யுகபாரதி
யுகபாரதி (பிரேம்குமார்) (பிறப்பு: டிசம்பர் 02, 1976) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், திரைப்பாடலாசிரியர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
பிரேம்குமார் என்னும் இயற்பெயரை உடைய யுகபாரதி, டிசம்பர் 02, 1976 அன்று, தஞ்சாவூரில் பிறந்தார். தஞ்சாவூரில் உள்ள மேக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். அறந்தாங்கி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியலில் பட்டயம் பெற்றார் (D.M.E.).
தனி வாழ்க்கை
யுகபாரதி மணமானவர். மனைவி, அன்புச்செல்வி. மகள்: காவியா.
இலக்கிய வாழ்க்கை
யுகபாரதி, பாரதியையும் கம்பனையும் படித்து இலக்கிய ஆர்வம் பெற்றார். தந்தை மூலம் அறிமுகமான இலக்கிய, அரசியல் நூல்கள், சோவியத் யூனியன் புத்தகங்கள் வாசிப்பார்வத்தை வளர்த்தன. வாசித்த நூல்களாலும், தந்தையின் நண்பர்கள் மூலம் பெற்ற இலக்கிய அனுபவங்களினாலும் எழுதத் தொடங்கினார். 'ஈழ ஏக்கம்' என்னும் முதல் கவிதை, தமிழர் கண்ணோட்டம்' இதழில் வெளியானது. தொடர்ந்து பல இதழ்களில் கவிதைகள் வெளியாகின. பாரதி மீது கொண்ட பற்றால் 'யுகபாரதி' என்ற புனை பெயரில் எழுதினார். 'மனப்பத்தாயம்', 'பஞ்சாரம்', 'தெப்பக்கட்டை' எனப் பல கவிதைத் தொகுப்புகள் வெளியாகின. பல்வேறு இதழ்களில் இலக்கியம் சார்ந்த பல கட்டுரைகளை எழுதினார். யுகபாரதியின் கவிதைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியாகின.
கல்யாண்ஜி, மகுடேஸ்வரன், மனுஷ்யபுத்திரன், சமயவேல், வித்யாஷங்கர், பசுவய்யா, பழமலய் எனப் பலர் யுகபாரதியைக் கவர்ந்த கவிஞர்கள். தஞ்சை ப்ரகாஷுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். ப்ரகாஷின் படைப்புகளை அச்சுக்குக் கொண்டு வருவதில் முனைப்புடன் செயல்பட்டார்.
யுகபாரதியின் 'நடை வண்டி நாள்கள்' கவிதைத் தொகுப்பு மிகுந்த கவனம் பெற்றது. பதினைந்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளையும், இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டார். தன் வரலாற்று நூல் ஒன்றையும் எழுதினார்.
இதழியல்
யுகபாரதி 'ராஜரிஷி' இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 'படித்துறை' இலக்கிய இதழில் பணியாற்றினார். 'கணையாழி' இலக்கிய இதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். குறிப்பிடத்தகுந்த கட்டுரைத் தொடர்களை எழுதினார். பலரை எழுத வைத்தார். இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், சுஜாதா எனப் பலரது அறிமுகமும் அவர்கள் மூலம் உத்வேகமும் பெற்றார். "ம. ராசேந்திரன், தமன் பிரகாஷ், சுவாமிநாதன் மூவரும் கணையாழியின் நிர்வாகிகளாக அல்லாமல் என் வாழ்வை நிறைத்தவர்களாக இருந்தார்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.
பதிப்பு
யுகபாரதி, 'நேர்நிரை' என்ற பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார். அதன் மூலம் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.
திரை வாழ்க்கை
யுகபாரதி, கவிஞரும், இயக்குநருமான லிங்குசாமி மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். லிங்குசாமி இயக்கிய 'ஆனந்தம்' திரைப்படத்தில் 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்' என்ற பாடலை எழுதி, திரைப்பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து மென்மையான பாடல்கள், துள்ளலிசைப் பாடல்கள், காதல் பாடல்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார். இசையமைப்பாளர் இமானின் இசையில் பல வெற்றித் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.
யுகபாரதியின் திரைப்பாடல்கள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
யுகபாரதியின் திரைப் பாடல்களில் சில
- பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்...
- மன்மத ராசா மன்மத ராசா...
- காதல் பிசாசே...
- கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம்...
- கனாக்கண்டேனடி...
- நீயா பேசியது...
- கொக்கர கொக்கரக்கோ...
- ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயையோ...
- சித்திரையில் என்ன வரும்...
- கண்டேன் கண்டேன்...
- கண்ணன் வரும் வேளை
- தேன் தேன் தேன்
- சம்போ சம்போ சிவசிவ சம்போ
- ஊதா கலரு ரிப்பன்..
- எள்ளுவய பூக்கலையே...
- பாக்காதே பாக்காதே...
- கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்...
- கூடமேல கூட வெச்சு...
- அடியே என்ன ராகம்...
- ஒன் மேல ஒரு கண்ணு...
- ஜிகு ஜிகு ரயில்...
விருதுகள்
- சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் பரிசு (இரு முறை)
- சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
- கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அளித்த 'ஐந்தமிழ் விருது'
- திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
- ஃபிலிம்பேர் விருது
- பாரத ஸ்டேட் வங்கி விருது
- காசியூர் ரங்கம்மாள் விருது
- தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அளித்த கலைமாமணி விருது
- குறள் பீட விருது
- தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது (2025)
மதிப்பீடு
யுகபாரதி, சமூக அவலங்களைத் தனது கவிதைகளில் பாடுபொருளாகக் கொண்டு எழுதினார். மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் தேர்ந்தவர். வாசக வரவேற்பைப் பெற்ற பல கட்டுரைகளை எழுதினார். இலக்கியப் பிரக்ஞையுடன் பல படைப்புகளைத் தந்தவர். வெகுஜனத்தளத்திலும் தீவிர இலக்கியத் தளத்திலும் ஒருசேர இயங்கிவருபவர். தமிழ்த் திரையுலகின் முன்னணிக் கவிஞர்களுள் ஒருவர். திரைமொழியையும் மக்கள் மொழியையும் நன்கு உணர்ந்து அவற்றைத் தனது பாடல்களில் பயன்படுத்தியவர். துள்ளலிசை, மெல்லிசைப் பாடல்களை அதிகம் எழுதியவராக அறியப்படுகிறார். கவிஞர், கட்டுரையாளர், பதிப்பாளர், திரைப்பாடலாசிரியர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- மனப்பத்தாயம்
- நடைவண்டி நாள்கள்
- பஞ்சாரம்
- தெப்பக்கட்டை
- நொண்டிக் காவடி
- தெருவாசகம்
- அந்நியர்கள் உள்ளே வரலாம்
- மராமத்து
- முனியாண்டிவிலாஸ்
- பாதாளக்கொலுசு
- நேற்றைய காற்று
- ஒரு மரத்துக் கள்
- யுகபாரதி கவிதைகள்
- பாட்டு புஸ்தகம்
- பாட்டு புஸ்தகம் - பாகம் 2
- காகித றெக்கை
- மஹா பிடாரி
கட்டுரைத் தொகுப்பு
- கண்ணாடி முன்
- நேற்றைய காற்று
- ஒன்று
- நடுக்கடல் தனிக்கப்பல்
- வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள்
- அதாவது
- நானொருவன் மட்டிலும்
- தத்தகாரம்
- இடம்பொருள் இசை
- பின்பாட்டு
- அகத்திரை
- நல்லார் ஒருவர்
- ஒருபாட்டு கொஞ்சம் பின்னணி
- நிழல் பொம்மை
- ஊஞ்சல் தேநீர்
- முன்னிருக்கைக்காரர்கள்
- ஒன்று
- நடுக்கடல் தனிக்கப்பல்
- ஒரு மரத்துக் கள்
- மேல் கணக்கு
- பக்கத்து மேசை
தன் வரலாறு
- ஒரு பாட்டு கொஞ்சம் பின்னணி
உசாத்துணை
- யுகபாரதி வலைப்பூ
- யுகபாரதி வலைத்தளம்
- யுகபாரதி நேர்காணல் கீற்றுத் தளம்
- யுகபாரதி நேர்காணல், தென்றல் இதழ்
- யுகபாரதி நேர்காணல்-1, இந்து தமிழ் திசை
- யுகபாரதி நேர்காணல்-2, இந்து தமிழ் திசை
- யுகபாரதி நேர்காணல், அந்திமழை தளம்
- யுகபாரதி நூல்கள், காமன்ஃபோல்க்ஸ் தளம்
- யுகபாரதி நூல்கள், அமேசான் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jan-2026, 08:34:43 IST