பெருந்தேவனார்
பெருந்தேவனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் மூன்று. நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை திரட்டுகளில் ஒரு பாடல் வீதம் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
பெருந்தேவனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரும் கடுகு பெருந்தேவனாரும் இருவேறு புலவர்கள் என்று பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் குறிப்பிடுகிறார். எஸ். வையாபுரிப் பிள்ளை இருவரும் ஒருவரே என்று குறிப்பிட்டுள்ளார்
இலக்கிய வாழ்க்கை
பெருந்தேவனார் பாடிய பாடல்கள் நற்றிணையில் 83-வது பாடலாகவும், அகநானூறில் 351-வது பாடலாகவும் குறுந்தொகையில் 255-ம் பாடலாகவும் இடம்பெற்றுள்ளன. நற்றிணை 83 ஆம் பாடலில் இரவு நேரத்தில் தலைவியை தேடிவரும் தலைவனிடத்து, தலைவனுக்கும் தலைவிக்குமான உறவு தலைவியின் வீட்டாருக்கு தெரிய தொடங்கியுள்ளது என்ற செய்தியை தோழி கூறுவதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது. அகநானூறு 51-ம் பாடல் பொருளீட்டச் செல்லும் வழியின் கடுமையை எண்ணி தலைவியுடன் இருந்துவிட எண்ணும் தலைவனின் குரலாக பாலைத் திணையில் அமைந்துள்ளது. குறுந்தொகை 255-ம் பாடல் பொருளீட்ட சென்ற தலைவனை எண்ணி வருந்தும் தலைவிக்கு தோழியின் ஆறுதல் கூற்றாக பாலைத் திணையில் அமைந்துள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
நற்றிணை - 83
- நீர் நிலைகள் அமைந்த இடத்தை ஒட்டியே பழங்கால ஊர்கள் அமைந்திருந்தன என்ற செய்தியை இப்பாடல் கூறுகிறது. அந்த நீர் நிலைக்கு பக்கத்தில் இருக்கும் முதிய மரம் ஒன்றில் தெய்வ அருள் இனங்காணப்பட்டு, அம்மரம் கடவுள் மரமாக வணங்கப்படும்.
- கடவுள் மரம் ஊர் எல்லையில் அமைந்திருக்கும். அம்மரத்தில் ஆந்தைகள் வாழும். ஆந்தைகள் கூர்மையான வளைந்த அலகையும் இரவிலும் பார்க்கும் தெளிந்த கண்களையும் கூர்மையான கால் நகங்களையும் கொண்டிருக்கும். ஆந்தை எழுப்பும் ஒலியானது பறையொலி போல் வலுவானதாக அமைந்து ஊராரின் உறக்கத்தை கெடுக்கும். இரவில் புதியவரின் வருகையை கண்டால் ஆந்தைகள் ஒலியெழுப்பும்.
- ஆந்தைகளுக்கு ஆட்டிறைச்சியும் நெய் கலந்த வெண் பொங்கலும் எலியின் இறைச்சியும் சமைத்து உணவிட்டு பழக்கப்படுத்துவர். அவ்வாறு பழக்கப்படுத்திய ஆந்தைகள் மனிதரின் விருப்பப்படி நடக்கும் என நம்பப்பட்டது.
- இரவில் ஊரறியாமல் தலைவனை சந்திக்க காத்திருக்கும் தலைவி ஒருத்தி ஆந்தைகளிடம் தலைவன் வருகையில் சத்தம் எழுப்ப வேண்டாம். சுவையான உணவு தருகிறேன் என்கிறாள்.
அகநானூறு - 51
- ஆடவர் பொருளீட்டச் செல்லும் வழியானது மூங்கில் காடுகளால் நிறைந்திருக்கும். கோடைக்காலத்தில் சூரியனின் கடும் வெப்பத்தால் மூங்கில்கள் காய்ந்து பயணம் மேற்கொள்ளும் பாதையானது வழிப்போக்கர்கள் அற்று வெறிச்சோடி காணப்படும்.
- மூங்கில் காட்டு பாதையில் ஆங்காங்கே யா மரமும் காணப்படும். யா மரத்தின் அடிப்பட்டைகள் வாடி உரிந்து வரும்படிக்கு கடும் வெப்பமும் அனல்காற்றும் கோடைக்காலத்தில் வீசும். யா மரத்தில் பருந்துகள் கூடுகட்டி வாழும். கோடையில் இரை கிடைக்காத சமயத்தில் பெண் பருந்தினை நோக்கியவாறு ஆண் பருந்தும் கூட்டில் அமர்ந்திருக்கும். கோடையின் வெப்பத்தால் ஆண் பருந்தின் சிறகுகள் தீய்ந்து போயிருக்கும். காது மடல்கள் வெப்ப மிகுதியால் சிவந்திருக்கும்.
- கோடைக்காலத்தில் கடும் வெப்பம் வீசும் பாலை நிலத்தை கடந்து சென்று பொருளீட்டுவதை காட்டிலும் பிரிவு துயரில் வாடும் மனைவியை நீங்காமல், அவளுடன் இன்பமாக இருப்பது நலம் என்னும் மனப்போக்கும் ஆடவரிடத்தில் இருந்துள்ளது.
- உவமை: தலைவியின் கண்களில் இருந்து வழியும் கண்ணீர் மழைக்கண் என்று சிறப்பிக்கப்பட்டது. ஆண் பருந்தின் சிவந்து காணப்படும் செவி வெட்டி வைக்கப்பட்ட இறைச்சி தூண்டிற்கு சமானமாக உவமிக்கப்பட்டுள்ளது.
குறுந்தொகை - 255
- ஆடவர் பொருளீட்டச் செல்லும் பாலை நிலத்து வழியில் கடும் வறட்சி காணப்படும். வறட்சியினால் உண்டான தாகத்தால் தவிக்கும் தனது யானைக்கூட்டத்திற்கு நீர் கொண்டு வரும் பொருட்டு வளைந்த ஒட்டைகளற்ற அடிப்பாகத்தையுடைய யாமரத்தை ஆண் யானை தந்தத்தால் குத்திப் பிளக்கும். யாமரத்தின் பிளவினூடாக வரும் நீரை யானைக் கூட்டம் அருந்தும்.
பாடல் நடை
நற்றிணை - 83
- திணை: குறிஞ்சி
- கூற்று:இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது
எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்,
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே.
அகநானூறு - 51
- திணை: பாலை
- கூற்று: பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற,
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து,
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி
எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
பிரியின் புணர்வதுஆயின் பிரியாது,
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப,
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே.
குறுந்தொகை - 255
- திணை: பாலை
- கூற்று:இடை நின்று மீள்வர் எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது
பொத்தில் காழ அத்த யாஅத்துப்
பொரியரை முழுமுதல் உருவக் குத்தி
மறங்கெழு தடக்கையின் வாங்கி உயங்குநடைச்
சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும்
தடமருப் பியானை கண்டனர் தோழி
தங்கட னிறீஇய ரெண்ணி யிடந்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம்வெங் காதலர் சென்ற வாறே.
உசாத்துணை
- சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் - 5:தமிழ் பல்கலைகழகம்
- நற்றிணை - 83:Tamilvu
- அகநானூறு - 51:Tamilvu
- குறுந்தொகை - 255:Nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jan-2026, 13:47:52 IST