ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் பதினோராம் திருமுறையில் இடம்பெறும் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியம். திருஞான சம்பந்தரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு நம்பியாண்டார் நம்பி இயற்றியது.
ஆசிரியர்
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி. சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர்.
நூல் அமைப்பு
ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம் திருஞான சம்பந்தரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது.
கலம்பகத்தின் இலக்கனத்துக்கேற்ப , இந்நூலில் ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், வெண்பா, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம், கலிப்பா, கட்டணைக் கலித்துறை, கலித்தாழிசை, கலிவிருத்தம், அறுசீர் எழுசீர் விருத்தங்கள், நேரிசை வெண்பா, எனப் பாவும் பாவினங்களும் அமைந்துள்ளன. குறம், மறம், கொற்றவை, மடல், கார் , சம்பிரதம், இரசவாதம், மதங்கியார், பாணாற்றுப்படை, கைக்கிளை மருட்பா, தழை ஆகிய கலம்பக உறுப்புகளில் ஞானசம்பந்தரின் சிறப்பும், அவரது வாழ்க்கை நிகழ்வுகளும் கூறப்படுகின்றன. இக்கலம்பகத்துள் நாற்பத்தொன்பது பாடல்களே காணப்படுகின்றன. கலம்பகத்தின் இறுதிச் செய்யுளின் இறுதிச் சொல் முதற் செய்யுளின் முதற் சொல்லோடு இயைந்து மண்டலித்து வராததால் இதன் இறுதியில் சில பாடல்கள் கிடைக்கவில்லை என்று கருதப்படுகிறது.
சம்பந்தரின் சிறப்பு கூறும் சொற்றொடர்கள்
- தமிழ் பயிற்றிய நாவன்
- சிவபத்தி விளைவித்தவனே
- சிவாகம விதி நவின்றவன்னே
- மறையவர் தலைவன்
- மருவலர்க்கு இடி
- நிறை குணத்தவன்
- அருந்தமிழ் விரகனே
- தமிழின் வடகலை விடங்கன்
- பர சமய வென்றி அரி
- முத்தமிழாளன்
- மறை பயில் திப்பிய வாசகன்
- விப்ரசிகாமணி
- தமிழ்க்கேசரி
சம்பந்தரின் வாழ்க்கை நிகழ்வுகள் சில
- ஞானப்பால் உண்டது
- அமணரைக் கழுவேற்றியது
- திருமருகலில் விடம் தீர்த்தது
- திருவீழிமலையில் இறைவன் சம்பந்தருக்கு படிக்காசு அருளியது
- திருமறைக்காட்டில் பாடல் பாடி கதவுக்கு திருக்காப்பிட்டது
பாடல் நடை
கைக்கிளை மருட்பா
அம்புந்து கண்ணிமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்
வம்புந்து கோதை மலர்வாடும் - சம்பந்தன்
காமரு கழுமலம் அனையாள்
ஆமிவள் அணங்கலள் அடிநிலத் தனவே. 42
மடல்
கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்
தடமாடு மிகுகாழி தகுபேதை அருளாமல்
திடமாகில் அணிநீறு செழுமேனி முழுதாடி
மடலேறி எழில்வீதி வருகாதல் ஒழியேனே. 13
தழை
முல்லை நகையுமைதன் மன்னு திருவருளை
முந்தியுறுபெரிய செந்தண் முனிவன்மிகு
நல்ல பொழில்சுலவு தொல்லை யணிபுகலி
நாதன் மறைமுதல்வன் வேத மலையதனில்
வில்லை இலர்கணையும் இல்லை பகழியுறு
வேழம் இரலைகலை கேழல் வினவுறுவர்
சொல்லை யிலர்விரக ரல்லர் தழைகொணர்வர்
தோழி இவரொருவர் ஆவ அழிதர்வரே. 48
தழையை ஆடையாக உடுப்பவர் என்பதை உணர்த்தும். குறிஞ்சி நிலத்து மாதரைக் கூடக் கருதிய தலைமகன் கையுறையாகக் கையில் தழையைக் கொண்டு மானைத் துரத்திச் செல்லுதல் மரபு,
உசாத்துணை
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்-தமிழ்த்துளி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Mar-2025, 17:28:40 IST