under review

குண்டுகட் பாலியாதனார்

From Tamil Wiki

குண்டுகட் பாலியாதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் இரண்டு. ஒவ்வொரு பாடல் வீதம் புறநானூறிலும் நற்றிணையிலும் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

குண்டுகட் பாலியாதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். ஆதன் என்னும் இயற்பெயரை கொண்டவர். குன்றுகட் பாலி என்ற ஊரில் பிறந்தவர். குன்றுகட் பாலி என்பது கேரள மாநிலத்தில் கோழிக்கோடு பகுதிக்கு அருகில் உள்ள பாலிக்குன்றாக இருக்கும் என கருதப்படுகிறது. கால மருவில் குன்றுகட் பாலி என்பது குண்டுகட் பாலி என திரிபுற்றது.

இலக்கிய வாழ்க்கை

குண்டுகட் பாலியாதனார் பாடிய பாடல்கள் புறநானூறில் 387-வது பாடலாகவும் நற்றிணையில் 220-வது பாடலாகவும் இடம்பெற்றுள்ளது. புறநானூற்று பாடல் சேர மன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதனின் நல்லியல்புகளை சிறப்பித்து கூறுவதாக பாடாண் திணையில் வாழ்த்தியல் துறையில் அமைந்த பாடல்.

நற்றிணைப்பாடல் மடலேறி வர ஊர் எல்லையில் காத்திருக்கும் தலைவன் (மடலேறுதல் தான் காதலிக்கும் பெண்ணின் பெயரை ஊரார் முன்னிலையில் பகிரங்கப்படுத்துவதன் வாயிலாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தல்), ஊருக்குள் வருவனாயின் தலைவியின் களவு மணமாகிய காதல் ஊரார் அறியும்படியாகி அவமானத்திற்குள்ளாவதை தடுக்கும் பொருட்டு தோழி தலைவிக்கு அறிவுரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

புறநானூறு - 387

படைச்சிறப்பு
  • செல்வக்கடுங்கோ வாழியாதனின் யானைகள் எப்போதும் போரில் ஈடுபட்டு பகை அரசர் அரண்மனை மதில்களை இடித்து கொண்டிருப்பதால் புழுதிப்படிந்த கன்னங்களை கொண்டிருக்கும். பூ வேலைப்பாடுடைய பட்டங்கள் அணிந்த பருத்த கழுத்தையுடைய யானைகள் பகை அரசர்களின் காவல் காடுகளில் உலவி, தங்களது சொரசொரப்பான வலிமையான கொம்புகளை வைத்து அச்சத்தை உண்டாக்கும்.
  • வயலில் வாழும் கூரிய நகங்கள் கொண்ட ஆமையின் வெண்ணிற அடிவயிற்று தோலை போல ஒளிரும் செல்வக்கடுங்கோ வாழியாதனின் தடாரிப்பறையின் போர் முழக்கத்தை கேட்டு பகை அரசர்கள் அஞ்சி நடுங்குவர்.
  • செல்வக்கடுங்கோ வாழியாதனை சந்திக்க செல்கிறோம் என்றாலே புலவர்களின் வழியில் குறுக்கிடாது பிற நாட்டு அரசர்கள் தங்கள் கொற்றக்குடையை தாழ்த்தி தாள் பணிந்து வழிவிடுவர்.
கொடைச்சிறப்பு
  • அரண்மனை முற்றத்தில் திருந்திய கழல்களை கால்களில் அணிந்து நடமாடும் செல்வக்கடுங்கோ வாழியாதன், இரவலரின் ஏழ்மைக்கு பொருள் அளிக்காமல் தனது பெருமையினால் குன்று போல உயர்ந்து விளங்கும் யானைகளையும் பிடரிமயிர் களைந்த குதிரைகளையும் மேய்ச்சலுக்கான பசுக்கூட்டத்தையும் தாரளமாக வழங்கும் சிறப்பினை பெற்றவன்.

நற்றிணை - 220

  • பனையோலைகளால் முடையப்பட்ட குதிரை பொம்மையின் கழுத்தில் ஒலிக்கும் மணிகளும் மார்பில் மனிதர்கள் அமர்வதற்கான கச்சும் கட்டப்பட்டிருக்கும். அதனை கொண்டு மடல் ஊர்வர்.
  • மடல் ஏறி வரும் அயலானின் சார்பாக ஊர் பிள்ளைகள் அவனுடன் ஓடி வருவர்.

பாடல் நடை

புறநானூறு - 387
  • பாடாண் திணை துறை: வாழ்த்தியல்

 ........................
திருந்துதொழிற் பலபகடு
பகைப்புல மன்னர் பணிதிறை தந்துநின்
நகைப்புல வாணர் நல்குரவு அகற்றி
மிகப்பொலியர்தன் சேவடியத்தையென்று
யாஅன்இசைப்பின் நனிநன்றுஎனாப்
பலபிற வாழ்த்த இருந்தோர்தங் கோன்....
மருவஇன்நகர் அகன் கடைத்தலைத்
திருந்துகழல் சேவடி குறுகல் வேண்டி
வென்றிரங்கும் விறன்முரசினோன்
என்சிறுமையின் இழித்து நோக்கான்
தன்பெருமையின் தகவுநோக்கிக்
குன்றுறழ்ந்த களிறென்கோ?
கொய்யுளைய மாஎன்கோ?
மன்றுநிறையும் நிரைஎன்கோ?
மனைக்களமரொடு களம்என்கோ?
ஆங்கவை, கனவுஎன மருள வல்லே நனவின்
நல்கி யோனே நசைசால் தோன்றல்
ஊழி வாழி பூழியர் பெருமகன்!
...............................

நற்றிணை - 220
  • திணை: குறிஞ்சி துறை: குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம்புக்கது.
  • பின்னின்ற தலைமகன் தோழிகேட்பத் தலைமகளை ஒம்படுத்ததூஉமாம்.

சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக்
குறுமுகிழ் எருக்கங் கண்ணி சூடி
உண்ணா நன்மாப் பண்ணி எம்முடன்
மறுகுடன் திரிதருஞ் சிறுகுறு மாக்கள்
பெரிதுஞ் சான்றோர் மன்ற விசிபிணி
முழவுக்கண் புலரா விழவுடை ஆங்கண்
ஊரேம் என்னுமிப் பேரேம் உறுநர்
தாமே ஒப்புரவு அறியின் தேமொழிக்
கயலேர் உண்கட் குறுமகட்கு
அயலோர் ஆகலென்று எம்மொடு படலே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2024, 19:28:53 IST