வாசஸ்பதி மிஸ்ரர்

From Tamil Wiki

வாசஸ்பதி மிஸ்ரர் ( பொயு8/9 ஆம் நூற்றாண்டு) வாஸஸ்பதி மிஸ்ரர். இந்திய தத்துவ சிந்தனையாளர். அத்வைத வேதாந்த மரபைச் சேர்ந்தவர். மண்டனமிஸ்ரரின் மாணவர். அத்வைத வேதாந்தத்தில் பாமதி மரபை உருவாக்கியவர். மொழியியலாளர், மீமாம்ச மரபைச் சேர்ந்த இலக்கணநூல்களையும் எழுதியுள்ளார்.

காலம்

வாசஸ்பதி மிஸ்ரர் சங்கரரின் சமகாலத்தவர். சங்கரருடன் விவாதித்து பின் அவருடைய மாணவராகி, வேதாந்த தத்துவஞானியாக ஆன மண்டனமிஸ்ரரின் நேரடி மாணவர். சங்கரரை விட ஒரு தலைமுறை இளையவராக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது

வாசஸ்பதி மிஸ்ரர் அவரே  898 என்னும் தேதியை தன்னுடைய நியாயசூசீநிபந்த என்னும் நூலில் அளிக்கிறார். அது சக ஆண்டா அல்லது விக்ரம ஆண்டா என்ற விவாதம் அறிஞர் நடுவே நீடிக்கிறது. விக்ரம ஆண்டு என்றால் அந்நூல் பொயு 841ல் எழுதப்பட்டது.

வாசஸ்பதி மிஸ்ரர் அவருடைய நூல்களில் பாஸ்கரர், பூஷணர், தர்மோத்தரர் போன்றவர்களை மேற்கோள் காட்டுகிறார். பொயு 984ல் வாழ்ந்த உதயணர் வாசஸ்பதி மிஸ்ரரின் நியாயவார்த்திக தாத்பரிய டீகா நூலுக்கு நியாயவார்த்திக தாத்பரிய டீகா பரிசுத்தி என்ற பேரில் உரையெழுதியிருக்கிறார்.

வாசஸ்பதி மிஸ்ரரின் பாமதி நூலில் உள்ள நூல்களின் மேற்கோள்களில் இருந்து அவர் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு பிந்தையவர் என்றும் அவர் உதயணருக்கு முன்னால் வாழ்ந்தவர் என்னும் செய்தியால் அவர் பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தையவர் என்றும் ஊகிக்கப்படுகிறது. ஆகவே அவர் வாழ்ந்த காலம் பொயும் 841- 900 ஆக இருக்கலாம்.

பின்னாளில் பொயு 1350 வங்காளத்தில் ஒரு வாசஸ்பதி மிஸ்ரர் வாழ்ந்துள்ளார். அவர் ஸ்ரீஹர்ஷரின் கண்டனகண்டகாத்யாய என்னும் மறுப்பு நூலுக்கு கண்டனோத்தாரா என்னும் மறுப்பை எழுதியுள்ளார், அவர் பாமதி மரபுடன் தொடர்புடையவரல்ல.

தனிவாழ்க்கை

வாசஸ்பதி மிஸ்ரர் இன்றைய பிகாரில், மதுபனி மாவட்டத்தில் பிறந்தவர். அவர் பிறந்த ஊர் பற்றி தொன்மங்கள் உள்ளன, எவையும் உறுதிசெய்யப்படவில்லை. வாசஸ்பதி மிஸ்ரர் மைதிலி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். மரபாக பூர்வமீமாம்சம் கற்றுக்கொடுக்கும் குடும்பத்தில் பிறந்தவர்.

வாசஸ்பதி மிஸ்ரரின் நியாயரத்னபிரகாச நூலில் அந்நூல் பாஞ்சாலபூமியின் மன்னர் பிரதாபருத்ரனின் அரசி பத்மாவதியின் கோரிக்கையின்படி எழுதியதாக குறிப்பு உள்ளது. அவர் இளைமையில் சில ஆண்டுகளை அங்கே கழித்திருக்கலாம். ஆனால் வாழ்க்கையின் பெரும்பகுதியை அவர் மிதிலையிலேயே செலவிட்டார்

வாசஸ்பதி மிஸ்ரர் எழுதிய பாமதி நூலிலேயே அவர் நிருகன் என்னும் அரசனின் ஆதரவில் இருந்தார் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

வாசஸ்பதிமிஸ்ரரின் மனைவி பெயர் பாமதி என்றும் அவர் தன் மனைவியின் பெயரையே தன் வேதாந்த உரைநூலுக்கு வைத்தார் என்றும் தொன்மக்கதை உள்ளது.

கல்வி

வாசஸ்பதி மிஸ்ரரின் தொடக்கக் கல்வி மீமாம்சையைச் சார்ந்தது. பட்டமீமாம்சை அறிஞரான மண்டனமிஸ்ரர் அவருடைய நேரடி ஆசிரியர். மண்டனமிஸ்ரர் சங்கரரிடன் வாதத்தில் தோல்வியடைந்து அத்வைதத்தை ஏற்றுக்கொண்டார். வாசஸ்பதிமிஸ்ரரும் அம்மரபில் அத்வைத வேதாந்தத்தைச் சார்ந்தவராயினும் பட்டமீமாம்சை, சாங்கிய தர்சனம் நியாயசாஸ்திரம் இரண்டிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவராக இருந்தார்.

வாசஸ்பதி மிஸ்ரர் சாங்கியம், நியாயம், பூர்வமீமாம்சம் , அத்வைதம் உட்பட எல்லா தத்துவப் பிரிவுகளிலும் ஏராளமாக எழுதியவர். ஆகவே அவரை சர்வதந்த்ர ஸ்வதந்த்ர என்று பின்னாளைய உரையாசிரியர்கள் அழைத்தனர்

பாமதி மரபு

வாசஸ்பதி மிஸ்ரர் சங்கரர் எழுதிய பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு எழுதிய விரிவான விளக்கவுரை பாமதி எனப்பட்டது. இதிலிருந்து பாமதி மரபு எனப்படும் வேதாந்த சிந்தனைப்பள்ளி உருவாகியது.

தத்துவ எழுத்துக்கள்

வாசஸ்பதி மிஸ்ரர் இந்து தத்துவ அறிஞர்களில் மிக அதிகமாக எழுதியவர் என்றும், தன் காலகட்டத்தில் மிக விரிவாக இந்தியாவெங்கும் அறியப்பட்டவர் என்றும் கூறப்படுகிறார். அவருடைய நூல்களின் பழைய ஏட்டுப்பிரதிகள் தெற்கே தமிழகம், கேரளம் முதல் வடக்கே காஷ்மீர் வரை பரவலாகக் கண்டடையப்பட்டுள்ளன. தன் காலகட்டத்திலும் பிறகும் இந்து தத்துவசிந்தனையில் மிகப்பெரிய செல்வாக்கை அவர் செலுத்தினார். இந்தியாவின் மரபான தத்துவக்கல்வி நிலையங்களில் அவருடைய நூல்கள் இலக்கணநூல்களாகவும், அகராதிகளாகவும், பாடநூல்களாகவும் பயிலப்பட்டுவந்தன

வாசஸ்பதி மிஸ்ரர் தன் காலகட்டத்திய இந்து தத்துவமரபைச் சேர்ந்த ஏறத்தாழ எல்லா பிரிவுகளைச் சார்ந்த நூல்களுக்கும் , பௌத்த நூல்களுக்கும் உரைகள் எழுதியிருக்கிறார்

நியாயம்

நியாயம் இந்திய சிந்தனைமரபில் பொருள்கொள்ளுதல், விவாதித்தல் ஆகிய இரண்டு தளங்களில் அடிப்படைக் கொள்கைகளை வகுத்தளித்த சிந்தனைத்துறை. பண்டைய வேதாந்திகளும், சமணர்களும் அதில் பெரும்பங்களிப்பை ஆற்றினர். பின்னர் பௌத்தர்கள் நியாயவியலை விரிவாக வளர்த்தெடுத்தனர், பௌத்த தத்துவக் கல்வியின் ஒரு பகுதியாக நியாயவியல் இருந்தது. அசங்கர், வசுபந்து, திக்நாகர், நாகார்ஜுனர் ,தர்மகீர்த்தி போன்ற முதன்மையான பௌத்த அறிஞர்கள் நியாயவியலுக்கு உரைகள் எழுதினார்கள்.

வாசஸ்பதி மிஸ்ரர் பௌத்த நியாயவியலை ஆழ்ந்து கற்றறிந்து, பௌத்தநூல்களுக்கும் விளக்கம் எழுதியவர். மீமாம்சைக் கொள்கையை பயிற்றுவித்த ஆசிரியர்குடியில் பிறந்து மண்டனமிஸ்ரரின் மாணவராக கற்றவர். அவ்விரு அடிப்படையில் நியாயவியலுக்கு விரிவான உரைகளை எழுதினார்.

தர்மகீர்த்தியின் பௌத்த நியாயவியல் உரை வாசஸ்பதி மிஸ்ரரின் காலகட்டத்தில் புகழுடனிருந்தது. வாத்ஸ்யாயனரின் நியாயசூத்திரம் நூலும் அதற்கு உத்யோதகரர் அளித்த நியாயவார்த்திக என்னும் விளக்கவுரையும் கூறும் நியாயவியல் அடிப்படைகள் பௌத்தர்களால் திரிக்கப்பட்டுவிட்டதாக வாசஸ்பதிமிஸ்ரர் கருதினார்.  நியாயசூத்திரத்தின் உள்ளடக்கத்தை சொல்லடங்கலுடன் நியாயசூசிநிபந்தா (நியாயவியல் குறிப்புத் தொகை) என்னும் நூலாக எழுதினார். நியாயவார்த்திகத்துக்கான விளக்கத்தை நியாயவார்த்திக தாத்பரிய டீகா (நியாயவார்த்திகத்தின் உள்ளடக்க விளக்கம்) என்னும் நூலாக எழுதினார்.

பௌத்தர்களால் பின்னடைவு கொண்டிருந்த உத்யோதகரின் நியாயவியல் மரபு வாசஸ்பதி மிஸ்ரரால் மீட்கப்பட்டது. தன் நூலில் வாசஸ்பதி மிஸ்ரர் மாத்யமிகர், யோகாசாரர், சௌத்ராந்திகர், வைபாஷிகர் என்னும் நான்கு பௌத்தப்பிரிவுகளைக் குறிப்பிடுகிறார் . திக்நாகர், தர்மகீர்த்தி ஆகியோரை தொடர்ச்சியாக மறுக்கிறார். தர்மகீர்த்தியின் நியாயவியல் விளக்கத்தை மறுக்கும் வாசஸ்பதி மிஸ்ரர் தர்மகீர்த்தி முன்வைத்தவற்றை விட விரிவான விவாதமுறைகள் முன்னரே இருந்தன என்கிறார்.

தர்மகீர்த்தி ஒரு விவாதத்தில் தோல்விநிகழும் புள்ளி (நிக்ரஹஸ்தானம்) என முதன்மையாக இரண்டு இடங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று, பொருத்தமில்லாத ஒரு காரணம் குறிப்பிடப்படுவதாக நிறுவப்படுகையில் (அசாதனாங்க வசனம்). இரண்டு, ஒரு குறை சுட்டிக்காட்டப்பட்டு அது இல்லை என நிறுவப்படுகையில் (அதோஷோத்ஃபாவன). தர்மகீர்த்திக்கு முன்னர் வாழ்ந்தவரான நியாயவியல் அறிஞர் அக்‌ஷபாதரின் நியாயவியலின் அடிப்படையை விரிவாக்கும் வாசஸ்பதி மிஸ்ரர் ஒரு கருத்து பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என நிறுவப்படுதல் (விப்ரபத்தி) மற்றும் ஒரு கருத்து முற்றிலும் புரிந்துகொள்ளப்படவில்லை என நிறுவுதல் (அப்ரதிபத்தி) என்னும் இரண்டு தோல்விநிகழும்புள்ளிகளை அடையாளப்படுத்துகிறார். இவையிரண்டும் ஒரு கூற்றை மறுப்பதற்கான அறிவுத்திறனின்மை (அப்ரதிஃபான) என ஒரே தோல்விப்புள்ளியாக தர்மகீர்த்தியால் கூறப்பட்டுள்ளன, அக்ஷபாதர் மேலும் கூர்மையாக பகுத்துரைக்கிறார் என்று வாசஸ்பதி மிஸ்ரர் சுட்டிக்காட்டுகிறார்.

நியாயவியலின்படி இப்பிரபஞ்சம் அணுக்களாலும் அவற்றின் தனியியல்புகள் (விசேஷங்கள்) என்னும் நுண்தன்மைகளாலும் (தன்மாத்திரை)ஆனது. பிரம்மம் பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை, பிரம்மம் பிரபஞ்சத்தின் தொடக்கம் (நிமித்தகாரணம்) மட்டுமே. இந்த வாதத்தை தச்சனின் உளி என்னும் உவமை வழியாக முன்வைக்கும் வாசஸ்பதி மிஸ்ரர், உளியை தச்சன் படைத்தான் என்பது உண்மையாயினும், உளியின் இயல்பு மரச்சாமானை வடிவமைப்பதில் பங்குவகிக்கிறது என்று வாதிட்டு, பிரபஞ்சத்தைப் படைக்க பிரம்மத்திற்கு வேறொரு உதவி தேவையில்லை என்ற கூற்றுக்கு எதிரான நியாயவியல் அறிஞர்களின் தரப்பை வலுவான முதற்கூற்றாக (பூர்வபக்ஷம்) ஆக வகுத்து அளிக்கிறார்.

இந்து மெய்ஞானநூல்களான உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், பதஞ்சலி யோகசூத்ரம் போன்றவற்றைப் பொருள்கொள்வதற்கும், பொது அரங்கில் விவாதிப்பதற்குமான வழிமுறைகளை நியாயவியல் சார்ந்து வாசஸ்பதி மிஸ்ரர் உருவாக்கினார். இவற்றின்மீதான விவாதங்களும் விரிவாக்கங்களும் அடுத்த ஆயிரமாண்டுகளுக்கு இந்தியதத்துவநூல்களைப் பயில்வதற்கும், விவாதிப்பதற்கும் உதவின.

சாங்கியம்

வாசஸ்பதி மிஸ்ரர் எழுதிய தத்வகௌமுதி ஈஸ்வரகிருஷ்ணன் எழுதிய சாங்கிய காரிகைக்கான உரை. இது சாங்கியத்தில் புருஷவாதத்தை உள்நுழைத்து, அதுவே ஈஸ்வரன் என நிறுவி சேஸ்வரசாங்கியம் என அழைக்கப்படும் பிற்கால சாங்கிய விரிவிவாக்கத்தை நிகழ்த்திய நூல்களில் ஒன்று. பிரகிருதி குணங்களாக புருஷனை கட்டுப்படுத்தி தன் நோக்கம் நிறைவேறும்போது அகல்கிறது என இந்நூல் சொல்கிறது. அதாவது உண்மையில் புருஷன் கட்டுண்டிருப்பதாகப் படுவது பிரகிருதியின் எல்லையே, புருஷன் விடுபடுவதாகத் தோன்றுவது பிரகிருதியின் தன்னியல்புநிலை மீளுதலே. பிரகிருதி அகன்றபின் புருஷன் பிரகிருதி அளித்த குணங்களை அறியாமல், பற்றில்லாதவனாக பிரகிருதியை பார்ப்பவனாகிறான். வெறும் புருஷன் எஞ்சும் நிலையே கேவலநிலை (கைவல்யம்) புருஷனின் இந்நிலை கூடஸ்த நித்யமுக்த என்று சொல்லப்படுகிறது. முக்குணங்களாக இயற்கை பிரிவதை பவர்க என்றும் அந்நிலை இல்லாமலாகும் விடுதலையை அபவர்க என்றும் சாங்கியம் சொல்கிறது.

சாங்கியத்தின் இக்கொள்கையை விரிவாக விளக்கும் வாசஸ்பதி மிஸ்ரர்


தத்வவைசாரதி (யோகசூத்ர உரை). தத்வகௌமுதி, சாங்கிய காரிகைக்கான உரை இந்தியாவெங்கும் புழக்கத்தில் இருந்தது. தமிழில் கடலங்குடி நடேச சாஸ்திரி அதை ஒட்டி சாங்கிய தரிசனத்திற்கு இருபதாம்நூற்றாண்டில் ஓர் விளக்கவுரை எழுதியிருக்கிறார் .

மீமாம்சம்

வாசஸ்பதி மிஸ்ரர் எழுதிய நூல்களில் மிகவும் புகழ்பெற்றது மீமாம்சை - நியாயம் ஆகிய இரண்டு தரிசனங்களின் அடிப்படையில் அவர் எழுதிய தத்வபிந்து என்னும் நூல். இதில் அவர் மீமாம்சை மரபின் மொழியியல் (பொருளிலக்கண) முறைமையின்படி உரையியல் நெறிகளை வகுக்கிறார். சம்ஸ்கிருத மூலநூல்களைப் பொருள்கொள்வதற்கான வழிகளை வகுத்து அத்துறையில் இருந்த பல சிக்கல்களுக்கு தீர்வுகண்ட நூல் இது. ஐந்து நெறிகளை வாசஸ்பதிமிஸ்ர வகுக்கிறார்

  • மண்டனமிஸ்ரரின் ஸ்போடவாதம் (முதலொலி வாதம்) என்னும் அணுகுமுறையை முதன்மைக் கருவியாக வாசஸ்பதி மிஸ்ரர் முன்வைக்கிறார். ஒரு தத்துவத்தை அதன் முதன்மைச் சொல்லில் இருந்து ஊகிக்கவேண்டும், அச்சொல்லில் உள்ள முதன்மை ஒலி அல்லது தெளிந்தெழும் ஒலியை அதன் வேர் எனக்கொண்டு அச்சொல்லின் பொருளை உருவாக்கவேண்டும். அச்சொல்லில் இருந்தே அதற்குப் பெயரையும் இடவேண்டும் (உதாரணமாக சிருஷ்டிகீதம் நாசத் என ஆரம்பிப்பதனால் அதற்கு நாசதீய சூத்ரம் என பெயரிடப்பட்டது)
  • நியாய சாஸ்திர அடிப்படையில் ஒரு சொல் அல்லது சொற்றொடரின் சொற்சூழலை (சம்ஸ்கார) முழுமையாக கருத்தில்கொள்ளவேண்டும். ஒரு சொல்லின் விவாதக்களத்தை கருத்தில்கொள்வது அதை புரிந்துகொள்ள அடிப்படையானது
  • நியாய சாஸ்திர அடிப்படையில் ஒரு சொல் அல்லது சொற்றொடருடன் தொடர்புகொண்டு நீளும் பிற சொற்களை, சொற்றொடர்களை கருத்தில்கொள்ளவேண்டும்
  • பிரபாகர மீமாம்சை மரபின் அன்விதாபிதான வாதத்தின்படி ஒரு சொல் அல்லது சொற்றொடருடன் ஒட்டுமொத்த விவாதக்களத்தில் (முன்னோடி நூல்கள், சமகால விவாதங்கள்) தொடர்புகொண்டுள்ள எல்லா சொற்களும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்
  • பட்டமீமாம்சை கொள்கையான அபிஹிதான்வயவாதத்தின்படி முதலில் சொற்களின் முதற்பொருள்  (அபிஹித) அதன்பின் சொற்களின் இணைவுப்பொருள் (அன்வய) கருத்தில்கொள்ளப்படவேண்டும்.

உசாத்துணை

https://www.hindupedia.com/en/V%C4%81caspati_Mi%C5%9Bra

Pavarga: A Lesson in Sanskrit