under review

வேதநாயகம் சாஸ்திரியார்

From Tamil Wiki
வேதநாயகம் சாஸ்திரி 1849 ல் வரையப்பட்டது
வேதநாயகம் சாஸ்திரி, கல்வெட்டு
நோவா ஞானாதிக்கம்
எலியா தேவசிகாமணி
வேதநாயகம் சாஸ்திரியார் சமாதி

வேதநாயகம் சாஸ்திரியார் (செப்டெம்பர் 7, 1774 - ஜனவரி 24, 1864) (வேதநாயகக் கவிராயர்) கிறிஸ்தவ தமிழறிஞர். கிறிஸ்தவக் காப்பியமான நோவாவின் கப்பல் பாட்டு எழுதியவர். கிறிஸ்தவ இசைப்பாடல்களை இயற்றியவர். இவர் பெயரில் நாநூறுக்கும் மேற்பட்ட தனிப்பாடல்களும் 133 நூல்களும் உள்ளன.

பிறப்பு, கல்வி

வேதநாயகம் சாஸ்திரி, கல்வெட்டு

வேதநாயகம் (இயற்பெயர்: வேதபோதகம்) செப்டம்பர் 19, 1774 (புரட்டாசி 7) அன்று தேவசகாயம் பிள்ளை, ஞானப்பூ அம்மாளுக்கு திருநெல்வேலியில் பிறந்தார். இவருடன் சூசையம்மாள் பாக்கியம்மாள் என இரு உடன் பிறந்தவர்கள். தேவசகாயம் கவிராயர் அருணாச்சலம் பிள்ளையாக இருந்து மதம் மாறி கிறிஸ்தவ போதகராக ஆனவர். தம் மதக் குருவின் பெயராகிய ’ ‘வேதபோதகம்’ என்னும் பெயரை தன் மகனுக்குச் சூட்டினார். பின் மதிப்புக் கருதி வேதநாயகம் என அழைத்தார். சூசையம்மாள், பாக்கியம்மாள் என இரு சகோதரிகள்.

வேதநாயகம் தன்னுடைய ஆறு வயதில் தாயை இழந்து, தாத்தா சவேரிராயன் செட்டியாரின் பாதுகாப்பில் 9 வயதுவரை வளர்ந்தார். பின்னர் இவரின் தந்தை மறுமணம் புரிந்து இவரை அழைத்துக்கொண்டு திருநெல்வேலிக்கு குடிபெயர்ந்தார்.

வேதநாயகம் தன் ஐந்து வயதில் இலக்கண வித்துவான் வேலுப்பிள்ளையிடம் கல்வியைத் தொடங்கினார். வேதநாயகத்தின் ஒன்பது வயதில் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள புளியங்குடியில் இலக்கணமும், அரிச்சுவடியும் கற்க சேர்ந்தார். பின் பாளையங்கோட்டையிலுள்ள பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.

ஜனவரி 1785-ல் தஞ்சையிலிருந்த ஸ்வார்ட்ஸ் ஐயர் (Rev.C.F.Schwartz )என்னும் ஜெர்மானிய மதபோதகர் திருநெல்வேலி வந்த போது வேதநாயகத்தின் தந்தையின் சம்மதத்துடன் அவரை மதப்போதகக் கல்விக்காக அழைத்து வந்தார். அப்போது தஞ்சை மராட்டிய மன்னரின் மகனான நான்காவது சரபோஜியும் வேதநாயகத்துடன் பயின்றார்.

1789-ம் ஆண்டு தாரங்கம்பாடியிலுள்ள இறையியல் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு பயின்றார். தாரங்கம்பாடியில் டாக்டர் ஜான், டாக்டர் பிரடெரிக் கிலெய்ன், டாக்டர் கேமரர், டாக்டர் ராட்லர் போன்ற ஜெர்மானிய அறிஞர்களிடம் கல்வி கற்றார்.

தனிவாழ்க்கை

வேதநாயகம் தஞ்சையில் இயங்கி வந்த இறையியல் கல்வி நிலையத்தில் (Theological Seminary) தலைமை ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார். சரபோஜி-IV மன்னரின் அவைப்புலவராக இருந்தார். இவருக்கு சரபோஜி-IV மன்னர் சிலகாலம் மாத ஊதியம் வழங்கி பேணினார்.

வேதநாயகம் தன் 21-ஆவது வயதில் தன் சொந்த அத்தை மகளான வியாகமாள் என்பவரை திருமணம் செய்தார். அந்த அம்மையார் மறு ஆண்டே மறைந்தார். வேதநாயகம் தன் 27-ஆவது வயதில் மிக்கேல் முத்தம்மாள் என்னும் பெண்மணியை மணந்தார். அவரிலும் அவருக்கு குழந்தை இல்லை. மிக்கேல் முத்தம்மாள் வேதநாயகம் சாஸ்திரியுடன் கருத்துவேறுபாடு கொண்டு பிரிந்துச் சென்றார்

வேதநாயகம் சாஸ்திரி வரோதயம் அம்மாளை ரெவெ. ப்ரதர்ட்டன் (Rev. Brotherton ) முன்னிலையில் திருமணம் புரிந்து கொண்டார். அவருடைய மூத்தமகன் நோவா ஞானாதிக்கம் சாஸ்திரியார் அவருக்குப்பின் வேதநாயகம் சாஸ்திரியார் என்னும் பட்டத்துடன் இறைப்பணி செய்தார். அவருர்களுக்கு எலியா தேவசிகாமணி சாஸ்திரி, மனோன்மணியம்மாள் ஆகியோர் அவருக்குப்பின் இறைப்பணி செய்தார்கள்.

வேதநாயகம் சாஸ்திரியார் தன் சகோதரியின் மகளுக்கு முப்பதுநாள் அகவை இருக்கையில் தத்து எடுத்துக்கொண்டு ஞானதீபம்மாள் என பெயர் சூட்டினார். இவர் ஞானதீபம் சாஸ்திரியம்மாள் என அழைக்கப்பட்டார். வாமன் என்னும் புதுக்கிறிஸ்தவனின் மகனாகிய ஞானசிகாமணியையும் தத்து எடுத்துக்கொண்டார்.

வேதநாயகம் சாஸ்திரியார் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் முரண்பட்டு திருச்சபைகளில் இருந்து விலகினார். அவர்களை குற்றம் சாட்டி நூல்களையும் எழுதினார். தன் 74-ஆவது வயதில் ஒரு விண்ணப்பநூலை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி தன்னை மிஷனரிகள் கைவிட்டுவிட்டனர் என்றும், வறுமையில் வாடுவதாகவும், நிதியுதவி செய்யவேண்டும் என்றும் கோரினார்.

மதம்

வேதநாயகம் சாஸ்திரியார் சீர்திருத்த கிறிஸ்தவ மரபைச் சேர்ந்தவர். (Protestant) . இந்தியாவுக்கு இறைப்பணி செய்யவந்த டேனிஷ் மிஷன் பாதிரியார்களுக்கு அணுக்கமானவராக இருந்தார். ஆனால் கத்தோலிக்க மரபிலும் அவருடைய பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வேதநாயகம் சாஸ்திரியார் மார்ட்டின் லூதர் கிங் மொழியாக்கம் செய்த பைபிளை முதன்மையாகக் கொண்ட சீர்திருத்த கிறிஸ்தவ மரபைச் சேர்ந்தடேனிஷ் (ஜெர்மன்) மிஷனரிகளுடன் அணுக்கமாக இருந்தமையால் பின்னர் வந்த ஆங்கில இறைப்பணியாளர்களுடன் அவருக்கு அணுக்கம் உருவாகவில்லை என அவருடைய வாழ்க்கை வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்.

வேதநாயகம் சாஸ்திரியார் ஜோகான் பெப்ரிசியூஸ் (Johann Phillip Fabricius ) மொழியாக்கம் செய்த பைபிளை எல்லா வழிபாட்டுக்கும் பயன்படுத்தி வந்தார். அந்நூலில் பிழைகள் உள்ளன என்று கருதிய ரெவெ.ஹென்றி பௌவர் ( Reverend Henry Bower) இன்னொரு மொழியாக்கத்தை 1835-ல் உருவாக்கி வெளியிட்டபோது வேதநாயகம் சாஸ்திரியார் அதை ஏற்காமல் ’புது திருத்துதலின் கூக்குரல்’ என்னும் நூலை வெளியிட்டார்.

இலக்கியவாழ்க்கை

வேதநாயகம் சாஸ்திரியார்.jpg

வேதநாயகம் சாஸ்திரியார் எழுதிய முதல்நூல் பெத்லகேம் குறவஞ்சி எனப்படுகிறது. இது குற்றாலக்குறவஞ்சியின் செல்வாக்கால் உருவானது. கிருத்தவக் கருத்துகளை ஏற்றி எளிய செய்யுள்களாகவும், பாடல்களாகவும் எழுதினார். இது இவரைப் பெரும் புகழ் பெறச் செய்தது. இவர் சென்னை போன்ற நகரங்களுக்குச் சென்று தன் செய்யுள்களை அரங்கேற்றம் செய்தார்.

வேதநாயகம் சாஸ்திரியார் நோவாவின் கப்பல் பாட்டு என்ற நூலை தஞ்சை சரபோஜி மன்னர் அரசவையில் அரங்கேற்றம் செய்தார். தஞ்சை சரபோஜி மன்னரைப் புகழ்ந்து பாடல்கள் புனைந்து அவரிடம் பல பரிசுகள் பெற்றார். இவரை மன்னர் பிரகதீஸ்வரரைப்பற்றி பாடச்சொன்னபோது மறுத்து இயேசுவின் பாடல்களை பாடியதால் மன்னருடன் மனவருத்தம் உண்டாகி பின்னர் சரிசெய்யப்பட்டது என கூறப்படுகிறது.

'பேரின்பக்காதல்' என்னும் இவருடைய நூல் 1815-ல் திருச்சியில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

அண்ணாவியார், வேதசிரோன்மணி, ஞானதீபக் கவிராயர், சுவிசேடக்கவிராயர் என்னும் பெயர்களிலும் அறியப்பட்டிருந்தார்.

இசைப்பாடல்கள்

வேதநாயகம் சாஸ்திரியார் சைவ, வைணவ மதங்களைப்போல் கிறித்தவ சமயக் கருத்துகளை கதாகாலட்சேபமாகத் தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தினார். இவருடைய பாடல்கள் கர்நாடக இசையையும் தமிழக நாட்டாரிசையையும் இணைத்து உருவாக்கப்பட்டவை.

இன்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் பாடப்படும் கிறிஸ்தவ சமயக் கீர்த்தனைகளில் பெரும்பாலானவை வேதநாயகம் அவர்களால் பாடப்பட்டவை. பெத்லகேம் குறவஞ்சியில் உள்ள மங்களப்பாடலான

சீரேசு நாதனுக்கு செய மங்களம்,
ஆதி திரியேக நாதனுக்குச் சுப மங்களம்
என்பது இன்றும் கிறிஸ்தவ சபைகளில் பாடப்படுகிறது

ஏற்பு

வேதநாயகம் சாஸ்திர்க்கு தஞ்சை சபை 1808ல் ’வேதாகம சிரோமணி மகாஞானக் கவிச்சக்கரவர்த்தியார்’ என்னும் பட்டத்தை அளித்தது.

உருவப்படம்

வேதநாயகம் சாஸ்திரி நோயுற்றிருந்தபோது 1849-ல் ரெவெ. கெஸ்ட் ( Rev. Guest) ரெவெ பௌவர் ஆகியோர் ஒரு கற்செதுக்குக் கலைஞரைக்கொண்டு அவருடைய உருவப்படத்தை உருவாக்கினர். அதுவே இன்று கிடைக்கும் அவருடைய படம்.

மறைவு

வேதநாயகம் சாஸ்திரியார் ஜனவரி 24, 1864 அன்று, தமது 90-வது வயதில் மறைந்தார். அவரது கல்லறை தஞ்சையில் செயிண்ட் பீட்டர்ஸ் சர்ச் பின்பக்கமுள்ள கல்லறை தோட்டத்தில் உள்ளது.

மரபுத் தொடர்ச்சி

வேதநாயகம் சாஸ்திரியாரின் குருதிமரபில் ஒருவர் தன்னை வேதநாயகம் சாஸ்திரியார் என அறிவித்துக்கொண்டு கிறிஸ்தவப் பணி புரியும் வழக்கம் இன்றும் உள்ளது. அவருக்குப்பின் அவருடைய மகன் நோவா ஞானாதிக்கம் வேதநாயகம் சாஸ்திரியாக பட்டமேற்றார். இப்போதைய வேதநாயகம் சாஸ்திரி வயலின் கலைஞரான கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியார் என்பவர். இம்மரபு வேதநாயகம் சாஸ்திரியார் மரபு எனப்படுகிறது.

வாழ்க்கை வரலாறுகள்

வேதநாயகம் சாஸ்திரியாரின் ஆசிரியரான ஸ்வார்ட்ஸ் ஐயர் அவரைப்பற்றி தன் வாழ்க்கைக் குறிப்புகளில் எங்கும் குறிப்பிடவில்லை. வேதநாயகம் சாஸ்திரியின் சுருக்கமான வரலாற்றை டாக்டர் ஹென்றி பௌவர் முதலில் அச்சிட்டு வெளியிட்டார். பின்னர் அவருடைய மகன் நோவா ஞானாதிக்க சாஸ்திரியார் 1899ல் வெளியிட்டார்

  • வேதநாயக சாஸ்திரியார் சரித்திரச் சுருக்கம் -நோவா ஞானாதிக்க சாஸ்திரி 1899
  • வேதநாயக சாஸ்திரியாரின் சுருக்கமான வரலாறு டபிள்யூ டி. தேவநேசன் 1945 (இணையநூலகம்)
  • கிறிஸ்தவ தமிழ்த்தொண்டர் வேதநாயகம் சாஸ்திரியார்-. ரா.பி.சேதுப்பிள்ளை (இணையநூலகம்)
  • வேதநாயகம் சாஸ்திரியார் ஞானசந்திர ஜாண்சன். (சாகித்ய அக்காதமி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)

விவாதங்கள்

வேதசாத்திரக் கும்மி வெளியீடு

வேதநாயக சாஸ்திரி வேதசாத்திரக் கும்மி என்னும் நூலில் ஜாதகம், சோதிடம் போன்ற அக்கால மூடநம்பிக்கைகளை கடிந்து எழுதியிருக்கிறார். இந்நூல் இல் தஞ்சை சரஸ்வதி மகால் வெளியீடாக வந்தது. இதிலுள்ள மதஎதிர்ப்பு காரணமாக இதன்மேல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன

சாதி விவாதம்

ஆ. வேதநாயகம் சாஸ்திரியார் தன் வேளாள சாதிப்பற்றை கைவிடாதவராகவும், சாதியைக் கடந்த கிறிஸ்தவ சமயத்தை உருவாக்க முயன்ற மிஷனரிகளின் முயற்சிக்கு எதிரானவராகவும் இருந்துள்ளார் என்று அ. மார்க்ஸ் மற்றும் ஆ. சிவசுப்பிரமணியன் ஆகியோர் கருதுகிறார்கள். 1834-ம் ஆண்டில் பதினோரு செய்யுட்களை வேதநாயகர் எழுதியுள்ளார். இவற்றின் இறுதியில் ‘புதுக் குருமார் தமிழ்ச்சனங்களுக்குச் செய்த கொடுமையைப் பற்றிப் பராபரனை நோக்கிக் கூப்பிட்ட முறைப் பாடு’ 1834-ம் ஆண்டு என்று எழுதியுள்ளார். இந்நூலைப் பதிப்பித்த சவரிமுத்து அடிகளார் சுவார்ச்ஸ் துரைக்குப்பின்னர் வந்த கோலப்பையர் போன்ற பாதிரியார்கள் ஒடுக்கப்பட்ட மக்களை நடத்திய விதத்திற்கு எதிரான முறையீடு இது என முன்னுரையில் கூறுகிறார். ஆனால் ஆ.சிவசுப்பிரமணியன் ”தொடக்ககாலக் கிறித்துவத் திருச்சபைக்குள் நிலவிய மேட்டிமை சாதிய மேலாண்மைக்கெதிராக குருக்கள் சிலர் மேற்கொண்ட செயல்பாடுகள் வேதநாயகருக்குப் பிடிக்கவில்லை. சாதிய வேறு பாட்டை கிறித்துவத்தில் நீக்க முயன்ற குருக்களால் தாம் பாதிக்கப்பட்டதாக அவர் எழுதியுள்ள பதிகங்களில் கூறுகிறார்” என்று குறிப்பிடுகிறார்

‘குருக்களும் பகைவரானார் கோவிலும் வேறதாயிற்று.’
‘சங்கையை இழந்தோம் பின்னும் சாதியின் நலமுமற்றோம்,’

ஆகிய வரிகளில் வேளாளர் பிறருடன் சமானமாக நடத்தப்படுவதற்கு எதிராக அவர் திருச்சபையுடன் போராடியதை குறிப்பிடுகிறார். “சாதி அடிப்படையிலான கல்லறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டதால் தமக்கு நேர்ந்த துயரத்தை ‘கல்லறைக் கிடமுமுற்றுக் காட்டினுக் ககற்றப் பட்டோம்’ என்று வெளிப்படுத்தியுள்ளார்” என்று ஆ.சிவசுப்ரமணியம் குறிப்பிடுகிறார்

1845-ல் தஞ்சை நகரில் இறைப்பணி புரிந்த பிஷப் ஸ்பென்ஸர் தஞ்சாவூரில் கிறிஸ்தவர்கள் சாதிமரபில் ஊறியவர்களாகவும் பிடிவாதக்காரர்களாகவும் இருக்கிறார்கள் என்றும், சாதிக்கட்டு அவசியம் என்று சொன்னவர்களில் முதல்வர் வேதநாயகம் சாஸ்திரியார் என்றும் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். எஸ்.கே.தேவசிகாமணி தன்னுடைய

ஜி.யூ. போப்

கிறித்தவ இறைப்பணியாளரும் தமிழறிஞருமான ஜி.யூ. போப் வேதநாயகம் சாஸ்திரியுடன் கடுமையான மனவேறுபாடு கொண்டிருந்தார். தஞ்சையில் போப் பணியாற்றிய காலகட்டத்தில் அவர் சாதி வேறுபாட்டை கிறித்துவத்தில் நீக்க முயன்றதை எதிர்த்து ‘போப்பையரின் உபத்திரா உபத்திரவம்’ என்ற குறுநூலை வேதநாயகம் சாஸ்திரியார் வெளியிட்டுள்ளார்.

வேதநாயக சாஸ்திரியாரின் இசைப்பாடல்களில் ஆசிரியர்பெயர் இறுதியில் குறிப்பிடப்படுவதை போப் விரும்பவில்லை. ஆகவே அவற்றை வழிபாட்டின்போது பாடவேண்டியதில்லை என அவர் தடை விதித்தார். அதற்கு அந்த மரபு ஏற்கனவே உள்ளது என்று போப்பையரின் உபத்திரா உபத்திரவம் நூலில் வேதநாயகம் சாஸ்திரி பதில் அளித்தார்.

இசைப்பாடல்களின் தழுவல்தன்மை

வேதநாயகம் சாஸ்திரியாரின் இசைப்பாடல்கள் பெப்ரிசியூஸ் எழுதிய இசைப்பாடல்களை நேரடியாகத் தழுவியே எழுதினார். அதில் ஆங்கிலச் சொற்களையும் அயல்சொற்களையும் பயன்படுத்தினார். அத்துடன் அவற்றில் இந்திய இசைமுறைமைகளை தவிர்த்து ஆங்கிலமெட்டுகளை பயன்படுத்தினார். இதனால் அவை சொற்கள் சிதைந்தும், பொருட்சிக்கல் மிகுந்தும் அமைந்தன. இதை பிற்கால கிறிஸ்தவ ஆய்வாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். எஸ்.ஜேசுதாசன் இவ்வாறு குறிப்பிடுகிறார் “கிறிஸ்தவக் கோவில்களில் மேல்நாட்டுப்பாடல்களை இந்திய ராகங்கள் யாப்பிலக்கணப்போக்குகள் முதலியவற்றை அறவே அசட்டை செய்து விகாரமுறைமையாக மொழிபெயர்த்துப் பாடும் ஞானப்பாட்டுகள் சுவிசேஷ கீர்த்தனைகள் முதலிய பலவகைப் பாட்டுகள் பால்யபிராயம் முதல் அவற்றில் பழகிவிட்ட கிறிஸ்தவர்களுக்கு இன்பமாய் போய்விட்டாலும் நமது தேசத்தினருக்கு கோரசப்தமாகவே தொனிக்கும்”

இலக்கிய இடம்

வேதநாயகம் சாஸ்திரியார் தமிழகத்தில் கிறிஸ்துவம் பரவிய முதல் காலகட்டத்தை சேர்ந்தவர் என்று ஜெயமோகன் வரையறுக்கிறார். தமிழகத்தில் கிறிஸ்துவம் இரண்டு காலகட்டங்களில் பரவியது என்றும், முதல் காலகட்டங்களில் அது தமிழகத்தில் இருந்த உயர் நிலை மக்களைச் சென்றடைந்தது என்றும் இரண்டாம் காலகட்டத்தில் அது அடித்தட்டு மக்களைச்சென்று சேர்ந்தது என்றும் வரையறுக்கிறார். முதல் காலக்கட்டத்தில் உயர் நிலை மக்களின் ரசனைக்கான கலை வடிவங்கள் உருவாக்கப்பட்டன என்றும் இவர் அக்காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார். கிறிஸ்தவ கீர்த்தனைகளை இயற்றியதில் வேதநாயகம் சாஸ்திரியார் முன்னோடி என்று பதிவு செய்கிறார்.(கிறிஸ்தவ இசை, மூன்று அடுக்குகள்) யோ ஞானசந்திர ஜாண்சன் வேதநாயகம் சாஸ்திரியார் இந்தியத்தன்மை வாய்ந்த கிறிஸ்தவ இலக்கியத்திற்கான முன்வடிவை உருவாக்கியதில் வீரமாமுனிவருக்கு அடுத்த இடம் கொண்டவர் என்று மதிப்பிடுகிறார்

நூல்கள்

சிற்றிலக்கியங்கள்
  • பெத்லகேம் குறவஞ்சி
  • பெண்டிர் விடு தூது
  • வேதவினா விடை அம்மானை
  • ஞான அந்தாதி
  • ஞான உலா
  • பராபரன் மாலை
  • ஜெபமாலை
  • காலவித்தியாச மாலை
  • நோவாவின் கப்பல்பாட்டு
நாடக இலக்கியங்கள்
நாட்டுப்புற இலக்கியங்கள்
  • பிரலாப ஒப்பாரி
  • ஞான ஏத்தப்பாட்டு
  • சாஸ்திரக் கும்மி
  • ஞானக் கும்மி
  • தியானப் புலம்பல்
  • கலியாண வாழ்த்துதல்
  • பேரின்பக் காதல்
  • ஞானத் தாராட்டு
  • திருச்சபைத் தாராட்டு
அற இலக்கியங்கள்
  • பரம நீதிப் புராணம்
  • முன்னுரை
  • ஞான வழி
  • நூறு சுலோகம்
  • மெய்யறிவு
பிற இலக்கியங்கள்
  • சென்னப் பட்டணப் பிரவேசம்
  • கடைசி நியாயத் தீர்ப்பு
  • சுவிசேட ஞானம்
  • இந்துஸ்தான் பாடல்
  • வண்ண சமுத்திரம்
  • ஆரணாதிந்தம்
  • பால சரித்திரம்
  • பராபரக் கண்ணி
  • குருட்டு வழி
கீர்த்தனை இலக்கியங்கள்
  • ஞானப்பதக் கீர்த்தனைகள் முதல் தொகுதி
  • ஞானப்பதக் கீர்த்தனம் இரண்டாம் தொகுதி
  • தேவ தோத்திரப் பாட்டுகள்

உசாத்துணை


✅Finalised Page