under review

பூஜாங் பள்ளத்தாக்கு

From Tamil Wiki
பூஜாங் பள்ளத்தாக்கு

பூஜாங் பள்ளத்தாக்கு மலேசியாவில் புகழ்பெற்ற வரலாற்று தளங்களில் ஒன்றாகும். தீபகற்ப மலேசியாவின் வடக்கில், மெர்போக் நதி முகத்துவாரத்தில் அமைந்த பண்டைய மலாய் அரசுகளில் ஒன்று 7-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற துறைமுக பட்டிணமாகவும் வியாபார மையமாகவும் திகழ்ந்தது. தென்கிழக்காசியாவின் இந்திய மயமான தளங்களில் ஒன்றாகப் பூஜாங் பள்ளத்தாக்கு விளங்குகின்றனது.

புவியியல்

பூஜாங் பள்ளத்தாக்குக் கெடா மாநிலத்தில் குருண் நகருக்கு அருகில் மெர்போக் பக்கத்தில் அமைந்துள்ளது. பூஜாங் பள்ளத்தாக்கு வடக்கே குனோங் ஜெராயையும், தெற்கே சுங்கை மூடா ஆற்றையும் எல்லையாகக் கொண்டுள்ளது. பூஜாங் பள்ளத்தாக்கு 224 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. பண்டைய மலாயா சரித்திரத்தை நினைவுகூறும் பல வரலாற்று கட்டுமான சிதிலங்கள் இங்கு காணப்படுகின்றன. ஆகவே, பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சியாளர்களையும் தொல்பொருள் ஆய்வாளர்களையும் வரலாற்று ஆர்வளர்களையும் சுற்றுப்பயணிகளையும் ஈர்க்கும் தளமாகப் அமைந்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பு 1987-ம் ஆண்டில் பூஜாங் பள்ளத்தாக்கைப் பாதுகாக்கப்படும் வரலாற்று இடமாக அறிவிக்க ஒரு அறிக்கை வெளியிட்டது.

பெயர் மூலம்

பூஜாங் பள்ளத்தாக்குத் தனது பெயரின் பொருளைப் 'புஜங்கா' என்னும் சமஸ்கிருத சொல்லிலிருந்து பெற்றுள்ளது. நாகம் போல வளைந்து ஓடும் மெர்போக் நதியிலிருந்து இந்தப் பெயர் பெற்றிருக்க வாய்ப்புண்டு. பிறகு, மொழியின் மாற்றத்தால் 'புஜங்கா' என்பது 'பூஜாங்' என்று திரிந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வரலாற்றுp பின்புலம்

கி.பி. 1030_ல் ராஜேந்திர சோழனின் பேரரசு

காவேரிப் பட்டணத்தையும் மஹாபலிபுரத்தையும் விட்டுப் புறப்பட்டுக் கிழக்கு முகமாகப் போகும் இந்திய வணிகர்களுக்கு, குனோங் ஜெராய் மலை முதலில் காணக்கூடிய கரைநிலமாக அமைகின்றது. கப்பல்களுக்கு வழிகாட்ட குனோங் ஜெராய் சிகரத்தில்தான் புகை மூட்டப்படும். இதன் வழிகாட்டலில் கப்பல்கள் மெர்போக் முகத்துவாரத்தை அடையும். இதுவே கடல்பயணிகளுக்கு பாதுகாப்பான நிலப்பகுதியாக அமைந்தது. ஆக, இதன் அடிப்படையில்தான் கெடாவின் பூஜாங் பள்ளத்தாக்கில் இந்திய மய அரசான கடாரம் உருவானது. பண்டைய காலத்தில் கெடா காழகம், கிடாரம், கடாரம், கடஹா என இந்தியர்களால் அழைக்கப்பட்டது.

வக்காஃப் கடாரம்

கி.பி 1025-ல் ராஜேந்திர சோழனின் கடற்படை கடாரத்தைக் கைப்பற்றியது. இதனால்தான் ராஜேந்திர சோழனுக்குக் 'கடாரம் கொண்டான்’ என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனின் மூன்றாவது புதல்வரான வீர ராஜேந்திரன் 1062-ல் அரியணையில் ஏற்றப்பட்டார். பின்னர் 1068-ல் கடாரத்தை மீண்டும் இரண்டாவது முறை கைப்பற்றினர் சோழ மன்னர்கள். குனோங் ஜெராயில் சோழர்களின் கொடியான புலிக்கொடி பறந்திருக்கிறது. கடாரத்தை ஜாவா தீவில் இருந்த சைலேந்திரப் பேரரசின் வழிவந்தவர்கள் ஆட்சி புரிந்துள்ளனர்.

தென்கிழக்காசியாவின் இந்திய மயமான அரசுகளும் வணிக வழிகளும்

சுங்கை பூஜாங், சுங்கை மூடா மற்றும் சுங்கை மெர்போக் நதிகள் பூஜாங் பள்ளத்தாக்கின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றின. இந்தியா சீனாவுக்குமிடையே கடல் பயணம் மேற்கொள்ளும் போது, பருவக்காற்று மாற்றத்திற்காகக் காத்திருக்கவும், ஓய்வெடுக்கவும் கடலோடிகள் பூஜாங் பள்ளத்தாக்கைத் தேர்ந்தெடுத்தனர். இவ்வாறு வணிக நோக்கில் மேம்பட்டு வந்த பூஜாங் பள்ளத்தாக்கில், தென்னிந்தியாவைச் சேர்ந்த கடலோடிகளும் வர்த்தகர்களும், தங்கள் கலாச்சாரத்தையும் மத சடங்குகளையும் வளர்க்கத் தொடங்கினர்.

இலக்கிய ஆதாரங்கள்

பூஜாங் பள்ளத்தாக்குப் பற்றிய முதல் குறிப்பு சங்க இலக்கியத்தில் உள்ளது. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பத்துப்பாட்டு தொகுதியில் உள்ள பட்டினப்பாலை கெடாவைக் காழகம் எனக் குறிப்பிடுகிறது. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி காழகத்தின் விளை பொருட்கள் புகார் வீதிகளில் இருந்தன எனக் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தில் காழகத்திலிருந்து வந்த கிதரவன் சந்தனம் , பட்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகழ்வாய்வியல் ஆதாரங்கள்

பூஜாங் பள்ளத்தாக்கில் உள்ள அகழ்வாய்வியல் தளங்கள்

19-ம் நூற்றாண்டில் பூஜாங் பள்ளத்தாக்கில் அகழ்வாய்வியல் ஆய்வு தொடங்கப்பட்டது. ஹெச். ஜி. குவாரிச் வேல்ஸ்( H.G. Quaritch Wales) அலஸ்டெய்ட் லாம்ப் ( Alastair Lamb ) போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் பூஜாங் பள்ளத்தாக்கில் பண்டைய கெடா நாகரிகத்தின் தொடக்கம் இருப்பதைக் கண்டறிந்தனர். பூஜாங் பள்ளத்தாக்குக் குடியிருப்பு 1000 சதுர கிலோமீட்டரில் வடக்கில் கோத்தா சாராங் செமுட்டில் புக்கிட் சோராசில் தொடங்கி தெற்கில் புக்கிட் மெர்த்தாஜத்தில் செரோக் தெக்குன் வரை, கிழக்கில் ஜெனியாங் வரை விரிந்திருக்கிறது. பூஜாங் பள்ளத்தாக்கின் தளங்கள் 172 இடங்களாகும். இவற்றில் பெரும்பாலும் இந்து அல்லது புத்த கோயில்களின் சிதைந்த பகுதிகள் கிடைக்கின்றன. அவை சண்டிகள் என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் 10 சண்டிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் இடத்திலேயே திரும்பக் கட்டப்பட்டுள்ளன. இன்னும் சில சண்டிகள் அகற்றப்பட்டு மெர்போக் அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சண்டிகள் பெயர்கள் பின்வருமாறு;

  • தளம் 5& 11 – சண்டி சுங்கை பத்து எஸ்டேட்
  • தளம் 8 – சண்டி புக்கிச் பத்து பஹாட்
  • தளம் 16 – சண்டி பெண்டியாட்
  • தளம் 17 – சண்டி புக்கிட் பெண்டியாட்
  • தளம் 19,21,22,23 – சண்டி பெங்காலான் பூஜாங்
  • தளம் 50 – சண்டி பெண்டாங் டாலாம்

பூஜாங் பள்ளத்தாக்கில் கி.பி. 4 முதல் 10-ம் நூற்றாண்டுக்கு இடையில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான வழிபாட்டுத்தலங்கள், புத்த மதத்தைச் சார்ந்தவர்களால் உருவாக்கப்பட்டன எனவும் 10 முதல் 14-ம் நூற்றாண்டு வரையில் உருவாக்கப்பட்ட வழிபாட்டுத்தலங்களும், கலை வடிவங்களும் தென்னிந்தியாவிலிருந்து வருகை புரிந்த இந்துக்களால் உருவாக்கப்பட்டன எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சண்டிகளும் அவற்றில் கண்டெடுக்கப்பட்ட பழம் பொருள்களும்

சண்டி புக்கிட் சோராஸ் (தளம் 1)

குனோங் ஜெராயின் வடக்கில் யான் மாவட்டத்தில் கோத்தா சாராங் செமுட் அருகே ஜேம்ஸ் லோவால் கண்டுபிடிக்கப்பட்டது. 4-ம் நூற்றாண்டு எனத் தேதியிடப்பட்ட இந்தச் சண்டி புத்த சண்டியாகும். செம்மண் கற்களாலும் களிமண் கற்களாலும் இச்சண்டி கட்டப்பட்டது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பழம் பொருள்களில் கல்வெட்டு ஒன்று இருந்தது. அதில் புத்த போதனையான யே தா (மறுபிறவிலிருந்து விடுதலை பெறும் மந்திரம்) மந்திரம் இருந்தது. சமஸ்கிருத மொழியில் பழைய ஜாவா எழுத்துகளில் உள்ளது. பீங்கான் சிதைவுகள் மற்றும் இரும்புகள் இருந்தன.

பூஜாங் பள்ளத்தாக்கு 5.jpg
சண்டி சுங்கை பத்து எஸ்டேட் (தளம் 4,5,11)
மஹிஷாசுரமத்தினியாக துர்கா

இந்தச் சண்டிகள் 8-ம் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. தளம் 4-ல் துர்கா தேவி மஹிஷாசுரனுடன் இருக்கும் சிலை கண்டெடுக்கப்பட்டது. சத்திங் ஃப்ரா ஆசனத்தில் உள்ள கணேசர் சிலை, லிங்கம், சிறு கோயிலின் மேற்பாகம் போன்ற வெண்கலப் பொருட்கள் கண்டறியப்பட்டன. 1974-ல் தளம் 5, தளம் 11 தோண்டப்பட்டு அங்கே மீண்டும் கட்டப்பட்டன. அங்கு விமானம், மண்டபம், இந்து சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அதோடு சீனப் பீங்கான்கள், இரும்பு ஆணிகள், மத்திய கிழக்குக் கண்ணாடிகள், இரும்பு, வெண்கலம் என அனைத்துலக வர்த்தக பொருட்கள் கண்டறியப்பட்டது. இது இந்து தளம் என்று கூறப்படுகின்றது.

கல்லில் வெட்டப்பட்ட வட்டம்
சண்டி குனோங் ஜெராய் (தளம் 9)

இந்தச் சண்டி குனோங் ஜெராய் உச்சியில் அமைந்துள்ளது. 1894-ல் கண்டுபிடிக்கப்பட்டு 1921-ல் எச்.என்.இவான்சால் தோண்டப்பட்டது. இதன் முக்கிய கட்டுமானப் பொருள் செங்கல் மற்றும் கருங்கல் ஆகும். இங்கு கருங்கல்லால் செதுக்கப்பட்ட ஒரு வட்டம் கண்டறியப்பட்டது.

சண்டி பத்து பஹாட் (தளம் 8)
அபிஷேக நீர் வெளிவரும் துவாரம்
கருங்கல் லிங்கம்

1936-ல் இச்சண்டி கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்துச் சண்டிகளிலும் புகழ்பெற்ற சண்டியாக சண்டி பத்து பஹாட் அமைகின்றது. 1959 தொடங்கி 1960 வரை அலிஸ்டேர் லேம்ப் மலாயாப் பல்கலைக் கழகத்தின் ஆதரவோடு இதனைத் திரும்பக் கட்டினர். இந்தச் சண்டியில் தூண்களுக்கான அடிப்பாகங்கள் இருந்தன. சிலை வைப்பதற்கான பீடம், அபிஷேக நீர் வெளிவரும் துவாரம், திரிசூலம் ஏந்திய சக்தி போலவும் சிவன் போலவும் செய்யப்பட்ட தங்க ஏடுகள், நந்தி போலச் செய்யப்பட்ட தங்க ஏடுகள், சமயப் பொருள்கள் வைப்பதற்கான கல் பெட்டி, எழுத்துகளுடன் கூடிய தங்கத் தகடுகள், இந்திய மணிகள், கருங்கல் லிங்கம் என இச்சண்டியில் கண்டெடுக்கப்பட்டது. இச்சண்டியின் மூலம் பூஜாங் பள்ளத்தாக்கில் இந்து சமயமும் பௌத்த சமயமும் சகவாழ்வு வாழ்த்திருக்கின்றன என அறிந்திட முடிகிறது.

சண்டி பத்து பஹாட் (தளம் 8a&8b)

தளம் 8a தளம் 8க்கு வடமேற்கில் அமைந்துள்ளது. 1985-ல் கண்டுபிடிக்கப்பட்ட இத்தளம் 1997-ம் 1998-ம் ஆண்டு தோண்டப்பட்டது. சுங்கை மெர்போக் கெச்சிலின் அருகிலிருந்து பெறப்பட்ட வெட்டப்பட்ட கருங்கற்கள்தான் இதன் கட்டுமானப் பொருளாகும். பீங்கான் சிதைவுகளும் மரக்கரியும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தளம் 8b இதன் அருகிலே அமைந்திருக்கும். 1974-ல் கண்டுபிடிக்கப்பட்டு 1999-லும் 2000-த்திலும் இத்தளம் தோண்டப்பட்டது. கருங்கல் மற்றும் செங்கல்லால் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த பழம் பொருட்கள் பீங்கான் சிதைவுகள், மரக்கரி மற்றும் ஸ்பட்டிக் கட்டி.

சண்டி பெண்டியாட் (தளம் 16)

இச்சண்டி 1936-ல் கம்போங் பெண்டியாட் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இது 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து தளமாகும். 1974-ல் இச்சண்டி அதன் இடத்திலிருந்து அகற்றப்பட்டு அருங்காட்சியகத்தின் பின்புறம் மீண்டும் கட்டப்பட்டது. இதன் விமானமும் மண்டபமும் தனித்தனியாக இருக்கின்றன. இது ஒரு மரக் கட்டிடம். ரத்தினங்கள் அடங்கிய வெண்கலப் பெட்டி, தங்கக் கிண்ணம், தங்கத் தாமரை, ஆயுதங்கள், மிருங்கங்கள் மாதிரி, வெண்கலப் பொருட்களான மணி, இரண்டு விளக்குகள், ஒரு சிலையிலிருந்த விரல், தலையைச் சூழ்ந்திருக்கும் ஒளிவட்டம் மற்றும் சீன மண் பாண்டங்கள் போன்ற பழம் பொருட்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டன.

இதற்கு அருகில் தளம் 16a உள்ளது. இது பௌத்த சண்டியாகும். 1941-ல் இச்சண்டியில் நிற்கும் புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இச்சிலை குப்த வம்ச கலை வடிவம் கொண்டவை எனக் கண்டறியப்பட்டது.

சண்டி புக்கிட் பெண்டியாட் (தளம் 17)
எண்கோண வடிவம்
சமயப் பொருள்கள் வைக்கக்கூடிய மண்பாண்டங்கள்

இந்தச் சண்டி 1936-1937-ல் முதலில் தோண்டப்பட்டு பின்னர் 1976-1977-ல் மீண்டும் தோண்டப்பட்டது. இது 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பௌத்த ஸ்தூபம் என நம்பப்படுகிறது.ஓர் எண்கோணக் கட்டுமானம் அங்கு இருந்தது. அதன் எட்டு மூலைகளிலும் மண்பாண்டங்கள் புதைக்கப்பட்டிருந்தன. பத்து மண்பாண்டங்கள், பீங்கான் துண்டுகள், மணிகள், செம்மண் தரையில் மிருகங்களின் கால் தடங்கள் போன்ற பழம் பொருள்கள் இங்கு கண்டறியப்பட்டன.

சண்டி பெங்காலான் பூஜாங் (தளம் 19)

1936-1937-ல் கண்டுபிடிக்கப்பட்டு 1972-ல் கம்போங் பெங்காலன் பூஜாங்கிலே மீண்டும் கட்டப்பட்டது. இது 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து தளம். இது செங்கற்கலால் கட்டப்பட்ட சண்டி. நீள்சதுர வடிவத்தில் வெளிப்பகுதி, விமானம், மண்டபம் என மூன்று பாகங்களாக வகுக்கப்பட்டுள்ளது. தலையற்ற கணேசர் சிலை மஹாராஜலிலாசனா ஆசணத்தில் உள்ளது. பாரசிகப் பளிங்குத் துண்டுகள், ஒரு பாதரச புட்டி, இரும்பு ஆணிகள், இரும்புக் கருவிகள், செம்மண் மேற்பரப்பில் மிருகக் கால் தடங்கள், சமயப்பொருள்கள் வைக்கும் பெட்டி போன்ற பழம் பொருள்கள் இங்கு கண்டறியப்பட்டன. சமயப்பொருள்கள் வைக்கும் பெட்டியில் 9 அறைகள் மூடி இல்லாமல் இருந்தன.

சண்டி பெங்காலான் பூஜாங் (தளம் 21 & 22)

தளம் 21, 1936-ல் கண்டுபிடிக்கப்பட்டு 1976-ல் அகற்றப்பட்டு அருங்காட்சியகத்தின் அருகில் மீண்டும் கட்டப்பட்டது. இதில் எண்கோணமுள்ள செங்கல்லால் கட்டப்பட்ட ஒரு ஸ்தூபம் உள்ளது. இந்தக் கட்டுமானத்தின் 8 பக்கங்களும் மேரு சக்கரத்தைக் குறிக்கின்றன. இங்கு 5 புத்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. கல் யானை, நட்டுவாக்களியின் தலை, தங்க மோதிரம், காதணிகள், மண்பாண்டத் துண்டங்கள், மத்திய கிழக்குக் கண்ணாடி துண்டுகள், இரும்பு, ஆணிகள், மணிகள் போன்ற பழம் பொருள்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டன.

வெண்கலத்தால் ஆன நிற்கும் போதிசத்துவரான பிருகுதி, 'பயமுறுத்தும் தெய்வம்'.

தளம் 22, தளம் 21 உடன் இணைந்திருக்கும். இத்தளம் 1976-ல் அதன் அசல் இடத்திலே மீண்டும் கட்டப்பட்டது. இந்தச் சண்டிகள் 10-ம், 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என நம்பப்படுகிறது. இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்களில் சீனப் பளிங்குகளில் பளபளப்பான மெருகு பூசப்பட்ட செலடோன் வகைகள் சோங், யுவான் வம்சத்தைச் சேர்ந்தவை என கூறப்படுகின்றது. வெண்கலச் சிலைகள், சமயச் சடங்குப் பொருட்கள், கண்ணாடி புட்டிகள், பர்மிய ரத்தினக் கற்கள் போன்றவை இங்கு கண்டறியப்பட்டன.

சண்டி பெங்காலான் பூஜாங் (தளம் 23)

குண்டுமணிகள், நாணயங்கள், படிகங்கள், சுடுமண் கலம், பீங்கான் கலம், ஜாடியின் சிதைவுகள், சோங் செலடோன் சிதைவுகள் போன்ற பழம் பொருள்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டன.

சண்டி பெர்மாத்தாங் பாசிர் (தளம் 31)

குவாலா மூடா மாவட்டத்தில், ரந்தாவ் பாஞ்சாங் முக்கிமில், கம்போங் பெர்மாத்தாங் பாசிரில் இந்தச் சண்டி அமைந்திருக்கிறது. இது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து சண்டியாகும். இச்சண்டி பெரும்பாலும் செம்பூராங் கற்களாலும், செங்கற்களாலும், சரளைக் கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. தூண்களின் அடித்தளம் கருங்கற்களாலும் செம்பூரான் கற்களாலும் ஆனது. இங்கு வெண்கலச் சிலையின் அடிப்பாகம், வெண்கலத் தாமரை, ஒரு வெண்கலச் சிலையின் தலை, பீங்கான் துண்டுகள், பழங்காலக் கல் கோடரி ஆகிய பழம் பொருள்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டன.

சண்டி திலாகா செம்பிலான் (தளம் 49)

ஜெராய் மலையின் அடிவாரத்தில் இச்சண்டி உள்ளது. இந்தத் தளத்தில் உள்ள குளம், ராஜா பெர்சியோங் அதாவது கோரைப் பற்கள் கொண்ட மன்னன் என்ற மன்னனின் தனி குளம் என்ற கதை உள்ளது.

சண்டி பெண்டாங் டாலாம் (தளம் 50)

1969-ல் கண்டுபிடிக்கப்பட்டு 1974-லும் 1982-லும் தோண்டப்பட்டது. 1983-ல் கம்போங் பெண்டாங் டாலாமில் உள்ள அரும்பொருள் காட்சியகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டது. இச்சண்டி 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து சண்டியாகும். இது சரளைக் கற்கள், செங்கல், ஆற்றுக் கற்கள் ஆகியவற்றால் ஆனது. விமானமும் மண்டபமும் உள்ளது. தூண் அடித்தளத்திற்குக் கருங்கல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கருங்கல் லிங்கம், யோனி, சோமசூத்ரம், காலா தலை ஆகியவை இங்கு கண்டெடுக்கப்பட்டன. இங்கு சீன சோங் வம்சத்தைச் சேர்ந்த மண்பாண்டத் துண்டங்கள், மத்திய கிழக்குக் கண்ணாடி, மரக்கரி, பிசின் ஆகிய பழம் பொருள்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டன.

இன்றைய நிலை

அருங்காட்சியகத்தினுள் உள்ள மண்பாண்டங்களின் காட்சியகம்

இப்பொழுது பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகின்றது. வரலாற்றுச் சுற்றுலாத் தளமாகவும் இவ்விடம் அமைகின்றது. சுங்கை பட்டாணி நகரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மெர்போக் கெச்சிலுக்கு அருகே இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. பூஜாங் பள்ளத்தாக்கைச் சுற்றிலும் கண்டெடுக்கப்பட்ட பழம்பொருள்களும் எஞ்சிய சிதைவுகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்துக்கு வெளியே கல்லால் செய்யப்பட்ட பெரிய பொருள்கள் காட்சிக்கு உள்ளன.

வரலாற்று முக்கியத்துவம்

பூஜாங் பள்ளத்தாக்கில் ஒரு பண்டைய மலாய் அரசு இருந்திருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றது. அது தென்கிழக்காசியாவின் கடல் வணிகத்தின் முக்கிய மையமாக இருந்துள்ளது என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இந்தியர்கள், சீனர்கள், அரபுக்கள், தென்கிழக்காசிய வர்த்தகர்கள் அங்கு கூடினர். மேலும் பூஜாங் பள்ளத்தாக்கில் இந்து மற்றும் பௌத்த சண்டிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும், சிலைகளும், சமஸ்கிருத, பல்லவ கல்வெட்டுகளும் கிடைத்திருப்பதும் இந்தியாவிலிருந்து வணிகம் செய்ய வந்த வர்த்தகர்கள் வழி முதலாம் நூற்றாண்டு முதல் பெளத்த-இந்து சமயங்களும் பண்பாடுகளும் பூஜாங் பள்ளத்தாக்கில் நிலை கொண்டுள்ளன என்பதனைக் காட்டுகின்றது.

சர்ச்சைகள்

டிசம்பர் 1, 2013-ல் பூஜாங் பள்ளத்தாக்கின் தளமான சுங்கை பத்து தோட்டத்தில் அமைந்துள்ள சண்டி ஒரு வீடமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தால் உடைக்கப்பட்டது.

பார்க்க

வீ. நடராஜன் பூஜாங் பள்ளத்தாக்கு ஆய்வாளர் சோழன் வென்ற கடாரம். வீ. நடராஜன். (ரெ.காத்திகேசு)

உசாத்துணை


✅Finalised Page