under review

மலாயாவில் இந்தியர்களின் புலப்பெயர்வு

From Tamil Wiki
1900-களில் தோட்டத் தொழிலில் வேலை செய்வதற்காக வந்த இந்தியத் தொழிலாளர்கள்

மலாயாவுக்கு இந்தியர்களின் புலப்பெயர்வு பொ.யு. முதலாம் நூற்றாண்டில் தொடங்கியது. பொ. யு. முதலாம் நூற்றாண்டில் இந்தியர்கள் மலாயாவிற்கு வணிகர்களாக வந்தனர். பின்னர் மலாயாவைப் பிரிட்டிஷார் கைப்பற்றிய பிறகு இந்தியர்கள் தொழிலாளர்களாக மலாயாவிற்குப் புலம்பெயர்ந்தனர்.

வரலாறு / பின்னணி

இந்தியாவிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் கடல் கடந்து பல இடங்களுக்குச் சென்று குடியேறினர். பிரிட்டிஷாருக்கு முந்தைய காலத்தில் மலாயாவில் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவர்கள் வணிகர்களாகத் திகழ்ந்தனர். மலாயாவில் இந்தியக் குடியேற்றத்தின் நவீன காலம் என்பது 1786-ல் பினாங்கு உருவாக்கத்திலிருந்து தொடங்குகிறது.

பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் தனது மேலாண்மையையும் மலாயாவில் தங்களது ஆட்சியையும் நிலைநிறுத்திக் கொண்டது. 19-ம் நூற்றாண்டின் பிற்பாதியில்தான் மலாயா தீபகற்பத்தில் அது குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்தியது. அதற்கு முன்பு குடியேறியவர்கள் பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த, நாகரிகம் வாய்ந்த கந்து வட்டிக்காரர்களாகவும், தட்டுப்பாடு உள்ள பொருட்களைத் தருவித்து விற்கும் வணிகர்களாகவும் இருந்தனர். 19-ம் நூற்றாண்டின் பின்பகுதியிலிருந்து 1938-ல் தொழிலாளர் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடைச்சட்டம் இயற்றும் வரை தோட்டத்தொழில் தேவைகளுக்காகவோ அல்லது அரசின் நிர்மாணத்திட்டங்களில் பணிபுரிவதற்காகவோ மலாயாவுக்கு கொண்டுவரப்பட்ட அனைவருமே எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர். இவர்கள் அனைவருமே முறைப்படுத்தப்பட்டு திட்டமிட்ட வகையில் கொண்டு வரப்பட்டவர்கள்.

தொழிலாளர் இடம்பெயர்வதற்கு அரசின் நடவடிக்கையும் ஓரளவுக்குத் தூண்டுகோலாக இருந்தது. தோட்ட நிர்வாகங்கள், செல்வாக்குள்ள முகவர்கள் ஆகியோர் அவர்களது கங்காணிகள் மூலமும் ஆட்களைக் கொண்டு வந்தனர். முன்னர் நிகழ்ந்த குடியேற்றங்கள் அளவில் சிறியனவாக இருந்தன. ஆனால் பின்னர் நிகழ்ந்த குடியேற்றங்கள் பெரிய அளவில் நடைபெற்றன. இந்த உருமாற்றத்துக்கு இந்தியாவிலும் மலாயாவிலும் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்களே முதன்மைக் காரணங்களாக இருந்தன.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் வணிகர்களாகப் புலம்பெயர்ந்த இந்தியர்கள்

பூஜாங் பள்ளத்தாக்கு

மலாயா தீபகற்பத்துக்கு முதன்முதலாக இந்தியர்கள் பொ.யு. முதலாம் நூற்றாண்டில் வணிகர்களாக இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்து வந்தனர். நூலாடைகள், இரும்புக் கருவிகள், சிறுமணிகள், பசை போன்றவற்றையும் சாம்பிராணி, மரப்பிசின், மரக்கட்டைகள் போன்ற காடு சார்ந்த பொருட்கள் மற்றும் தங்கத்துகளையும் பண்டமாற்று விற்பனை செய்தனர். மலாயாவை ‘சுவர்ணபூமி' என்றும் அழைத்தனர். இவ்வணிகர்கள் தங்களுடன் கட்டடக் கலை, நெசவு நெய்தல், உலோக வேலை ஆகியவற்றில் திறமை மிகுந்தவர்களையும் உடன் அழைத்து வந்தனர். நாளடைவில் இந்த வணிகர்கள் மலாயாவிலே நிலையாகத் தங்கிவிட்டனர். இங்கு வாழ்ந்து வந்த பழங்குடி இனப்பெண்களை அவர்கள் மணம் செய்து கொண்டனர். நகரங்களை உருவாக்கினர். மலாயா தீபகற்பத்தில் கெடாவிலுள்ள மெர்போக் நதிப் பகுதியான பூஜாங் பள்ளத்தாக்கு இத்தகைய குடியேற்றங்களில் தலையாயது.

பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது மலாயாவிற்குப் புலப்பெயர்ந்த இந்தியர்கள்

மலாயாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது தோட்டத் தொழிலாளிகளாகத் தென்னிந்தியாவிலிருந்து இந்தியத் தொழிலாளர்கள் ஒப்பந்த முறையிலும் கங்காணி முறையிலும் கொண்டுவரப்பட்டனர். தமிழர்களைத் தவிர்த்து தென்னிந்தியாவிலிருந்து தெலுங்கர்களும் கொண்டு வரப்பட்டனர். இலங்கை தமிழர்கள், மலையாள சமூகத்தினர், செட்டியார்கள், வட இந்தியர்கள் என இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் இந்தியர்கள் மலாயாவிற்குப் புலம் பெயர்ந்தனர். இலங்கையிலிருந்தும் தென்னிந்தியாவிலிருந்தும் வந்து குடியேறிய தமிழர்களும் தெலுங்கர்களும் மலாயாவின் இரப்பர் பயிரிடுதலுக்கும் இரப்பர் தோட்டத்துறையின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டனர். இவர்களில் சிலர் உயர்ந்த பணிகளில்ஈடுபட்டனர். சிலர் தோட்டத் தொழிலாளர்களாகச் செயல்பட்டனர்.

தமிழர்கள்
தமிழன் தனது மாட்டுவண்டியுடன் மலாயாவில்

மலாயாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் தோட்டத் தொழிலாளிகளாகவே மலாயாவிற்குக் கொண்டு வரப்பட்டனர்.தொடக்கத்தில் இத்தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் ஒப்பந்தத் தொழிலாளிகளாக அழைத்து வரப்பட்டனர். 1786-ம் ஆண்டு பிரிட்டன் பினாங்குத் தீவை கைப்பற்றிய பிறகு காப்பி, தென்னை, கரும்புத் தோட்டங்களில் பணிபுரிவதற்குப் பிரிட்டிஷார்களுக்குத் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பிரிட்டிஷ் காலனியவாதிகள் தென்னிந்தியாவிலிருந்து தமிழர்களை ஒப்பந்தக் கூலிகளாக மலாயாவிற்கு இறக்குமதி செய்தனர். பின்னர் 1910-ம் ஆண்டு ஒப்பந்த முறை முடிவுற்ற பிறகு, தமிழர்கள் கங்காணி முறையில் தோட்டத் தொழிலாளிகளாக மலாயாவிற்குக் கொண்டு வரப்பட்டனர். தோட்டத் தொழிலாளிகளாகக் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் அடிமைகளாகவே மலாயாவில் வாழ்ந்தனர்.

இலங்கைத் தமிழர்கள்
யாழ்ப்பாணத் தமிழர்களின் குழுப் படம் - ஈப்போ - 1945

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பெரும் எண்ணிக்கையில் இலங்கைத் தமிழர்களும் சிறிய எண்ணிக்கையில் சிங்களர்களும் இலங்கையிலிருந்து மலாயாவுக்குக் குடியேறினர். 1931-ல் 12,700 இலங்கைத் தமிழர்கள் மலாயாவில் குடியேறினர். இவர்களில் பலர் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் என உயர் கல்வி பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். இலங்கைத் தமிழர்கள் மலாயாவிற்கு வந்தவுடனே பிரிட்டிஷ் சிவில் சர்வீஸ் பணிகளில் அமர்த்தப்பட்டனர். பலருக்கு இரயில்வே துறையிலும் பிற பொதுத் துறைகளிலும் உயர் பதவி வழங்கப்பட்டது .

நெகிரி செம்பிலானில் முன்னோடியாகத் திகழ்ந்த யாழ்ப்பாணத் தமிழ்க்குடும்பம்

சிவில் நிர்வாகம் சுமூகமாக நடைபெற இலங்கைத் தமிழர்கள் ஆற்றிய பங்கினைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதற்குக் கைமாறாக அரசாங்கத்தின் நிர்வாகத் துறையிலும், சட்டமன்ற அமைப்புகளிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளித்தனர். இது தொடர்பான உத்தரவொன்று அன்றைய ஸ்ட்ரெய்ட்ஸ் செட்டில்மென்ட் ஆளுநரின் அலுவலகத்தால் பிப்ரவரி 27-ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபகற்பத்தின் நிர்வாகக்குழுவிலும் சட்டமன்றக் குழுவிலும் இலங்கைத் தமிழர்கள் அமர்த்தப்பட்டனர். அடுத்து வந்த ஆண்டுகளில் படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழர்களின் மலாயா குடிபெயர்வு 1894-க்குப் பின்புதான் தொடங்குகிறது. அவர்கள் பெரும்பாலோர் எழுத்தர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போன்ற பதவிகளில் நியமிக்கப்பட்டனர். 1900-ல் விக்டோரியா கல்வி நிறுவனம் முதன் முதலாக இவர்களைச் சேர்த்துக்கொள்ள முன்வந்த போது, இலங்கைத் தமிழர்கள் பலர் தங்கள் குழந்தைகளை அதில் சேர்த்தனர். தொடக்க நாட்களில் பள்ளியில் பயின்றோரில் இலங்கைத் தமிழரே அதிகம். இலங்கைத் தமிழர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணி வந்தனர்.

இலங்கைத் தமிழர்கள் பிற்காலத்தில் வளமான இடம் தேடி மலாயாவுக்கு இடம் பெயர்ந்தபோது, இங்குள்ள இந்தியத் தோட்டத் தொழிலாளர் மீது அக்கறை காட்டவில்லை. இரு சமூகத்தினரும் கலந்து பழகுவது மிகமிகக் குறைவாகவே இருந்தது. இலங்கைத் தமிழர்கள் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களை நல்லமுறையில் நடத்தவில்லை. காலனிய நிர்வாகத்தில் உயர்பதவிகளில் இருந்தாலும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்கள் உதவி செய்யவில்லை. இந்திய தோட்டத் தொழிலாளர்களைத் தங்களது சமூகத்திலிருந்து ஒதுக்கியே வைத்திருந்தனர். காலப்போக்கில் இந்த இரு சமூகங்களுக்கிடையில் ஓர் இறுக்கமான சூழ்நிலை ஏற்பட்டது.

தெலுங்கு சமூகம்
தெலுங்கு சமூகம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மலாயாவில் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்கள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டனர். தெலுங்கர்களில் பெரும்பாலோர் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்தனர். ஒரு சிறு பிரிவு மட்டும் காலனிய நிர்வாகத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டது. அவர்கள் கங்காணி முறையின் மூலம் மலாயாவுக்குக் கொண்டு வரப்பட்டனர்.

அவர்கள் மலாயாவின் பலபகுதிகளில் குடியேறியிருந்தபோதிலும் பெரும்பாலோர் பேராக் மாநிலத்தையே தங்களது இருப்பிடமாகக் கொண்டுள்ளனர். காலனிய ஆட்சிக்காலத்தில் பேராக்கில் உள்ள கோலா பேராக், பேலம் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் அனைவரும் தெலுங்கர்களாக இருந்தனர் என்று நம்பப்படுகிறது. அதே காலக்கட்டத்தில் கோலாலம்பூரில் மட்டும் சுமார் மூன்றாயிரம் தெலுங்கர்கள் இருந்தனர்.

1930-களில் மலாயாவில் தெலுங்கு தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. 1950-களில் 50 பள்ளிகள் இருந்தன. தெலுங்கர்கள் தோட்டங்களையே தங்கள் இருப்பிடமாகக் கருதினாலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலக் கல்வி குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர். பத்தொன்பது தோட்டங்களில் 59 தெலுங்குப் பட்டதாரிகள் இருந்ததாக 1974-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூறுகிறது.

மலேசிய இந்தியச் சங்கங்கள் பலவற்றிலும் தெலுங்கர்கள் முக்கிய பதவிகள் வகித்தனர். மலேசிய தெலுங்கு சங்கம் 1982-ல் தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கம் மலேசியாவில் பெரிய மாவட்டங்கள் அனைத்திலும் தன் கிளைகளை நிறுவி, சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மலையாள சமூகம்
மலையாள சமூகம்

மலாயாவில் தோட்டத் தொழிலில் மேற்பார்வை பார்க்கும் பணிகளுக்கு, தென்னிந்திய மாநிலமான கேரளாவிலிருந்து திருமணமாகாத இளைஞர்களைப் பிரிட்டிஷார் இறக்குமதி செய்தனர். பிரிட்டிஷாருக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்கள் இந்த மலையாளிகளில் பலரைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டதும் உண்டு. அவர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தனர். இதனால் தனியார் துறையில் வேலை பெறத்தக்கவர்களாக இவர்கள் இருந்தனர்.

தோட்ட குமாஸ்தாக்கள், பாதுகாப்பு அதிகாரிகள், மருத்துவமனைப் பணியாளர்கள் போன்ற பணிகளில் தோட்டங்களில் பல மலையாளிகள் வேலை செய்தனர். ஏறக்குறைய அவர்கள் அனைவரும் நாடு திரும்பி, திருமணம் செய்து கொண்டு தங்கள் மனைவியரையும் உறவினர்களையும் உடன் அழைத்து வந்தனர். தோட்டங்களில் இருந்த காலிப்பணியிடங்களில் அவர்களது உறவினர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டனர். உறவினர்களும் இங்கு வந்து சேர்ந்ததால் அவர்களது குடும்பங்கள் பெருகின. இம்மலையாளிகளில் பலர் இங்கேயே நிரந்தாமாகத் தங்க முடிவு செய்தனர்.

இந்த மலையாளிகளில் பலர் மேனன், நாயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். கிறிஸ்த்துவ மலையாளிகள் பலரை அவர்களது ஐரோப்பியப் பெயர்களைக் கொண்டு அடையாளப்படுத்தலாம். முஸ்லிம் மலையாளிகள் மலபாரிகள் என்று அறியப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் உணவுத்தொழில் செய்தனர்.சிற்றுண்டிச் சாலைகளையும் உணவகங்களையும் நடத்தினர்.

பிரிட்டிஷார் மலையாளிகளை அமைதியாக வாழ விரும்பும் சமூகமாக அடையாளம் கண்டனர். அத்துடன் அவர்கள் மலாயாவிலுள்ள மலாய் மக்களுடனும் சீனர்களுடனும் மிகுந்த நல்லுறவு கொண்டிருந்தனர்.

செட்டியார்கள்
செட்டியார்கள்

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பலதரப்பட்ட இந்திய வணிகர்களின் குடிபெயர்வானது மலாயாவில் இந்திய மக்கள் தொகையை அதிகரிக்கச் செய்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வணிகர்களும் வட்டித் தொழில் நடத்துபவர்களுமான நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். சுல்தானின் ஆட்சிக்காலத்தில் கணிசமான அளவில் செட்டியார்கள் இங்கே இருந்தனர். மலாக்கா பொருளாதாரத்தின் மீது செல்வாக்குச் செலுத்தியவர்களாக இவர்கள் இருந்தனர். சமூகத்தின் சில உறுப்பினர்கள் வீடுகளை விலை கொடுத்தே வாங்கினர் அல்லது வாடகைக்கு எடுத்துக்கொண்டனர். இந்தியாவிலுள்ள தங்களது குடும்பங்களை அழைத்துக் கொண்டு வந்து நிரந்தரமாகக் குடியேற்றினர். காலப்போக்கில் செட்டியார்கள் உள்ளூர் மக்களுடன் கலந்தனர்.

மலாக்கா செட்டியார்களின் செல்வாக்கு உச்சத்தில் இருந்த காலத்தில் அவர்கள் வட்டித் தொழிலில் நாட்டிலேயே முதன்மையானவர்களாக இருந்தனர். மலாக்கா செட்டிகள் இன்றும் மலாக்கா நகரில் காஜா பெராங்கில் வாழ்ந்து வருகின்றனர்.

பிரிட்டிஷார் ஸ்ட்ரெய்ட்ஸ் செட்டில்மென்ட்ஸ்களைத் தோற்றுவித்த பொழுது தங்கள் வணிகத்தொழிலை நடத்துவதற்காகச் செட்டியார்கள் அங்குள்ள பெருநகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். ஸ்ட்ரெய்ட்ஸ் செட்டில்மென்ட்ஸின் விரிவடைந்து வந்த பொருளாதாரத்திற்குச் செட்டியார்கள் பெரும் பங்காற்றினர். தங்கள் வணிகத்தை மிக நெருக்கமான வலைப்பின்னல் போன்றதொரு சாதியச்சூழலில் நடத்தி வந்தனர்.

மலாய் தீபகற்பத்தின் வளர்ச்சிக்குத் தேவையான நிதியை அவர்கள் வழங்கினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அவர்கள் தங்கள் வணிகத்தை மலாயாவின் பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தினர்.

1930-களின்போது தீபகற்பத்தில் உள்ள அனைத்து பெருநகரங்களிலும் செட்டியார்கள் வேரூன்றிவிட்டனர். நிலம், வீடு, இரப்பர்த் தோட்டங்கள் வாங்கியிருந்தனர். பின்னர் மலாயா விடுதலை அடைந்தபோது, செட்டியார்களில் பலர் அவர்களது உடைமைகளை விற்றுவிட்டு மலாயாவை விட்டு வெளியேறி விட்டனர். மிகச்சிறிய எண்ணிக்கையிலான மூத்த தலைமுறை செட்டியார்கள் மட்டுமே இன்று வட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய இளம் தலைமுறைச் செட்டியார்கள் பிற பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீக்கியப்படை
வட இந்தியர்கள்

மலாயாவில் பணி தொடர்பாக வந்து குடியேறியவர்களில் வட இந்திய சீக்கியர்கள், குஜராத்திகள், சிந்திகள், வங்காளிகள் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.

சீக்கிய சமூகம்

பாதுகாப்புப் பணிக்காகப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சீக்கியர்களை மலாயாவிற்கு வரவழைத்தனர். 1940-ம் ஆண்டு காலக்கட்டத்தில் சீக்கியர்கள் பலர் மலாயா காவல்துறையின் உளவுப்பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மலாயாவில் சீக்கியர்கள் மட்டுமே பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடினர். முதல் உலகப்போர் முடியும் தருவாயில் மலாயாவில் சீக்கியர்களின் குடியேற்றம் அதிகரித்தது. பலர் காவல் அதிகாரிகளாகவும், வட்டிக்காரர்களாகவும், கால்நடை வளர்ப்போராகவும் பணி செய்தனர். 1930-ம் ஆண்டு காலக்கட்டத்தில் சீக்கிய சமூகத்தில் ஒரு பிரிவு கல்வியில் சிறந்து விளங்கியது. அது மலாயாவைத் தங்கள் தாய்மண்ணாகக் கொள்ளத் தொடங்கியது. அவர்கள் மருத்துவத் துறையிலும் சட்டத் துறையிலும் மிக ஆழமாக வேரூன்றினர்.

இந்துஸ்தானி, சிந்தி, குஜராத்தி சமூகங்கள்

இந்துஸ்தானி, சிந்தி, குஜராத்தி மற்றும் பிற வட இந்திய சமூகத்தவர் மலாயாவிற்கு வணிக வாய்ப்புத் தேடி வந்தனர். இவர்கள் கைத்தறி மற்றும் துணி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

வங்காள சமூகம்
1939ல் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்கு நேதாஜி வருகை

வங்காள சமூகத்தினர் மலாயாவிற்கு பாதுகாப்புப் பணிக்காக வந்தனர். இவர்கள் கூர்க்காக்களைப் போல காவல் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரு பிரிவினர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து பணியாற்றினர்.

இலக்கியப் பதிவுகள்

உசாத்துணை

  • மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை(2006)- மா. ஜானகிராமன்
  • அக்கினி - மலேசியா நண்பன் - மறக்கப்பட்ட சமூகம் (13 பிப்பரவரி 2005)


✅Finalised Page