under review

வ.கோ. சண்முகம்

From Tamil Wiki
கவிஞர் வயலூர் சண்முகம்

வ.கோ. சண்முகம் (வயலூர் கோ. சண்முகம்; வயலூர் கோதண்டபாணி சண்முகம்; மாவெண்கோ; செம்மல்; நவயுகக் கவிராயர்; பிப்ரவரி 20, 1924 - ஜூலை 23, 1983) ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர். இதழாளர். மேனாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் பள்ளித் தோழர். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

பிறப்பு, கல்வி

வயலூர் கோதண்டபாணி சண்முகம் என்னும் வ. கோ. சண்முகம், பிப்ரவரி 20, 1924-ல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வயலூரில், கோதண்டபாணி-மீனாட்சியம்மாள் இணையருக்குப் பிறந்தார். திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புதுமுக வகுப்பை நிறைவு செய்தார்.

தனி வாழ்க்கை

வ.கோ. சண்முகம், சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டார். மனைவி வைதேகி. மகன் எஸ். ராஜகுமாரன், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர். மகள்: மாலா.

வ.கோ. சண்முகம் நூல்கள்

இதழியல் வாழ்க்கை

வ.கோ. சண்முகம், பள்ளியில் படிக்கும்போது சக மாணவரான மு. கருணாநிதி மற்றும் அரங்கண்ணல் ஆகியோருடன் இணைந்து ’மாணவர் நேசன்’, ‘மாணவர் பொழில்’ என்னும் தலைப்பில் கையெழுத்து இதழ்களை நடத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

வ.கோ. சண்முகம், பள்ளியில் படிக்கும் போது, பாரதிதாசனால் ஈர்க்கப்பட்டு கவிதைகள் எழுதினார். திராவிடநாடு, முரசொலி, கலைக்கதிர், விஜயா, பிரசண்டவிகடன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் கதை, கவிதை, கட்டுரைகளை எழுதினார். கோகுலம், கண்ணன் போன்ற இதழ்களில் சிறார்களுக்கான பாடல்களை, கதைகளை எழுதினார். மரபுக் கவிதைகளை எழுதிவதில் தேர்ந்தவராக இருந்தார். புதுக் கவிதைகளும் எழுதினார்.

வ.கோ. சண்முகம், ஜோதிடம் அறிந்தவர். அது குறித்து ’மாத ஜோதிடம்’ போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். மு. கருணாநிதி, சுரதா, கா.மு. ஷெரீப், ஆரூர் தாஸ், அரங்கண்ணல் உள்ளிட்டோரின் நண்பர்.

விருதுகள்

கவிஞர் சுரதா வழங்கிய எழுச்சிக் கவிஞர் பட்டம்.

இலக்கிய இடம்

வ.கோ. சண்முகம், கவிஞர். திராவிட இயக்கம் சார்ந்த கருத்துக்கள், இவரது கவிதைகளில் வெளிப்பட்டன. புதிய சொல்லாக்கங்களால் வாசகர்ளை ஈர்த்தார். சிறார்களுக்கான குழந்தைப் பாடல்களை எளிய தமிழில் சந்த நயங்களுடன் எழுதினார். இவரைப் பற்றி சுரதா, “என்னை விட ஆற்றல் மிக்கவர். கவிஞர் வ.கோ. சண்முகம். அவருடைய கவிதைகளில் மின்னல் வெட்டுவது போல் தெறிக்கும் புதிய வீச்சுக்களை வேறு கவிஞர்களின் கவிதைகளில் என்னால் காண முடியவில்லை” என்கிறார்.

கவிஞர் இந்திரன், வயலூர் சண்முகத்தின் கவிதைகள் குறித்து, “வயலூர் சண்முகத்தின் கவிதைகள் நம்பிக்கையின் பிராண வாயுவை ஆகாயம் முழுவதும் நிறைத்து விடுகின்றன. அக உலகம் சார்ந்த அனுபவங்கள், புற உலகம் சார்ந்த விழுமியங்களால் பாதிக்கப்படுகிறபோது, வயலூர் சண்முகத்தின் மொழி வெளிப்பாடு ஒரு திட வடிவச் சிற்பமாக உருக்கொண்டு விடுகிறது” என்று மதிப்பிட்டுள்ளார்.

மறைவு

வ.கோ. சண்முகம், உடல்நலக் குறைவால், ஜூலை 23, 1983 அன்று காரைக்காலில் காலமானார்.

நாட்டுடைமை

தமிழக அரசு, வ.கோ. சண்முகத்தின் மறைவுக்குப் பின், 2007-ல், அவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.

ஆவணம்

தமிழ் இணையக் கல்விக் கழக இணைய நூலகத்தில் வ.கோ. சண்முகத்தின் நூல்கள் சில சேகரிக்கப்பட்டுள்ளன.

கவிஞர் வ.கோ. சண்முகம் நூல்கள்

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • தெற்கு ஜன்னலும் நானும்
  • எதைத் தேடுகிறாய்?
  • நடந்துகொண்டே இரு
  • மெழுகுச் சிறகுகள்
  • புதிய தெய்வம்
  • வென்றார்கள் நின்றார்கள்
  • தைப்பாவாய்
  • பாருக்கெல்லாம் பாரதம்
  • உப்புமண்டித் தெரு (புதுக்கவிதைச் சிறுகதைகள்)
  • அன்னை ஒருத்தி (காவியம்)
சிறார் நூல்கள்
  • டாணா முத்து
  • சின்னப் பூவே மெல்லப் பாடு

உசாத்துணை


✅Finalised Page