வாஸவேச்வரம் (நாவல்)
வாஸவேச்வரம் (1966) (வாசவேஸ்வரம்) கிருத்திகா எழுதிய தமிழ் நாவல். ஒரு கற்பனை சிற்றூரை, மெய்யான சிற்றூர் ஒன்றின் சாயலுடன் படைத்து அங்கே தேங்கிப்போன வாழ்க்கையை அங்கதத்துடன் சித்தரித்த நாவல்.
வாஸவேச்வரம் என்ற வட்டார அடையாளங்கள் இல்லாத, பௌராணிக சாயலுடன் ஆன்மா தேங்கி நிற்கும் கற்பனை கிராமத்தை, தன்முனைப்பாலும், காமத்தாலுமே செலுத்தப்படும் கதை மாந்தர்களை, அவர்களின் ஒழுக்க வீழ்ச்சிகளை அங்கதச் சுவையுடன் சொல்கிறது. தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
எழுத்து, வெளியீடு
கிருத்திகா 1966-ல் எழுதிய வாஸவேச்வரம் நாவலின் முதல் பதிப்பை 1966-ல் டால்டன் பதிப்பகம் வெளியிட்டது. 1996-ல் இரண்டாம் பதிப்பு நூலகம் வெளியீடாக வந்தது. காலச்சுவடு பதிப்பகத்தின் முதல் பதிப்பு டிசம்பர், 2007-ல் வெளி வந்தது.
பின்னணி
கிருத்திகா தன் புகுந்த ஊரான திருப்பதிசாரத்தைக் களமாக்கி, அங்கு வாழ்ந்த மக்களின் சாயலில் கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார். சுதந்திரத்துக்குப்பின் தேக்க நிலையில் நின்ற, அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு இன்னும் தலை தூக்காத கிராமத்தைச் சித்தரித்திருக்கிறார். திருப்பதிசாரம் குமரிமாவட்டத்தில் நாகர்கோயில் அருகே உள்ள ஆலயச்சிற்றூர். மா.அரங்கநாதன், எம்.சிவசுப்ரமணியம் ஆகியோர் அங்கே பிறந்தவர்கள்.
கதைச்சுருக்கம்
வாஸவேச்வரத்தில் உள்ள கோவிலில் குடிகொண்ட ஈசன் பெண்ணாசையால் சாபம் பெற்ற இந்திரனுக்கு சாப விமோசனம் அளித்ததைப் பற்றிய கதாகாலட்சேபத்துடன் நாவல் தொடங்குகிறது.ஒரு சிறிய வட்டத்துக்குள் ஆன்மா தேங்கிய ஊர்மக்கள் தன்முனைப்பாலும் காமத்தாலும் மட்டுமே செலுத்தப்படுகின்றனர். உபன்யாசம் செய்யும் சாஸ்திரிகளும் கூட விதிவிலக்கல்ல. பண்பாலும், ஆளுமையாலும் ஓங்கி உயர்ந்து நிற்பவர் பெரியபாட்டா என்ற ஊர்த்தலைவர் மட்டுமே.
பாட்டாவின் பெண்வழிப் பேத்தி தங்கம். அவள் கணவன் டாக்டர் சுந்தா வாய்ச் சொல் வீரன்.
பெரிய பாட்டாவின் தமக்கை பேரன்கள் சந்திரசேகரனும் சுப்பையாவும் ஒன்று விட்ட சகோதரர்கள்.செயலூக்கம் கொண்ட சந்திரசேகரன் தன் உழைப்பால் நிலத்தைப் பெருக்குகிறான். பேரழகியான மனைவி ரோகிணி கிராமத்தில் பொருந்தாமல் கணவனின் அன்புக்காக ஏங்குபவள். சந்திரசேகரன் ஊருக்கெல்லாம் இன்முகம் காட்டி, மனைவியின் அழகை அஞ்சி, அவளைத் துரும்பாக மதிக்கிறார். சுப்பையா சிறு வயதிலிருந்தே சந்திரசேகரனுடன் ஒப்பிடப்பட்டே வளர்ந்தவன். மனம் அமர்ந்து செயலூக்கமின்றி கடும் மன அழுத்தத்தோடு உள்ளவனை மனைவி விச்சுவும் சந்திரசேகரனோடு ஒப்பிட்டு அவமதிக்கிறாள். சுந்தாவுக்கும் விச்சுவுக்கும் மணவினை தாண்டிய உறவு முளைக்கிறது
பிச்சாண்டி நெஞ்சுரம் உடைய பொதுவுடமைவாதி இளைஞன். ரோகிணியும் அவனும் மனதிற்குள் ஒருவரையொருவர் ரகசியமாக ஆராதிக்கிறார்கள்.பிச்சாண்டி ஊரைச் சீர்திருத்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகிறான். பாட்டாவை எதிர்த்து சவால் விடுகிறான்.பிச்சாண்டியை எதிர்த்து சந்திரசேகரன் தேர்தலில் போட்டியிடுகிறான். பிச்சாண்டி ஊர்த் திருவிழா அன்று ஒரு சதியால் வெறுப்புற்று ஊரை விட்டே செல்லும் வழியில் ரோகிணியைக் கடைசி முறையாகப் பார்க்கச் செல்கிறான். அங்கே சந்திரசேகரன் உலக்கையால் அடிபட்டு இறந்துகிடக்கிறான். அவன் மேல் கொலைப்பழி விழுகிறது.
சுப்பையா ஒரு முறையாவது தான் வென்று அதை விச்சுவுக்கு நிரூபிக்க சந்திரசேகரனை உலக்கையால் கொன்று, விச்சுவுக்கு அதைக் கடிதமெழுதி, தற்கொலை செய்து கொள்கிறான். பாட்டா காவல்துறையிடம் கடிதத்தைத் தந்து பிச்சாண்டியை விடுவிக்கிறார். ரோகிணியிடம் மட்டும் உண்மையைச் சொல்லும்படி கோரிவிட்டு பிச்சாண்டி ஊரைவிட்டே போகிறான்.
கதை மாந்தர்
- பெரிய பாட்டா - குடும்பத்தின் ஆலமரம்.ஊர்த் தலைவர்
- சந்திரசேகரன், சுப்பையா - பாட்டாவின் தமக்கை பேரன்கள், தாயாதிகள்.
- பிச்சாண்டி - அஞ்சா நெஞ்சன், பொதுவுடமைவாதி
- ரோகிணி - சந்திரசேகரனின் மனைவி, பேரழகி
- விச்சு - சுப்பையாவின் மனைவி
- தங்கம் - பாட்டவின் மகள் வயிற்றுப் பேத்தி
- சுந்தா - தங்கத்தின் கணவன்
- அம்மாளு அம்மாள் - சுந்தாவின் தாய்
- ரங்கன் - பாட்டாவின் மகன் வயிற்றுப் பேரன்
- கோமதி - தூரத்து உறவுமுறையில் பாட்டாவின் பேத்தி
- சுப்புக்குட்டி சாஸ்திரிகள் - உபன்யாசம் செய்பவர்
இலக்கிய இடம்
பெண்ணின் பால்விழைவைக் குறித்து கலாபூர்வமாக எழுதப்பட்டதாலும், மீறலின் அழகியலாலும், தன் அங்கதச் சுவையாலும், விசித்திரத் தன்மையாலும் வாஸவேச்வரம் தமிழின் ஓர் முக்கியமான படைப்பாகிறது. வாஸவேச்வரம் எழுத்தாளர்கள் ஜெயமோகன்[1], எஸ். ராமகிருஷ்ணன் [2]இருவரின் தமிழின் சிறந்த நாவல்கள் பட்டியலிலும் இடம் பெறுகிறது. ஒரு குமரி மாவட்டக் கிராமத்தை பெளராணிகச் சாயலுடன், நவீனத் தன்மையுடன் சித்தரித்து அதன் ஒழுக்க, அற வீழ்ச்சியை ஆழ்ந்த அங்கத்துடன் கூறும் இந்நாவல் அதன் விசித்திரத் தன்மை காரணமாகவே முக்கியமானது. சித்தரிப்போடு நின்றுவிடும் இந்தப் படைப்பு உச்ச நிலை நோக்கிச் செல்லவில்லை.இந்திரனின் பெற்ற சாபம் என்ற உபன்யாசத்தில் தொடங்கும் நாவல் சீதையின் கற்பைப் பற்றிய உபன்யாசத்தில் முடிவதில் கிருத்திகாவின் அங்கதம் தெரிகிறது. பின்புலமாக அமைந்த இந்திரனின் தாபமும், காமமும், மீறலும், நாவலெங்கும் கதாபாத்திரங்களிலும் ஊடாடி வருகின்றன. "அவரது அங்கதம் உண்மையில் ஆண்-மைய அரசியலை நோக்கிய பெண்ணின் சிரிப்பு .பெண்ணியம் உருவாகி வந்தவுடன் வாஸவேச்வரம் மறுவாசிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்" என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
பால் விழைவின் வழியாக அதிகாரத்தை அடையும் விழைவும் நாவலின் பெண்களிடம் மேலோங்கியிருப்பதைக் காணலாம்.ஆண் அதிகாரத்தை தொடர்ந்து நிலைநிறுத்தும் குடும்ப அமைப்பை, அந்த அமைப்புக்குள்ளிருந்தே பால் விழைவுகளின் ஊடாட்டத்தின் வழி நாவலின் பெண்பால் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் பரப்பாக இந்நாவலை வாசிக்கும்போது நவீனத் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றைப் பெண்ணியப் பிரதியாக நாம் மாற்றி எழுத முடியும் என்று நாவலின் முன்னுரையில் கவிஞர் பெருந்தேவி குறிப்பிடுகிறார்.
உசாத்துணை
- வாஸவேச்வரம்-Silicon Shelf
- சில கடிதங்களும் இரண்டு நாவல்களும்- கிருத்திகா
- அங்கதச் சுவையை கொண்டாடிய ஒரே தமிழ் எழுத்தாளர் கிருத்திகா - விகடன் தடம் -21 ஜூன், 2018
- கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து-1,2 பெருந்தேவி
- கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து-3 பெருந்தேவி
- omnibusonline.in வாஸவேச்வரம்-கிருத்திகா
- காமத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் ஆலயம் – வாஸவேச்வரம்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:36 IST