஐயர் நிறுவிய எட்டயபுரம் காட்டன் ஜின்னிங் பாக்டரியின் கணக்கு விவரங்கள், சின்னச்சாமி ஐயர் இறந்த பிறகு பாரதியின் படிப்புச் செலவுக்காக பாகீரதி அம்மையாரின் பேரில் வாங்கிய கடன் பத்திரம், சென்னை ஜன சங்கத்தில் பாரதியின் பங்களிப்பு போன்ற பல அரிய தகவல்களை ஆதாரத்துடன் பதிவுசெய்கிறது. மேலும் பாரதிதாசன் - பாரதி சந்திப்பு நிகழ்ந்த சரியான தேதியை அறிவதற்கு சான்றுகள் இல்லாமையையும் குறிப்பிடுகிறார்.

தனக்குப் பின்வரும் ஆய்வாளர்கள் பாரதியின் பன்முகங்களையும் ஆராய வேண்டும் என்ற தன் ஆவலை "தமிழில் புலமை பெற்றது போலவே, ஆங்கிலத்திலும் திறம்பெற்றவராகக் காட்சிதருகிறார். தமது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 'The Fox with Golden Tail' என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார். திலகர், ஜகதீஸ்சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், தாதாபாய் நௌரோஜி ஆகியோரின் சொற்பொழிவுகள், கதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். இப்படிப் பல்வேறு கோணங்களில் அணுகவும், மதிப்பிடப்படவும் வேண்டியவர் பாரதி!" என்று வெளிப்படுத்தினார்.

விவாதங்கள்

பாரதி ஆவணங்களை அழிவிலிருந்து காப்பதில் முனைந்திருந்த முதல் தலைமுறை பாரதி ஆய்வாளரான ரா.அ. பத்மநாபனுக்கு பாரதியின் படைப்புகளில் திருத்தமான பாடம், பாட வேறுபாடு, யாப்பமைதி முதலான கூறுகளில் கவனம் செலுத்த முடியவில்லை. 1980-ல் வானவில் பிரசுரமாக வெளிவந்த சீனி. விஸ்வநாதனின் 'பாரதி கவிதைகள்' பதிப்பு முதன்முறையாகப் பாடவேறுபாடுகளில் கவனம் செலுத்தியது . மூல ஆவணங்கள் சார்ந்து பாரதி ஆய்வின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சீனி. விஸ்வநாதனுக்கும் ரா.அ.ப -வுக்கும் சர்ச்சைகள் ஏற்பட்டன. இருவருக்கும் இடையில் இதுகுறித்த விவாதம் 'தாய்' இதழில் நடந்தது.

'பாரதி ஆய்வும் சில சிக்கல்களும்' பாரதி ஆய்வுகளில் உள்ள வேறுபாடுகளைக் குறித்து சீனி. விஸ்வநாதன் எழுதிய நூல். உதாரணமாக ரா. அ. பத்மநாபன் வெளியிட்ட 'சித்திர பாரதி' ஆய்வு நூலில் சக்கரவர்த்தினி பத்திரிகையின் தலைப்பு அலெக்சாண்ட்ரா ராணியைக் குறிப்பதாகச் சொல்கிறார். ஆனால் அது விக்டோரிய மகாராணியைத்தான் குறிக்கிறது. 1905-ம் ஆண்டு சக்ரவர்த்தினி தலையங்கத்திலேயே பாரதி 'விக்டோரிய சக்ரவர்த்தினி' என்று குறிப்பிட்டுள்ளார்.

நூல் பட்டியல்

  • மகாகவி பாரதி-நூற்பெயர்க்கோவை
  • பாரதி நூல்கள்-விவரக்கோவை
  • பாரதி நூல்கள்-பதிப்பு வரலாறு
  • மகாகவி பாரதி-சிலபுதிய உண்மைகள்
  • பாரதி ஆய்வுகள்-சில சிக்கல்கள்
  • புதுநெறி காட்டிய பாரதி
  • பல்வேறு கோணங்களில் பாரதி
  • பாரதியின் பத்திரிகை உலகம்
  • பாரதியின் வித்தியாசமான பார்வைகள்
  • மறுமலர்ச்சிக் கவிஞர்
தொகுத்தவை
  • தமிழகம் தந்த மகாகவி
  • மரணத்தை வென்ற மகாகவி
  • மகாகவி பாரதி கட்டுரை மணிமாலை
  • மகாகவி பாரதி மஞ்சரி
  • காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்(தொகுதி 1-11)
  • காகவரிசைப்படுத்தப்பட்ட பாரதி பாடல்கள்
  • மகாகவி பாரதியின் சக்கரவர்த்தினி கட்டுரைகள்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2025, 18:06:02 IST