வ.சு. செங்கல்வராய பிள்ளை
வ. சு. செங்கல்வராய பிள்ளை (ஆகஸ்ட் 15, 1883 - ஆகஸ்ட் 25, 1971) தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், உரையாசிரியர், பதிப்பாளர். மரபு வழி புராணங்களைச் சேகரித்து பதிப்பித்தல், சைவ நூல்களுக்கான உரை, திருப்புகழ் பதிப்பு ஆகியவை தமிழ் இலக்கியத்திற்கு முக்கியமான பங்களிப்பு.
பிறப்பு, கல்வி
தென் ஆற்காடு பகுதியில் மஞ்சள் குப்பம் கிராமத்தில் வடக்கு பட்டு வ.த சுப்ரமணிய பிள்ளைக்கு ஆகஸ்ட் 15, 1883-ல் வ.சு.செங்கல்வராய பிள்ளை பிறந்தார். இவர் தந்தை வ.த. சுப்ரமணிய பிள்ளை மாவட்ட நீதிபதியாக இருந்த தமிழறிஞர்.
செங்கல்வராய பிள்ளை 1888-1891 ஆண்டுகளில் நாமக்கல்லில், அங்குள்ள கழகப் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பு வரை பயின்றார். அதன் பிறகு கும்பகோணம், திருவாரூர், மதுரை ஆகிய ஊர்களில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார்.
1901-ம் ஆண்டில் சென்னை மில்லர் கல்லூரியில் மெய்யியல் பட்டமும், பின்னர் அதே கல்லூரியில் தமிழில் எம்.ஏ பட்டமும் பெற்றார். அதைத் தொடர்ந்து மலையாளமும், தமிழும் பாடமாக எடுத்து எம்.ஏ. முடித்தார். சென்னை மில்லர் கல்லூரியில் படிக்கும்போது செங்கல்வராய பிள்ளையின் பேராசிரியர்களாக பரிதிமாற்கலைஞரும், மறைமலையடிகளும் இருந்தனர்.
தனிவாழ்க்கை
எம்.ஏ முடித்த உடன் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உதவியாளராகச் சேர்ந்து கடைசியில் சென்னை மாநிலப் பத்திரப் பதிவுத் துறை துணைக் கண்காணிப்பாளராக இருந்து 1938-ல் ஓய்வு பெற்றார்.
1907-ல் தனுக்கொடியைத் திருமணம் செய்தார். தனுக்கொடி இறந்தபின் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவரும் இறந்து போகவே தன் 47-ஆவது வயதில் மூன்றாவது திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு நான்கு பிள்ளைகள்.
இலக்கிய வாழ்க்கை
செங்கல்வராய பிள்ளையின் முதன்மைப் பங்களிப்பு இவருடைய தந்தை தொடங்கிய திருப்புகழ் பதிப்புப் பணியை முழுமை செய்தது. 1871-ல் மாவட்ட நீதிபதியாக இருந்த வ.த. சுப்பிரமணிய பிள்ளை சிதம்பரம் செல்லும் பயணத்தின்போது பயணிகள் அருணகிரிநாதரின் பாடல்களை பாடக்கேட்டு அதன்மேல் ஆர்வம் கொண்டார். அவை அப்போது வெவ்வேறு ஓலைச்சுவடிகளிலாக சிதறி பெரும்பாலும் மறக்கப்பட்டிருந்தன. . 1871-ல் வ.த. சுப்ரமணிய பிள்ளை தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து எழுத்தோலை உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து அருணகிரிநாதர் பாடல்களை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். 1894-ல் முதலாவது பதிப்பும், 1901-ல் இரண்டாவது பதிப்பும் வெளிவந்தது. அவரது மறைவுக்குப் பிறகு தந்தையின் பணியை முன்னெடுத்த செங்கல்வராய பிள்ளை திருப்புகழை முழுமையான உரை மற்றும் ஆராய்ச்சிக்குறிப்புடன் நூலாக வெளியிட்டார்.
செங்கல்வராய பிள்ளை நாற்பது நூல்களைப் படைத்துள்ளார். இவை பெரும்பாலும் முருகனைப் பற்றியனவாகவும், தேவாரத்தைப் பற்றியனவாகவும் உள்ளன. பன்னிரு திருமறைகளையும், திருப்புகழையும் படித்துக் குறிப்பு எடுத்திருக்கிறார். தேவார ஒளிநெறி, திருவாசக ஒளிநெறி, திருவாசக ஒளிநெறிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். தேவாரத்திலுள்ள சொற்கள், தலங்கள், அரிய சொல்லாட்சிகள், அடியவர்கள் முதலியவற்றுக்கு அகர வரிசையில் விளக்கம் தந்துள்ளார்.
செங்கல்வராய பிள்ளை துதிப்பாடல்கள் அதிகமாக எழுதியிருக்கிறார். ‛திருத்தணிகை பிள்ளைத் தமிழ்’, ‛தணிகை முப்பூ’ இரண்டும் திருத்தணிகை முருகனைப் பற்றியவை. கரீணக குல திலக அந்திய பூபான் என்பவர் எழுதிய அந்தர விலாசம் என்கிற நாடகத்தை ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பித்து விரிவான ஆராய்ச்சிக் கட்டுரையும் எழுதினார்.
'அருணகிரி நாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்', 'முருகரும் தமிழும்', 'திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்', 'திருக்கோவையார் உரைநடை' ஆகிய நான்கு நூற்களும் செங்கல்வராய பிள்ளையின் திறனாய்வு புத்தகங்கள். இவரின் தேவார ஒளி நெறிக் கட்டுரைகள் மொத்தம் ஆறு பகுதிகளைக் கொண்டது. இந்த நூற்களை தேவாரப் பாடல்களின் கலைக் களஞ்சியம் என்று கூறலாம்.
செங்கல்வராய பிள்ளையின் ஆய்வு பகுப்பாய்வு நெறிக்கு உட்பட்டது. தேவாரத்தில் மறைந்தும் வெளிப்படையாகவும் காணப்படும் செய்திகளைத் தொகுத்துத் தருவது இவரது நோக்கமாக இருந்தது. 1,325 பாடல்களைக் கொண்ட அருணகிரி நாதரின் திருப்புகழுக்கு உரை எழுதினார்.
இறுதிக்காலம்
90 வயது வரை வாழ்ந்த செங்கல்வராய பிள்ளை கடைசி வரை தமிழுக்காகப் பணியாற்றியுள்ளார். இறப்பதற்கு சில நாள்களுக்கு முன் திருவிசைப்பா பற்றி ஆராய்ச்சி நூலை வெளியிட்டிருக்கிறார். ஆகஸ்ட் 25, 1971-ல் காலமானார்.
விருதுகள்
- பி.ஏ. படிப்பில் மாநிலத்தில் முதல் நிலை பெற்றதற்காக Frankilin Gell Gold Medal வாங்கினார்.
- இவரது பணியைப் பாராட்டி ஆங்கிலேய அரசு ராவ் சாகிப், ராவ் பகதூர் பட்டங்களை வழங்கியது.
- சித்தாந்த கலாநிதி, செந்தமிழ்மாமதி, தணிகை மணி போன்ற பட்டங்களைப் பெற்றார்.
- தெ.பொ.மீ-யின் பரிந்துரையின் பேரில் 1969-ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அவருக்கு பி.லிட் பட்டம் அளித்து கௌரவித்தது.
- செங்கல்வராய பிள்ளையின் படைப்புகளை தமிழக அரசு 2010-11 அறிக்கையில் நாட்டுடைமை ஆக்கும் அறிவிப்பை வெளியிட்டது.
நூல்கள் பட்டியல்
- திருநாவுக்கரசர் பாடல்கள்
- தேவார ஒளிநெறிக் கட்டுரைகள்
- திருக்கோவையாயார் ஒளிநெறி
- திருவிசைப்பா ஒளிநெறி
- திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்
- தணிகைப் பதிகம்
- தணிகைத் தசாங்கம்
- தணிகை முப்பூ
- வேல்ப்பாட்டு
- சேவல்பாட்டு
- கோழிக்கொடி
- தணிகைக் கலிவெண்பா
- திருத்தணிகேசர் எம்பாவை
- திருத்தணிகேசர் திருப்பள்ளியெழுச்சி
- மஞ்சைப் பாட்டு
- வள்ளி திருமணத் தத்துவம்
- வள்ளி-கிழவர் வாக்குவாதம்
- முருகவேள் பன்னிரு திருமுறை
- முருகரும் தமிழும்
- அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்
- அந்தர விலாசம், 1931
- செங்கல்வராய பிள்ளை தோத்திரம்
ஆய்வுக்கட்டுரை
- History of Tamil Prose Literature
உசாத்துணை
- அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்
- திருப்புகழுக்கு உரை எழுதிய செங்கல்வராய பிள்ளை பிறந்ததின சிறப்புப் பகிர்வு! | Chengalvaraya Pillai birthday special article - Vikatan
- பசுபதிவுகள்: 882. வ.சு.செங்கல்வராய பிள்ளை - 2
- தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை (தமிழ் இணைய கல்விக் கழகம்)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:25 IST