மதுரைத் தமிழ் கூத்தன்
மதுரைத் தமிழ் கூத்தன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
மதுரைத் தமிழ் கூத்தன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். ஆரிய கூத்து போலவே தனியாக வழங்கிய தமிழ் கூத்தில் வல்லவராதலால் இப்பெயர் பெற்றுள்ளார் என கருதப்படுகிறது. இவருக்கு கடுவன் மள்ளனார், நாகன் தேவனார் என்று இருமகன்கள் உண்டு என உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
மதுரைத் தமிழ் கூத்தன் பாடிய பாடல் புறநானூறில் 334-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவன் ஒருவனின் கொடை வல்லமையையும் அவனது இல்லத்தரசியின் ஈகை குணத்தையும் சிறப்பித்து கூறுவதாக வாகைத் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- முல்லை நிலத்து ஊர் ஒன்றின் வளம் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிறைந்து கிடக்கும். அவற்றின் கரைகளில் சண்பங்கோரை வளர்ந்து நிற்கும். நீண்ட செவியுடைய முயல்களின் மயிர் சண்பங்கோரை போன்று காணப்படும். ஊர்மன்றில் சிறுவர்கள் ஆரவாரம் செய்து விளையாடுவதால் முயலானது அஞ்சி பதுங்கி வைக்கோல் போரில் சென்று ஒளிந்து கொள்ளும்.
- வளமிக்க ஊரினை ஆளும் தலைவன் தன்னிடம் வரும் பரிசிலர்க்கும் பாணர்க்கும் பொன்னலான யானையின் நெற்றிப்பட்டத்தை கொடையாக வழங்குவான். அவனது மனைவி குறையாது விருந்திட்டு உபசரிப்பாள்.
பாடல் நடை
புறநானூறு - 334
- திணை: வாகை
- துறை:மூதின் முல்லை
காமரு பழனக் கண்பின் அன்ன
தூ மயிர்க் குறுந் தாள் நெடுஞ் செவிக் குறு முயல்,
புன் தலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்,
படப்பு ஒடுங்கும்மே ........... பின்பு
..................... ன் ஊரே மனையோள்
பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும்,
ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே;
உயர் மருப்பு யானைப் புகர் முகத்து அணிந்த
பொலம் .............................. ப்
பரிசில் பரிசிலர்க்கு ஈய,
உரவு வேல் காளையும் கை தூவானே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Sep-2025, 20:07:55 IST