under review

மலாயாவில் கங்காணி முறை

From Tamil Wiki
கங்காணி உரிமம்

கங்காணி முறை என்பது மலாயாவைப் பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது, தென் இந்தியாவிலிருந்து இந்தியர்களை மலாயாவிற்கு அழைத்துக் கொண்டுவரப்பட்ட முறையாகும். கூலிமுறைக்குப் பதிலாகக் கங்காணி முறையில் இந்தியர்கள் மலாயாவிற்கு அழைத்து வரப்பட்டனர். கங்காணி முறையில் கொண்டு வரப்பட்ட இந்தியர்கள் ரப்பர் தோட்டங்களிலும் வெளி காட்டு வேலைகளையும் செய்தனர்.

பின்னணி

1833-ம் ஆண்டில் மலாயாவில் வெல்லெஸ்லி பிரதேசத்தில் கரும்புத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக தமிழர்களும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலுங்கர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மலாயாவிற்குக் கொண்டுவரப்பட்டனர். தொடக்கக்காலத்தில் அமல்படுத்தப்பட்டு வந்த ஒப்பந்தக் கூலிமுறை அரசாங்க ஒப்பந்தச் சட்டத்தை மீறியதாலும் இந்தியாவிலிருந்து விமர்சனங்கள் எழுந்ததாலும் ஒப்பந்த முறை 1910-ல் கைவிடப்பட்டது. ஒப்பந்த முறைக்குப் பதிலாகக் கங்காணி முறை மலாயாவில் அமல்படுத்தப்பட்டது.

19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ரப்பர் விலை அதிகரித்ததால், பிரிட்டீஷ்காரர்களுக்கு மலாயாவில் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப்பட்டனர். உள்ளூர் மக்கள் பிரிட்டிஷ் முதலீட்டாளர்களின்கீழ் வேலை செய்ய விரும்பாததன் காரணமாக, இந்தியத் தொழிலாளர்கள் தென் இந்தியாவிலிருந்து கங்காணி முறையில் கொண்டு வரப்பட்டனர். தொழிலாளர்கள் தென்னிந்திய கிராமங்களிலிருந்து கங்காணிகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு கங்காணிகளால் மலாயாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இரப்பர்த் தொழிற்சாலையில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்கள்

1890-களில் தொடங்கிய கங்காணி முறை, மலாயாவுக்கு ஒப்பந்த முறை மூலம் குடியேறுவதை வெகுவேகமாக மாற்றியமைத்தது. விகித அடிப்படையில் ஒப்பந்த முறையில்லாத வழிகளில் தோட்டத் தொழிலில் பணிபுரிய வந்த இந்தியத் தொழிலாளர்களின் விகிதம் 1902-ல் 2:5 ஆகவும் 1970-ல் 5:6 ஆகவும் அதிகரித்தது. தொடங்கப்பட்ட 20 ஆண்டுகளுக்குள் கங்காணி முறை ஒப்பந்த முறைக்கு மாற்றாக அமைந்தது. 1938-ம் ஆண்டு பயிற்சியற்ற தொழிலாளர்கள் தொடர்பான அனைத்துக் குடியேற்றத்தையும் இந்திய அரசு தடைசெய்ததாலும் 1920-களில் தோட்டத் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாகக் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டதாலும் 1938-ல் கங்காணி முறை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

கங்காணிகள்

ரப்பர் மரம் சீவுவதற்குப் பெண்களுக்குப் பயிற்சி தரும் கங்காணி

பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள் தென்னிந்திய கிராமப்புறங்களிலிருந்து மலாயாவுக்கு முதலில் வந்த சிலரைக் கங்காணிகளாக ஏற்றுக் கொண்டனர். கங்காணிகள் பிரிட்டிஷ் ஆட்களின் கைப்பாவையாகச் செயல்பட்டு ஆசை வார்த்தைகளையும் பொய் வாக்குறுதிகளையும் கொடுத்து தென்னிந்தியாவிலிருந்த ஏழை விவசாயிகளை மலாயாவிற்கு அழைத்து வந்தனர். கங்காணிகள் மலாயாவிலிருந்து இந்தியா சென்று வருவதற்கான போக்குவரத்துச் செலவுகளை மலாயா தோட்ட நிர்வாகங்கள் ஏற்றுக் கொண்டன. கங்காணிகளால் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் தொகை கங்காணிகளுக்கு வழங்கப்பட்டது. காப்பி பயிரிடுவோரும் ரப்பர் பயிரிடுவோரும் கங்காணிகளுக்குத் தரப்படும் செலவு குறைவாகப் பிடிக்கும் கங்காணி முறையையே விரும்பினர். கங்காணிகளைக் கறுப்புக் கங்காணிகள் என்றும் அழைப்பதுண்டு.

கங்காணி முறை செயல்பட்ட முறை

1910-ல் ஒப்பந்தக்கூலி முறை நிறுத்தப்பட்டவுடன் இந்தியத் தூதரகக் குழுவின் கண்காணிப்பில் நிறுவப்பட்ட தமிழர் குடியேற்ற நிதி தொழிலாளர்களை மலாயாவுக்கு இறக்குமதி செய்தது. இதற்கான பணம் முதலாளிகளிடமிருந்து வரியாக வசூல் செய்யப்பட்டது. இவற்றை கண்காணிக்க 1911-ல் தொழிலாளர் இலாகா நிறுவப்பட்டது. ஒரு முதாளிக்குத் தொழிலாளர்கள் தேவைப்பட்டால், முதலாளி தொழிலாளர் இலாகாவில் கங்காணி உரிமம் பாரத்தைப் பெற்றுப் பூர்த்திச் செய்திட வேண்டும். அந்தப் பாரத்தில் தேவைப்படும் தொழிலாளர்கள் எண்ணிக்கை, சம்பள விகிதம், கங்காணியின் கமிஷன் போன்றவற்றை எழுதி கங்காணியிடம் கொடுத்துப் பினாங்கிற்கு அனுப்ப வேண்டும். பினாங்கில் இத்தகவல்கள் சரிபார்த்த பிறகு, தொழிலாளர் கட்டுப்பாட்டு அதிகாரியால் உரிமம் வழங்கப்படும். கங்காணி இந்தியா வந்ததும் உரிமத்தை மலாயாத் தூதரக அதிகாரிகள் முத்திரையிடுவர். ஆவடி அல்லது நாகப்பட்டினத்தில் இது நடைபெற்றது. அதன் பிறகு, கங்காணி அங்குள்ள ஐரோப்பிய முதாளிகளின் ஏஜெண்டை அணுகி தேவைப்படும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தென்னிந்தியாவில் உள்ள கிராமங்களுக்குச் சென்று ஆட்களைத் திரட்டி மலாயாவிற்கு அனுப்புவார். நாகை அல்லது சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள் பொருத்தமானவர்களா என்று கவனமாகச் சோதிக்கப்படுவர். பின்னர் மருத்துவச் சோதனையில் வெற்றி பெற்றால் அவர்களை முகவர் பினாங்கிற்கு அனுப்பி வைப்பர். பிறகு கங்காணிகளுக்குத் திரட்டப்பட்ட தொழிலாளர்களின் அடிப்படையில் கமிஷன் கொடுக்கப்படும்.

கங்காணி முறையினால் ஏற்பட்ட விளைவுகள்

ரஜூலா நீராவிக்கப்பல்

தொழில்முறையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களைக் காட்டிலும் கங்காணி முறையில் வந்தவர்கள் உயர்ந்த தரமாக இருந்தனர். கங்காணி முறை மூலம் தொழிலாளர்களைக் கொண்டு வருவதற்கு தடைகள் ஏதும் இல்லை. அரசாங்கத்திடம் அனுமதி மற்றும் சோதனைகள் எதுவும் இல்லாததால் கங்காணி முறை எளிமையாக அமைந்தது.

கங்காணி முறையினால் மலாயாவில் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1901-ல் மலாயாவில் இந்திய மக்கள் தொகை 119,000 ஆக இருந்து 1921-ல் 470,181 என மூன்று மடங்காக கங்காணி முறையினால் அதிகரித்தது. கங்காணி முறை மலாயாவின் தொழிலாளர் தேவையைப் பெரிதும் நிறைவேற்றி வந்தது. இருந்தபோதிலும், கங்காணி முறையில் கொண்டு வரப்பட்ட இந்தியர்கள் ரப்பர் தோட்டங்களில் முதலாளிகளாலும் கங்காணிகளாலும் துன்புறுத்தப்பட்டனர்.

கங்காணி முறையில் இறக்குமதி செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை

  • 1909 - 21,963
  • 1910 - 60, 347
  • 1913 - 91, 236

இலக்கியப் பதிவுகள்

உசாத்துணை

  • ஜானகிராமன், மா. (2006). மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை.
  • மணியரசன் (2021). பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின்போது மலாயா வாழ் தமிழ்ச் சமுதாயம் அடைந்த மேலாதிக்க நிலை.MJSHH Online 5(3), 57-67.
  • பரமேஸ்வரி(2020).வரலாற்று பாதை 1: மலாயாவில் இந்தியர். உமா பதிப்பகம்.
  • மலாயாவில் கங்காணி முறை


✅Finalised Page