under review

வைசேஷிகம்

From Tamil Wiki

வைசேஷிகம் (வைசேடிகம்): இந்திய தத்துவமரபுகளில் ஒன்று. ஆறு தரிசனங்கள் என்று இந்து மரபு வகுத்துரைப்பனவற்றில் ஒன்று. தொன்மையான அணுக்கொள்கையை முன்வைப்பது. பொருட்களின் நுண்வடிவமான அணுவுக்கு உள்ள தனித்தன்மைகளே அப்பொருளின் இயல்பாக ஆகின்றன என வரையறை செய்கிறது. இந்திய தர்க்கவியலான நியாயம் வைசேஷிகத்தின் துணைத்தரிசனம். இதன் ஆசிரியர் கணாதர்.

தோற்றம், வரலாறு

வைசேஷிகம் இந்து ஞானமரபின் ஆறு தரிசனங்களான சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வமீமாம்சம், உத்தரமீமாம்சம் என்னும் ஆறில் ஒன்று.

ஆசிரியர்

வைசேஷிகத்தின் முதன்மை ஆசிரியர் கணாதர். வைசேஷிக தரிசனங்களை சூத்திரவடிவில் தொகுத்து இவர் இயற்றிய வைசேஷிக சூத்திரங்களே வைசேஷிகத்தின் முதன்மை நூல். நீண்டகாலமாக இருந்துவந்த தத்துவ மரபின் பார்வையை ஒருங்கிணைத்து ஒரு தரிசனமாக ஆக்கியவர் இவரே.

தத்துவத்தின் வேர்

வைசேஷிகத்தின் முதலாசிரியரான கணாதர் அந்த தத்துவக்கருத்துக்களை தொகுத்து நூலாக்கியவர் மட்டுமே. வைசேஷிகத்தை ஏற்றுக்கொண்ட ஒரு சிந்தனைப் பள்ளியின் தலைவராக அவர் இருந்திருக்கலாம். அந்த சிந்தனை மரபு அவருக்கு நெடுங்காலம் முன்னரே இருந்துள்ளது. அதன் வேர்களை தொல்குடி வாழ்க்கையிலேயே தேடவேண்டும். ஒவ்வொரு பொருளையும் பிரித்துக்கொண்டே போனால் பிரிக்கமுடியாத ஒரு நுண்ணிய அலகு வரும் என்றும், அப்பொருளின் இயல்பு அந்த நுண்ணிய அலகாகிய அணுவிலும் இருக்கும் என்பதும் மானுடசிந்தனை உருவான காலத்திலேயே தோன்றிய ஒரு தரிசனமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

நூல்

வைசேஷிக தரிசனத்தின் மூலநூலாகக் கருதப்படுவது வைசேஷிக சூத்ரம். கணாதர் இதன் ஆசிரியர். இந்நூல் கணாத சூத்ரம், கணசூத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.

வைசேஷிக ஆசிரியர்கள்

வைசேஷிகத்தை வெவ்வேறு ஆசிரியர்கள் தங்கள் உரை நூல்கள் வழியாக விளக்கியுள்ளனர்.

  • பிரசஸ்தபாதர் எழுதிய பதார்த்த தர்ம சம்கிரகம் - பொயு 5 ஆம் நூற்றாண்டு
  • மதிசந்திரர் எழுதிய தசபதார்த்த சாஸ்திரம் - பொயு 5-ம் நூற்றாண்டு
  • வியோமசிவன் பதார்த்த தர்ம சங்கிரகத்துக்கு எழுதிய விளக்கம் வ்யோமாவதி - பொயு 1000.
  • ஸ்ரீதராச்சாரியார் பிரசஸ்தபாதர் உரைக்கு எழுதிய விளக்கம் நியாய கந்தலி - பொயு 991
  • உதயணர் எழுதிய நியாயவார்த்திக தார்பரிய சுத்தி , கிரணாவலி - பொயு 984
  • சிவாதித்யர் எழுதிய சப்தபதார்த்தி - பொயு 12-ம் நூற்றாண்டு
  • வல்லபாச்சாரியார் எழுதிய நியாயலீலாவதி - பொயு 12-ம் நூற்றாண்டு
  • ஜயநாராயணா தர்க்க பஞ்சானனன் எழுதிய நியாய விவிர்த்தி - பொயு 14-ம் நூற்றாண்டு
  • வரதராஜர் எழுதிய சாரசம்கிரகம் - பொயு 1150
  • சந்திரகாந்தா எழுதிய நியாய பாஷ்யம் - பொயு 1200
  • சங்கர மிஸ்ரர் எழுதிய மகாபாஷ்யம் உபஸ்காரம் - பொயு 1650

இவர்களில் பிரசஸ்தபாதர், உதயணர், சங்கர மிஸ்ரர் ஆகியோர் முக்கியமானவர்கள். அவர்கள் வைசேஷிகத்தை பல படிகளாக ஓர் ஆன்மிக தத்துவமாக உருமாற்றம் செய்தனர்

தத்துவக் கொள்கைகள்

வைசேஷிகம் தன்னுடைய தத்துவ அடிப்படைகளை மரபான கலைச்சொற்களுக்கு தனக்கான பொருள் அளித்தும், புதிய கலைச்சொற்களை உருவாக்கிக்கொண்டும் விளக்குகிறது. அச்சொற்களை வரையறை செய்து வைசேஷிகத்தின் கொள்கைகளை புரிந்துகொள்ளலாம்.

பதார்த்தம்

பதார்த்தம் என்ற சொல் பத+அர்த்தம் என்று பிரிந்து, சொல்லால் குறிப்பிடப்படும் இருப்பு என்று பொருள் அமைகிறது. இப்புவியில் பொருட்கள், அவற்றின் இயல்புகள், அவற்றின் செயல்கள் ஆகியவை நம்மால் அறியப்படுகின்றன. மொழியில் சொற்களால் அவை குறிப்பிடப்படுகின்றன. இவை இப்பிரபஞ்சத்தில் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட வகையில் பெருகியிருக்கின்றன. அவை அனைத்தையும் அறிவது இயல்வதல்ல. அவற்றை அறிவதற்கு ஏதேனும் வகையில் அவற்றைத் தொகுத்துக் கொண்டாக வேண்டும். ஒவ்வொரு தரிசனமும் அவற்றை ஒவ்வொரு வகையில் தொகுத்துக் கொள்கிறது. சாங்கிய தரிசனம் தன்னுடைய தொகுப்படையாளத்தை தத்துவம் (இருப்பியல்பு) என்கிறது. 24 தத்துவங்களை பட்டியலிடுகிறது. வைசேஷிகம் தன்னுடைய தொகுப்படையாளத்தை பதார்த்தம் என்கிறது.

ஆறு பதார்த்தங்கள்

சாங்கியத்தின் பதார்த்தங்கள் ஆறு

  1. திரவியம் (பொருள்)
  2. குணம் (இயல்பு)
  3. கர்மம் (செயல்)
  4. சாமான்யம் (பொது இயல்பு)
  5. விசேஷம் (தனி இயல்பு)
  6. சமவாயம் (இயைபு, இருப்பு)

பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே இந்த ஆறு பதார்த்தங்களால் அளக்கத் தக்கவை. பிற்காலத்தில் ஸ்ரீதரர் , உதயணர் போன்ற வைசேஷிகர்கள் அபாவம் (இன்மை) என்ற ஏழாவது பதார்த்தத்தையும் சேர்த்துக் கொண்டார்கள். ஒரு பொருள் இல்லாமலிருப்பதும் ஒரு பொருண்மைத்தன்மை தான் என வாதிட்டனர்.

திரவியம்

திரவியம் என்பது இங்கே இருக்கும் பொருட்கள். வைசேஷிகத்தைப் பொறுத்தவரை பொருட்கள் என்பவை புறவயமான இருப்பு கொண்டவை. நாம் அவற்றை அறிந்தாலும் இல்லையென்றாலும் அவை இருக்கும். நாமும் பொருட்களால் ஆனவர்களே. குணங்களும் செயல்களும் பொருள் என்னும் அடிப்படை மீதுதான் திகழ்கின்றன. இப்பிரபஞ்சத்திலுள்ள எந்த அகவய நிகழ்வும், புறவய நிகழ்வும் அடிப்படையில் பொருள் என்பதில் இருந்தே உருவாகிறது.

"இயல்புகளும் (குண) செயல்களும் (கர்மம்) உடையதும்; ஏதேனும் ஒரு நிகழ்வுக்கு அகவயமான அல்லது புறவயமான காரணமாக திகழ்வதும் எதுவோ அதுவே திரவியம்' (க்ரியாகுணவத் சமவாயி காரணமிதி திரவ்ய லக்ஷண: வைசேஷிகசூத்திரம் 1-1-5).

பொருள் இல்லாமல் இயல்புகளும் செயல்களும் வெறும் கருத்துருவங்களாக நிலைகொள்ள முடியாது. இயல்புகளையும் செயல்களையும் தவிர்த்து நம்மால் பொருளை அறியமுடியாது.

பொருள் இரண்டு வகை. பல்வேறு பொருட்கள் இணைந்து உருவான சம்யுக்த திரவியங்கள் (கலவைப் பொருட்கள்). நம் உடல் அத்தகையது. மண், கல், மரம் என இப்பிரபஞ்சத்தில் நாமறியும் பெரும்பாலும் எல்லா பொருட்களுமே அப்படித்தான். இக் கலவைப்பொருட்கள் எல்லாம் அடிப்படையான கேவல திரவியங்களால் (தூய பொருட்கள்) ஆனவை. உதாரணம் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன். இன்று எவற்றை தனிமம் என்கிறோமோ அவை. கலவைப்பொருட்கள் எல்லாமே அழிபவை. அந்தக் கலவை இல்லாமலாகும்போது அவை இல்லாமலாகும். மானுட உடல் பஞ்சபூதங்களால் ஆனது. அது பஞ்சபூதங்களாகி மறையும். ஆனால் அந்த கலவைப்பொருளை உருவாக்கிய தூயபொருட்கள் அழிவதில்லை. அவை தோற்றமும் அழிவும் அற்றவை. என்றுமிருப்பவை.

அடிப்படைப் பொருட்கள்

அழியாத தூய பொருட்கள் (கேவலத் திரவியங்கள்) ஒன்பது என வைசேஷிகம் வகுக்கிறது.

  1. பிருத்வி (மண்)
  2. ஜலம் (நீர்)
  3. அக்னி (தீ)
  4. வாயு (காற்று)
  5. ஆகாசம் (வானம்)
  6. காலம்
  7. திக் (திசை/ இடம்)
  8. ஆத்மா
  9. மனம்

இவற்றில் மண், நீர், தீ, காற்று ஆகிய நான்கும் நுண் அணுக்களாலானவை. நிலையற்ற கலவைப்பொருட்கள் (சம்யுக்த திரவியம்) இந்நான்கால் ஆனவை. அணுக்கள் அழிவற்றவை, முடிவற்றவை. பிற ஐந்தும் தங்கள் இயல்பின்படி அழிவற்றவை, முடிவற்றவை.

அடிப்படைப்பொருட்களின் குணங்கள்

ஐந்து முதன்மைப்பொருட்களிலும் அவற்றுக்கான முதன்மை இயல்பு (குணம்) அடங்கியுள்ளது. அவை முறையே நிலம் - மணம், நீர் - சுவை, தீ - உருவம், வாயு - தொடுகை, வானம் - ஓசை. இவை தங்களின் தனித்தன்மையை இவ்வியல்பு வழியாக உணரச்செய்கின்றன. முறையே மூக்கு, நாக்கு, கண், உடல், செவி என்னும் ஐந்து புலன்கள் வழியாக ஆத்மா இவ்வியல்புகளை அறிகிறது. வைசேஷிகர்களைப் பொறுத்தவரை ஒரு அடிப்படைப்பொருளை எந்த உறுப்பு உணர்கிறதோ அந்த உறுப்பு அந்தப் பொருளாலானது. மூக்கு நிலத்தாலும், நாக்கு நீராலும், கண் தீயாலும், உடல் காற்றலும், செவி வானத்தாலும் ஆனது. இந்த ஐந்து பருப்பொருட்களிலும் இயல்புகள் செயல்கள் (குணகர்மங்கள்) நிகழ்கின்றன.

பொருளின் நான்கு பரிமாணங்கள்

வைசேஷிக தரிசனத்தைப் பொறுத்தவரை காலம், திசை ஆகியவை சார்புநிலை கொண்டவை அல்ல. பொருட்களை நாம் அறியும்போது நம்மில் உருவாகும் உருவகங்கள் அல்ல. அவை ஐந்து பருப்பொருட்களைப் போலவே பொருண்மையானவை. பொருட்களுடன் இணைந்து இருப்பவை. பொருட்களின் பரிமாணங்கள் அவை. பொருட்களை அறியும் ஆன்மா (அறியும் தன்னிலை) மனம் (உணர்வுநிலை) ஆகியவையும் அகவயமானவை அல்ல. அவையும் திட்டவட்டமான இருப்புகளே. பொருட்களின் பொருண்மைத் தன்மையுடன் இணைந்தவையே.

வானம், காலம், திசை, ஆத்மா, மனம் ஆகிய ஐந்தும் நிரந்தரமானவை, அழிவற்றவை. ஆயினும் அவை பொருட்களுடன் இணைந்தும் பிரிவுபட்டும் இயங்கத்தக்கவை. வைசேஷிகர்களைப் பொறுத்தவரை ஆத்மா ஒன்றல்ல, பல. ஒவ்வொரு ஆத்மாவும் சுதந்திரமானது, தனித்தன்மை கொண்டது. பிரக்ஞை என்னும் இயல்பு ஆத்மாவுக்குரியது. ஞானம், இச்சை, யத்னம் (முயற்சி) ஆகியவை ஆத்மாவின் பிற இயல்புகள். ஆத்மா புறவுலகுடன் தொடர்பு கொள்வது மனம் வழியாக. ஆகவே பொருட்களின் இயல்பு உருவாக்கும் அறிதல், அதன் விளைவான உணர்வுகள் மனதால் அடையப்படுகின்றன.

வைசேஷிகர்களைப் பொறுத்தவரை பொருட்களின் இருப்பு நான்கு பரிமாணம் கொண்டது. பொருள் ஒரு பரிமாணம். காலம், திசை, ஆத்மா ஆகியவை பிற மூன்று பரிமாணங்கள். பொருள் இந்நான்கு பரிமாணங்கள்களால் ஆனதாகவே எப்போதுமுள்ளது.

குணம்

ஒன்பது திரவியங்கள் இணைந்து இணைந்து பருப்பொருட்பிரபஞ்சமாக ஆகியுள்ளன. திரவியங்களின் இயல்புகளை குணங்கள் என வகுக்கிறது வைசேஷிகம். மொத்தம் 17 குணங்கள் உள்ளன.

குணங்கள் 17
  1. ரூபம் (உருவம்) தீயுடன் தொடர்புடையது. கண்களால் அறியப்படுவது
  2. ரசம் (சுவை) நீருடன் தொடர்புடையது. நாவால் அறியப்படுவது
  3. கந்தம் (மணம்) நிலத்துடன் தொடர்புடையது. மூக்கால் அறியப்படுவது
  4. ஸ்பர்சம் (தொடுகை) காற்றுடன் தொடர்புடையது. உடலால் அறியப்படுவது.
  5. சங்கிய (எண்ணிக்கை)
  6. பரிமாணம் (இருத்தல்நிலைகள். பல இருப்புநிலைகள் கொண்ட ஒன்றாக இருத்தல்)
  7. பிரதக்த்வம் (தனித்தன்மை)
  8. சம்யோகம் (இணைவு)
  9. விபாகம் (பிரிவு)
  10. பரத்வம் (முன்பிருப்பு)
  11. அபரத்வம் (பின்பிருப்பு)
  12. புத்தி (அறியும்புலன்)
  13. சுகம் (நல்லுணர்வு, இன்பம்)
  14. துக்கம் (துயரம்).
  15. இச்சை (விருப்புறுதி, will)
  16. துவேஷம் (வெறுப்பு)
  17. பிரயத்னம் (முயற்சி)
கூடுதல் குணங்கள் 7

உரையாசிரியரான பிரசஸ்தபாதர் இந்தப் பட்டியலில்

  1. குருத்வம் (எடை, திணிவு)
  2. திரவத்வம் (நீர்மை)
  3. ஸ்னேகம் (இணையும்தன்மை)
  4. தர்மம் (தனக்கான இயக்கமுறை)
  5. அதர்மம் (தனக்கான இயக்கமுறை இன்மை)
  6. சப்தம் (ஒலி) வானின் இயல்பு. செவிகளால் அறியப்படுவது
  7. சம்ஸ்காரம் (தூய்மையாதல்)

என்னும் ஏழு கூடுதல் குணங்களைச் சேர்க்கிறார்.

குணங்களின் இணைவு

ஒரு பொருளில் ஒரு குணம் அதன் முதன்மையியல்பாக ஓங்கியிருக்கலாம். ஆனால் எல்லா பொருட்களிலும் பிற குணங்கள் இருக்க வாய்ப்புண்டு.

பிரசஸ்தபாதர் சொல்கிறார். 'மண்ணில் மணம், உருவம், தொடுகை ஆகியவை சுவையுடன் இணைந்தே உள்ளன. நீரில் உருவம், தொடுகை ஆகிய இரண்டும் உண்டு. தீயில் உருவமுண்டு கூடவே தொடுகையுமுண்டு'. (பதார்த்த தர்ம சங்கிரகம் 47-49)

குணங்கள் எல்லாமே பொருண்மையை தீர்மானிப்பவை. ஆனால் அவற்றில் புறவயமானவையும் அகவயமானவையும் உண்டு. உருவம், சுவை, தொடுகை, மணம், முன்பிருப்பு, பின்பிருப்பு, எடை, நீர்மை, இணையும் தன்மை போன்றவை புறவயமானவற்றின் குணங்கள். புத்தி, சுகம், துக்கம், இச்சை, வெறுப்பு , முயற்சி, தர்மம், அதர்மம், தூய்மை ஆகியவை அகவயமானவற்றின் குணங்கள். எண்ணிக்கை, பரிமாணம், தன்னிருப்பு, இணைவு, பிரிவு ஆகிய இயல்புகள் இரண்டுக்கும் உரியவை.

ஆத்மா, மனம்

வைசேஷிகம் சொல்லும் ஆத்மா, மனம் ஆகியவை தனித்த வரையறைக்குள் வருபவை. ஆத்மா என்பது உயிர்களுக்குள் உள்ள அறியும் தன்னிலைதான். வேதாந்திகளின் ஆன்மிகமான பொருள் அதற்கு இல்லை. அது ஒரு பதார்த்தம் மட்டுமே. மனம் என்பது ஆத்மாவை புலன்களுடன் இணைக்கும் ஆறாவது புலன். எண்ணிக்கை, பரிமாணம், தன்னியல்பு, இணைவு, பிரிவு, முன்பிருப்பு ஆகியவை மனதின் குணங்கள். புத்தி, சுகம், துக்கம், இச்சை, வெறுப்பு, முயற்சி, தர்மம், அதர்மம், செயல், எண்ணிக்கை, பரிமாணம், தன்னிருப்பு, இணைவு, பிரிவு ஆகியவை ஆத்மாவுக்குரிய குணங்கள். 'மூச்சு, இமைப்பு, உயிருடனிருத்தல், மனதை ஆளுதல், புலன்களை ஆளுதல், சுகதுக்கங்களை அறிதல், விருப்பு வெறுப்பு கொண்டிருத்தல், முயற்சி ஆகியவை ஆத்மாவின் குணங்கள்' என வைசேஷிக சூத்ரம் சொல்கிறது. ஆன்மா மனதின் வழியாகவே செயல்பட முடியும்.

ஆத்மாவை பிரம்மத்தின் வடிவம் என்றோ, பிரம்மத்தால் உருவாக்கப்படுவதென்றோ கணாதர் கருதவில்லை. ஆத்மா என்பது அறியும் தன்னிலை மட்டுமே. மற்ற பொருட்களைப் போலவே அது தோன்றலும் மடிதலும் இல்லாமல் இருந்துகொண்டிருக்கிறது.

கர்மம்

கணாதர் கர்மம் என்னும் சொல்லை பிற தத்துவ மரபுகளில் இருந்து வேறுபட்டு, தனக்குரிய கலைச்சொல்லாகப் பயன்படுத்துகிறார். க்ரு என்னும் வேர்கொண்ட அச்சொல் செயல் என்பதைக் குறிக்கிறது.

இந்திய தத்துவ சிந்தனையில் செயல்தொடர் என்னும் பொருளில் கையாளப்படுகிறது. காரணகாரியத் தொடர்பால் உருவாகும் தொடர்ச் செயல்பாடும், பாவபுண்ணியங்கள் பிறவியால் தொடர்வதன் விளைவான செயல்பாடும் கர்மம் எனப்படுகின்றன.

கணாதரைப் பொறுத்தவரை பொருளில் நிகழும் செயலே கர்மம். எல்லாவகையான செயல்களும் கர்மமே. "கர்மம் என்பது பொருள் சார்ந்தது, குணங்களுடன் இணைந்தோ இணையாமலோ இருப்பது, பொருட்களின் இணைவுக்கும் பிரிவுக்கும் காரணமாவது" என்று கணாதர் வைசேஷிகசூத்திரத்தில் வரையறை செய்கிறார்.

வைசேஷிகர்கள் ஐந்து வகை கர்மங்களை வரையறை செய்தனர். எழுதல், விழுதல், சுருங்குதல், விரிதல், முன்னகர்தல். இந்தச் செயல்கள் அவை நிகழும் பொருட்களின் பொருண்மையியல்புக்கு ஏற்ப அமைகின்றன. குணங்களைப் போல கர்மங்களுக்கும் அவை நிகழும் பொருட்களை விடுத்து இருப்பு இல்லை. பருப்பொருள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஆகவே கர்மமே பருப்பொருளின் தன்னியல்பான நிலை. கர்மத்தில் இல்லாத பொருள் என்பது உய்த்துணரத்தக்கது மட்டுமே.

சாமான்யம், விசேஷம்

பல பொருட்களில் காணப்படும் பொது இயல்பு வைசேஷிகத்தில் சாமான்யம் எனப்பட்டது. ஒரு பொருளிலுள்ள தனித்தன்மை விசேஷம் எனப்பட்டது.

விசேஷமே சாமான்யத்தை உருவாக்குகிறது. ஒரு பொருளில் நாம் காணும் இயல்பை அனைத்திலும் காண்கையில் அதை சாமான்யம் என உணர்கிறோம். ஒரு பொருளிலுள்ள விசேஷத்தன்மை பிறபொருட்களுடன் ஒப்பிட்டு சாமான்யத்திற்கு மாறாக அமைகையிலேயே அதை விசேஷம் என்கிறோம்.

சம்யோகம்

பொருட்களின் இணைவு சம்யோகம் எனப்பட்டது. நீர் மண்ணுடன் கலந்து சேறாவது ஓர் உதாரணம். அப்படி பலநூறு பொருட்கள் இணைந்தே மானுட உடல் உருவாகியுள்ளது. பொருட்களின் தனி இயல்புகள், விசேஷங்கள், அவை இணைகையில் மறையக்கூடும், புதியன தோன்றக்கூடும். நீரின் இயல்பும் மண்ணின் இயல்பும் சேற்றில் இல்லை, சேற்றின் இயல்பு நீருக்கும் மண்ணுக்கும் இல்லை. நூல் மெல்லியது, பலமற்றது, ஆனால் துணி பலமானது, திரையாக மாறத்தக்கது. துணியிலுள்ள ஆடை என்னும் இயல்பு நூலுக்கு இல்லை.

சமவாயம்

இணைவு மூலம் அமையும் இருப்பு என் இச்சொல்லை மொழியாக்கம் செய்யலாம். இயைபு என தமிழ்ச்சொல். இங்குள்ள பொருட்கள் எல்லாம் அணுக்களின் இணைவால் உருவானவை. அணுக்கள் இணைந்து உருவாகும் பொருட்கள் தங்களுக்குள் இணைந்து இங்குள்ள பலநூறு பொருட்களாக ஆகியுள்ளன. ஐம்பெரும்பூதங்களின் இணைவு வழியாக உருவாகும் இருத்தல் கொண்டதே எல்லா பொருளும். அந்த இணைவை உருவாக்கி நிலைநிறுத்தும் தன்மையே சமவாயம் எனப்படுகிறது.

ஐந்து சமவாயங்கள்

இப்பிரபஞ்சத்திலுள்ள முதன்மையான சமவாயங்கள் ஐந்து

  1. திரவியம்- குணம் (பொருள், இயல்பு)
  2. திரவியம் - கர்மம் (பொருள், செயல்)
  3. விசேஷமும்- சாமானியமும் (தனித்தன்மையும் பொதுமையும்)
  4. பிரதானமும் - விசேஷமும் (முழுமுற்றான பொருளும் தனிப்பொருளும்)
  5. உபதான காரணமும் காரியமும் (அடிப்படையாக உள்ள ஒட்டுமொத்தப் பொருளும் அதிலிருந்து உருத்திரிந்து வரும் தனிப்பொருளும்)
சமவாயம் - சம்யோகம்

சமவாயம் - சம்யோகம் இரண்டுக்கும் இடையேயான வேறுபாடென்ன? சம்யோகம் என்பது பொருட்களிடையே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அது நிகழாமலுமிருக்கலாம். அது மாறிக்கொண்டிருப்பது. அந்த மாறிக்கொண்டே இருக்கும் நிகழ்வினுள்ளே மாறாமலிருக்கும் தன்மைதான் சமவாயம். ஆனால் வைசேஷிகத்தைப் பொறுத்தவரை அது ஒரு தெய்வீகமான நெறி அல்ல, அதற்கு பருப்பொருளுக்கு அப்பாலிருந்து எந்த ஆணையுமில்லை. அந்த இயல்பு பருப்பொருளில், அணுவில் அதன் அடிப்படை இயல்பாக உள்ளுறைந்துள்ளது. அந்த நெறி அதன் இருப்பின் ஒரு பகுதி. அதன் இருப்பைப் போலவே தொடக்கமும் முடிவும் அற்றது, காரணம் அற்றது.

சமவாயமும் பொருண்மையும்

சில அறிஞர்கள் சம்யோகம் என்பது பருப்பொருள் சார்ந்தது, சமவாயம் என்பது அகவயமானது, கருத்துசார்ந்தது என விளக்குகிறார்கள் என்றும் அது பிழை என்றும் சொல்லும் ஹிரியண்ணா, சமவாயமும் ஒரு பருப்பொருள் நிகழ்வென்றே வைசேஷிகம் சொல்கிறது என விளக்குகிறார். (Outlines of Indian Philosophy).

ஹிரியண்ணா இந்த உவமையைச் சொல்கிறார்: செந்நிறம், ரோஜா இரண்டும் கொண்டுள்ள பிரிக்கமுடியாத உறவுதான் சமவாயம். ரோஜா, செந்நிறம் இரண்டும் தனித்தனியாக உருவாகி ஒன்றையொன்று கண்டடைந்து இணையவில்லை. அவை இணைந்தே என்றுமுள்ளன, அவற்றின் இணைவை பிரிக்கமுடியாது. ஆனால் அது பருப்பொருள் சார்ந்த ஒரு நிகழ்வுதான்.

அபாவம்

சூனியமும் அபாவமும்

வைசேஷிகத்தில் ஸ்ரீதரருக்குப்பின் உருவாகி நிலைகொண்டது இந்தக் கொள்கை. பிரசஸ்தபாதர் இதற்கான அடிப்படைகளை அமைக்கிறார். ஒரு பொருள் இருப்பது என்பது ஒரு பொருண்மைத்தன்மை என்றால் அது இல்லாமலிருப்பதும் ஒரு பொருண்மைத்தன்மைதான். சூனியம் என்னும் கருத்துடன் இதை இணைக்கலாகாது, அது வேறு கொள்கை. சூனியம் என்பது முழுக்கமுழுக்க மனிதனால் உருவகிக்கப்படும் ஒரு கருத்து, ஆகவே அது ஒரு பொய் அல்லது அறிவுமயக்கம் என வைசேஷிகம் ஒதுக்கிவிடுகிறது.

இருப்பின்மை எனும் பொருண்மை

சூனியம் என்பது இன்மை. அபாவம் என்பது இருப்பின்மை. உண்மையில் இருந்த அல்லது இருக்கச் சாத்தியமான ஒரு பொருள் இல்லாமலிருப்பதே அபாவம். அபாவம் பொருளின் இருப்பு போலவே ஒரு பொருண்மைவிளைவை உருவாக்குவதனால் அது ஒரு பொருண்மை இருப்புதான் என வைசேஷிகர் வாதிடுகிறார்கள். பொருளின் இருப்பு என்பது அறிவால் உணரப்படுவது, பொருளின் இன்மையும் அவ்வாறே அறிவால் உணரப்படுகிறது, ஆகவே இருப்பு போலவே இன்மையும் பருண்மையானதுதான்.

அணுக்கொள்கை

வைசேஷிகத்தின் அடிப்படைகளில் ஒன்று அணுக்கொள்கை. அணுக்கொள்கை தொன்மையான தத்துவ மரபில் இருந்து வந்துள்ளது. கணாதருக்குச் சமகாலத்தவர் என்று சொல்லத்தக்க கிரேக்க தத்துவஞானி டெமோக்ரிட்டஸ் அணுக்கொள்கையை முன்வைத்தார். ஆனால் அணுக்கொள்கை கிரேக்க சிந்தனை மரபில் தனித்து நிலைகொள்கிறது. இந்திய வைசேஷிக- நியாய மரபில் பலநூறாண்டுகளாக தொடர்கிறது. ஆகவே அதன் தோற்றம் இந்திய சிந்தனையில் தான் என வில்லியம் ஃப்ளெமிங் தன் தத்துவ அகராதியில் சொல்கிறர் ( William Feleming: Dictionary of Philosophy)

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா பொருட்களும் பிரிக்கத்தக்கவை, பிரித்துக்கொண்டே சென்றால் மேற்கொண்டு பிரிக்கமுடியாத ஓர் அடிப்படை அலகு வரும், அதுவே அணு. அணுக்களால் ஆனவையே ஒவ்வொரு பொருளும். இதுவே வைசேஷிகத்தின் அணுக்கொள்கை.

ஒரு பொருளின் குணங்கள் (இயல்புகள்) எல்லாமே அந்தப் பொருளின் அணுவில் உள்ளன. அதன் கர்மங்கள் (செயல்பாடுகள்) எல்லாமே அந்த அணுவிலுள்ள அடிப்படை இயல்பைச் சார்ந்தே நிகழ்கின்றன. சமவாயம் (இணைவு) நிகழ்வது அணுக்களின் இயல்பு அத்தகையது என்பதனால் மட்டுமே.

உபதான காரணம் - காரியம்

இந்தப் பிரபஞ்சம் இரண்டுவகை பொருட்களால் ஆனது என வைசேஷிகம் சொல்கிறது. முதல்நிலைப் பொருட்கள், அடிப்படைப்பொருட்கள் உபதானகாரணம் எனப்படுகின்றன. இவைதான் காரியம் எனப்படும் வழிநிலைப் பொருட்களை உருவாக்குகின்றன. அணுக்கள் உபதான காரணமாக (பிறப்பிக்கும் முதல்நிலை) அமையும் பொருட்கள். காரியம் (விளைவு) என்பது அணுக்களால் உருவாகும் பொருட்கள். அணு என்பது மிகச் சிறியது, பார்வைக்கு அப்பாற்பட்டது. அதன் இருப்பு அதன் இணைவால் உருவாகும் பிரபஞ்சத்தில் இருந்து நம்மால் ஊகிக்கப்படுவதாகவே உள்ளது. காரியத்தில் இருந்து காரணத்தை ஊகிக்கிறோம்.

இதில் இரண்டு பார்வைகள் உள்ளன. ஸ்ரீதரருக்குப் பின்வந்த வைசேஷிகர்கள் காரியம் உருவானதும் காரணம் இல்லாமலாகிவிடுகிறது என்கின்றனர். அதாவது அணுக்கள் பொருட்களாக ஆனதும் அணுநிலை இல்லாமலாகிறது. முந்தைய தரப்பினர் அணுக்கள் பொருட்களாக ஆனபின்னரும் அணுநிலை தொடர்கிறது என்கின்றனர்.

இரண்டணு, மூன்றணு

வைசேஷிகத்தின் அணுக்கொள்கையில் அணுவிணைவின் கணக்கு முக்கியமானது. இரண்டு அணுக்கள் இணைந்து த்வையாணுக (இரண்டணு) என்னும் அமைப்பு உருவாகிறது. அவற்றுடன் இன்னொன்று இணைந்து த்ரையாணுக (மூன்றணு) என்னும் அமைப்பு உருவாகிறது. இவையே பிரபஞ்ச உருவாக்கத்தின் கணிதக் கட்டுமானம். இந்த கணிப்புகள் மீது வேதாந்தம் கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது.

வெளித்தூண்டுதலின்மை

இவ்வாறு அணுக்கள் இணைந்தும் பிரிந்தும் பொருட்களையும் , பொருட்களாலான இப்பிரபஞ்சத்தையும் கட்டமைப்பதற்கு 'வெளியே' உள்ள ஒரு தூண்டுதல்காரணம் தேவையில்லை. அதாவது கடவுளோ, பிரம்மமோ தேவையில்லை. ஒரு கருத்துக்காரணம்கூட தேவையில்லை. பொருட்களின் பொருண்மையியல்பே போதுமான காரணமாகும்.

இறைக்கொள்கை

பிரசஸ்தபாதருக்குப் பின் வைசேஷிகம் ஈஸ்வரன்/ பிரம்மம் என்னும் கருத்தை ஏற்றுகொண்டு அணுக்களின் செயல்பாட்டுக்கான கருத்துநிலைக் காரணமாக அதை குறிப்பிட ஆரம்பித்தது. ஸ்ரீதரர் ஈஸ்வரனின் இருப்பை நிறுவ முயல்கிறார். பிற்கால வைசேஷிகம் பிரம்மம், ஈஸ்வரன் என்னும் கருத்தை ஏற்றுக்கொண்டமைக்கு அது சொல்லும் காரணங்கள்:

  • அணுக்கள், பதார்த்தங்கள் ஆகியவை தோற்றமும் முடிவும் அற்றவை என்னும் பழைய வைசேஷிகத்தின் கருத்தை ஏற்றுக்கொண்டால் அவை எந்த நோக்கமும் அற்றவை என ஆகும். அகவே இப்பிரபஞ்சத்தின் எந்நிகழ்வுக்கும் நோக்கமில்லை என ஆகும். வாழ்க்கையே நோக்கம் அற்றது என அது மாறும். அது அறத்துக்கு எதிரானது. தத்துவம் அறம் என்பதை முன்வைத்து நல்வாழ்க்கைக்கும் மானுட விடுதலைக்கும் வழிவகுக்க வேண்டும். ஆகவே ஒரு படைப்புசக்தி, படைப்பாளி உண்டு என்னும் முடிவை நோக்கி பிற்கால வைசேஷிகர் சென்றனர்
  • அணுக்களின் சம்யோகம், சமவாயம் ஆகியவை இயல்பான நெறிகள் என்று பழைய வைசேஷிகம் சொல்கிறது. அந்நெறிகளின் நோக்கமென்ன, நெறிகள் பிறழாமல் காக்கும் விசை என்ன என்னும் வினாவை எதிர்கொள்ள பிறகுவந்த வைசேஷிகர் இறையுருவகம் நோக்கிச் சென்றார்கள். அணுக்களின் இயல்புப்படி அவை இயங்குகின்றன என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டால் எல்லா செயல்களும் அவற்றின் இயல்புப்படி நிகழ்கின்றன என்றும், அவை இயல்பானவை என்றும் கொள்ளவேண்டியிருக்கும். அது அறவியலுக்கு மாறானது.
  • ஆத்மா அல்லது அறியும்தன்னிலை அணுக்களின் கூட்டால் எப்படி உருவாக முடியும் என்னும் வினாவுக்கு பிற பதார்த்தங்கள்போலவே ஆத்மாவும் ஒரு பதார்த்தம் மட்டுமே என்பதுதான் வைசேஷிகம் முன்வைக்கும் பதிலாகும். அந்தப்பதில் பொருண்மையான ஒன்றில் இருந்து நுண்மையான ஒன்று உருவாகிறது என்ற அளவில் பொருத்தமானதல்ல என்று கண்ட பிற்கால வைசேஷிகர் ஆத்மாவை பிரம்மத்தின் படைப்பு என ஏற்றுக்கொண்டார்கள். இது வைசேஷிகத்தின் மேல் வேதாந்தம் கொண்ட வெற்றி மற்றும் ஊடுருவலின் விளைவாகும்.

மதிப்பீடு

"நாம் இதுவரை ஆராய்ந்த தத்துவ அமைப்புகளில், குறிப்பாக வேதாந்தம் சாங்கியம் யோகம் ஆகியவற்றில் ஆழமானதோர் ஆன்மிக அம்சம், கவித்துவ அம்சம் உட்சரடாக உள்ளது. இப்போது நாம் வந்தடைந்துள்ள இரு தத்துவ அமைப்புகளான வைசேஷிகம், நியாயம் ஆகியவை மிக வரண்டவை, கற்பனையம்சம் அற்றவை. தத்துவக்கருத்துக்களைப் பற்றிய அறிஞர்களுக்குரிய உசாவல்களும், நம்மைச் சூழ்ந்துள்ள உலகம் மற்றும் நம்முள் உள்ள அறிநிலை ஆகியவற்றைப் பற்றிய கறாரான நடைமுறைத்தன்மை கொண்ட ஆய்வுகளும் கொண்டவை. அதாவது பட்டறிதல், உருவகித்தல், தர்க்கபூர்வமாக அறிதல் ஆகியவற்றையும் அவற்றுக்குப் பாத்திரமாகும் பொருட்களையும் பற்றிய ஆய்வுகள் அவை" என்று மாக்ஸ் முல்லர் அவருடைய புகழ்பெற்ற இந்திய சிந்தனைமுறையில் ஆறு தரிசனங்கள் என்னும் நூலில் நியாயமும் வைசேஷிகமும் என்னும் பகுதியில் குறிப்பிடுகிறார்.

வைசேஷிகம் ஒரு தத்துவ தரிசனம் என்பதைக் காட்டிலும் தொன்மையான இயற்பியல் கொள்கைகளின் தொகுப்பு என்றே கொள்ளத்தக்கது. பிற தரிசனங்களிலுள்ள ஆன்மிகம், கவித்துவ உருவகத்தன்மை ஆகியவை வைசேஷிகத்தில் இல்லை. வைசேஷிகம் இந்தப்பிரபஞ்சம் நுண்ணணுக்களால் ஆனது என்றும், அவை இப்படி பிரபஞ்சமாக ஆனமைக்கான காரணம் அந்த அணுக்களின் தன்னியல்பிலேயே (விசேஷம்) உள்ளது என்றும் சொல்கிறது. ஆகவே இது வைசேஷிகம் என அழைக்கப்பட்டது.

ஆனால் பிற்காலத்தில் உரையாசிரியர்களால் வைசேஷிகம் மெல்ல மெல்ல இறைக்கொள்கையை ஏற்கும்படி உருமாற்றம் செய்யப்ப்பட்டது. பிரசஸ்தபாதரின் உரை வழியாகவே இந்தப் போக்கு தொடங்கியது. பொயு 6-ம் நூற்றாண்டுக்குப்பின் வைசேஷிகசூத்திரங்களே வழக்கொழிந்துபோய் பிரசஸ்தபாதரின் பதார்த்த தர்ம சம்கிரகம் முதல்நூலாக நிலைகொண்டது. பிரசஸ்தபாதர் அணுக்களின் இணைவும்பிரிவும் பிரபஞ்ச உருவாக்கத்தை நிகழ்த்துவதற்கு ஒரு வெளிக்காரணம், அதாவது தூண்டுதல் (நிமித்தகாரணம் ) தேவை என்று வரையறை செய்தார்.

வைசேஷிக தரிசனம் சமண மதத்திற்கு மிக ஏற்புடைய தொல்தரிசனமாகத் திகழ்ந்தது. பொருட்களின் அடிப்படையான அணுக்களும், பொருட்களும் அவற்றின் இயல்புகளும் அடங்கிய பதார்த்தங்களும் தொடக்கமும் அழிவும் அற்றவை என்னும் பார்வை சமணத்தின் 'மூவா முதலா உலகம்' என்னும் கொள்கைக்கு நெருக்கமானது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Mar-2025, 20:46:36 IST