under review

மதுரைத் தமிழ் கூத்தன் நாகன்தேவன்

From Tamil Wiki

மதுரைத் தமிழ் கூத்தன் நாகன்தேவன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மதுரைத் தமிழ் கூத்தன் நாகன்தேவன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது வாழ்க்கை குறித்து தமிழறிஞர்கள் இருவேறு கருத்துகள் கொண்டுள்ளனர். உ.வே.சாமிநாதையர் கடுவன் மள்ளனார் மற்றும் நாகன்தேவன் இருவரும் மதுரைத் தமிழ் கூத்தானரின் மகன்கள் என்று கூறுகிறார்.

இன்னொரு சாரார் மதுரைத் தமிழ் கூத்தன் நாகன்தேவன், தேவன் என்னும் இயற்பெயர் உடையவர். தமிழ் கூத்து கலையில் வல்லவராகிய நாகன் என்பவரின் மகன் என்றும் கூறுகின்றனர்.

இலக்கிய வாழ்க்கை

மதுரைத் தமிழ் கூத்தன் நாகன்தேவன் பாடிய பாடல் அகநானூறில் 164 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவியை பிரிந்து அரசனுடன் போருக்கு புறப்பட்டு வந்த தலைவன், கார்காலம் வந்ததையடுத்து அரசன் போரினை முடித்து கொண்டால் தலைவியை மீண்டும் சேரலாம் என்ற தன் விருப்பத்தை உரைப்பதாக முல்லைத் திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • அரசனது படையில் உள்ள யானைகள் பகைவரின் மதில்களை மோதி உடைக்கும் வலுவான மத்தகமும் கவசமிட்ட தந்தமும் கொண்டவை.
  • கார்காலத்து மழையினால் கோடையில் சூரிய வெப்பத்தால் காய்ந்து உலர்ந்த காட்டுப்பகுதி பசுமை பெற்றும் குளங்கள் நீர் நிரம்பியும் இருந்தன.
  • முல்லை முதலான பல வண்ண நிற பூக்கள் பூத்து குலுங்குவதால் காடு நறுமணத்தால் நிரம்பியதாக இருந்தது. பூக்களின் தேனை பருக வண்டுகள் மொய்த்தன.
  • ஆடவரை பிரிந்த மகளிர் தங்கள் நலத்தை இழந்து கண்ணீருடன் காத்திருந்தனர்.

பாடல் நடை

அகநானூறு - 164

  • திணை: முல்லை துறை:பாசறைக்கண் இருந்ததலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது

கதிர் கையாக வாங்கி, ஞாயிறு
பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி,
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம்
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்;
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன்
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற.
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம்.
'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி,
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம்
இது நற் காலம்; கண்டிசின் பகைவர்
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்,
கந்து கால் ஒசிக்கும் யானை,
வெஞ் சின வேந்தன் வினை விடப்பெறினே!

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 18:31:09 IST