under review

உதயணர்

From Tamil Wiki
மிதிலாவில் காரியான் கிராமத்திலுள்ள உதயணாச்சாரியர் ஆலயத்தின் சிலை.

உதயணர் (उदयन) (பொயு 975 - 1050): இந்து தத்துவ சிந்தனையாளர். தர்க்கவியலாளர். வைசேஷிகம், நியாயம் ஆகிய தரிசனங்களை முன்னெடுத்தவர். நியாய மரபின் தர்க்க முறைப்படி பிரம்மம் அல்லது ஈஸ்வரனின் இருப்பை நிறுவும் நூல்களை எழுதியவர். நியாயவியலில் நவநியாயம் (புதிய நியாயம்) என்னும் போக்கின் தொடக்கப்புள்ளி.

வாழ்க்கைக் குறிப்பு

உதயணர் பீகாரில் மிதிலை நகரில் பொயு 975-ல் பிறந்தார் என ஏற்கப்படுகிறது. அவருடைய காலம் என்ன என்பதை அவருடைய லக்ஷணாவளி என்னும் நூல் சக வருடம் 906 என குறிப்பிடுகிறது. தன் வாழ்க்கைக் காலகட்டத்தில் நியாயவியலின் முதன்மை ஆசிரியராகவும், பௌத்த மரபின் யோகாசார தரப்புகளுடனும், விக்ஞானவாதத் தரப்புகளுடனும் தொடர்ச்சியாக விவாதத்தில் ஈடுபடுபவராகவும் உதயணர் இருந்தார்.

தத்துவம்

உதயணர் முதன்மையாக நியாயவியல் அறிஞர். வைசேஷிகத்தை நியாயவியலுடன் இணைத்து ஒற்றைத் தரிசனமாக ஆக்கியவர். பிரசஸ்தபாதர் உருவாக்கிய வைசேஷிக - நியாய உரைவிளக்க மரபை முன்னெடுத்தார். வைசேஷிகத்தையும் நியாயவியலையும் இணைக்கும்பொருட்டு வைசேஷிகத்தின் பதார்த்தங்கள் என்னும் கொள்கையையும், நியாயவியலின் பிரமாணங்கள் என்னும் கொள்கையையும் இணைத்தார்.

உதயணரின் பங்களிப்புகள் என சுருக்கமாக இவற்றைச் சொல்லலாம்

  • உதயணர் லக்ஷணம் என்னும் வரையறை முறையை முன்னெடுத்தார். வைசேஷிகமும் நியாயமும் முன்வைத்த கருத்துக்களை கச்சிதமான சொற்களால் வரையறை செய்தார்
  • உதயணர் வைசேஷிகத்தின் பதார்த்தங்கள், நியாயவியலின் பிரமாணங்கள் என்னும் இரு உருவகங்களையும் தர்க்கபூர்வமாக இணைத்தார். பதார்த்தங்கள் அறிநிலைகள் என்றும் பிரமாணங்கள் அறிமுறைகள் என்றும் வகுத்தார்.
  • உதயணர் அபாவம் (இருப்பின்மை) என்பதும் ஒரு பொருண்மையே என்னும் கொள்கையை வைசேஷிக- நியாயமரபில் உருவாக்கினார். அது ஒரு பதார்த்தம் என நிறுவினார்.
  • உதயணர் வைசேஷிக - நியாயமரபில் பிரம்மம்- ஈஸ்வரன் என்னும் கருத்தை அனைத்துக்கும் மூலகாரணமாக நிறுவினார்.

தத்துவ இடம்

உதயணர் வைசேஷிக நியாயவியலை இறைக்கொள்கைக்கு அணுக்கமாக ஆக்கியவர். வேதாந்தத்திற்கும் வைசேஷிகத்துக்குமான இணைப்புப் புள்ளியாக அவர் கருதப்படுகிறார். பொயு 14ம் நூற்றாண்டில் சர்வதர்சன சம்கிரகம் என்னும் நூலை எழுதிய மாதவாச்சாரியார், உதயணர் முன்வைத்த நியாயவியலையே எடுத்துக் கொள்கிறார். நியாய மரபில் புதிய காலகட்டமான நவநியாயம் என்னும் மரபு காங்கேசரால் பொயு 14 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. அவர் தன்னுடைய முன்னோடி ஆசிரியராகவும், நவநியாயத்தின் தந்தையாகவும் உதயணரைக் குறிப்பிடுகிறார். நவநியாயத்தின் முதன்மைநூலாக நியாயகுசுமாஞ்சலி கருதப்படுகிறது.

நூல்கள்

ஏழு நூல்கள் உதயணருடையவையாக ஏற்கப்படுகின்றன

  • லக்ஷணமாலா: நியாயவியலின் பதினாறு கருத்து நிலைகளுக்கும், வைசேஷிகத்தின் ஆறு கருத்துநிலைகளுக்கும் வரையறை அளிக்கும் நூல்.
  • லக்ஷணாவளி: வைசேஷிகத்தின் கருத்துநிலைகளைப் பேசும் நூல்.
  • ஆத்மதத்வ விவேகம்: ஆத்மா என்னும் அழியாத இருப்பை மறுப்பவர்களுக்கு எதிரான வாதங்கள் நான்கு அத்தியாயங்களிலாக அளிக்கப்பட்டுள்ளன.
  • நியாயகுசுமாஞ்சலி: முதன்மையாக பிரம்மம் - ஈஸ்வரனின் இருப்பை நியாயவியல் நோக்கில் நிறுவும் நூல்.
  • நியாய பரிசிஷ்டா: நியாயசூத்திரத்தின் ஐந்தாவது அத்தியாத்திலுள்ள ஜதி, நிக்ரகஸ்தானம் ஆகியவற்றை விளக்கும் நூல்.
  • நியாய வார்த்திக தாத்பரிய பரிசுத்தி: வாசஸ்பதி மிஸ்ரரின் நியாயவார்த்திக தாத்பரிய டீகா நூலுக்கான விரிவான விளக்கவுரை.
  • கிரணாவளி: பிரசஸ்தபாதரின் பதார்த்த தர்ம சம்கிரகம் நூலுக்கான உரை.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Nov-2024, 19:15:32 IST