under review

மலாயாவில் ஒப்பந்தத் தொழிலாளர்கள்

From Tamil Wiki
ஒப்பந்தத் தொழிலாளிகள்

மலாயாவைப் பிரிட்டிஷார் ஆட்சி செய்த பொழுது, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களே ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். தொடக்கக்காலத்தில் தென்னிந்தியர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மலாயாவில் குடியேறினர்.

பின்னணி

இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் வருகை - சுங்கை பினாங்கு டெபோ (1935)

1786-ம் ஆண்டு பிரிட்டன் பினாங்கு தீவை கைப்பற்றிய பிறகு காப்பி, தென்னை, கரும்புத் தோட்டங்களில் பணிபுரிவதற்குப் பிரிட்டிஷார்களுக்குத் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். அதனை நிவர்த்திச் செய்யும் வகையில் பிரிட்டிஷ் காலனியவாதிகள் தென்னிந்தியாவிலிருந்து தமிழர்களை ஒப்பந்தக் கூலிகளாக மலாயாவிற்கு இறக்குமதி செய்தனர். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷார் காப்பி, கரும்பு போன்றவற்றைப் பயிரிட்டு வணிக வேளாண்மையை அறிமுகப்படுத்தினர். மனித நடமாட்டம் இல்லாத காடுகளை அழித்து விளைநிலமாக்கி காப்பி, கரும்பைப் பயிரிட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

தோட்ட நிர்வாகத்தினருக்குத் தேவைப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கொண்டுள்ள விண்ணப்பம் தோட்ட நிர்வாகத்தினரால் இந்தியாவிலுள்ள தொழிலாளர் முகவருக்கு அனுப்பப்படும். இந்தியாவிலுள்ள தொழிலாளர் முகவர் தனது உதவியாளர்களின் துணையோடு கிராமங்களில் தேவையான ஆட்களைப் தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்படும் அத்தொழிலாளி ஒப்பந்தத்தில் கையிடுவதன் மூலம் நிர்வாகத்தின் கீழ் ஐந்தாண்டுகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை செய்வார். ஐந்து ஆண்டு ஒப்பந்தம் முடிவுற்றதும் அத்தொழிலாளி ஒப்பந்தத்திலிருந்து விடுபடலாம் அல்லது மீண்டும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஆட்கள் தேர்வு செய்யப்படும்போதே கூலி நிர்ணயம் செய்யப்பட்டுவிடும். ஆட்களைத் தேர்வு செய்ய தேவைப்படும் தொகையும் தொழிலாளர்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கு தேவைப்படும் செலவையும் நிர்வாகம் ஏற்கும். இந்தத் தொடக்கச் செலவுகளுக்கான செலவுத் தொகை ஊதியத்துடன் சேர்த்துக் கணக்கிடப்படும்.

நிலத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியத் தொழிலாளர்கள்

ஒப்பந்தக்கூலி முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒப்பந்தத் தொழிலாளிகள் தோட்ட நிர்வாகத்தினரின் கொடுமைகளுக்கு ஆளாகினர். அடிமைத்தனம், பாம்புக்கடி, பட்டினி, போதிய ஓய்வின்மை, மலேரியா எனப் பல கொடுமைகளை ஒப்பந்தக்கூலி தொழிலாளர்கள் சந்தித்தனர். ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலைமையைக் குறித்து இந்திய தேசிய இயக்கம் ஒப்பந்தக்கூலி முறை இந்தியர்களை இழிவுப்படுத்துவதாகக் கூறி இதனைத் தடை செய்ய எதிர்ப்புத் தெரிவித்தது.

20-ம் நூற்றாண்டில் ரப்பர் தோட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால், கரும்புத் தோட்டங்கள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதனால் கரும்புத் தோட்டங்களில் இருந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் தேவையற்றவர்களாகினர். இறுதியில், 1910-ல் ஒப்பந்தக் கூலி முறை தடை செய்யப்பட்டு கங்காணி முறையாக மாற்றம் கண்டது. 1910-ல் ஒப்பந்தக் கூலி முறை தடைசெய்யப்பட்டவுடன் சில தென்னிந்தியர்கள் சுதந்திரமாக இந்தியா திரும்பினர், இன்னும் சிலர் மலாயாவிலேயே தங்கிவிட்டனர்.

ஒப்பந்தத் தொழிலாளிகள்

தென்னிந்தியாவில் உள்ள நிலமில்லாத விவசாயிகள், ஏழை விவசாயிகள் ஒப்பந்தத் தொழிலாளிகளாக மலாயாவிற்கு வந்தனர். அவர்கள் மலாயாவுக்குக் கடல் வழியாக நீராவிக் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டனர். 1881-ம் ஆண்டு தொடங்கி 1890-ம் ஆண்டு வரை பினாங்கு துறைமுகத்தில் வந்திறங்கிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ;

நிபந்தனை இல்லாமல் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் குடி நுழைவுச் சான்றிதழ்
  • 1881 - 879
  • 1882 - 1453
  • 1883 - 1450
  • 1884 - 1539
  • 1885 - 1642
  • 1886 - 2748
  • 1887 - 4736
  • 1888 - 4684
  • 1889 - 2747
  • 1890 - 2960

ஒப்பந்தத் தொழிலாளிகள் எதிர்நோக்கிய சிக்கல்கள்

ஒப்பந்தத் தொழிலாளர்கள் வசித்த வீடு

ஒப்பந்தத் தொழிலாளிகள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். போதிய ஓய்வின்றியும் எவ்வித பாதுகாப்பின்றியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மலேரியா காய்ச்சலினாலும் பாம்புக்கடியினாலும் சிலர் இறந்தனர். இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகினர். புதிய தொழிலாளர் குடியிருப்புகளில் பெண்கள் குழுவொன்று தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒப்பந்தகூலி முறையில் இருந்ததால், விடுப்பு எடுக்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. தொழிலாளர்களின் ஒப்புதலின்றி மிக ஆபத்தான சூழ்நிலைகளில் வேலை செய்யும்படி தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இந்திய அரசு சட்டம்

இந்தியாவில் இருந்து ஒப்பந்தக் கூலிகள் கொண்டுவரப்படுவது தொடங்கியதிலிருந்து இந்திய அரசின் குறுக்கீடு எதுவுமின்றி இடைவிடாது முப்பது ஆண்டுகளுக்கு நீடித்தது. இந்தத் திட்டத்தின் குறைபாடுகளும் சுரண்டல்களும் வெளிவரத் தொடங்கிய பின் 1839-ல் இந்திய அரசுச் சட்டம் என்ற ஒன்றை இந்திய அரசு நிறைவேற்றியது. கிழக்கிந்தியக் கம்பெனிகளின் பிரதேச எல்லைகளுக்கு வெளியில் இந்தியத் தொழிலாளர்களை ஒப்பந்தம் செய்வதை எல்லாவிதத்திலும் இச்சட்டம் தடைசெய்தது.

ஒப்பந்தத் தொழிலாளி வசித்த வீடு

ஒப்பந்தத் தொழிலாளர் குடியேற்றத்தின் போது மனிதத் தன்மையற்ற முறைகள் கையாளப்படுவதாக பரவலாக இந்தியாவெங்கும் தகவல்கள் வெளியாயின. இந்த விமர்சனங்களை எதிர் கொள்ளும் விதத்திலும் அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் 1877-ல் இந்தியாவிலிருந்து ஸ்ட் ரெய்ட்ஸ் செட்டில்மெண்ட்சுக்குக் (Stright settlements) கப்பல்கள் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களை அனுப்புவதை ஒழுங்குபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒப்பந்தத் தொழிலாளர்களின் விவகாரங்களைக் கவனிப்பதற்கென இந்தியாவில் ஒருவரும் மலாயா ஸ்ட்ரெய்ட்ஸ் செட்டில்மெண்ட்ஸில் ஒருவரும் என இரு அதிகாரிகள் அமர்த்தப்பட்டனர். சென்னை மாகாண அரசு குடியேற்றப் பாதுகாப்பாளர் என்ற அலுவலர் ஒருவரையும் மலாயா ஸ்ட்ரெய்ட்ஸ் செட்டில்மெண்ட்ஸ் அரசு நாகப்பட்டினத்தில் குடியேற்ற முகவர் ஒருவரையும் பணியில் அமர்த்தினர். ஒப்பந்தக் கூலித்தொழிலாளி துறைமுகத்தில் பயணம் கிளம்புமுன், தன் சுய விருப்பத்தின் பேரிலேயே மலாயா செல்வதாக நீதிபதி ஒருவர் முன் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்பது அந்தத் தொழிலாளியிடம் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்றாகும். இருந்தபோதிலும் ஒப்பந்தத் தொழிலாளிகள் பல கொடுமைகளைச் சந்தித்தனர்.

முடிவு

ஒப்பந்தத் தொழிலாளி 6.jpg

ஒப்பந்தத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய கொடுமைகளைக் குறித்து வெளிவந்த விமர்சனத்தினாலும் ரப்பரின் விலை உயர்வினாலும் ஒப்பந்தக்கூலி முறை மார்ச் 10, 1910-ல் முடிவுற்றது. ஒப்பந்தக்கூலி முறைக்குப் பதிலாக கங்காணி முறை மலாயாவில் பயன்படுத்தப்பட்டது.

இலக்கியப் பதிவுகள்

உசாத்துணை

  • ஜானகிராமன், மா. (2006). மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை.


✅Finalised Page