under review

மா. தக்ஷிணாமூர்த்தி

From Tamil Wiki
தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தட்சிணாமூர்த்தி (பெயர் பட்டியல்)
மா. தக்ஷிணாமூர்த்தி

மா. தக்ஷிணாமூர்த்தி (மா. தட்சிணாமூர்த்தி) (பிறப்பு: ஜனவரி 30, 1944) தமிழ்க் கவிஞர். தமிழிலும், மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதினார். க. நா. சுப்ரமண்யம், நகுலன், நீல பத்மநாபன், அசோகமித்திரன், வெங்கட் சாமிநாதன் ஆகியோரின் படைப்புகளை தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்த்தார். ஆங்கிலம் மற்றும் மலையாள நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். மலையாளம் மற்றும் ஆங்கில அகராதிகளை உருவாக்கினார்.

பிறப்பு, கல்வி

மா. தக்ஷிணாமூர்த்தி இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் தாலுகாவில் உள்ள மூழிகுளங்கரையில் K.மாதவன், P.காமாட்சி இணையருக்கு ஜனவரி 30, 1944-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் பூமிநாதன், சுமதி, பாலச்சந்திரன், விஸ்வநாதன், ராதாகுமாரி. திருவனந்தபுரம், விஜயவாடா, மாயூரம், சென்னை ஆகிய ஊர்களில் பள்ளிக்கல்வி பயின்றார்.1962-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். 1964-ல் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தாய்மொழியான மலையாளம் தவிர, தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளும் அறிந்தவர்.

தனிவாழ்க்கை

மா. தக்ஷிணாமூர்த்தி சியாமளாகுமாரியை மணந்தார். பிள்ளைகள் ஶ்ரீதேவி (திருவனந்தபுரத்தில் ஆசிரியர் பணி), ஹரி கிருஷ்ணன் (துபாயில் பொறியாளர்).

ஆசிரியப்பணி

மா. தக்ஷிணாமூர்த்தி 1964 முதல் 1966 வரை பந்தளம் என்.எஸ்.எஸ். கல்லூரியில் விரிவுரையாளாகப் பணியாற்றினார். பின் 1969 வரை கேரளப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். 1973 வரை கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியிலும் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியிலும் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஆசிரியர் பணியைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளராகத் தொடர்ந்தார். 2006-07-ல் திருவனந்தபுரம் கேரள இந்தி பிரச்சார சபையில் ஆங்கிலம் கற்பித்தார்.

ஆன்மிகம்

மா. தக்ஷிணாமூர்த்தி எழுபதுகளில் துறவு பூணும் எண்ணத்துடன் ஈரோடு ராமதாஸ் மடத்தில் சத்தியானந்த சரஸ்வதியின் மாணவராக இருந்தார்.

அமைப்புச் செயல்பாடுகள்

மா. தக்ஷிணாமூர்த்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து தினசரி தியான வகுப்புகளில் பங்கெடுத்தார். பின் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராகவும் செயல்பட்டார்.

மா. தக்ஷிணாமூர்த்தி (நன்றி ஸ்ரீநிவாச கோபாலன்)

இலக்கிய வாழ்க்கை

மா. தக்ஷிணாமூர்த்தியின் பிரசுரமான முதல் படைப்பு அபிராமி அந்தாதி பற்றிய கட்டுரை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தபோது கல்லூரி பத்திரிகையில் வெளியானது. பள்ளிக்காலத்தில் சுவாமிநாதன் என்ற நண்பர் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையில் எழுதினார். திருவனந்தபுரத்தில் நகுலனுடன் ஏற்பட்ட தொடர்பின் மூலம் சிறுபத்திரிகைகளில் எழுதினார். நகுலன் தொகுத்த 'குருஷேத்திரம்' தொகுப்பில் தக்ஷிணாமூர்த்தியின் படைப்புகள் இடம்பெற்றன. அதில் ஐயப்பப் பணிக்கரின் 'குருஷேத்திரம்' கவிதையை டி. எஸ். எலியட்டின் 'பாழ்நிலம்' கவிதையுடன் ஒப்பிட்டு எழுதிய ஆய்வு குறிப்பிடத்தக்கது. 'குளத்து மீன்' என்ற முதல் கவிதையும் அத்தொகுப்பில் வெளியானது. 'எழுத்து', 'நடை', 'கசடதபற', 'கணையாழி' ஆகிய சிற்றிதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. மா. தக்ஷிணாமூர்த்தியின் முதல் நூல் 'திவ்ய தர்சனம்' கவிதைத் தொகுப்பு 1976-ல் வெளியானது.

மா. தக்ஷிணாமூர்த்தி ஆங்கிலம் பயில்வதற்கான பல கையேடுகளையும் எழுதினார். இவரது'Indian Influence on English Poets of the Inter-war Period' என்ற முனைவர் பட்ட ஆய்வேடு இன்னும் நூல்வடிவம் பெறவில்லை. ஆதர்ச எழுத்தாளர்களாக நகுலன், தி.ஜானகிராமன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

மலையாளம்

மலையாளத்தில் மா. தக்ஷிணாமூர்த்தியின் முதல் படைப்புகள் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட ஈ.வே.ரா. பெரியார் மற்றும் அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாறுகள். வேட்ஸ்வொர்த், கோலரிட்ஜ், ஷெல்லி, கீட்ஸ் உள்ளிட்ட ஆங்கிலக் கவிகளின் படைப்புகள் குறித்த ஆய்வை இரண்டு தொகுதிகளாக மலையாளத்தில் எழுதியுள்ளர்.

க.நா. சுப்ரமண்யம், நகுலன் நீல பத்மநாபன், அசோகமித்திரன், வெங்கட் சாமிநாதன் ஆகியோரின் படைப்புகளைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்த்தார். மலையாளத்தில் புலரி பதிப்பகம் வெளியிட்ட சிறார் நூல்கள் பலவற்றை ஆங்கிலத்திலிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். க.நா.சுப்ரமண்யத்தின் 'அசுரகணம்' நாவலின் மலையாளப் பதிப்பு மலையாளத்தில் இவரது முதல் நூல். மலையாளம் மற்றும் ஆங்கில அகராதிகளையும் உருவாக்கினார்.

இலக்கிய இடம்

"புதுக்கவிதை மரபில் மா. தட்சிணாமூர்த்தியின் கவிதைகள் ஆன்மிக உள்ளடக்கம் கொண்டவையாக இருப்பினும் பாலுணர்வுக் கவிதைகளாகவே அமைந்துள்ளன. தமிழ் வாய்மொழிப் பாடல் மரபில் வளமான பாலுணர்வுக் கவிதை மரபு உண்டு. கோவில் விழாக்களில் பாலுணர்வுக் கவிதைகளைப் பாடும் மரபும் இருந்துள்ளது. ஆங்கிலேய ஆட்சியாளர்களால் இது ஒழிக்கப்பட்டது. தமிழில் பாலுணர்வுக் கவிதைகள் எதிரிடையான மதிப்பீட்டிற்கே தொடர்ந்து உள்ளாகியுள்ளன" என்று விமர்சகர் வேதசகாயகுமார் குறிப்பிடுகிறார்.

'திவ்ய தரிசனம்' தொகுப்பில் உள்ள கவிதைகள் தமிழில் பாலுணர்வுக் கவிதைகளுக்கு சிறந்த உதாரணங்களாக உள்ளதாக சோ. சிவபாதசுந்தரம் மதிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • திவ்ய தரிசனம் (1976)
மொழிபெயர்ப்பு
  • அசுரகணம் (க.நா.சு. நாவலின் மலையாளப் பதிப்பு, 1976)
  • பந்தங்கள் (நீல பத்மநாபனின் 'உறவுகள்' நாவலின் மலையாளப் பதிப்பு, 1979)
  • அக்கிரஹாரத்தில் கழுதை (வெங்கட் சாமிநாதன் எழுதிய தமிழ் திரைக்கதையின் மலையாளப் பதிப்பு 1979)
  • பள்ளிகொண்டபுரம் (நீல பத்மநாபன் நாவலின் ஆங்கிலப் பதிப்பு, 1982)
  • அழிஞ்சுபோய நிழலுகள் (அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்' நாவலின் மலையாளப் பதிப்பு, 1984)
  • எம். டி. ராமநாதன் (டி. ரவிகுமார் எழுதிய மலையாளக் கவிதை நூலின் மொழிபெயர்ப்பு, 2019)
அகராதி
  • மலையாளம் - மலையாளம் - இந்தி (1985)
  • ஆங்கிலம் - இந்தி - மலையாளம் (1997)
  • ஆங்கிலம் - ஆங்கிலம் - மலையாளம் (2006)

உசாத்துணை

  • மா. தக்ஷிணாமூர்த்தியுடனான சந்திப்பு (21-06-2024) - ஸ்ரீநிவாசகோபாலன் மற்றும் கவிஞர் மதார்.
  • வேதசகாயகுமார் எம்., இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம், அடையாளம் பதிப்பகப், முதல் பதிப்பு: 2019.
  • Sivapathasundaram, S., Survey of Tamil Writing, Indian Literature, July-August 1977


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Jul-2024, 09:59:56 IST