under review

கே. ஜீவபாரதி

From Tamil Wiki
கே. ஜீவபாரதி

கே. ஜீவபாரதி (க. இராமமூர்த்தி) (பிறப்பு: ஜூன் 15, 1950) எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர். திரைப் பாடலாசிரியர். திரைத்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ப. ஜீவானந்தம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்றோரது வாழ்க்கையை ஆவணப்படுத்தினார். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

க. இராமமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்ட கே. ஜீவபாரதி, ஜூன் 15, 1950 அன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூதலபுரத்தில், இரா. கந்தசாமித் தேவர் - வைரம் அம்மையார் இணையருக்குப் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார்.

தனி வாழ்க்கை

ஜீவபாரதி, மணமானவர். மனைவி: காமாட்சி. வளர்ப்பு மகன்: சசிக்குமார்.

இதழியல்

ஜீவபாரதி, 15 ஆண்டுகள், நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். ’ஜனசக்தி’ இதழில் கட்டுரைப் பகுதி ஆசிரியராகப் பணிபுரிந்தார். ‘மேன்மை’ இதழில் ஓராண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.

கே. ஜீவபாரதி

இலக்கிய வாழ்க்கை

ஜீவபாரதி, ப. ஜீவானந்தம் மீது கொண்ட பற்றாலும், பாரதியாரின் மீது ஏற்பட்ட ஈர்ப்பாலும் இரண்டையும் இணைத்து கே. ஜீவபாரதி என்பதைப் புனை பெயராகச் சூட்டிக் கொண்டு எழுதினார். முல்லைச்சரம், அமுதசுரபி, ஜனசக்தி, மேன்மை, ஜீவா முழக்கம் எனப் பல இதழ்களில் எழுதினார். பொதுவுடைமை இயக்கத் தோழர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை கட்டுரைகளாக எழுதினார். கவிதை, கட்டுரை, வாழ்க்கை வரலாற்று நூல்கள், தொகுப்பு நூல்கள், புதினம் என 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். ஜீவபாரதி எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பாட நூலாக வைக்கப்பட்டது. ஜீவபாரதி எழுதிய நூல்களை ஆய்வு செய்து சில மாணவர்கள் இளமுனைவர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றனர்.

திரைப்படம்

ஜீவபாரதி, திரைப்படத் துறையில் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக ஐந்தாண்டுகள் பணியாற்றினார். 'ஜனவரி 1', '24 மணிநேரம்', 'முதல் வசந்தம்', 'விடிஞ்சா கல்யாணம்', 'பாலைவன ரோஜாக்கள்', 'இனி ஒரு சுதந்திரம்', 'சின்னத்தம்பி பெரியதம்பி', 'இங்கேயும் ஒரு கங்கை', 'தீர்த்தக்கரையினிலே', 'அன்பின் முகவரி' போன்ற படங்களில் பங்களித்தார். சில படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.

அரசியல்

ஜீவபாரதி, தனது பெரியப்பா வேலுச்சாமித் தேவரால் கம்யூனிஸ்ட் இயக்க ஆதரவாளனார். அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார்.

அமைப்புச் செயல்பாடுகள்

ஜீவபாரதி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மீது கொண்ட பற்றால், பட்டுக்கோட்டையில் கல்யாணசுந்தரத்தின் சிலை மற்றும் மணி மண்டபம் அமைய உழைத்தார்.

கே.ஜீவபாரதிக்கு விருது

விருதுகள்

  • சென்னை பம்மல் பாரதி கலை இலக்கியப் பேரவை அளித்த 'மக்கள் கவிஞர்' விருது
  • சென்னை அசோக் நகர் மக்கள் கவிஞர் மாமன்றத்தின் 'மக்கள் நாவலர்' விருது
  • மன்னார்குடி செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை வழங்கிய 'இலக்கியச் செம்மல்' விருது
  • ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை அறக்கட்டளையின் 'எஸ்.கே.எம்' இலக்கிய விருது
  • கலைமாமணி கவிஞர் பொன்னடியான் இலக்கியப் பொன்விழாவில் 'இலக்கியப் பேரொளி' விருது
  • திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் ‘பாரதியார் விருது'
  • தேனி வையைத் தமிழ்ச்சங்கத்தின் 'எழுத்துச் சிற்பி' விருது
  • ராஜபாளையம் மணிமேகலை மன்றம் அளித்த 'ஆய்வுச்செம்மல்' விருது
  • தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் ‘கலைஞர் பொற்கிழி’ விருது
  • தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை வழங்கிய பாவேந்தர் பாரதிதாசன் விருது
  • தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை வழங்கிய சிறந்த நூலுக்கான முதல் பரிசு - உலகப்பன் காலமும் கவிதையும்
  • தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை வழங்கிய சிறந்த சிறார் நூலுக்கான முதல் பரிசு - பொன்விழாச் சுற்றுலா
  • சிறந்த உரைநடை ஆசிரியர் விருது

இலக்கிய இடம்

கே. ஜீவபாரதி, வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டு செயல்பட்டார். ப. ஜீவானந்தம் பற்றி 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய விரிவான தகவல்களைத் திரட்டி ஆவணப்படுத்தினார். வேலுநாச்சியார் பற்றி இவர் எழுதியிருக்கும் நூல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுவுடைமைச் சிந்தனையாளர்ளின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் எழுத்தாளராக கே. ஜீவபாரதி அறியப்படுகிறார்.

கே. ஜீவபாரதி நூல்கள்

நூல்கள்

சிறார் நூல்
  • அறிவை வளர்க்கும் சிறுவர் பாடல்கள்
  • மாணவர்களுக்கான பொதுக்கட்டுரைகள்
கவிதைத் தொகுப்புகள்
  • கே.ஜீவபாரதி கவிதைகள்
  • ஒரு முடிவுக்கு வாருங்கள்
  • புதுயுகக் கவிஞனும் புதியவன் குரல்களும்
  • களத்தில் பிறந்த கவிதைகள்
  • கனல் மணக்கும் பூக்கள்
  • சொல்லுறதச் சொல்லிப்புட்டேன்
  • கவிதை எழுதினேன் கடிதம் வந்தது
  • மனிதர்கள் வாழும் மண்ணைத்தேடி
வரலாற்றுப் புதினம்
  • வேலுநாச்சியார்
நாடகம்
  • வீரவாஞ்சி
  • வீரத்தாய் வேலுநாச்சியார்
கட்டுரை நூல்கள்
  • காலமறிந்து கூவிய சேவல்
  • பாட்டுக்கோட்டை
  • உலகப்பன் காலமும் கவிதையும்
  • காலத்தை வென்ற கவிஞர்கள்
  • உன்னைச் சுற்றி வாழுகின்ற உயிரினங்கள்
  • பொன்விழாச் சுற்றுலா
  • உலக மேதைகள்
  • எனது தரிசனங்கள்
  • வீரன் எட்டப்பன் முதல் வேலுநாச்சியார் வரை
  • இந்தப்பாடல்களும் எனது நிரையும்
  • மறக்கப்பட்ட மங்கையர் திலகங்கள்
  • வரலாறு பேசுகிறது (இரண்டு தொகுதிகள்)
  • விதைக்கப்பட்டவர்கள்
  • வாழும் வரலாறு
  • அப்துல் ரஹீம் வாழ்வியல் இலக்கியம் ஓர் ஆய்வு
  • அந்தநாள் ஞாபகம்
  • சரித்திரம் பேசுகிறது
  • கேப்டன் லெட்சுமி
  • சமுதாயப் பார்வையில் மணிமேகலை
  • வந்தே மாதரம் வந்த கதை
  • வீரன் எட்டப்பன்
  • நல்லகண்ணு
  • ஜெயகாந்தன்
  • கட்சி அரசியலும் கவியரசு கண்ணதாசனும்
  • மலர்களுக்காக மலர்ந்தவை
  • நினைவு நாட்களும் நெஞ்சில் அலைகளும்
  • கண்ணோட்டம்
  • பிறந்த நாட்களுக்காகப் பிறந்தவை
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
  • வீரபாண்டிய கட்டபொம்மன்
  • கல்பனா சாவ்லா
  • திருப்பூர் குமரன்
  • நீதியரசர் மோகன்
  • லெனின்
  • பாதை மாறாத பயணம்
  • குமாரமங்கலம் தியாகதீபங்கள்
தொகுப்பு நூல்கள்
  • காலம்
  • பட்டுக்கோட்டையார் பாடல்கள்
  • மலரும் நினைவுகளில் மக்கள் கவிஞர்
  • மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் திரையிசைப் பாடல்கள்
  • பழகியோர் பார்வையில் பட்டுக்கோட்டையார்
  • கவிஞர்கள் நெஞ்சில் மக்கள் கவிஞர்
  • பல கோணங்களில் பட்டுக்கோட்டையார்
  • பாரதி பற்றி ஜீவா
  • சட்டப்பேரவையில் ஜீவா
  • சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
  • ஜீவா தொகுத்த பழமொழிகள்
  • ஜீவாவின் தாமரை தலையங்க இலக்கியம்
  • ஜீவாவின் பாடல்கள்
  • மேடையில் ஜீவா
  • புதுமைப் பெண்ணுக்கு ஜீவாவின் கடிதங்கள்
  • ஜீவா தொகுத்த வழக்குச் சொல் அகராதி
  • தேசத்தின் சொத்து ஜீவா
  • ஜீவாவின் கடிதங்கள்
  • மாமனிதர் ஜீவா
  • மதத்தைப் பற்றி ஜீவா
  • கவிஞர்கள் நெஞ்சில் ஜீவா
  • ஜீவா என்னும் பேராசான்
  • ஜீவா ஒரு பல்கலைக்கழகம்
  • ஜீவா என்றொரு ஜீவநதி
  • மாஸ்கோவில் ஜீவா
  • ஜீவா பார்வையில் கலை இலக்கியம்
  • ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும்
  • மறந்தும் மறையாத மானுடப் பறவை
  • ஜீவா பார்வையில் பாரதி
  • ஜீவன் பிரிந்த போதும் சிலையாய் எழுந்த போதும்
  • பசும்பொன் தேவரின் கட்டுரைகள்
  • பசும்பொன் தேவரின் மேடை முழக்கம்
  • சட்டப்பேரவையில் பசும்பொன்தேவர்
  • வாழும்போதே வரலாறான தேவர்
  • பசும்பொன் தேவரின் பன்முகத் தோற்றம்
  • தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர்
  • சட்டப்பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு
  • பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்டுகளும்
  • பசும்பொன்தேவர் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்
  • பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்
  • சட்டப்பேரவையில் அருட்செல்வர்
  • வந்த வினாக்களும் தந்த விடைகளும்
  • சந்தித்த வேளையில் தா.பாண்டியன்
  • சட்டப்பேரவையில் சோ.அழகர்சாமி
  • அன்று சொன்னது
  • சட்டமன்ற மேலவையில் ப.மாணிக்கம்
  • காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள்
  • பல கோணங்களில் பசும்பொன் தேவர்
  • சட்டப்பேரவையில் கே.டி.தங்கமணி
  • எரிமலையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு
  • எளிமையின் ஏந்தல்
  • மேன்மை களஞ்சியம் தொகுதி
  • சட்டப்பேரவையில் எம்.கல்யாணசுந்தரம் (மூன்று பாகங்கள்)

உசாத்துணை


✅Finalised Page